மறைசாட்சி – கடிதம்

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை

இனிய ஜெயம்

 

நீண்ட நாட்கள் தொலைபேசி அனாமதேய அழைப்புகளின் சிக்கல் இல்லாமல் கழிந்து,நேற்று அதிகாலை   ஜெயமோகனுங்களா, இல்லிங்களா  கொஞ்சநாளா  வீசிங் அது பத்தி பேசணும் சார் நம்பர் கிடைக்குமா [நம் காலக்கட்டத்தின் மாபெரும் கவிஞர்கள் எவருடைய தொகுப்பையேனும் படித்துத் தொலைத்திருப்பாரோ ]   என எவரோ அழைத்துக் கேட்ட  கணமே இன்னிக்கி நமக்கு நேரம் சரி இல்ல போலயே எனும் சிந்தனை எழுந்தது.

 

அதை ஊர்ஜிதம் செய்தது அன்று வெவ்வேறு பொழுதுகளில் வந்த இரண்டு  அழைப்புகள்.  முதல் அழைப்பு ஒரு கிறிஸ்துவக் கல்லூரியின் மேலாளர் வசமிருந்து.  ஓலை சிலுவை கதையை அவர் கல்லூரி பாட திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்தரவு வேண்டி வந்தது. அவர் கதையை அதுவரை படிக்கவில்லை. படிச்சு பாத்துட்டு கூப்புடுங்க என்று சொல்லி கதைகளின் சுட்டியை அளித்தேன். இன்னும் அழைக்கவில்லை.

 

இரண்டாவது அழைப்பு ஒரு இந்துத்துவ அன்பரின் அழைப்பு. புனிதர் நாயர் என்பதால் சுயசாதி வெறி கொண்டு ஜெயமோகன் செய்த பதிவின் பின்புல சதியை  எனக்கு விளக்கினார். இவை போக புனிதர் தேவசாகயம் நாயர், ஜெயமோகன் நாயர் போலவே எப்படி இந்து சமூகத்தை பிளக்க பணிபுரிந்த ஐந்தாம் படை என்று விளக்கினார்.  இவற்றை உங்களுக்கு விளக்கி சொல்லி இனியேனும் இத்தகு செயல்களில் ஈடுபடவேண்டாம் என உங்களை மட்டுறுத்த சொன்னார்.

 

ஆக இம்முறையும் இரு எதிர்நிலைகளின் ‘வாழ்த்துக்களும்’ ‘ஆசியும்’ உங்களுக்கு மீண்டும் கிட்டிஇருக்கிறது.  எல்லா எதிர் துருவங்களிலும் அதிகாரத்தை நோக்கிய வெறி உச்சத்தில் திகழும் ஒரு சூழலில், அதிகாரத்தின் அடிப்படைவாத குறுகலுக்கு எதிரான ‘கலாச்சாரத்தை’ அடிப்படையாகக் கொண்டு எழும் எழுத்தாளனின் குரல், இந்த துருவ முனைகளால் எப்போதும் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.  ஒன்று என் பக்கம் நில். இல்லை பேசுவதை நிறுத்து. கலாச்சார குரல் நோக்கிய அதிகாரத்தின் மாறாத ஒரே குரல் இது மட்டுமாகவே இருக்கிறது.

 

சிறுவயதில் நான் படித்த காமிக்ஸ்களில் ஒன்று, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடு. [இப்போதும் என் சேகரிப்பில் உள்ள,அவ்வப்போது நான் வாசிக்கும் நூல் அது]  அதில் ராமகிருஷ்ணரின் சாதனா காலங்கள் குறித்த பகுதி வருகிறது. ஃபாவ பக்தி எனும் மார்க்கத்தை சிலகாலம் அவர் கைக்கொள்ளுகிறார்.   குறிப்பிட்ட காலம் முழுக்க ஆஞ்சநேயராக தன்னை பாவித்து கொண்டு ராமனை பக்தி செய்கிறார். அவர் சாதனையில் அவர் கண்டது ராமனை அல்ல அன்னை சீதா தேவியை.குறிப்பிட்ட காலம் முற்ற முழுதாக ஒரு முகமதியனாக மட்டுமே வாழ்கிறார் பரமஹம்சர்.  மார்க்கம் சொன்னவற்றின்படியே சாதகம் செய்து இறைவடிவைக் காண்கிறார். குறிப்பிட்ட காலம் கிறிஸ்துவனாக வாழ்ந்து சாதகம் செய்து மரியன்னையை தரிசிக்கிறார்.

 

இதுதான் இந்தியாவின் ஆன்மா. பரமஹம்சரின் ஆன்மா. இன்று பரமஹம்சர் இருந்து அவர் இவ்வாறே இருந்திருந்தால், அவர் கிறிஸ்துவ அரசியலால் உள்ளிழுக்க முயலப்படும் அடிப்படை விசையாக இருந்திருப்பார், அடிப்படை வாத இந்துத்துவத்தின் முதல் ‘சாணியடி’ இலக்காக இருந்திருப்பார்.  ஏதேனும் ஒரு அறிவு ஜீவி  கிறிஸ்து மரி இவை எல்லாம் இந்துக்களை மதம் மாற்ற மேலை நாட்டு சபைகளின் அரசியல்  சதி வழியே  உம் மனதில் குடியேறிய உருவெளி மயக்கம் . இந்துத்துவம் என்ன சொல்லுதுன்னா … என்று பரமஹம்சருக்கே பாடம் எடுக்கக் கிளம்பி வருவார்கள்.

 

இவர்கள் பின்னால், கலாச்சாரம் அழிகிறது என கூப்பாடு போட்டு அதை காப்பாற்ற புறப்பட்டு அதிகாரத்துக்கு வந்து எது கலாச்சாரத்தின் இயங்கு விசையோ அதை அழிக்க மெல்ல மெல்ல  செயல்படத் துவங்கும்   அதிகாரம்.  தியோடர் ஹோவ்வேர்ட் சாமர்வெல் சேவை , மிர்சா காலிப் பாடல்கள், ஜாகிர் உசேன் தபேலா, பஷீரின் எழுத்து இவை இல்லாத  [குறிப்பாக ராமக்ரிஷ்ணரின் சாதனா காலம் இல்லாத] இந்திய கலாச்சாரத்தை,பூஜை அறையில் வைத்து அடி தொழ வேண்டிய ‘புனித’ ‘தூய’ கலாச்சாரத்தை இந்துக்களுக்கு அது உருவாக்கி அளிக்கும்.நிற்க.

 

கலாச்சாரம் காக்க மொத்தமாக எல்லோரும் குடோஸ் டு மோதி உடன் நிற்கையில் நீங்கள் மட்டும் ராமகிருஷ்ண பரமஹம்சருடன் நிற்பது  கடைந்தெடுத்த கசவாளித்தனம் என்றாலும் நீங்கள் இறுதிவரை இவ்வாறே இருக்கக் கடவது என சபிக்கிறேன்.  :)

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதமிழைக் கொண்டுசெல்லுதல்
அடுத்த கட்டுரைஅந்தி கடிதங்கள்