மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு

 

அன்புள்ள ஜெ,

 

வினவு இணையதளத்தில் தமிழகத்தின் தீவிர இடதுசாரி அமைப்பான ‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்’ தலைவர் மருதையன் அவர்களின் பதவி விலகல் கடிதம், அவ்வமைப்பின் தளமான வினவு நின்றுபோவது பற்றிய அறிவிப்பு ஆகியவற்றை வாசித்தேன். உடனடியாக நினைவிலெழுந்தது பின்தொடரும் நிழலின் குரல் நாவல்தான்.

 

இன்றுவரை அந்நாவல் இடதுசாரி எதிர்ப்பு நாவல், அவதூறுநாவல் என்றெல்லாம் வசைபாடி வருகிறார்கள் இடதுசாரிகள். ஆனால் அந்நாவலில் இடதுசாரிகளிடையே உள்ள பொதுவான மனநிலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு எங்கும் பேசப்பட்டதில்லை. மீண்டும் மீண்டும் அந்நாவலை ஞாபகம் படுத்தியபடியே இருக்கிறேன் .நான் தொழிற்சங்க ஊழியனாக முப்பதாண்டுகள் இருந்தவன். எனக்கு அந்நாவல் என் வாழ்க்கையையே திரும்பிப் பார்ப்பதுபோல.

 

இந்த இடதுசாரி இயக்கங்களில் உண்மையில் என்னதான் பிரச்சினை? கொள்கை கோட்பாடு என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையான பிரச்சினை ஈகோதான். அறிவாணவம் என்று சொல்லலாம். நீங்கள் சொன்ன வார்த்தை அது. கொள்கைதான் பிரச்சினை என்றால் அவதூறு, திரிப்பு என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது? தனிப்பட்டமுறையில் வசைபாடுவதும் சிறுமைப்படுத்துவதும் எப்படி நிகழ்கிறது?

 

இந்த ஈகோ எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை பின்தொடரும் நிழலின் குரல் அற்புதமாகச் சொல்கிறது. உண்மையில் இருக்கும் விஷயம் நான் என்பதுதான். அதை என் நிலைபாடு என்று மாற்றிக்கொள்வார்கள். அதற்குரிய எல்லா கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குவார்கள். அதற்கு தேவையான மூளை உழைப்பை செலுத்துவார்கள். இதில் செலுத்தப்படும் அறிவுழைப்பு மிகமிகப் பயங்கரமானது. ஆண்டுக்கணக்காக வாசிப்பார்கள், விவாதிப்பார்கள், எழுதுவார்கள். ஆச்சரியமானது இது.

 

ஈகோவிலிருந்து பாஸிட்டிவான எனர்ஜியும் நெகெட்டிவான எனெர்ஜியும் உருவாகும். பாஸிட்டிவான எனெர்ஜி குறைவான ஆற்றல் கொண்டது. அவ்வப்போது டிப்ரஷன் ஆகும். ஆனால் நெகெட்டிவான எனெர்ஜிக்கு அளவே இல்லை. எவரையாவது எதிர்த்து வெறுத்து அரசியல் செய்தால் சலிப்பே இல்லாமல் செய்துகொண்டே இருக்கமுடியும். காழ்ப்பு மட்டும் இருந்தால்போதும் கண்மூடித்தனமான வேகம் வரும். திட்டத்திட்ட திண்டுக்கல்லு என்று சொல்வார்கள்.

 

நாம் என்ன நினைப்போம் என்றால் இவர்களிடமிருக்கும் அர்ப்பணிப்பு, தீவிரம், தியாகம் இதையெல்லாம் பார்த்து அடடா இதல்லவோ கொள்கைப்பற்று என்று நினைப்போம். உள்ளே போய் நெருக்கமாகப் பழகினால்தான் அப்படி இல்லை என்பது தெரியும். அது தெரிவதற்கே கொஞ்சம் நுட்பம் தேவை. எப்படித்தெரியும் என்றால்  மோதல்களை பார்க்கும்போதுதான். ஒரே கொள்கை கொண்டவர்கள், சேர்ந்து செயல்பட்டாக வேண்டியவர்கள் ஒரு சின்ன வேறுபாட்டைச் சொல்லி இந்த அளவுக்கு எப்படி முட்டிக்கொள்கிறார்கள் என்று முதலில் ஆச்சரியப்படுவோம். அதிலிருக்கும் தனிப்பட்ட வெறுப்பும் காழ்ப்பும் எதுக்காக என்று நினைப்போம்.

 

கொஞ்சம் கொஞ்சமாக இதெல்லாம் கொள்கையே இல்லை, வெறும் ஆணவம்தான் என்று தெரிய ஆரம்பிக்கும்.  இந்த ஆணவத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். அதுதான் இவர்களின் தியாகம் என்பது. அது எந்தவகையான பொதுநல நோக்கமும் கொண்டது இல்லை. அதில் ஈரமே கிடையாது. எந்தவகையான கருணையும் இல்லை. கனவுகளும் இல்லை. வெறுப்பு மட்டும்தான். ஆகவே பேசிக்கொண்டே இருப்பார்கள். பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் இதை மிகச்சரியாகப் புரிந்து வைத்திருப்பவள் நாகம்மை மட்டும்தான் உங்க தலைக்குள்ள அடுப்பு எரியுது என்று அவள் சொல்கிறாள்.

 

இது இந்த எம்.எல் இயக்கங்களில் உள்ள பிரச்சினை அல்ல. இடதுசாரிகளுக்கு இந்தியாவிலும் வெளியிலும் உள்ள பிரச்சினை இதுதான். இப்போது ஒரு பிரச்சினையால் ம.க.இ.க உடைகிறது . இதற்குமுன் எல்லா எம்.எல் இயக்கங்களும் உடைந்திருக்கின்றன.அதற்கு முன்னால் தமிழ்த்தேசியம் தேவையா இல்லையா என்பதனால் உடைந்தது.அதற்கு முன்னால் தொழிற்சங்கம் தேவையா இல்லை விவசாய சங்கம் வேண்டுமா என்பதனால் உடைந்தது. வர்க்க எதிரியை உடனடியாக அழிக்கவேண்டுமா வேண்டாமா என்பதால்  அதற்கு முன்னால்.

 

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் உடைந்திருக்கின்றன. உலகம் முழுக்க கம்யூனிசம் ஒரேயடியாக வரவேண்டுமா தனித்தனி நாடுகளாக வரலாமா என்பதனால் கட்சி உடைந்திருக்கிறது. சீன ஆதர்வு ரஷ்ய ஆதரவு என உடைந்திருக்கிறது. ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி உடைந்திருக்கிறது. டிராட்ஸ்கியிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். உடைந்ததுமே மாறிமாறி அவதூறுதான் செய்வார்கள். சிறுமைப்படுத்துவார்கள். ரஷ்யா என்றால் அவதூறையே குற்றமாக காட்டி கொலைசெய்வார்கள்.

 

இங்கே கம்யூனிஸ்டுக் கட்சிகள் உடைந்தபோது பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் பயங்கரமாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மனம் உடைந்து அழுத பெரியவர்கள் பலர் உண்டு. டபிள்யூ.ஆர்.வரதராஜன் அவதூறுக்குப் பயந்து தற்கொலையே செய்துகொண்டார்.  செத்தபின்னாலும் அவதூறு சொல்வார்கள். அவர்களின் எதிரிகள்கூட அதையெல்லாம் செய்தது இல்லை. இன்றைக்கு மருதையன் அவதூறு செய்யப்பட்டேன் , கேவலப்படுத்தப்பட்டேன் என்கிறார். அதை அவர் எவ்வளவுபேருக்குச் செய்திருப்பார்!

 

ஒரு இடதுசாரி நிறையப் படிக்கிறார் என்றால் அவர் மேலும் ஆணவம் கொண்டவராக ஆவார். எல்லாவற்றையும் மறுத்துப் பேசுவார். அவர் சொல்வதே சரி, அவர் மட்டுமே நேர்மையானவர் என்று சொல்வார். பெரிய பெரிய அறிஞர்கள், தியாகிகளையெல்லாம் அலட்சியமாக தூக்கிப்போட்டு பேசுவார். பெரியவர்களை சிறுமைசெய்வதுதான் மார்க்ஸிய அறிவுஜீவி முதலில் செய்வது. எதிர்த்தரப்பு பெரியவர்களை முதலில் சிறுமைசெய்வார். கொஞ்சம் கொஞ்சமாக தன் தலைவர்களையே சிறுமைசெய்வார்

 

பின்தொடரும் நிழலின் குரலில் வீரபத்ரபிள்ளை ராமசுந்தரத்திடம் கேட்பார். “தோழர் நீங்க அவதூறுக்குத்தானே பயப்படுறீங்க?” என்று. ராமசுந்தரம் அழுவதுபோல ஆகி பேசாமலேயே போய்விடுவார். அந்த இடத்தை படிக்கும்போது என் கையெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. இடதுசாரி அமைப்பில் அப்படி எத்தனைபேரை கண்டிருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் கே.கே.எம் வெளியே தூக்கிப் போடப்பட்டுவதில் இருக்கும் காய்நகர்த்தல்கள், துரோகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன

 

இன்றைக்கும் சொல்வேன், இந்திய இடதுசாரி இயக்கங்களின் மனநிலை பற்றி எழுதப்பட்ட பின்தொடரும் நிழலின்குரல் ஒரு பெரிய ஆவணம். நன்றி

 

ஏ.கே.

 

அன்புள்ள ஏ.கே,

 

ஓய்வுக் காலத்தில் எண்ணி எண்ணி கொந்தளிக்க உங்களுக்கு ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

 

சென்ற ஜனவரியில் காஸர்கோடு சென்றேன். என் பழைய தொழிற்சங்கத் தோழர்களைக் கண்டேன். அத்தனை பேரும் கூண்டோடு விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். தொழிற்சங்கத் தோழர்கள் விருப்ப ஓய்வு பெறக்கூடாது என கட்சி அறிவித்திருந்தது. ஆனால் எங்கள் முன்னாள் தலைவர் விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்துவிட்டார். அவரால் முடியவில்லை. அவர் நம்பிக்கையிழந்து விட்டிருந்தார்.

 

ஆனால் அச்செயலுக்காக அவர் அவதூறு செய்யப்பட்டார். கட்சியினரின் வெளிப்படையான வசைகள், புறக்கணிப்புகள். நாங்கள் ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். மற்றவர்கள் நட்புக்கூடலை கொண்டாடிக்கொண்டிருந்தோம். தோழர் படுத்துவிட்டார். மன அழுத்த மாத்திரைகளை அவர் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். அவருடைய முப்பதாண்டுக்கால அர்ப்பணிப்பு சேவை எல்லாமே பொருட்டில்லை என்று ஆகிவிட்டது. அவர் துரோகி ஆகிவிட்டார்

 

கட்சியில் எவரெல்லாம் துரோகிகள் ஆகியிருக்கிறார்கள்! கே.ஆர்.கௌரியம்மா முதல் பி.கோவிந்தப்பிள்ளை வரை. கட்சியை உருவாக்கியவர்களே துரோகிகளும் ஆனார்கள். டி.பி.சந்திரசேகரனைப் போன்றவர்கள் நடுத்தெருவில் கொல்லப்பட்டார்கள் அல்லவா? கட்சி விடுதலைப்புலிகளைப் போல ஆயுத அமைப்பாக இருந்திருந்தால் எல்லாரும் சுட்டுத்தள்ளப்பட்டிருப்பார்கள்.

ஏன் இந்த கொடூரம்? ஏன் இந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உச்சகட்ட வன்முறையை தங்கள்மேலேயே இழைத்துக்கொள்கிறார்கள்? தலைவர்களை சிறுமை செய்கிறார்கள். தோழர்களை சிறுமை செய்கிறார்கள். அவதூறு, வசை, உளவியல் வன்முறை, அவ்வப்போது உடல்வன்முறை, கொலைகூட. ஏன்?

 

நீங்கள் சொன்னதுதான் ஆணவம். அறிவு அத்தகைய ஆணவத்தை அளிக்கக்கூடியது. பின்தொடரும் நிழலின் குரல் பேசிக்கொண்டிருப்பது அந்த அறிவாணவத்தைப் பற்றி மட்டும்தான். அந்த ஆணவம் ஒருவனை நான் நான் என தருகக்ச் செய்கிறது. தன்னை மேலே தூக்கவேண்டும் என்றால், தன் ஆற்றலை பெரிதாகக் காட்டவேண்டும் என்றால் ஒருவன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. உலகையே எதிர்நிலையில் நிறுத்தி தான் அதை எதிர்த்து நிற்பதாக எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது

 

இந்த எதிர்மனநிலையே பிரச்சினை. ஒவ்வொருநாளும் விழித்திருக்கும் நேரமெல்லாம் எதிர்மனநிலை. உலகமே இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது என்னும் கற்பனை. அதை காக்க தான் போராடிக்கொண்டிருப்பதான பாவனை. இப்படி ஒரு கொள்கைப் பாவனையை எடுத்துக்கொண்டால் வசைபாடும் உரிமை வந்துவிடுகிறது. அதன்பின்  வசைதான். சதிக்கோட்பாடுகள், எதிரிகளையும் துரோகிகளையும் கண்டடைதல்கள். அதன்பின் பேச்செல்லாம் விவாதம்தான். அறைகூவல்கள் , சாபங்கள்.

 

இந்த மனநிலை மிகமிக ஆபத்தானது. இந்த வாள் எதிரியை பெரும்பாலும் தாக்காது. ஏனென்றால் எதிரி மிகத்தொலைவில் எங்கோ இருக்கிறான். அந்த வாள் எட்டும் தொலைவில் இருப்பவன் நண்பன்தான். ஆகவே பெரும்பாலும் அது நண்பர்கள்மேல்தான் பாயும். இருநூறாண்டுகளாக நாம் காணும் வரலாறு இதுதான், அது சோவியத் ருஷ்யாவாக இருந்தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி.ஈழமாக இருந்தாலும் சரி.

 

என்னதான் இருந்தாலும் அவர்களெல்லாம் உண்மையான அரசியல் நம்பிக்கை கொண்டவர்கள், அரசியலின் பொருட்டு தியாகம் செய்பவர்கள் என்ற ஒரு பிம்பம் இங்கே இருக்கிறது. நீங்கள் சொன்னதுதான், அவர்களின் நம்பிக்கை அரசியலில் அல்ல. அரசியல் அவர்களின் அறிவாணவத்திற்கான சாக்கு மட்டுமே. அதில் எந்த இலட்சியமும் அவர்களுக்கு உண்மையில் இல்லை. இருந்தால் அந்த இலட்சியமே அழிந்தாலும் சரி எதிரியை அழிக்கவேண்டும் என்ற வெறி வராது. அவர்கள் செய்யும் தியாகம் எல்லாம் ஆணவத்தின் பொருட்டே. குடித்துக்குடித்து அழியும் போதையடிமைக்கும் அவர்களுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.

 

ஆனால் இந்த மனநிலை இடதுசாரிகளுக்கு மட்டும் உரியதா? கூர்ந்து பாருங்கள், இது மதங்களின் மனநிலை. நான் சில மதநம்பிக்கையாளர்களைக் கூர்ந்து கவனிப்பதுண்டு. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். தங்கள் தலைமைமேல் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்டிருப்பார்கள். அதன்மேல் நின்றுகொண்டு எந்தப் பெரியவரையும், எந்தக் கொள்கையும் தயங்காமல் சிறுமை செய்வார்கள். ஏளனம் செய்வார்கள், கொக்கரிப்பார்கள். எந்த விவாதத்திலும் உண்மை அவர்களுக்கு முக்கியமல்ல, தங்கள் தரப்பின் வெற்றி மட்டுமே முக்கியமானது.

 

இந்து, இஸ்லாமிய, கிறித்த மத அமைப்புகள் அனைத்திற்குள்ளும் இதை நீங்கள் பார்க்கலாம். நுட்பமான கொள்கை, கோட்பாட்டு மாறுபாடுகள் சொல்லப்படும். ஆனால் காட்டப்படும் வெறுப்பும் காழ்ப்பும் உச்சகட்டமாக இருக்கும். நேற்று நான் ஒருவரிடம் பேசினேன், நம் முன்னாள் சங்கத்தோழர்தான். இந்நாள் பெந்தேகொஸ்தே. இன்னொருவரை “நாய் நாய் நாய் நாய் !” என வெறிகொண்டு வசைபாடினார். என்ன காரணம்? அவர் மேரிமாதாவில் மீட்பு உண்டு என்று சொல்கிறாராம். மேரியை கண்டகண்ட சொற்களால் வசை. ஆவியினாலன்றி எதனாலும் மீட்பில்லை என பல்வேறு வசனமேற்கோள்களுடன் வாயில் நுரைதள்ள கத்தினார். இருபதாண்டுகளுக்கு முன் இங்குலாப் சிந்தாபாத் சொன்ன அதே வாய், அதே நுரை. இதேபோல பேசும் பல இந்து ஆசாரவாதிகளை எனக்குத்தெரியும்.

 

பல ஆண்டுகளுக்கு முன் எம்.கோவிந்தன் ஒரு கட்டுரையில் இந்தியாவின் இடதுசாரிகளை இந்தியாவிலிருந்த தொன்மையான மதக்குறுங்குழுக்களுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார். காபாலிக மதத்தவரின் முதல் எதிரி வைணவனோ சமணனோ அல்ல காளாமுகர்கள்தான். பிளந்துகொண்டே இருப்பதே அவர்களின் வழி. யோசிக்க யோசிக்க பிளவு. ஆணவம் அறிவை ஆயுதமாகக் கொள்கையில் அடையும் பேருருவம்போல அச்சுறுத்தக்கூடியது வேறில்லை. பின்தொடரும் நிழலின் குரல் பேசுவது அதைப்பற்றியே

 

ம.க.இ.க உடைவது பெரிய விஷயம் அல்ல. சென்ற ஐம்பதாண்டுகளில் இவர்கள் எந்தெந்த ஆளுமைகளை எல்லாம் சிறுமைசெய்தார்கள் என்று எண்ணிப்பாருங்கள். அவ்வாறு ஆளுமைகளைச் சிறுமைசெய்த அதே மனிதர்கள்தான் இப்போது அவர்களின் சொந்தத் தலைவரான மருதையனை அவதூறு செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நேற்று எழுதிய வசைகளின் நோக்கம், மதிப்பு என்ன?

 

மருதையன் இன்னொரு குழுவை உருவாக்குவார். அவர்கள் பிற அனைவரையும் வசைபாடுவார்கள். வினவு தோழர்கள் இன்னொரு வடிவில் மறுபிறப்பெடுப்பார்கள். உலகிலுள்ள பிற அனைவருமே அயோக்கியர்கள், முடிச்சவிக்கிகள் என எழுதுவார்கள். மீண்டும் பிளந்து மீண்டும் ஒருவரை ஒருவர் கடித்துக் கீறிக்கொள்வார்கள்.  அவர்களால் வேறு எதையுமே செய்யமுடியாது.

 

ஜெ

மாவோயிசம் கடிதங்கள்

மருதையப்பாட்டா.

மருதையன் சொன்னது…

சாரைப்பாம்பின் பத்தி

வினவுவின் அடித்தளம்?

காலச்சுவடும் வினவும்

தினமணி-சுரா-வினவு

வினவு

 

முந்தைய கட்டுரைஅ.வரதராஜன்
அடுத்த கட்டுரைவெண்முரசு- கல்பொருசிறுநுரை