பகடையாட்டம் – சௌந்தர்

பகடையாட்டம் வாங்க

அன்புள்ள ஜெ சார் .

அக்காமார்களும் சற்றே ரசனையுள்ள அம்மைகளும் இருக்கும் நமது வீடுகளில் கோலமிடுதல் என்பது ஒருவகை கொண்டாட்டம். அதில் முக்கிய நிகழ்வே புள்ளிவைத்து போடும் கோலங்கள் தான். ஊடுபுள்ளி நேர்வரிசை என சில கணக்குகள் உண்டு. ஒவ்வொரு புள்ளியாக இணைத்தும் விலக்கியும் கைகள் நெளிந்து பரவி இறுதியாக உருவாகும் பெரிய கோலங்கள் நமக்கு பிரமிப்பை அளிப்பவை.

அறுபத்தி நான்கு புள்ளிகள் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்பட்டதும் இது ”தேர்க்கோலம்” என நினைத்து அரைமணி நேரத்தில் திரும்ப வந்து பார்த்தால் அது மாபெரும் ”சிவலிங்கம்” என கோலமிடப்பட்டிருக்கும். அடுத்தநாள் 72 புள்ளிகள் இது ”மாமலர்” என நினைக்கையில் இரண்டு ”அரவங்கள்” பின்னிக்கிடக்கும் நம் வாசலில்.

அப்படி ஒரு படைப்பைத்தான் யுவன் சந்திரசேகர் தனது இரண்டாவது நாவலாக ”பகடையாட்டம்” என முயன்று இருக்கிறார்.

‘கதைக்குள் கதைக்குள் கதை’ என்பது நமது மிகப்பழமை வாய்ந்த கதை சொல்லும் முறை. பைசாசிக மொழியில் தோன்றிய ”பிருகத் கதை” முதல் இன்று வரை தொடர்வது. இதே முறையில் தான் நாவலையும் அமைத்துள்ளார்.

”ஸோமிட்ஸு” எனும் கிட்டத்தட்ட கடவுள் வடிவ அல்லது அதற்கு இணையான சிறுவன். அல்லது பாலகுரு. அவனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘ஈனோங்’ எனும் ராஜதந்திரி-கிழவன். மற்றும் இந்திய-திபெத்-நேபாள முக்கோணத்தின் மத்தியில் அமைந்த கற்பனை நிலமான ”ஸோமிட்ஸியா” எனும் நாடு. – இது ஒரு தளம்.

அடுத்ததாக கிருஷ்ணமூர்த்தி எனும் ராணுவ அதிகாரி வெய்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர் லுமும்பா எனும் கறுப்பர் இன மனிதன் மற்றும் சில பெண்கள் சில மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை என அனைவரையும் வைத்து பகடையை உருட்டுகிறார். நாவலின் சவால் என்பது நாம் சற்று கவனம் குறைந்தாலும் தாயமோ பன்னிரண்டோ விழவைத்து கதையை வேறு எங்கோ நகர்த்தி கொண்டு சென்று விடுகிறார்.

மூன்று தலைமுறை குருமார்கள் வந்து சென்ற பின்னரும் மந்திரி போன்ற பதவி வகிக்கும் ஈனோங் கிழவன் மொத்த ராஜ்யத்தையும் தனதாக்க விழைகிறான். அவர்களுடைய ”கிரந்தங்களின்” படி அதற்கான தகுதி அவனுக்கு இல்லாததால் ராஜதந்திரியாக செயல்பட்டு தொடர்ந்து தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு வேவுபார்த்தல் கொலைபுரிதல் ”கிரந்தத்தின்” பெயரால் தண்டனை வழங்குதல் அயல்நாட்டு நெருக்கடியின் போது ”சோமிடிஸு” எனும் கடவுளுக்கு நிகரான குருவையே தன் இஷ்டப்படி வேறு நிலங்களுக்கு அழைத்து செல்லுதல் என. நாவல் முழுவதும் பயணிப்பவன் ஈனோங் கிழவன். கரவு பாதையில் ஆற்றும் ஒவ்வொரு செயலுக்கும் வாழ்வின் மைய சாலையில் விபத்தை சந்திக்க வைப்பது ஊழ். அந்த வகையில் ஈனோங் கிழவன் முதல் க்ரிஷ் வரை அனைவருக்கும் இங்கே சிறியது முதல் பெரியது வரை ரகசியமாக நிகழ்த்தி அடையும் வெற்றியும் தேவையாய் இருக்கிறது. எனினும் நடப்பதோ நேர் மாறாக எதிர்பாராத ஒன்றாக அமைந்து விடுகிறது. ஈனோங் கிழவனின் முடிவு அப்படியான ஒன்று. வாங் சுக் இல் சுங் போன்ற வேவு பார்க்கும் கதா பாத்திரங்களும் கூட இப்படியான ஒரு முடிவையே அடைகின்றன.

‘க்ரிஷ்’ எனும் ராணுவ அதிகாரியின் வாழ்க்கை நாவலின் தொடக்கத்தில் உச்சங்களில் வாழ்பவராக தொடங்கி இறுதி அத்தியாயத்தில் புலம்பல் மிக்க சோகக்கதையாக நீள்கிறது.

லுமும்பாவின் வாழ்க்கை பற்றிய சித்திரம் மிக அழகான பகுதி லுமும்பா சிறுவனாக தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தந்தை லுமும்பா தன் மேல் ”இன்ஸாம்பி” எனும் தேவதை இறங்கி இருப்பதாகவும் துப்பாக்கிகளால் அந்த தேவதையை ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் சன்னதம் வந்து கூறி சிறுவன் லுமும்பாவிடம் துப்பாக்கியால் ‘சுடவைத்து’ இறக்கிறார் பழங்குடி வாழ்வின் அறியாமை மற்றும் நவீன வாழ்வின் பரிட்சயமின்மை பற்றிய அந்த அத்தியாயம் இப்படி முடிகிறது.

”அவர்கள் நெருப்பில் கிடக்கும் பசுமரம் போல வாழ்வின் தன்மை மெல்ல மெல்ல கருகி வருவதை உணராதவர்கள். எந்திரங்கள் தேவதைகளாக வரிக்கப்படும் காலகட்டம் வந்துவிடத்தை அறியாதவர்கள். பாவம் அவர்களுக்கு தெரியாது இந்த நூற்றாண்டின் அதி தேவதை துப்பாக்கி குண்டுதானென்று .”

யுவன்

ஒரு பாதிரியாரால் தத்து எடுக்கப்பட்டு படித்து வளர்ந்து பின் காடுகளில் அலையும் உலக பிரஜை ஆகிறான் லுமும்பா. நவீன வாழ்வின் சூதுகள் ஏதுமற்ற எளிய பழங்குடி மனிதனாக 17 வருடங்களாக உலக காடுகள் மலைகளை சுற்றிக்கொண்டிருக்கும் மனிதன் ஜெர்மானிய படைகளின் அதிகாரி மற்றும் போருக்கு பின் தப்பியோடிய கைதி ஹான்ஸ் வெய்ஸமுல்லரை சந்திக்கிறான். லுமும்பாவின் கபடமற்ற தன்மையால் ஈர்க்கப்பட்ட வெய்ஸமுல்லர் இவனுடன் பயணித்து சென்று சேரும் தேசம் ”ஸோமிட்ஸியா ”

சோமிடிஸியா தேசத்தின் கடவுளின் அவதாரமாகவே அறியப்படும் ‘சோமிட்ஸு’ எனும் சிறுவன் ”கிரந்தங்களின்” போதாமைகளில் இருந்தும் மரபிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு தப்பிச்சென்று எளிமையான இனிய விவசாயி போன்ற ஒரு வாழ்வை வாழ விரும்புகிறான். மொத்த நாவலில் இச்சிறுவனின் பாத்திரப்படைப்பு யுவனின் கைவண்ணத்தில் மிளிர்கிறது.

ஒரு சிறந்த படைப்பு வேறு ஒரு கலைப்படைப்புடன் நம்மை தொடர்பு படுத்துவதை தவிர்க்கவே முடியாது அவ்வகையில் ”சோமிட்ஸு’ எனும் இச்சிறுவன் தலாய் லாமாவின் வாழ்க்கை சித்திரம் மற்றும் {SANSARA”- ஸன்சாரா} எனும் திபெத்திய திரைப்படத்தின் காட்சிகளுடன் பொருந்தி வருகிறது.

மேலும் சில பெண்கள் சில முக்கிய கதை மாந்தர்கள் சில கொலைகள் என அடுத்தடுத்த திருப்பங்கள் என எதார்த்தவாத – கற்பனை –வரலாற்று – புதிர் நாவல் என புனைந்து இருக்கிறார். பெண்கள் வரும் பகுதிகளில் யுவனில் இருந்து வெளிவரும் கவிஞன் அழகியல் படிமங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். மலை பிராந்தியங்களுக்கு உண்டான ரகசிய தன்மை என்பது அங்கு வாழும் உயிர்குலத்துக்கும் அமையும் என்பது போல ‘லேக்கி’ ‘ரூப்மதி’ போன்ற பெண்களும் இந்த நாவலில் வருகிறார்கள் முற்றிலும் ரகசிய தன்மையுடன் இறுதி நேரத்தில் நேர் எதிராக சென்று அமையக்கூடிய ஆளுமைகளாக.

மேலே குறிப்பிட்ட நம் வீட்டு வாசலின் மாபெரும் கோலங்களில் பண்டிகை தினங்களில் அந்த அழகிய கோலத்தை சுற்றி ”பொங்கள் நல் வாழ்த்துகல்” என்றோ ”தீபாவளி வாள்துக்கல்” என்றோ கோழிக்கிறுக்கலில் சற்றும் கோலத்துடன் ஓட்டாத சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலிலும் அப்படி சித்தரிக்கப்படும் பகுதி தான் ”கிரந்தம் 1 2 3” என நீளும் தத்துவ அல்லது கற்பனை தேசத்தின் வேதப்பகுதி.

பொதுவாக தத்துவ அல்லது சமய நெறிகள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்று உபதேச வாக்கியம் அதாவது {நம் மரபில்} தத்வமஸி – அது நீயே தான் எனப்படுவது.- உபதேசம் செய்வது.

மற்றொன்று அனுபவ வாக்கியம். அதாவது அஹம் பிரம்மாஸ்மி – ”நானே பிரம்மம் -இறை”. எனப்படுவது. அனுபவித்து அறிவது.

உலக கிரந்தங்கள் அனைத்தும் மேற்சொன்ன இரண்டு கூறுகளில் கட்டமைக்கப்பட்டவை ஆகவே இந்நாவலின் ”கற்பனை கிரந்த” பகுதி ஒருவித விலக்கத்தை அளிக்கிறது. உவகை எதையும் அளிப்பதில்லை. ஆனால் யுவன் கற்பனையாக தத்துவங்களையும் நெறிகளையும் எழுதிச்செல்கிறார் பூர்வ கிரந்தம் ஒன்று இரண்டு” என நீட்டிச்செல்கிறார் அவை கதைக்கு ஒருவகையில் துணைபுரிந்தாலும் ஒட்டாதவையே.

யுவனின் கிரந்த பகுதிகளை தத்துவ பயிற்சி உள்ள ஒருவர் சிறு புன்னகையுடன் கடந்து சென்று விடுவார். அதற்காக மொத்த நாவலையும் நிராகரிக்க வேண்டியதில்லை. அந்த கோலத்தின் கீழே உள்ள எழுத்துப் பிழையை சிறு புன்னகையுடன் தாண்டி செல்வோமே அதுபோல.

ஒரு படைப்பு வாசகனுக்கு எதை அளிக்கிறது என்பதற்கு நிகராகவே எதை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் மட்டுமே மேலே உள்ள தத்துவ பகுதி பற்றி சொல்கிறேனே தவிர நாவலை நிராகரிப்பதற்காக அல்ல.

சில திரைப்படங்களில் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இயக்குனரே உள்ளே வந்து ஒரு காட்சியில் தலைகாட்டிவிட்டு செல்வது மரபு என்பது போல யுவன் இந்த நாவலின் இறுதியில் சந்திர சேகரனாக வந்து க்ரிஷ் எனும் அதிகாரியாகிய கிருஷ்ணமூர்த்தி மூலம் மொத்த கதையையும் கேட்டு முடித்து வைக்கிறார்.

யுவன் சமீபத்தில் ஒரு இலக்கிய அமர்வில் இசை தன்னை எப்படியெல்லாம் ஆட்படுத்துகிறது என சிலாகித்து சொன்னார் தன் ஒவ்வொரு நாளையும் இசை மேதைகளாகிய பீம்செனும் கே.சி.ஜோஷியும் துவக்கி வைத்து மலரச்செய்வது பற்றி பேசினார். இதே களத்தில் இன்று யுவன் இந்த கதையை எழுதி இருந்தால் அவருக்குள் ஊறி மெருகேறியிருக்கும் ”இசை” இந்த நாவலை வேறு எங்கோ கொண்டு சென்றிருக்கும்.

அன்புடன்
சௌந்தர். G

***

முந்தைய கட்டுரைமுரசும் சொல்லும் – காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைகீர்ட்டிங்ஸ்,மணிபல்லவம்- கடிதங்கள்