பிற அறிவிப்பு அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

67

அன்பார்ந்த தோழர்களே,                                                            24.02.2020

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும், இவையன்றி வேறு சில பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்த நான், எல்லா பொறுப்புகளிலிருந்தும், குறிப்பாக, இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகுகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற காரணத்தினாலும், தமிழகமெங்குமுள்ள அமைப்புத் தோழர்களுக்கு எனது விலகலையும்  அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதற்கு வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், அவசியமான விவரங்களை மட்டும் கோடிட்டுக் காட்டி எனது விலகலைத் தவிர்க்கவியலாமல் பொதுவெளியில் அறிவிக்கிறேன்.

எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

தோழர் மருதையன்

அயோத்தி தீர்ப்பு, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று மோடி அரசின் பார்ப்பன பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், எங்களது இந்த விலகல் அறிவிப்பு பலருக்கு வருத்தமளிக்கலாம், சிலருக்கு அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கலாம். நாடெங்கும் மாணவர்களும் முஸ்லிம் பெண்களும் இன்னும் பல்வேறு தரப்பினரும், அஞ்சாநெஞ்சினராய் பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதென்பது காலத்தின் தேவை. அத்தகைய முயற்சியில் முன்நிற்க வேண்டிய அமைப்பின் தலைமைத் தோழர்கள், அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே என்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.

சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்குப் பின்னர், எமது அமைப்புகளிலிருந்து சிலர் வெளியேறியதையும், வெளியேற்றப்பட்டதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு “பதிலிப்போர்” நடத்தினர்.

“1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்திவிட்டேன் 2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன் 3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன். 4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன் 5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன் 6. மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். (கீற்று இணையதள கட்டுரை மற்றும் எழில்மாறன் உள்ளிட்ட சிலரின் முகநூல் பதிவுகள்). இவை தவிர தரம் தாழ்ந்த பல அவதூறுகளையும் கடந்த ஓராண்டாக வாய்வழியே பரப்பி வந்தனர்.

தங்களுக்கு உவப்பில்லாத அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் ஒரு சதிக்கோட்பாடாக மாற்றி, “குற்றத்தை” என் தலையில் சுமத்தினர். “போம்பழியெல்லாம் அமணன் தலையோடே” என பழி எதுவாகிலும் அதனைச் சமணர் தலையில் சுமத்திய ஆழ்வார்கள் நாயன்மார்களின் தந்திரம் இது.

அவதூறு செய்தவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர்.  அவ்வாறு முடிவெடுத்த பிரதிநிதிகள் அனைவருமே “செட் – அப் செய்து கொண்டுவரப்பட்ட மோசடிப்பேர்வழிகள்” என்று அனைவரையும் தூற்றினர். இந்த நபர்களை “சீர்குலைவு சக்திகள்” என்று அமைப்பின் தலைமை அறிவித்தது. அத்தகைய சிலர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

னால், வேறு சிலர் இதே அவதூறுகளை, அமைப்புக்குள் இருந்தபடியே ஓராண்டாகப் பரப்பி வந்தனர். சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரைத் தூண்டிவிடுவதே அமைப்பிற்கு உள்ளே இருக்கும் இந்த “தந்திரசாலிகள்”தான் என்று தலைமைக்குழுவுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும். இவர்கள்தான் சீர்குலைவு நடவடிக்கைகளின் ஆணிவேர் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தலைமைக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவு காகிதத்தில் இருக்கிறது.

இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு “குற்றமற்றவர்கள்” என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள்.

அமைப்பை அவதூறு செய்தவர்களுக்குத் தலைமை சூட்டிய பெயர் “சீர்குலைவு சக்திகள்”. அத்தகைய சீர்குலைவு நடவடிக்கையைத் தூண்டியவர்களைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசிய தலைமைக்குழுவினை என்ன பெயரிட்டு அழைப்பது? இப்படியொரு தவறை கீழ்மட்டத்தில் யாரேனும் செய்திருந்தால், “சீர்குலைவு சக்திக்கு துணைபோனார்கள்” என்று குற்றம்சாட்டி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அமைப்பின் காவலர்களாக இருந்திருக்க வேண்டிய தலைமைக்குழுவின் பெரும்பான்மைத் தோழர்கள் சீர்குலைவின் காவலர்களாக நடந்து கொண்டிருக்கிறார்களே, என்ன செய்வது?

“அமைப்பின் பொதுமேடையில் அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் தலைமைக்குழுவினரை விசாரிப்பதுதான் நியாயமான அமைப்புமுறை” என்று நானும் வெறு சில முழுநேர ஊழியர்களும் வலியுறுத்தினோம். “தாங்கள்தான் அமைப்பின் அதி உயர் தலைமை” என்பதால், தவறு செய்தவர்கள் தங்களுக்குள் சுயவிமர்சனம் செய்து பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் அமைப்புமுறை  என்பது தலைமைக்குழு பெரும்பான்மையினரின் நிலை.

முதலாளித்துவ நீதிமுறையாலேயே ஒப்புக்கொள்ளப்படாத, “எனக்கு நானே நீதிபதி” என்ற நெறியை, இதுதான் பாட்டாளிவர்க்க அமைப்புமுறை என்று கூறியதை எங்களால் ஏற்கமுடியவில்லை. “பொறுப்புகளிலிருந்து விலகுகிறோம். சாதாரண உறுப்பினராக செயல்படுகிறோம்” என்று அக்டோபர் 16 அன்றே கடிதம் கொடுத்து விட்டோம். அதற்குப் பின்னரும் அவர்கள் நிலையில் மாற்றமில்லை. “உங்கள் தவறை அணிகள் மத்தியில் ஒப்புக்கொள்ளாவிட்டால், நாங்கள் அமைப்பிலிருந்தே வெளியேறுவோம்” என்று நாங்கள் கூறவில்லை. “இந்த முறைகேட்டுக்கு உடன்பட்டு தலைமைப் பொறுப்புகளில் நாங்கள் நீடிக்க முடியாது. உறுப்பினராக வேலை செய்கிறோம்” என்று மட்டுமே வலியுறுத்தினோம்.

எங்களது பதவி விலகல் அணிகளுக்குத் தெரிந்தால், ஏன், எதற்கு என்ற கேள்வி எழுமே, தங்களது தவறுகளும் தவிர்க்கவியலாமல் வெளியே வருமே என்பது அவர்களது கவலை. இதனால்தான் எனது கடிதத்தின் மீது முடிவே எடுக்காமல் 4 மாதங்களாக இழுத்தடித்தார்கள். நான் ம.க.இ.க வின் செயலராக இருக்கும்போதே என்னை மாநாட்டுப் பணிகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைத்து எனக்குப் “பாடம்” புகட்டினார்கள். “மருதையன் எங்கே” என்று கேட்ட தோழர்களிடம் நான் ஆய்வுப்பணியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்தார்கள். தலைமையின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் அணிகளும் இதையெல்லாம் நம்பினார்கள்.

தாங்கள் செய்த முதல் தவறு அணிகளுக்குத் தெரிந்துவிடாமல் மறைப்பதற்காக, “அமைப்புமுறை” என்ற திரைக்குள் மறைந்து கொண்டு, அவர்கள் செய்த அடுத்தடுத்த தவறுகள், முதல் தவறைப் பன்மடங்கு விஞ்சிவிட்டன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக, அவர்களிடம் வெளிப்பட்ட நேர்மையின்மையும் அதிகாரத்துவப் போக்கும் அவர்களது இன்னொரு முகத்தை எனக்கு அறியத்தந்தன.

னது விலகலுக்கான காரணம் இதுமட்டுமேயல்ல. “அம்பேத்கரியம் + பெரியாரியம் + மார்க்சியம்” என்று அமைப்பின் கொள்கையை  கள்ளத்தனமாக மாற்றுவதற்காகத்தான்  “நீலநிற ஜீன்ஸ், கருப்பு சட்டை, தலையில் சிவப்பு துணி” என்று ம.க.இ.க கலைக்குழுவின் சீருடையை மருதையன் மாற்றிவிட்டார்” என்று ஒரு பிரச்சாரத்தை சென்ற ஆண்டு திருச்சி மாநாட்டிற்குப்பின் மேற்சொன்ன தந்திரசாலிகள் சமூக ஊடகங்களில் அவிழ்த்துவிட்டனர். இது ஒரு மலிவான அவதூறு என்று நான் விளக்கிய பின்னரும், தலைமைக்குழுவின் முக்கியத் தோழர்கள் இந்த சந்தேகப் பார்வையிலிருந்தே என்னை அணுகினர். அமைப்புக்குள் இருந்துகொண்டே இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்பியவர்கள் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டையே எதிர்ப்பவர்கள் என்பது தலைமைத் தோழர்களுக்குத் தெரியும். இருப்பினும் தலைமைத் தோழர்களின் “சந்தேகப்பார்வை” என்மீது இருந்ததேயொழிய, பார்ப்பன பாசிசம் என்ற அரசியலையே எதிர்ப்பவர்கள் மீது இல்லை.

“அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி”, “சதி நடக்கிறது”, “முக்கியத் தோழர்களை ஒதுக்கும் முயற்சி” என்பன போன்ற சொற்கள் என்னைக் குறிவைத்து ஓராண்டாகவே பேசப்பட்டு வருகின்றன. அவற்றை அப்போதெல்லாம் பொருட்படுத்தாத நான், இப்போது அந்தச் சொற்களின் முழுப்பொருளை புரிந்து கொள்கிறேன். இவை குறித்த விவரங்கள் தலைமைக்கு நான் எழுதிய கடிதங்களில் உள்ளன. மேற்கண்ட சொற்கள் அனைத்தும் எழில்மாறன் என்பவரின் கடிதத்தில் இடம்பெற்றிருப்பவை என்பதை மட்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இறுதியாக, சனவரி,11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20 பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். “எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல். எங்களுக்குக் கொடுங்கள், விளக்கமளிக்கிறோம்” என்று கேட்டுவிட்டோம். தரமறுக்கிறார்கள்.

ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அதிகாரவர்க்கம், அதனை கேள்விக்குள்ளாக்குகின்ற செயல்பாட்டாளர்களை (whistle blowers) அவதூறு செய்து, பொய்வழக்கு போட்டு “உள்ளே” தள்ளுவது போல, என்மீது “பொய்வழக்கு” தொடுத்து “வெளியே” தள்ளுவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். எனக்கெதிரான விமர்சனங்களை எனக்குத் தெரிவிக்க மறுத்து, என் முதுகுக்குப் பின்னால் மற்றவர்களிடம் சுற்றுக்கு விடுகிறார்கள். “அமைப்பு நலனை முன்னிட்டு இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது” என்று இந்த முறைகேட்டுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள்

தனிப்பட்ட தாக்குதலைச் சந்திப்பது எனக்குப் புதிய அனுபவமல்ல. அமைப்பின் முகமாக நான் அறியப்பட்ட காரணத்தினால், அமைப்பில் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் என் தலை உருண்டிருக்கிறது. இதை அமைப்பின் முன்னணித் தோழர்கள் அறிவார்கள். பல சந்தர்ப்பங்களில் நமது அமைப்பை விமர்சிப்பவர்களுக்கு எளிய தாக்குதல் இலக்காக நான் இருந்து வந்திருக்கிறேன்.

மொத்த அமைப்பின் தலைமை நானல்ல என்ற போதிலும், பார்ப்பனத்தலைமை என்ற விமர்சனத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து என்னை மையப்படுத்தி பலர் வைத்திருக்கின்றனர். அப்படி விமர்சித்தவர்கள் யாருக்கும் என்மீது தனிப்பட்ட பகை கிடையாது. அது அவர்களது அரசியல் பார்வை. அத்தகைய பார்வை வருவதற்கான சமூக எதார்த்தமும் உள்ளது என்ற காரணத்தினால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் காட்டியதில்லை. பொதுமேடையில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது, தி.க வைச் சேர்ந்த எனது நண்பர்கள், அங்கேயே தமது கட்சியினரை மறுத்து வாதாடியிருக்கிறார்கள்.

அவர்கள் காட்டிய நேர்மை நமது அமைப்பின் முக்கியத் தோழர்களிடம் இல்லை. தம்மை விமர்சித்த ஒரே காரணத்துக்காக என் மீது தரம்தாழ்ந்த தாக்குதல் தொடுக்கவும்,  பொய்ப்பழி சுமத்தவும் இவர்கள் தயங்கவில்லை. எதுவாக இருந்தாலும் விமர்சனத்தை வெளிப்படையாக நேருக்குநேர் என்னிடம் சொல்லும் நேர்மை, அமைப்புக்குள்ளே இருந்து கொண்டு பதிலிப்போர் நடத்துவோரிடமும் இல்லை. தலைமைத் தோழர்களிடமும் இல்லை.

நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். “தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன்” என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்துவிட்டேன். நான் “வெளியேறுகிறேன்” என்று சொல்வதை விட, “வெளியேற்றப்படுகிறேன்” என்பதே உண்மை.

“இந்த அரசியல் தருணம் விலகுவதற்கு ஏற்றதல்ல” என்று பலரும் கருதலாம். ஆனால் இந்த அரசியல் – அமைப்புத் தலைமை மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். 35 ஆண்டுகள் முழுநேரமாகப் பணியாற்றி விட்டு, தவறை நேர்மையாக விமர்சித்த குற்றத்துக்காக, “சதிகாரன் – பதவி வேட்டைக்காரன் என்பன போன்ற அவதூறுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அமைப்பில் நீடிப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நான்கரை மாதங்களில் தலைமைக்குழுவுடனான எனது கடிதப் போக்குவரத்து, முன்னணித் தோழர்கள் குழுவின் கூட்டக் குறிப்புகள், எனக்கே தரப்படாத என் மீதான விமர்சனக் கடிதம் ஆகியவை உங்களுக்கு வாசிக்க கிடைக்குமானால் என்னுடைய கூற்றில் இருக்கும் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

தலைமையின்மீது நம்பிக்கை வைத்து, அதற்குக் கீழ்ப்படிந்து உழைக்கும் தோழர்களிடம், தலைமை தனது தவறுகளை மறைக்கிறது. நேர்மையின்றி நடந்து கொள்கிறது. “அமைப்பில் எல்லோரும் சமம்” என்று ஏட்டளவில் கூறிக்கொண்டாலும், “சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” என்ற கருத்து தலைமைத் தோழர்கள் மனதில் இருக்கிறது. இவ்வாறு சிந்திப்பவர்கள், தங்கள் தவறை அணிகளுக்கு மறைப்பதும் கூட “அமைப்புநலனை முன்னிட்டுத்தான்” என்று நம்புகிறார்கள். தவறு வெளியில் தெரிந்தால் “தங்கள் மீது அணிகள் நம்பிக்கை இழக்கக் கூடும்” என்பது அவர்கள் கவலை. ஆனால் “அமைப்பின் மீது நம்பிக்கை போய்விடும்” என்று அதை சித்தரிக்கிறார்கள். “அணிகள்தான் அமைப்பு – தாங்கள் பிரதிநிதிகள் மட்டுமே” என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

அமைப்பு என்பது சிலரின் உடைமையல்ல. தலைமையால் தனது அதிகாரத்தின் துணை கொண்டு,  தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும். எத்தகைய கண்காணிப்புகளை உருவாக்கினாலும், “சரி – தவறுக்கிடையே நடுநிலை வகிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்” பலர் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது ஏட்டில் மட்டுமே இருக்க முடியும். இது இப்பிரச்சனையில் நான் பட்டுத் தெரிந்து கொண்ட கசப்பான உண்மை.

நான்கரை மாதங்களாக அமைப்புக் கட்டுப்பாடு கருதி நான் தோழர்கள் யாரிடமும் பேசவில்லை. இப்போது பேசுகிறேன். “பார், அமைப்பு விசயங்களைப் பொதுவெளியின் பேசுகிறான், சீர்குலைவு சக்தி” என்று அவர்கள் என்னை அழைக்கக்கூடும். அவர்களால் இவ்வாறு அழைக்கப்படுவதை ஒரு நகைச்சுவையாகவே நான் எடுத்துக் கொள்வேன். “அமைப்பின் கவுரவத்தைக் குலைக்கிறேன்” என்று குற்றம் சாட்டுவார்கள். தங்கள் போலி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைப்பின் கவுரவத்தை சந்திக்கு கொண்டு வந்திருப்பவர்கள் அவர்கள்தான் என்பதே எனது பதில்.

பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு –  அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது. “அமைப்பு நலன்”, “அமைப்பு முறை” என்ற இரு சொற்றொடர்களைத் தங்களது தவறை மறைப்பதற்கான கேடயமாகவும், விமர்சிப்போரை வீழ்த்துவதற்கான வாளாகவும் இந்தத் தலைமை தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊன்றி நின்று போராடிப் பாருங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

நாங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகுகிறோம். நாற்பதாண்டு அமைப்பு வாழ்க்கையில் தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை. இன்று அவை வெறும் நினைவுகள் மட்டுமே.

நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன.

எனினும் நினைவுகளில் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய நிஜம் இதுதான்.

விடைபெறுகிறேன் தோழர்களே!

தோழமையுள்ள,
மருதையன்

 ________________

 அன்பார்ந்த தோழர்களே,

சுமார் 30 ஆண்டுகளாக முழு நேர ஊழியராக அமைப்பில் செயல்பட்டு வருகிறேன். புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறேன். வினவு தளத்தை உருவாக்கி நடத்தி வருவதில் முக்கியப் பங்காற்றி வருகிறேன். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.

கடந்த நான்கரை மாதங்களாக தோழர் மருதையனுடன் இணைந்து தலைமையின் நேர்மையின்மைக்கும் அதிகாரத்துவத்துக்கும் எதிராக நானும் போராடினேன். அவரது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதே காரணங்களுக்காக,  நானும் ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் விலகுகிறேன்.

தோழமையுள்ள,
நாதன்

_______

ன்று 24.2.2020 தேதியன்று எமது கோரிக்கையின் பேரில் கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் எமது விலகலை முன்வைத்தோம். மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிராகரித்தனர். ம.க.இ.க. செயலராக மருதையனும், மாநில செயற்குழு உறுப்பினராக நாதனும் செயல்படுவதில் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லாத நிலையில், உங்களுக்கும் எங்களுடனான உறவில் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலையில் நீங்கள் இருவரும் தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க விரும்பிய போதிலும் தவிர்க்கவியலாத நிலையில் எமது இந்த விலகலை அறிவிக்கிறோம். மாநில செயற்குழு உறுப்பினர்களும் ம.க.இ.க தோழர்களும் புரிந்து கொள்ளுமாறும் எமது விலகலை அங்கீகரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள
மருதையன்
நாதன்

முந்தைய கட்டுரைவிடைபெறுகிறோம்- வினவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57