உப்புவேலி – தன்னறம் நூல்வெளி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

பத்து வருடங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் பீட்டர் அண்ணனை நாங்கள் சந்தித்த நிறைய தருணங்களில், அவர் அடிக்கடி ஒரு திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசுவார். அத்திரைப்படத்தின் பெயர் Rabbit Proof Fence. குக்கூ குழந்தைகள் வெளியின் திரையிடல் நிகழ்வுகளின் வழியாக கல்லூரி மாணவர்களிடத்தில் திரையிட்டுக் காண்பித்த நிறைய திரைப்படங்களில் மிகமுக்கியமானதாக அத்திரைப்படம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. ஏதிலிகளின் எக்காலத்துக்குமான ஒரு உலகவலியை அப்படைப்பு தன்னுள் சுமந்திருந்தது.

2002ம் ஆண்டு வெளியான அத்திரைப்படம் புனைவுக் கதையல்ல, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்ட மூன்று பூர்வக்குடி குழந்தைகள், தப்பியோடிச்சென்று தங்களுடைய தாயைத்தேடி மேற்கொள்ளும் 1200 மைல்தூர நடைபயணமே அப்படத்தின் கதை. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளிலுள்ள வயல்வெளிகளுக்குள் முயல் மற்றும் மேய்ச்சல் விலங்குகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான மைல் நீளத்துக்கு உருவாக்கப்பட்ட கம்பிவேலிதான் ‘ரேபிட் ப்ரூஃப் ஃபென்ஸ்’. இம்மாபெரும் வேலியின் வழியாகத் தங்கள் வாழ்விடத்தை அடையும் தாகத்தோடு நடந்து பயணிக்கிற சிறுமிகளின் பதற்றம் படம்முழுக்கப் பரவியிருக்கும். இனவெறி மற்றும் நிறவெறியின் குரூரங்களை மையப்படுத்தி, உலகளவில் அத்திரைப்படம் பெருந்தாக்கத்தை உண்டுபண்ணியது.

குழந்தைகளை அரசாங்கமே களவாடிய துயர்நிறைந்த பழைய வரலாற்றுக்காக வருந்தி, 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் (Kevin Rudd) என்பவர்,  ‘பூர்வீக ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு’ கேட்கிற நீண்ட கடிதத்தை ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் வாசித்தார். ‘என் சகோதரா, என்னை மன்னிப்பாயாக’ எனத்துவங்கும் அக்கடிதம் ஒட்டுமொத்த உலகத்தின் மனசாட்சியையும் இளகச்செய்வதாக அமைந்திருந்தது.

இந்த மன்னிப்புக்கேட்டல் கடிதத்தை ஆஸ்திரேலியப் பிரதமரின் மனதில் தோன்றவைத்ததின் பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக மேலே குறிப்பிட்டிருந்த திரைப்படமும் அமைந்தது. ஒரு வரலாறானது புத்தகமாகவோ அல்லது திரைப்படமாகவே படைப்புறும்போது, அது மானுடத்தின் மனசாட்சியை எக்காலத்துக்கும் உலுக்கும் ஆவணமாக நிலைபெற்றுவிடுகிறது. குக்கூ குழந்தைகள் வெளி, முதன்முதலில் அச்சுப்படுத்திய புத்தகம், ஆஸ்திரேலியப் பிரதமரின் அந்த மன்னிப்புக்கடிதம் தான். மருத்துவர் வெ.ஜீவானந்தம் அய்யா அவர்கள் தமிழில் அதை மொழிபெயர்த்திருந்தார்.

நீங்கள் எழுதிய ‘அருகர்களின் பாதை’ எனும் நூலை அண்மையில்  நாங்கள் வாசித்தறிந்த போது, இந்தியாவின் சமணர்களின் அறச்சாலைகள் வழியாக பயணிக்கிற பெரும் வழித்தடம் இந்தியாவில் இன்னும் உயிரோடிருப்பதை அறியமுடிந்தது. அவ்வகையில் உண்டான அடுத்தடுத்த வாசிப்புகளில், ‘சில்க் ரூட்’ எனப்படும் பண்டையகால ‘பட்டுப்பாதை’யைப்பற்றிய வரலாற்றுக்குறிப்புகளையும் அடையநேர்ந்தது. வரலாற்றில் இன்னும் சாகாத எச்சங்களாக நீடிக்கும் பெருங்கட்டுமானங்கள் மற்றும் வழித்தடங்கள் பற்றிய படைப்புகள் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் உயிர்பெறுகின்றன. வரலாற்றின் இருள் மெல்லமெல்ல  விலகத்துவங்கும் ஒரு மறுநுழைவுக் காலகட்டம் உருவாகிவருவதை உணரமுடிகிறது.

அதன்பின், ‘உப்புவேலி’ என்கிற புத்தகத்தின் அறிமுகக்குறிப்பை உங்களுடைய இணையதளத்தில் கண்டவுடன் அப்புத்தகத்தைப்பற்றிய முதலாவல் எங்களுள் எழுந்தது. பிறகு, இந்நூலின் முதற்பதிப்பு வெளியீட்டு விழாவில் நீங்கள், சிறில் அலெக்ஸ் மற்றும் வே.அலெக்ஸ் ஆகியோர்கள் சொல்மலர்த்திய நூலறிமுக உரைகளும் இப்புத்தகத்தை இன்னும் எங்களுக்குள் அணுக்கப்படுத்தின. ‘இந்திய தேசத்தையே இரண்டாகப் பிரித்திருந்தது ஒரு உயிர்வேலி’ என்ற கண்டுபிடிப்பு எங்கள் மனதுக்குள் பெரும் கற்பனைகளாக விரிந்தது.

ராய் மாக்ஸம்

‘உப்புவேலி’ புத்தகத்தை வாசித்தபிறகு அவ்வரலாற்று உண்மையின் பின்கதையினையும், அதற்காக வரலாற்றாய்வு எழுத்தாளர் ராய் மாக்ஸம் மேற்கொண்ட அயராத முயற்சியினையும் உணரமுடிந்தது. எளியதொரு உப்புக்கல்லின் பின்னால் இப்படியொரு வரலாற்று ஆதிக்கம் இருக்கிறதா என்பதனை நாங்கள் காலங்கடந்துதான் நம்பினோம். அதன்பின், எங்களுடைய விருப்பத்துக்குரிய பரிந்துரையாக இப்புத்தகம் மாறிப்போனது. கட்டிடத் தொழில்நுட்பவியல் மற்றும் கட்டிட வடிவமைப்பியல் சார்ந்த நண்பர்கள் வருகிறபோது, அவர்கள் எல்லோரும் இந்திய வரலாற்றின் கட்டுமானங்கள் குறித்து நிறைய உரையாடினாலும், இந்த உப்புவேலி குறித்து நாம் தெரிவிக்கும்போது சிற்றளவுகூட அவர்கள் யாருமே இதற்குமுன் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில், நண்பர்களுக்குப் பரிசளிப்பதற்காக இப்புத்தகத்தை தேடியபோது, இப்புத்தகம் அச்சில் இல்லை என்பது தெரியவந்தது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணம் என்கிற எங்கள் தவிப்பு இந்தப் புத்தகத்தை நோக்கி உந்திக்கொண்டே இருந்தது. நற்செயல்களின் கனிவாக உங்களுடைய வழிகாட்டுதலின் துணையால், தன்னறம் நூல்வெளி வாயிலாக ‘உப்புவேலி’ புத்தகம் மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.

சிறில் அலெக்ஸ்

 

இப்படியொரு வரலாற்று ஆவணத்தை தன்னுடைய தேடலின் வழியாகக் கண்டடைந்து எழுதிய வரலாற்றாசிரியர் ராய் மாக்ஸம் அவர்களுக்கும், இப்புத்தகம் பற்றிய முதலறிமுகத்தை உருவாக்கித்தந்து, இன்றுவரை எங்களுடைய அனைத்து எளிய முயற்சிகளையும் அங்கீகரிக்கும் உங்களுக்கும், ஒரு கதைசொல்லல் வடிவத்திலமைந்த இந்நூலை தமிழில் செழுமையுற மொழிபெயர்த்து, இப்புத்தகத்திற்கான பதிப்பக அனுமதியைப் பெற்றுத்தந்த தோழமை சிறில் அலெக்ஸுக்கும், இதன் முதற்பதிப்பை வெளியிட்டு இந்நூலை முக்கியப்படுத்திய தோழமை வே. அலெக்ஸ் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சின் கரங்குவிந்த நன்றிகள்.

உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இந்தியாவின் குறுக்காக முள்மரங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் உயிர்வேலியின் வரலாற்று எழுச்சியும் வீழ்ச்சியும் அடங்கிய தொகுப்பே இந்நூல். ‘கொத்துகொத்தாய் லட்சக்கணக்கில் செத்துமடிந்த பெரும் பஞ்ச காலங்களில், அத்தனை சுங்கவரிகளும் தளர்த்தப்பட்ட நிலையிலும், கடைசிவரை உப்பின் மீதான வரி குறைக்கப்படவில்லை’ என்ற தகவல் உப்பின் மீதான நமது கண்ணோட்டத்தையே மாற்றிவிடுகிறது. காந்தி, தண்டி யாத்திரையில் அள்ளிய கைப்பிடி உப்புமண் சுமந்திருந்த வரலாற்றுப்பின்புலம் எத்தகையது என்பதனையும் இப்புத்தகம் விவரிக்கிறது.

சமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது என்பதை உங்களுடைய முன்னுரை வாயிலாக தீர்க்கமாக அறிகிறோம். இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த ஆசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. உண்மைதான், இது நம் மதிப்பீடுகளின் மறுபரிசீலனைக்கான காலம்.

தன்னறம் நூல்வெளியின் ‘மீண்டெழ’ உதவிகோரல் பதிவின் வழியாக நண்பர்கள் அளித்த நம்பிக்கையின் முதலசைவாக இப்புத்தகம் பதிப்படைந்ததில், நாங்கள் அனைவரும் உளநிறைவும் உழைப்புவலிமையும் அடைகிறோம். என்றும் எங்களை செயலுக்குள் ஆழ்த்தும் உங்கள் பேருள்ளத்திற்கும், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத் தோழமைகளின் பேருதவிக்கும், செயல்மீது நம்பிக்கையளிக்கும் அத்தனை மனிதர்களுக்கும்… நிறைமனதின் பெருநன்றிகள் இக்கணம் சென்றடைக!

‘உப்புவேலி’ புத்தகம் பெற :  http://thannaram.in/product/uppuveli/

விலை : ரூ.400

நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி,

குக்கூ காட்டுப்பள்ளி,

9843870059

 

 

முந்தைய கட்டுரைபாலையின் களிப்பு
அடுத்த கட்டுரைகவிஞனின் கைக்குறிப்புகள்