இளங்கனிவும் முதிர்கனிவும்

 

தேவதேவனுக்கு ஓர் இணையதளம்

 

பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அற்புதமான இயற்கை அழகுகொண்ட நிலம் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பசுங்காடுகள், புல்வெளிகள், ஊழ்கமரங்கள், நீரோடைகள். நீலப்பச்சை, தளிர்ப்பச்சை, மலர்வண்ணங்கள், பூச்சிகளின் வண்ணங்கள், பறவைக்குரல்கள் என விரிந்த வெளி. நடுவே ஒரு வயலில் ஒருவர் ஏரோட்டிக்கொண்டிருப்பார். மண்வெட்டியால் கிளறிக்கொண்டிருப்பார். ஒரு வகை ஒவ்வாமை வந்து உடலை உலுக்கச் செய்யும்.

 

அதன் நியாயங்கள் வேறு. அக்கணம் ஒரு தூய விலங்காய் நாம் அச்செயலை மறுப்போம். ஒருமுறை என்னுடன் வந்த நண்பர் , இலக்கியவாதி அல்ல நிலம் வாங்கி விற்கும் தரகர், “பசு உடம்புல காக்கா கொத்திக்கொத்தி புண்ணாக்குறாப்ல இருக்கு சார்!” என்றார். சிறு குழந்தைகள் பலசமயம் பதறிவிடுவதைக் காணலாம்.“ஏன் அந்த மாமா மண்ணை போட்டு அடிக்கிறாங்க?” என்று சைது ஒருமுறை கேட்டாள்

 

தேவதேவன் அவருடைய கவிவாழ்க்கையின் ஒரு கனிவுப்பருவத்தில் இருக்கிறார். அறைக்காற்று குளிர்சாதனப்பெட்டிக்குள் சென்று குளிர்ந்து திரும்ப வருவதுபோல அவருடைய சமகாலம் அவருடைய இளமைப்பருவத்திற்குள் சென்று கனவும் கனிவுமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது.

அகன்று விரிந்த வானின் கீழ்

 

அகண்டு விரிந்த வானின்கீழெ

அத்துணை அகண்ட பேரெழிலுடன்

யார்

ஏன்

எதை

இப்படி

ஈரப்புனல்கொண்டு

இதமான சமநிலப் பரப்பினை விரித்த

பெருங்களத்தில் நின்றபடி

வெகு அக்கறையோடு குனிந்து

ஊன்றிக்கொண்டே இருக்கிறார்கள்

வரிசை வரிசையாய்? அணி அணியாய்?

 

புன்னகையோடு திரும்பிப் பார்த்த அவனைப்

பூரிப்போடு பார்த்த தந்தை

“நாற்று’ என்றார் “நடுகிறார்கள்” என்றார்

“வயல்” என்றார்

மிகப்பரிதாபமான தொனியுடன்

 

பரவாயில்லை என்பது போன்ற

கனிவும் புன்னகையும் நிறைவும்

பேரளவானதொரு ஆறுதலும் மிளிர

அவர் முகத்தை வருடின

அவன் பிஞ்சுக்கரங்கள்

 

 

நிலக்காட்சி என்ன ஏது என்று தெரியாமலேயே சிறுகுழந்தைகளை ஒருவகை பரவச நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அவை நிலமே தாங்கள் என்னும் இரண்டின்மையை அடைகின்றன. என் சிறுவயதில்- எனக்கு ஒருவயதுதான் இருக்கும் என நினைக்கிறேன், பிறர் தூக்கிச் செல்லும் வயது- அப்படி ஒரு மாட்டுவண்டியில் அமர்ந்து ஓர் ஆற்றில் இறங்கும்போது அடைந்த முழுமையனுபவம் இன்றும் நினைவிருக்கிறது. ரப்பர் நாவலில் அந்தக் காட்சி அப்படியே பொன்னுமணி பெருவட்டரின் அனுபவமாக வரும்

 

இக்கவிதையில் அகண்ட [ துண்டாடப்படாத, முழுமையான என்னும் பொருள்கொண்ட சொல்] நிலத்தைப் பார்த்து விதிர்த்து நின்றிருக்கிறது குழந்தை. அப்போது அதன்மேல் ஒருவர் உழுது நடவுசெய்வதை காண்கிறது. நிலவெளி வயல்பரப்பாக உருமாறுவதைக் காண்கிறது. துண்டாடப்பட்டு கண்டமாக்கப்பட்டு. அது அறியும் முதல் வாழ்க்கைத்தரிசனம் அல்லவா அது? பரவாயில்லை என்று சொல்லி அவரை ஆறுதல்படுத்துகிறது குழந்தை.

 

முற்றிலும் நேர்மாறான அனுபவம் கொண்டது இன்னொரு கவிதை. இங்கிருப்பவர் ஒரு வயோதிகர். எளிய உணவின் முன் அமர்ந்திருக்கையில் அவ்வுணவாக அங்கே வந்துசேர்ந்திருக்கும் அப்பொருளின் பயணம் அவரை நெகிழ்வுறச் செய்கிறது. நிலத்தை வயலாக்கி பயிரிட்டு அரிசியாக்கி சமைத்துப் பரிமாறி. பொருட்களுக்குத்தான் மானுடர்மேல் எத்தனை கனிவு இருக்கவேண்டும்?

பசித்தவன்

 

சிவப்புச் சம்பா அரிசி

தன் சிவப்பினால் ஒளிவீசியது

இயற்கையானது என்ற சொல்லும்

காரணமாக இருக்கலாம்

 

கஞ்சி என்னும்

நெஞ்சை அள்ளும் ஒரு சொல்லுடன்

என்ன அற்புதம்!

தட்டில் அள்ளி அள்ளி

எடுத்து வைத்துக்கொண்டது

அகப்பை என்ற ஒரு சொல்லும்

 

மாறாப்புன்னகை மலர்ச்சியுடன்

தட்டில் குவிந்த அதனை அவன் பார்த்தான்

அவனுக்காகவே ஒவ்வொரு நாளும்

எத்தனை மனிதர்கள்

என்று கணக்கு காட்டுவதுபோல்

அவன் முன் அமர்ந்திருந்தது அது

அவன் பருகும் நீரில் நன்றாய் நனைந்து

இதமாய் அவன் அருந்தும்படியான

மென்மையுடன்

 

அருகே ஒரு கிண்ணத்தில்

வறுத்து வைத்த ஒரு சுண்டவத்தல்

விழிகளே இதழ்களாய் வாயாய் உடம்பாய்

பூமிப்பெருங்கடல் ஈந்த உப்பையும்

இயற்கையின் வித்துக்களினின்றும்

அவனுக்காகத் தன்னை அழித்து

அவனுக்காகவே உருகிப்பெய்த

நெய்யையும் அணிந்துகொண்டு.

 

இன்பத்தால் அவன் விழிகள் கசிய

அமுதூற்றைக் கிளப்பும்படி

அவன் நாவிலே கலந்து

அவனை உயிர்ப்பிப்பதற்காய் வந்த

கடவுள்

 

அன்னமே பிரம்மம் என்னும் தொன்மையான தரிசனம்தான். ஆனால் அது அன்னமாவது அதை உருவாக்கிய கைகளின் அன்பால். அவர்களின் ஊக்கத்தால். அந்த ஒவ்வொரு பொருளிலும் உள்ளடங்கியிருக்கும் சத்துக்களால். மானுடர்மேல் பொருட்கள் கொண்ட கனிவுதானே சத்துக்கள் என்பவை

 

ஆனால் இக்கவிதையிலும் தேவதேவனின் குழந்தை உள்ளது. வறுத்த சுண்டைக்காய் வற்றலை “விழிகளே இதழ்களாய் வாயாய் உடம்பாய்” என்று சொல்லும் இடத்தில் அவர் முத்ற்கவிதையில் நிலம்நோக்கி மெய்யழிந்த மகவாக மீண்டும் ஆகிவிடுகிறார்

 

 

எல்லாம் ஒரு கணம் முன்புதான். தேவதேவன் கவிதைகள்

காஞ்சனை நூலாறு 

[email protected]

 

 

 

நிழலில்லாத மனிதன்

விரல்நுனி வண்ணத்துப்பூச்சி

கவிதையின் அரசியல்– தேவதேவன்

தேவதேவன் ஒரு பேட்டி

மார்கழியில் தேவதேவன்

தேவதேவனின் அமுதநதி

சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

தேவதேவனின் ஏஞ்சல்

தேவதேவனின் கவிமொழி

தேவதேவனின் கவிதையுலகம்

தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு

உதிர்சருகின் முழுமை

தேவதேவனும் நானும்

நல்முத்து

மாசு

உறவுகளின் ஆடல்

தேவதேவனும் நானும்-கடிதம்

தேவதேவனின் பரிணாமம்

திருப்பரப்பு

தேவதேவனின் படிமங்கள்

தேவதேவனின் கவித்தரிசனம்

தேவதேவனை தவிர்ப்பது…

தேன்மலர்

தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…

தேவதேவனைப்பற்றி…

கவிஞர்களின் முன் விமர்சனம்

பாலையின் மலர்மரம்

தேவதேவனின் மரங்கள்

இலக்கியவாதி வளர்கிறானா?

தேவதேவனின் அருகே…

அட்டைப்படங்களின் வரலாறு

தேவதேவனின் கவிமொழி

 

முந்தைய கட்டுரைஇலக்கியவிமர்சனத்தில் வன்மம்
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு பற்றி