நுரைச்சிரிப்பு – கடிதங்கள்

நுரைச் சிரிப்பு

அன்புள்ள ஜெ

நுரைச்சிரிப்பு வாசித்தேன். நானும் நாளும் காணும் காட்சிதான். ஆனால் அதைச் சிரிப்பாக பார்ப்பதற்கு ஒரு கண் தேவைப்படுகிறது. அந்தக் கண் இருந்தால்தான் அந்தக் காட்சியின் கொண்டாட்டம் வந்துசேர்கிறது. அழகான கட்டுரை. அதில் ‘இப்படிச் சிரிப்பவர்களுக்கு அருளப்படுவது’ என முடியும் பகுதி அழகான கவிதை. கவிதை என தனியாக எழுதுகிறார்கள். கவிதையை இயல்பாக உரைநடையில், அன்றாட வாழ்க்கையில் அடையமுடியும் என்பது அவ்வப்போது தெரியவரும் தருணங்கள் உண்டு. இது அத்தகையது.

இன்றைய எழுத்தில் வீரியத்துடன் உள்ள அம்சம் இந்தக் குறுங்கட்டுரை வடிவம் என நினைக்கிறேன். துளித்துளியாக ஓர் அனுபவத்தை ஒரு காட்சியை புனைவுக்கும் செய்திக்கும் அனுபவத்திற்கும் நடுவே நின்று சொல்லிவிடமுடிகிறது. இது உருவாக்கும் நம்பகத்தன்மையும் கூர்மையும் பெரும்புனைவிலேயே வருகின்றன.

செல்வக்குமார்

***

அன்பின் ஜெ,

நலம் தானே?

உங்களுக்குக் கடிதம் எழுதி சிலகாலம் ஆயிற்று. கடிதம் மட்டுமே தொடர்பு இல்லை அல்லவா! இன்று உங்கள் ‘நுரைச் ரிப்பு’ படித்தவுடன் ஏற்பட்ட மனவெழுச்சியை எழுதும் ஆவல்மேலிட, இதைக் கையோடு பதிவு செய்கிறேன். அன்றாடம் நாமனைவருமே கடந்துபோகும் ஒரு நிலக்காட்சியை…ஆம், கடந்துதான் போய்க்கொண்டே இருக்கிறோம். அந்தக் காட்சிகளோ அழகின் உன்னதத்தை அள்ளி நின்றபடி, பார்த்துவிட மாட்டோமா என்று தான் பூத்திருக்கின்றன… காத்திருக்கின்றன. நமக்கானால் ஆயிரம் கவலைகள்.. ஆயிரம் ஜோலி… அசிரத்தை. ஆனால் உங்கள் கண்களுக்காக மட்டும் அவை மேலும் மெருகுகொண்டு மிளிர்கின்றன.

 புற்கள் கூட சுடர்விடும் சொல்லோவியமாய் கிளர்ந்து காட்சிப்படுகின்றன. நுரைச்சிரிப்பு வாசகனுக்கு உணர்த்துவது இரண்டு. எப்படிக் கண்களும் மனமும் இயற்கையோடு பிரமிப்புடன் ஒன்றி, ட்சியை உள்வாங்க வேண்டுமென்பது ஒன்று ; அக்காட்சிகள் உருவாக்கும்  நுட்பமான மனப்பதிவின்  பரவசத்தை, சொற்களில் பொதித்துப் படரவிடுவது மற்றொன்று. காற்று புற்களின் விதைகளை எங்கும் பரப்புவது இயற்கையின் லயம்.உங்கள் சொற்களும் விதைகள் தாமே?

 சகோதரி அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பு.

 மோகன் ஜி மும்பை

***

முந்தைய கட்டுரைபுழுக்கச்சோறு, தங்கப்புத்தகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎன் வாசகர்கள்