வெண்முரசும் தமிழும்

அன்புள்ள ஜெ,

சீண்டலாகவோ உங்கள் பணியைச் சிறுமை செய்யும் எண்ணத்துடனோ இதைக் கேட்கவில்லை. என் வயது 32. தமிழ் மீடியம் படித்தவன் அல்ல. ஆங்கிலம் மீடியம் கல்வியில் தமிழும் படித்தேன். நான் அவ்வப்போது தமிழிலும் வாசிப்பேன். இப்போது ஒரு வருசமாக தமிழில் நிறைய படிக்கிறேன். கல்கி ,சுஜாதா படித்து இப்போது ஜானகிராமன், சுந்தர ராமசாமி படிக்கிறேன். வெண்முரசு படிக்க ஆரம்பித்தேன். முதற்கனல் படித்து முடிக்க முடியவில்லை. அந்த மொழியே புரியவில்லை. அவ்வளவு சிக்கலாக இருக்கிறது. மிகவும் பழைய சொற்கள். தனித்தமிழில் எழுதியிருக்கிறீர்கள்

இன்றைக்கு தனித்தமிழ் என்று பேசுகிறார்களே ஒழிய எங்கேயுமே தனித்தமிழ் கிடையாது. எல்லாரும் கலப்பாகத்தான் எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் மட்டும்தான் இந்த தனித்தமிழ் obsession இருக்கிற ஒரே எழுத்தாளர். இன்றைக்கு மேலும் அதிகமாக மக்கள் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். நிறையபேருக்கு தமிழே சரியாகத் தெரியவில்லை.  Practical ஆ ஒரு தமிழ் இன்றைக்கு இருக்கிறது. அத்தனைபேரும் பேசுவதும் எழுதுவதும் அதில்தான். இன்றைக்கு இப்படி ஒரு தமிழில் இதை எழுதினால் என்ன பயன்? இதை எதிர்காலத்தில் யார் படிக்கப்போகிறார்கள்?

எஸ்.கார்த்திக் ராஜ்

***

அன்புள்ள கார்த்திக்,

நீங்கள் சொல்வது உண்மை. தனித்தமிழ் சார்ந்த ஒரு பற்று எனக்கு தொடக்கம் முதலே உண்டு. நான் எழுதவந்தபோதே கட்டுரைகளை கூடுமானவரை தூயதமிழில் எழுதினேன். அதற்கான கலைச்சொற்களை தேடிக் கண்டடைந்தேன், இல்லையென்றால் உருவாக்கிக் கொண்டேன். தூயதமிழில் கொற்றவை என்னும் நாவலை எழுதியிருக்கிறேன். அதன் நீட்சியே வெண்முரசு. அதை அப்படித்தான் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. எழுத எழுத ஏற்கனவே இருந்த ஓரிரு வடமொழிச் சொற்களும் இல்லாமலாயின.

நீங்கள் சொல்வது போல புதிய இலக்கியத்தில் பெரும்பாலும் நான் மட்டுமே இன்று இப்படித் தனித்தமிழில் எழுதுகிறேன். தமிழ்க்கூச்சல் இங்கே இருந்தாலும் இந்தத் தமிழை தொடர்ந்து படிக்க பெரும்பாலானவர்களால் இயலாது. அந்த தடை இளம் வாசகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த மொழி என் அகத்துக்கு உகந்தது- ஆகவே  இதுவே என் மொழி. வெண்முரசின் மொழி என் பிற எழுத்துக்களிலும் வந்துவிட்டிருக்கிறது

எந்த படைப்பை எழுதும்போதும் இதை நாளை எவரேனும் படிப்பார்களா என எந்தப் படைப்பாளியும் எண்ணுவதில்லை. இன்று எவரேனும் படிப்பார்களா என்றுகூட எண்ணுவதில்லை. எழுதும்போது ஒரு கனவுலகப் பயணம் இருக்கிறது. எழுத்தினூடாக நம்மை நாமே கண்டடையும் தொகுத்துக்கொள்ளும் தருணங்கள் அமைகின்றன. அவைதான் எழுத்துக்கான தூண்டுகோல். அவ்வாறு இருந்தால் மட்டுமே சலிக்காமல் தொடர்ந்து எழுதவும் முடியும்.

இல்லையேல் தமிழ்ச்சூழலில் மிக எளிதில் சோர்வு உருவாகிவிடும். எவரும் படிக்காவிட்டால் ஒரு விலக்கம் ஏற்படும், பலர் படித்தார்கள் என்றால் காழ்ப்பு கொண்டவர்களின் பழிப்புக் காட்டல்கள் உருவாக்கும், சோர்வு  எழும். வெண்முரசுக்கு இருப்பது இரண்டாவது தடைதான்.

வெண்முரசு எழுதும்போது ஐம்பது வாசகர்கள் போதுமென நினைத்தேன். அவ்வாறு நான் முடிவுசெய்த  ஐம்பதுபேரும் தெரிந்தவர்கள். அதற்கு ஆயிரம் மடங்கு வாசகர்கள் இன்றிருக்கிறார்கள். தமிழில் எந்த இலக்கிய ஆக்கத்திற்கும் அமையாதது இந்த வாசிப்பு. இச்சூழலில் இதைவிட நான் விழைவுகொள்ளலாகாது, அறமல்ல.

இதை வாசிப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முப்பது அகவைக்கு உட்பட்ட இளைஞர்கள், ஆங்கிலவழிக் கல்வி கொண்டவர்கள். இந்நாவல் வந்தபின் என் வாசகர்ப்பரப்பில் இளைஞர்கள் மிகுந்திருப்பதை எவரும் காணலாம்.சென்ற அரசன் மகாபாரதம் விழாவிற்கு ஓரு வாசககர் வந்தார், எட்டாம் வகுப்பு மாணவர், பிரயாகை வரை படித்துவிட்டிருந்தார். பதினாறு அகவைக்குள் உள்ள வெண்முரசு வாசகர்கள் எட்டுபேரை எனக்கே நேரில் தெரியும்

வெண்முரசின் நடை முதற்கனலில் பெரும்பாலும் தூயதமிழ், அவ்வப்போது மட்டும், தவிர்க்கவே முடியாதபடி சில வடமொழிச் சொற்கள் இருந்தன. பின்னர் வந்த நாவல்களில் முழுக்க முழுக்க தனித்தமிழ் மட்டுமே பயின்று வருகிறது.

இதற்கு ஒரு நெறியை கைக்கொண்டேன்.  சம்ஸ்கிருதச் சொற்களை அடையாளம் கண்டு தவிர்த்தேன். நாம் தமிழ்ச்சொற்கள் என நினைக்கும் பல சொற்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. அதேசமயம் நாம் சம்ஸ்கிருதம் என நினைக்கும் பலசொற்கள் தமிழில் வேர் உடையவை. பல சொற்கள் தமிழ் சம்ஸ்கிருதம் இரண்டுக்குமே பொதுவான வேர்கொண்டவை. சம்ஸ்கிருத வேர்கொண்ட சம்ஸ்கிருதச் சொற்களே தவிர்க்கப்பட்டுள்ளன

உங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் தமிழ்ப் புத்திலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆகப்போகும் நிலையில்தான் சிலப்பதிகாரத்திலுள்ள சம்ஸ்கிருதச் சொற்களைக்கூட தவிர்த்து கொற்றவை வெளிவந்தது. இத்தனைபெரிய நாவல்தொடராக வெண்முரசு வந்துள்ளது.

ஏற்கனவே சொன்னதுபோல, இவற்றுக்கு இளைய தலைமுறை வாசகர்களே மிகுதி. சென்ற தலைமுறை வாசகர்களே பொதுவாக மொழிநடை தனித்தமிழாக இருப்பதைப் பற்றி குறைசொல்கிறார்கள். அவர்கள் ஏதேனும் எழுத்துமுறைக்கு பழகிப்போய் நின்றுவிட்டவர்கள்.  வெண்முரசு வரிசையில் முதல் நாவலை ஓர் அகராதியின் துணைகொண்டு  படித்துவிட்டீர்கள் என்றால் அந்த மொழியை வாசிப்பதற்கான பயிற்சியை அதுவே அளிக்கும்.

அப்படித்தான் அது இன்று இந்த அளவுக்கு வாசிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்திருக்காது, வெண்முரசு நாவல் வரிசைக்கு சிவகாசி அச்சில் திருட்டு மலிவுவிலைப் பதிப்பே சந்தையில் கிடைக்கிறது. தமிழில் தீவிர இலக்கிய தளத்தில் எந்தநூலுக்கும் இப்படி நடந்ததில்லை.அந்த அளவுக்கு அதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்கிறேன். அது மகாபாரதம் உருவாக்கும் ஈர்ப்பு

வெண்முரசில் நானே உருவாக்கிய நூற்றுக்கணக்கான சொற்கள் இன்று பொதுப்புழக்கத்திற்கு வந்துவிட்டிருக்கின்றன. தினத்தந்தியில்கூட அவ்வப்போது அவற்றைப் பார்ப்பதுண்டு. இன்றுகூட ஒரு சொல்லைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். வெண்முரசில் இருந்து விக்ஸனரி போன்ற தளங்களுக்குச் சென்று பொதுப்புழக்க மொழியில் கலந்துவிடுகின்றன.

இந்த மொழியை என்னுடைய மாறாத மொழியாக கொள்ளவில்லை. கொற்றவையில் ஒருவகை தனித்தமிழ் இருந்தது. இதில் இன்னொருவகை தனித்தமிழ். நான் இந்த மொழியிலிருந்து சிறுகதைகள் வழியாக வெளிவந்துகொண்டிருக்கிறேன். பேச்சுமொழிக்கு அணுக்கமான சொற்றொடரமைப்பை, சொற்களையே நான் பயன்படுத்துகிறேன்.ஒஆனால் கட்டுரைகளில் கூடுமானவரை தனித்தமிழையே எழுத முயல்வேன்

வெண்முரசு அனைவருக்கும் உரிய நூல்நிரை அல்ல. எப்போதுமே அது ஒரு சிறுவட்டத்தினருக்கு உரியதாகவே இருக்கும். அதன் வாசகர்கள் அடிப்படை அறிவுத்திறனும் மொழித்திறனும் கொண்டவர்கள், தொடர்வாசிப்பில் ஈடுபாடுகொண்டவர்கள், அதன்பொருட்டு நேரத்தையும் உழைப்பையும் அளிப்பவர்கள், புதியன கற்க முயல்பவர்கள். தமிழிலக்கியத்தின் தலைசிறந்த வாசகர்களுக்கு மட்டுமே உரிய படைப்பு இது

அவர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் அவர்களே பண்பாட்டின் மையம் என அமைபவர்கள். அவர்கள் இன்றிருக்கிறார்கள். நாளை இருப்பார்களா என்றால் நான் அறியேன். இருக்கவேண்டும் என விழைகிறேன். இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொல்கிறீர்கள், வரும் காலத்தில் தமிழில் வாசிக்க எவரும் இருக்க மாட்டார்கள் என. அதாவது தமிழில் இலக்கியத்தேர்ச்சி கொண்டவர்கள் இல்லாமலாவார்கள் என. அப்படி ஆகுமென்றால் , தமிழின் மகத்தான இலக்கியச் செல்வங்கள் எல்லாம் வாசிக்கப்படாமல் போகுமென்றால் , வெண்முரசும்  உடன் செல்லட்டுமே.  அவை தாங்கள் உருவாகி வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லட்டும்.

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்- ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இல்லாத தமிழ்

[தண்டியலங்காரம்]

ஜெ

***


ஏன் தமிழ்ச்சொற்கள்?

வெண்முரசும் நவீனத்துவமும்

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரையாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–87