தமிழைக் கொண்டுசெல்லுதல்

ஆற்றூர் ரவிவர்மா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

கடந்த சில தினங்களுக்கு முன்பு  பாலக்காடு அருகில் உள்ள  பட்டாம்பி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்ற தென்னிந்தியக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிஞர் சுகுமாரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் நான், சபரிநாதன், ச.துரை, கவின் மலர், தீபு ஹரி ஆகியோர் கலந்து கொண்டோம்.அங்கு சந்தித்த பல மலையாளக் கவிகள் தமிழ்கவிதைகள் குறித்தும்,கவிஞர்கள்  குறித்தும் மிகுந்த ஆர்வமாக பேசினர். நிகழ்ச்சிக்கு முன்பாகவே மலையாள கவி பி.ராமன்  சபரி, ச.துரை, மற்றும் என்னுடைய கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தும் எனக்கு வாட்ஸ் அப்பில் வாசித்தும் அனுப்பி இருந்தார்.

நாங்கள் சந்தித்த பெரும்பாலான மலையாளக் கவிகள் உங்கள் மூலமாக தமிழ்கவிதைகள் குறித்து அறிமுகம் கிடைப்பதாகக் குறிப்பிட்டனர். உங்களின் வழியாக தமிழ்கவிதைகளும்,கவிஞர்களும் சந்தடியில்லாமல் மலையாளத்தில் அறிமுகமாகியபடி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கே.ஜி.சங்கரப்பிள்ளை

 

கல்பற்றா நாராயணன்
டி.பி.ராஜீவன்
பி.ராமன்

90களுக்கு பிறகான அச்சு ஊடகக் கவிஞர்கள் மற்றும் கவிதைகள், சோஷியல் மீடியா  கவிஞர்கள்,டிஜிடல் மீடியா கவிஞர்கள் குறித்து சுபைதா  அவர்கள் முன்னிலையில் கவிஞர்கள் பி.ராமன்,அன்வர் அலி, எஸ்.கண்ணன் (கவிஞர்களின் பெயர்களை அரங்கில் கேட்டது வழியாக எழுதுகிறேன்) ஆகியோர் கலந்துகொண்டு பேசியது நன்றாக இருந்தது. மலையாளத்தில் அச்சு ஊடகக் கவிஞர்களுக்குப்  பிறகு சிறப்பான பங்களிப்புடன் வந்த கவிஞர்கள் கவனம் பெறுகிறார்கள்  என்றே  நினைக்கிறேன்.

இதுகுறித்து முகநூல், பிளாக்கில்(Blog)  உள்ளிட்ட மாற்று வடிவங்களில் இயங்கும் கவிஞர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றதைக் காணமுடிந்தது.கல்பற்றா நாராயணின்   உரையை அவரின் மொழி உச்சரிப்புகள்  காரணமாக  புரிந்து  தொடர  முடியவில்லை. பி.பி.ராமச்சந்திரன்  தலைமையிலான குழுவினர்  இதனை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற அயல்மொழிக் கவிஞர்கள் தங்கள் எண்ணப்படி கவிதைகளை வாசித்தனர்.பெரும்பாலான மலையாளக் கவிகளிடம் பி.ராமன் எங்களை அறிமுகப்படுத்தும்போது, குறைந்த பட்சம் எங்கள் பெயரையாவது அறிந்திருக்கிறார்கள்.

மலையாளக் கவிகள் தமிழ்க் கவிஞர்களிடம் மிகுந்த அளவில் அன்பு பாரட்டினர்.  மலையாளக் கவிஞர்கள் பலர் உங்கள் மூலமாகவும் தற்காலத் தமிழ்கவிஞர்கள் குறித்து அறிந்து வருகிறார்கள் என்பது அறிந்து மகிழ்ந்தேன்.உங்களுக்கு மிக்க நன்றி.

கண்டராதித்தன்,

கண்டாச்சிபுரம்.

ஜனிஸ் பரியத்
அனிதா அக்னிஹோத்ரி
ஜான்னவி பரூவா

 

அன்புள்ள கண்டராதித்தன்,

 

இந்த உரையாடலை முறையாக தொடங்கிவைத்தவர் ஆற்றூர் ரவிவர்மா. அவர் மொழியாக்கம் செய்த புதுநாநூறு என்னும் தொகுப்பில் ந.பிச்சமூர்த்தி தொடங்கி யூமா வாசுகி வரையிலான கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அவரைப்போன்ற ஒருவர் அதைச் செய்தமையால் அத்தொகுதி கவனிக்கப்பட்டது. தமிழில் நாம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கடன்பட்டிருக்கிறோம்

 

நவீனத்தமிழிலக்கியம் பற்றி மலையாளத்தில் முன்பு உயர்வான எண்ணம் இருக்கவில்லை. ஏனென்றால் நமது வெகுஜன எழுத்தையே அவர்கள் அறிந்திருந்தனர் – இங்கு அன்று முக்கியத்துவம் பெற்றிருந்தது அதுதான்.  அவர்க்ள் பொதுவாக மொழியாக்க நூல்களைக் கவனிப்பதில்லை. கன்னட இலக்கியம் பற்றியும் அவர்களுக்கு பெரிதாகத் தெரியாது. அவர்கள் கவனிப்பது வங்கமொழியை மட்டுமே.

 

ஆற்றூர் ரவிவர்மா வழியாகவே சுந்தர ராமசாமி அங்கே அறிமுகமானார். அதன்பின்னரே நவீன இலக்கியம் அங்கே அறிமுகமாகி வாசிக்கப்பட்டது. ஆற்றூர் பல ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்திருக்கிறார். தமிழிலக்கியத்திற்கு அவர் ஓரு மரியாதையை உருவாக்கி அளித்தார்.

 

அவருடைய எண்ணப்படி நான் தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தை அங்கே அறிமுகம் செய்தேன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் தொடங்கி முன்னோடிகளின் பேட்டிகளை வெளியிட்டேன். தமிழ்க் கவிதைகளை தொடர்ந்து மொழியாக்கம் செய்தேன். தமிழ் – மலையாளக் கவிதை உரையாடல்களை ஒருங்கமைத்தேன். இந்தப்பணி 1990 முதல் முப்பதாண்டுகளாக நிகழ்கிறது. நீங்கள் காண்பது அதன் விளைவு

 

எளிமையாக ஒருமொழியில் இன்னொரு மொழி இலக்கியத்தை அறிமுகம் செய்ய முடியாது. மொழியாக்கம் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. ஏனென்றால் பொதுவாக இலக்கிய வாசகர்கள் சமகால இலக்கியத்தையே வாசிப்பார்கள். பிறமொழிநூல்களைப் பற்றி தேர்ந்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் குறிப்பிட்டாலன்றி அதை கவனிக்க மாட்டார்கள். தங்கள் மொழி பற்றிய பெருமிதம், இன்னொரு மொழிமேல் கொள்ளும் இயல்பான விலக்கம் ஆகியவற்றைக் கடந்து இலக்கியம் சென்று சேரவேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு தொடர்ச்செயல்பாடு தேவை

எச்.எஸ்.சிவப்பிரசாத்
விவேக் ஷன்பேக்

அவ்வகையில் ஓரளவு திட்டமிட்டே இதைச் செய்கிறேன். இன்று விஷ்ணுபுரம் அமைப்பின் பங்கும் உள்ளது. இங்கே விஷ்ணுபுரம் விழா போன்றவற்றுக்கு வரும் வெளிமொழி எழுத்தாளர்கள் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. சாகித்ய அக்காதமி , தி ஹிண்டு போன்ற பெரிய நிறுவனங்களின் பெரிய சம்பிரதாயமான இலக்கியவிழாக்கள் எழுத்தாளர்களிடம் எந்த உளப்பதிவையும் உருவாக்குவதில்லை.ஆனால் விஷ்ணுபுரம் விழா போன்றவை பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்குகின்றன. ஏனென்றால் இவை மிக ஆத்மார்த்தமானவை. வாசகர்கள் மிகத்தீவிரமானவர்கள்

 

இப்படி எங்கள் விழாக்களுக்கு வருபவர்களை வெறுமே விருந்தினர்களாக நாங்கள் நடத்துவதில்லை. தமிழிலக்கியத்தை அவர்களுக்குக் கொண்டுசெல்லவும் தீவிரமாக முயல்கிறோம். எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறோம். படைப்புக்களை மொழியாக்கம் செய்து அளிக்கிறோம். அது ஒரு இலக்கியப் பரிமாற்றமாக அமையவேண்டும் என உளம்கொள்கிறோம்

 

உதாரணமாக விவேக் ஷன்பேக், ஜனிஸ் பரியத், அனிதா அக்னிஹோத்ரி, ஜான்னவி பருவா, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், கல்பற்றா நாராயணன், பி.ராமன், டி.பி.ராஜீவன், பி.ராமன் போன்றவர்கள் இங்கே வரும்போது எங்களால் அவர்களின் ஆக்கங்கள் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருப்பதை காண்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் அத்தனை வாசகர்களும் அவற்றை படித்திருப்பதும் அவர்களின் ஆக்கங்கள் மிகத்தீவிரமான விவாதம் நிகழ்வதும்தான் அவர்களிடம் இங்குள்ள இலக்கியச் சூழல் பற்றிய பெரும் மதிப்பை உருவாக்குகிறது..அத்துடன் தீவிர இலக்கியத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களை மட்டுமே அழைக்கிறோம் – வெகுஜனப் புகழ் மிக்கவர்களை அல்ல.

 

எங்கள் விழாக்களில் கலந்துகொண்ட விவேக் ஷன்பேக், எச்.எஸ்.சிவப்பிரகாஷ் போன்றவர்கள் நவீனத்தமிழிலக்கியம் பற்றிய ஆழமான மதிப்பை கன்னடச் சூழலில் உருவாக்கியிருக்கிறார்கள். அனிதா அக்னிஹோத்ரியும் ஜனிஸ் பரியத்தும் வங்கத்திலும் வடகிழக்கிலும் உருவாக்கும் சாதகமான பதிவும் மிக முக்கியமானது. பி.ராமன், டி.பி.ராஜீவன் கல்பற்றா நாராயணன் போன்றவர்கள் அத்தனை மேடைகளிலும் தமிழ்ப்படைப்புக்களைப் பற்றிப் பேசுபவர்கள். இலக்கியவாதிகளில் உண்மையான மதிப்பை உருவாக்குவது அவர்களின் ஆக்கங்களை நாம் படித்திருக்கிறோம் என்பதுதான்.இப்படித்தான் தமிழிலக்கியத்தை கொண்டுசெல்லமுடியும்.

ஜனிஸ் பரியத் சிறுகதை தொகுதி- நிலத்தில் படகுகள்

 

இந்த இலக்கியப் பரிமாற்றத்தில் மிகப்பெரிய பங்கு விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு உண்டு. காழ்ப்பும் செயலின்மையும் நிறைந்த நம் சூழலில் இருந்து எழும் ஏளனங்கள் அற்பவசைகளை கடந்து அவர்கள் ஆற்றும் இப்பணியின் பெறுமதியை அவர்களேகூட இன்னமும் சரியாக உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. கருத்தியல், அழகியல் செயல்பாட்டின் விளைவுகள் கண்கூடாகத் தெரிய ஒரு தலைமுறைக்காலம் ஆகவேண்டும்.

 

விஷ்ணுபுரம் அமைப்பு எடுக்கும் செயல்பாடுகள் மிகமிகக்குறைவான நிதியாதாரத்துடன் செய்யப்படும் ஒர் ஆத்மார்த்தமான முயற்சிகள். இன்னும் கொஞ்சம் பெரிதாகச் செய்யமுடியும் என்றால், ஆண்டுதோறும் ஒரு சர்வதேச இலக்கிய விழாவை சென்னையில் நாங்கள் ஒருங்கிணைக்க முடியும் என்றால் தமிழிலக்கியத்தை இந்தியாவெங்கும் உலகமெங்கும் கொண்டுசெல்ல முடியும்

அதை இன்றையச் சூழலில் நாங்கள் மட்டுமே செய்யமுடியும். நாங்கள் விஷ்ணுபுரம் விழாக்களை ஒருங்கிணைக்கும் தரத்தில், அதே நோக்கத்துடன் செய்ய இங்கே ஆளில்லை. கனவுகள் உள்ளன, பார்ப்போம்

 

ஜெ

நிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்

முந்தைய கட்டுரைசுதந்திரத்தின் நிறம் – கடிதம்
அடுத்த கட்டுரைமறைசாட்சி – கடிதம்