நீரும் நெருப்பும்- கடிதங்கள்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

நீரும் நெருப்பும் [புதிய கதை]

அன்புள்ள ஜெ

நீரும் நெருப்பும் சிறுகதையை நான் முன்பு படித்திருந்தேன். ஆனால் அப்போது இந்தக் கோணத்தில் வாசிக்கவில்லை. ஆனால் அன்று இன்றிருக்கும் இந்த நெரேட்டிவ் உருவாகவுமில்லை. இன்று இப்படி ஒருவர் சுட்டிக்காட்டியபின் அக்கதையை வாசிக்கையில் ஒவ்வொன்றும் எவ்வளவு கச்சிதமாக பொருந்தி ஒரு கவித்துவமான குறியீடாக ஆகிறது என்று ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நல்ல கதை என்பது ஒருவகையான கவிதை என்றுதான் நான் எப்போதுமே நினைத்திருக்கிறேன். அப்படி கச்சிதமான கவித்துவம் அமைந்த சிறுகதைகள் சிலவற்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அவற்றில் ஒன்று ஆயிரங்கால் மண்டபம். அதற்கு அப்பால் இந்தக்கதையைச் சொல்லமுடியும்.

அதற்கு ஒரு நல்ல வாசிப்பு அமையாதது பற்றிச் சொன்னீர்கள். ஆனால் இங்கே கதைகளுக்கெல்லாம் குறியீட்டுரீதியான வாசிப்பென்பது இன்னொரு எழுத்தாளர் சொல்லித்தான் நிகழவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் ஒரு தலைமுறைக்காலம் கடந்தபின்னர் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களே அந்தவகையான வாசிப்பை அளிக்கிறார்கள்.

அசோகமித்திரனின் புலிக்கலைஞன் வெளியாகி பல ஆண்டுகள் அவர் வழக்கம்போல எழுதுவதுபோல ஒரு சாமானியனின் வாழ்க்கையின் சித்திரம் என்றுதான் நான் உட்பட வாசகர்கள் நினைத்திருந்தோம். 91 வாக்கில் நீங்கள் ஒரு சிறுபத்திரிகைக் கட்டுரையில் ‘சற்றுமுன் அவன் புலியாக இருந்தான்’ என்ற வரி தான் அந்தக்கதையின் அடிப்படையான அம்சம் என்று சொல்லி அக்கதையை கலைஞனின் அவலம் என விளக்கி எழுதியிருந்தீர்கள். அதைப்பற்றி பரீக்ஷா ஞானி உட்பட சிலருடன் பேசியது நினைவிருக்கிறது. அந்த வாசிப்பு அதுவரை இல்லாதது. ஆச்சரியமாக இருந்தது. அப்படி ஒரு வாசிப்புக்கு இடமிருக்கிறதா என்றுதான் பேசிக்கொண்டோம். இன்றைக்கு அக்கதை அப்படி வாசிக்கப்பட்டுவிட்டது.

ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் பற்றி ஏகப்பட்டது எழுதப்பட்டிருந்தது. நீங்கள் முதல்முறையாக அந்தப்பெண் மெல்லும் சூயிங்கம் ஒரு முக்கியமான அடையாளம் என எழுதியிருந்தீர்கள். தமிழினி ஆபீஸில் அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். அந்தவகையான வாசிப்பு கொஞ்சநாள் கழித்துத்தான் வரமுடியும் என்பதே என் எண்ணம். அந்த வாசிப்பு இன்றைக்கு இணையதளம் இருந்ததனால்தான் இவ்வளவு சீக்கிரமாகவாவது வருகிறது என்றுதான் நினைக்கிறேன்.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ,

நீரும் நெருப்பும் கதையை இப்போது இன்னொரு கோணத்தில் வாசித்தேன். என்னென்னவோ எண்ணங்கள் வந்தன. அதில் ஒரு முக்கியமான படிமம் வருகிறது. சதையே இல்லாத மெலிந்த உறுதியான உடல் அவருடையது. காட்டுத்தீக்குப் பின்னர் வைரம் மட்டும் எஞ்சும் சுள்ளி போன்றது அவரது உடல் என பூல்சந்திரர் நினைப்பதுண்டு. அவரது ஊரில் அத்தகைய கழிகளைத் தேடி எடுத்துவந்து வயலில் சேற்றிலிறங்கி வேலை செய்யும்போது ஊன்றி நடக்கப் பயன்படுத்துவார்கள். வங்காளத்தின் சேற்றுச்சூழலில் எந்தக் கழியும் ஒருவருடம் கூடத் தாக்குப் பிடிக்காது. காட்டுத்தீயில் கிடைக்கும் கழிகள் தலைமுறைகளைத் தாண்டிப் பயன்பட்டுக் கொண்டிருக்கும்..

இது காந்திபற்றிய உருவகம், தீயில் எரிந்து எஞ்சிய வைரம் அவர். ஆகவே நீரில் தாக்குப்பிடிப்பவர். ஆனால் வாசித்துக்கொண்டிருந்தபோது தீ அவரை அழித்துவிட்டதே என்ற எண்ணம் வந்தது. அதன்பின் அவருடைய கருகிய உடலுக்குப்பின் வைரம் இன்றைக்கும் எஞ்சியிருக்கிறது, எப்போதும் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்

சண்முகம்

***

முந்தைய கட்டுரைபீடம்,கழுமாடன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொழுதுபோக்கின் எல்லைகள்