சுதந்திரத்தின் நிறம் – கடிதம்

ஆசிரியருக்கு,

 

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வரலாற்று நூல் தங்கள் தளத்தில் பதிவு செய்து கிடைத்தது. மிக நேர்த்தியான அழகான பதிப்பு. 100 பக்கத்துக்கு 100 ரூபாய் வாங்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு புத்தகம் கிடைப்பது மிகவும் அரிதுதான். அதுவும் அனைத்தும் மிகவும் சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கிறார்கள். நீண்ட நாள் வைத்து படிக்கலாம். நான் கொடுத்த பணம் உண்மையில் போதுமா என்றுகூட தெரியவில்லை.

 

தன்னறம் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துக்கள்.

 

சுய நலமும், எந்த வேலை செய்தாலும் தனக்கு என்ன ஆதாயம் என்று யோசிக்கும் இன்றைய சூழ் நிலையில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

 

கிருஷ்ணம்மாள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வும் சரி அதனுடன் ஜெகன்னாதன் அவர்களின் வாழ்வும் சரி லட்சியவாதத்தின் சிகரம் என்று சொல்லலாம். நாளை என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் எப்படி வாழமுடிந்தது என்பது ஆச்சர்யம். “நாளை” என்பது கொடுக்கும் அதிர்ச்சியினால் பல நாள் தூக்கமிழந்து வாழ்ந்து இருக்கும் என் போன்ற இளைஞர்களுக்கு இது உண்மையில் மிக முக்கியமான தரிசனமாக இருக்கிறது.

 

இந்த நூலில் பல நிகழ்வுகள் அப்படியே மிகப்பெரும் படிமங்களாகவே வருகிறது. முதலில் வரும் ஜெகன்னாதன் தன் அயல் நாட்டு துணியை எரித்து அப்படியே வீர நடை போட்டு  வருவதாகட்டும், கிருஷ்ணம்மாளின் எந்தவிதமான ஆடம்பரமும் இன்றி ஒரு சிலருடன், இன்னும் முக்கியமாக ஒரு சிறிய கயிற்றுடன் தன் வாழ்க்கையை ஒன்றாக மாற்றிய தருணங்க்கள் ஆகட்டும், இருவருக்கும் பிறந்த பூமி அப்படியே எல்லோருடனும் விளையாடிக்கொண்டே போராட்டத்தில் இருப்பதாகட்டும், இரண்டு குழந்தைகளைப்பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி போராட்டத்திலும், மக்கள் முன்னேடற்றத்திலும் தங்கள் வாழ்வை கரைத்துக்கொள்ளுதல் என்பது. பல திறப்புகளை அளிப்பது.

 

மேலும் இன்நூலில் வரும் தருணங்கள் மிக விரிவாக எழுதலாம். குறிப்பாக குமரப்பாவிற்க்கும், வினொபாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் அது முடிந்த இரவு பின் காட்சிப்படுத்தப்படும் குமரப்பாவின் அறை அனைத்துமே ஒரு நாவலில் அல்லது ஒரு சிறுகதையில் வரும் தருணம்போல இருந்தது. இந்த நிகழ்வுக்குப்பின் குமரப்பா இறந்து விடுகிறார்.

 

பூமிதான இயக்கம் என்பது எந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தியது என்பதைப்பற்றி ஏதேனும் ஆய்வுகள் உள்ளனவா!!! இவர்களிடம் வந்த நிலங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதா.!!! என்று தெரியவில்லை ஆனால் இவற்றில் ஒவ்வொரு சம்பவமும் மிகப்பெரும் நாடகத்தருணங்க்கள். அனைத்தும் நீங்கள் சொல்வதுபோல மிகப்பெரும் கச்சா பொருள்கள்.

 

சரி இவையெல்லாம் எதோ ஒரு கற்காலத்தில் நடந்தது இந்த காலத்தில் இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்பவர்களுக்கு லாப்டி அமைப்பு ஒரு பதிலாகவும், இரால் பண்ணை போராட்டம் இன்னும் ஒரு பதிலாக வாசகனை கேள்விகேட்கிறது. பிரச்சனைகள் இப்போதும் இருக்கிறது ஆனால் இவர்களைப்போல அர்பணிப்புள்ளவர்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம் என்று இந்த புத்தகம் சொல்லாமல் சொல்கிறது.

 

தங்கள் தளம் இல்லை என்றால் இப்படி ஒரு புத்தகம் வந்து இருக்கிறது என்பதுகூட தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே…

 

இந்த நூலை எழுதிய லாரா கோப்பா அவர்களுக்கும், இந்த நூலை மிகச்சரளமாக தமிழில் மொழி பெயர்த்த மகாலிங்கம் அவர்களுக்கும் மிக்க நன்றி.உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

 

அன்புடன்.

திருமலை 

முந்தைய கட்டுரைசங்கத்தமிழிசை
அடுத்த கட்டுரைதமிழைக் கொண்டுசெல்லுதல்