வணக்கம் ஜெ
கண் மூடி தன்னுள் இருந்து எல்லாம் விரித்து அளைந்துகொண்டிருக்கும் சயனப் பெருமாளின் படிமம் என்னுள் ஆதிக்கம் கொண்டது. விஷ்ணுபுரம் அதை கூர்மையாக்கியது. சிறு வயதில் காஞ்சியில் நான் பார்த்து வளர்ந்தது வரதராஜ பெருமாளையும் உலகளந்த பெருமாளையும் தான். என்று படுத்த திருமேனியன் என்னுள் நுழைந்தான் என்று சொல்லவியலவில்லை. ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்றபோது இருண்ட கருவறையினுள் விளக்கொளியில் தெரிந்த காலத்தில் உறைந்து உறங்கிக்கொண்டிருந்த அரங்கநாதனின் கரிய பளபளப்பை முழுதாக காண முடியாமல் உடல் நடுங்கியபடி வெளியே வந்தேன். அம்மா அதை உணர்ந்து சாமிய சரியா பார்த்தியாடா என்று கேட்டுகொண்டேயிருந்தாள். நான் மையமாக தலையாட்டியதை நம்பாமல் மீண்டும் ஒரு முறை பார்க்கரியா என்றாள். என்னுள்ளே நடுக்கம் மீண்டும் தொடங்கியது. கூட்ட மிகுதியால் அம்மாவின் முடிவு கைவிடப்பட்டது. அத்திவரதர் வைபவம் நேரத்தில் நான் காஞ்சியிலேயே வசித்து வந்தபோதும் வீட்டிலுள்ள அனைவரும் சென்று கண்ட சயன பெரியனை நான் காண செல்லவில்லை. என்னுள்ளிருந்த அந்த படிமம் வளர்ந்தபடியே இருந்தது. கனவில் ஆழ்த்துவது. உளதையும் இலதையும் இதுவும் அதுவும் உதுவும் என அனைத்தையும் ஸ்வப்னிப்பது. ஸ்ரிஷ்டி ஸ்வப்னம்.
அந்த படிமத்தை கூர்மையாக்கி நான் காண என் உள் எடுத்து என் முன் வைக்க உதவியது விஷ்ணுபுரம். அந்த படிமத்தை தொடர்ந்து அறிந்து அனுபவித்து கொண்டிருக்கிறேன். வண்ணங்களால். எப்போதும் போல் கணிணியில் பல முறை வரைந்து உவப்பில்லாமல் தூரிகை கொண்டு வரைபலகையில் வரைந்தேன். நீண்ட நாட்களுக்கு பின் வண்ணங்களை தூரிகையால் எடுத்து அவற்றை குழைவையாக்கி வரைந்தபோது அலாதியான ஒரு உணர்வு. கிண்டிலை விட்டு புத்தகத்திற்கு என்னை தூண்டும் அதே உணர்வு. ஒரு கட்டத்தில் வரைபலகை விட்டு எதிரே இருந்த சுவற்றில் வண்ணமிட துவங்கினேன். என்னை கனவுகளில் ஆழ்த்திய கனவை வெளிகொண்டுவர முயன்றேன். இனி என் படிப்பறையின் மேசை முன் என்றுமிருக்கும் அக்கனவு.
ஸ்ரீராம்
***