மேலாண்மை,வம்புகள்- கடிதங்கள்

மேலாண்மை, மேலோட்டமான வம்புகள்

அன்புள்ள ஜெ,

உங்களுக்கு எதிரான விமர்சனங்கள் வழியாக உங்களை வந்தடைந்த பலரில் நானும் ஒருவன். கருணாநிதி இலக்கியவாதி அல்ல என்று நீங்க சொன்னதற்கு வந்த வசைகள் தான் எனக்கு உங்களின் முதல் அறிமுகம். “முன்னோடிகளுக்கெல்லாம் முன்னோடி” என்று ஜெயகாந்தன் சொன்னது இரண்டாவது.. அப்போது நீங்கள் திண்ணை இனைய தளத்தில் எழுதிக்கொண்டிருந்திர்கள்.. உங்களின் ஒவ்வொரு வசைகளுக்கும் நீங்கள் அளிக்கும் பதில் எனக்குப் பல திறப்புகளை அளித்தது.. மிக முக்கியமாக உங்களுக்கு எதிரான வசைகளில் 99% பொய்யாகவே இருந்தது.. மீதம் ஒரு சதவீதத்திற்கும் உங்களிடம் தெளிவான பதில் இருந்தது..

ஆகவே, வசை நல்லது..

நன்றி
ரத்தன்

 

அன்புள்ள ஜெ

 

வசைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் அடிக்கடிப் பார்ப்பது அதைவிட அசட்டுத்தனமான எதிர்விமர்சனங்களை. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய தேவையான விரிவான வாசிப்போ, இலக்கிய அழகியல் அறிமுகமோ இல்லாதவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. காழ்ப்பு மட்டும் இருக்கிறது. ஆகவே பெரும்பாலானவர்கள் பழிப்பு காட்டுகிறார்கள். திரும்பத் திரும்ப எதையாவது சொல்வார்கள்.

 

இன்னும் சிலர் உங்கள் இலக்கியப் படைப்புக்களை நிராகரிக்கிறோம் என்று சொல்வார்கள். ஏன் என்று கேட்டால் அந்த படைப்பில் மிகச்சாதாரணமான ஒரு அரசியலைக் கண்டுபிடிப்பார்கள். இது இந்துத்துவா என்பார்கள். உயர்சாதி என்பார்கள். இன்னும் சிலர் அந்த டேட்டா தப்பு, இந்த தகவலிலே பிழை இருக்கு என்பார்கள். இன்னும் சிலர் இந்தக்கதையிலும் எருமை இருக்கு அந்தக்கதையிலும் எருமை வருது, அதிலே இருந்து அடிச்சிருக்கான் என்பார்கள். இவ்வளவேதான்.

 

உங்கள் எழுத்துக்களைப் பற்றி இப்படித்தான் அசட்டு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதை வாசித்துவிட்டு வந்து உங்களை வாசிப்பவர்கள் சட்டென்று உங்கள் தீவிர வாசகர்களாக ஆகிவிடுகிறார்கள். சோஷியல்மீடியாவில் ஒருமுறை சுற்றிவந்தாலே அப்படி உங்களைக் கண்டுபிடித்த பலர் எழுதியிருப்பதைக் காணலாம். அதாவது இவர்கள் எழுதும் இந்த அசட்டு விமர்சனம் உங்களை மேலும் மேலே தூக்குகிறது.

 

அவற்றை படிக்கும்போது வரும் எரிச்சலில் எனக்கே உங்களுக்கு எதிராக ஒரு அழகியல் விமர்சனம் எழுதிவிடலாமா என்று தோன்றும். தமிழில் உண்மையான எதிர்விமர்சனமே இல்லாமல் ஆட்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. அதற்கு இந்த அசட்டு விமசகர்கள் உருவாக்கி அளிக்கிற ஆம்பியன்ஸ்தான் காரணம். இவர்களை நீங்களே சீண்டிச் சீண்டி பிரமோட் செய்துகொள்கிறீர்களா என்றுகூட தோன்றும். இந்த அசட்டு எழுத்து வரவர நீங்கள் மேலும் நிலைபெறுவீர்கள் என்று நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.

 

பிரகாஷ் எம்

 

அன்புள்ள ஜெ

 

நான் சமூகவலைத்தளங்களில் சும்மா வேடிக்கை பார்ப்பவன். எனக்கு ஒரு மனப்பதிவு. பெயரிலோ ஃபேக் ஐடியிலோ உங்கள் மேல் காழ்ப்பைக் கொட்டி பழிப்புக் காட்டிக்கொண்டே இருக்கும் ஒரு சின்ன வட்டம் உண்டு. எல்லா பதிவிலும் போய் புளிச்சமாவு என்று எழுதிவிட்டுச் செல்வார்கள். இவர்களெல்லாம் திமுகவினர் என நினைத்தேன். ஆனால் கூர்ந்து பார்த்தால் பெரும்பாலும் இவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள். நீங்கள் எழுதிய எதையுமே படித்திருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களின் மதத்திற்கு எதிரி என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பார்கள். வெறுப்பை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வருஷக்கணக்காக அதே மூடிலேயே இருக்கிறார்கள்.

 

இன்னொரு தரப்பும் உண்டு, இவர்கள் இஸ்லாமியர் ஆனாலும் கிறிஸ்தவர்கள் ஆனாலும் கொஞ்சம் படிப்பவர்கள். ஆனாலும் அவர்களும் இதே மூடில்தான் இருப்பார்கள். நீங்கள் எழுதும் இலக்கியம் அழகியல் அரசியல் எதுவும் இவர்களுக்கு பொருட்டு அல்ல. ஒருநாள் திடீரென்று தோன்றியது இந்துவாகப் பிறப்பது எவ்வளவு பெரிய அதிருஷ்டம் என்று. நான் மதநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் இவர்களின் மதம் உலகிலுள்ள அத்தனை விஷயங்களையும் மதம்சார்ந்து மட்டுமே பார்ப்பவர்களாக மூளைச்சலவை செய்துவிடுகிறது. மீட்பே கிடையாது. படிப்பவனும் பாமரனும் ஒரேமாதிரி. ஒருவர்கூட விதிவிலக்கு இல்லை. மூடிய அறை. பயமாக இருந்தது அவர்களை நினைத்து.

 

சி.ரவிக்குமார்

வசைகள்

சகஜயோகம்

அவதூறுகள் ஏன்?

வசைகள்

அவதூறுகள் குறித்து…

அவதூறு, கடிதம்

லோஸா

சில வம்புக்கடிதங்கள்…

வசைகள் -கடிதங்கள்

சகஜயோகம் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅத்தர் மணம்- ராம்குமாரின் அகதி- மயிலாடுதுறை பிரபு
அடுத்த கட்டுரைசொட்டும் கணங்கள்