இலக்கியவிமர்சனத்தில் வன்மம்

கவிதையில் அசடுவழிதல்

கவிதை, ஆளுமை, பாவனைகள்

அன்புள்ள ஜெ..

 

மனுஷ்யபுத்திரனின் அடாவடிகள் குறித்து நான் அனுப்பும் எந்த அஞ்சல்களையும் நீங்கள் பிரசுரிப்பதும் இல்லை. எதிர்வினையாற்றுவதும் இல்லை.அது உங்கள் விருப்பம்.  எனக்கு அதில் ஏமாற்றம் இல்லை

 

நான் என் நியாயமான கவலையைத்தான் பகிர்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.தனக்கு சேர வேண்டிய நியாயமான ராயல்ட்டியை கேட்கும் எழுத்தாளர்களை கவிதை எழுதி அவமானப்படுத்துவதோதனக்கு அடையாளம் அளித்த சுந்தர ராமசாமியையும் சுஜாதாவையும் மறந்துவிட்டு தன்னை உருவாக்கியவர் கலைஞர் என சொல்வதோ என் கவலை இல்லை. ஒரு வாசகனாக அதில் நான் கவலைப்பட எதுவுமில்லை

 

ஆனால் தன் படைப்பாற்றலை இழந்துவிட்டு , ஒரு முகநூல் எழுத்தாளராக மேடைப்பேச்சாளராக மாறி விட்ட ஒருவரை உங்கள் அன்புக்குரிய கவிஞராக கருதி அவர் எழுத்துக்கெல்லாம் இலக்கிய விமர்சனம் எழுதுவது உண்மையான படைப்பாளிகளை மனம் வருந்தச் செய்யும் என்பதே என் கவலை

 

முகநூலில் எழுத ஆரம்பிக்கும்போது அதில் கிடைக்கும் லைக்குகள் , லோசா போல எழுதுகிறீர்கள் தோழர் போன்ற கமெண்ட்டுகள் , பத்திரிக்கைகளில் முகநூலில் எழுதிய கவிதை (??!!) வெளியாவது , வாட்சப்பில் பரவலாவதை அறிவது போன்றவை கிக் ஆக இருக்கும்தான்

 

ஆனால் அதன் அர்த்தமின்மையையும் , எழுத்தின் தரத்தை அது குறைப்பையும் உணர்ந்து , முகநூலில் இருந்து விலகியவர்கள் பலர். விலகியபின் எழுத்தின் தரம் மாறிவருவதை கண்கூடாக பார்க்க முடியும்

 

இணைய மொண்ணைகள் பலர் இப்படி மாறி வரும்போது , மனுஷ்யபுத்திரனோ புதிதாக முகநூலில் நுழைபவர்களின் மன நிலையில் இருக்கிறார்தினசரிகளில் தன் கவிதையை இணையவாசிகளின் டிரெண்ட் கவிதை என பிரசுரிப்பது , வாடசப்பில் வைரலாவது போன்றவற்றை பெருமையாக நினைக்கிறார்.இவற்றையெல்லாம் முகநூல் அனுபவஸ்தர்கள் எப்போதோ பார்த்து முடித்து விட்டார்கள்

 

எனக்கு அவர் மீது எப்போதும் மரியாதை இருந்ததில்லை. எனவே அவரது இப்படி இணைய மொண்ணையாக மாறி இருப்பதில் எனக்கு ஒன்றும் இல்லை.ஆனால் அவருக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவம் எனக்கு வருத்தம் அளிக்கிறது

 

என்னைப்போன்ற பலருக்கும் இந்த வருத்தம் இருக்கிறது என்பதை தெரிவிப்பது மட்டுமே இதை எழுதுவதன்  நோக்கம்

 

என்றென்றும் அன்புடன்,

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள ஜெ,

 

மனுஷ்யபுத்திரன் தன்னை அனைவருமே தாக்குகிறார்கள் என்றும் எழுத்தாளர்களுக்கு கோரைப்பல் முளைத்துவிடுகிறது என்றும் எழுதியிருக்கிறார்

 

ஜெயமோகன் ஒரு கவிதை விவகாரத்தில் எப்படியாவது என்னை புண்படுத்திவிடமுடியாதா என்ற மூர்க்கத்துடன் தேடித்தேடி கற்களை எடுத்து எறிந்தார்

 

என்று உங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி அப்படி தனிப்பட்ட முறையில் எதுவும் சொன்னதுபோல தெரியவில்லை. இந்த  ‘மூர்க்கம்’ என்ற சொல்லெல்லாம் எப்படி வருகிறது?

 

கிருஷ்ணமூர்த்தி

 

அன்புள்ள பிச்சைக்காரன், கிருஷ்ணமூர்த்தி,

 

ஒருநாளில் குறைந்தது நான்கு கடிதங்களாவது மனுஷ்யபுத்திரனை கிண்டல்செய்தோ எதிர்த்தோ வருகின்றன. பல காரணங்கள். ஒன்று, அவருடைய அரசியலும் அதையொட்ட்டி அவர் முகநூலில் போடும் வெட்டிச்சண்டைகளின் மொழிநடையும் சிலருக்குப் பிடிப்பதில்லை. இன்னொன்று அவர் கவிதைகளில் உள்ள செயற்கையான தளம் சிலருக்குப் பிடிப்பதில்லை. அது அவர்களின் கருத்து. நான் அவற்றுக்கு என் தளத்தில் இடமளிப்பதில்லை

 

ஏனென்றால் எனக்கு அவர் முக்கியமான கவிஞர் – அதற்கான அழகியல் காரணங்களை விரிவாகவே எழுதியிருக்கிறேன். எப்போதும் அந்நிலையில் நின்றே எதிர்வினையாற்றியிருக்கிறேன். ஐயமிருப்பவர் இந்தத்தளத்தில் மனுஷ்யபுத்திரன் என்று தேடி சென்ற பதிமூன்றாண்டுகளில் நான் எழுதிய அனைத்துக் குறிப்புக்களையும் எடுத்து வாசித்துப் பார்க்கலாம்.

 

மனுஷ்யபுத்திரனுடன் ஏன் ‘அத்தனை’ எழுத்தாளர்களும் சண்டைபோடுகிறார்கள்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். பலர் ராயல்டி கொடுக்காதது என்கிறார்கள். நான் அவரிடம் ஒருபோதும் ராயல்டி பற்றி ஒரு சொல் பேசியதில்லை, எதிர்பார்த்ததில்லை. சிலர் அவர் மிகச்சிறு விஷயங்களில்கூட மிகையாக எதிர்வினை ஆற்றுவது என்கிறார்கள். உதாரணம் போகன் சங்கர். உயிர்மையின் ஒரு நூலின் அட்டை சரியாக இல்லை என்று அவர் சொன்னார், அவ்வளவுதான் மனுஷ்யபுத்திரன் அவருடைய அடிப்பொடிகளுடன் போகனை துரோகி என்று வசைபாடித் தள்ளிவிட்டார். சிலர் ஒரு நூலை அவர் பிரசுரித்தால் அந்த ஆசிரியர் தனக்கு விசுவாசமாக இருந்தாகவேண்டும் என எதிர்பார்க்கிறார் என்கிறார்கள். உதாரணம் வா.மணிகண்டன்

 

மனுஷ்யபுத்திரனுடன் ஏன் ‘அத்தனை’ எழுத்தாளர்களும் விலகிச் செல்கிறார்கள்? பிரச்சினை  ‘அத்தனை’ எழுத்தாளர்களுக்கும்தான் அவர் ‘அப்பழுக்கற்றவர்’ என அவர் நம்புகிறார் என்றால் எங்கே பிரச்சினை இருக்கிறது? நான் ஏற்கனவே எழுதியதுதான். அவர் மாறாத தன்னிரக்கத்தை ஓரு கவசமாக, படைக்கலமாகக் கொண்டவர். அவர் தன்னைச் சூழ்ந்துள்ளவர்களின் குற்றவுணர்வினை பயன்படுத்தி மேலே செல்பவர். அவர்மீதான அத்தனை குற்றச்சாட்டுக்களையும் அதன் வழியாக அவர் கடந்துவிடுகிறார்.

 

அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர் அப்படித்தான். முப்பதாண்டுகளாக நான் அறிந்த ஹமீதை நான் அப்படியேதான் ஏற்றுக்கொள்கிறேன். நான் அறிந்த எல்லா கவிஞர்களுமே இதைப்போன்ற ஆளுமைச் சிடுக்குகள் கொண்டவர்கள்தான். அதைப்பார்த்தால் கவிதையை வாசிக்கமுடியாது – ஆகவே மீண்டும் சொல்கிறேன். அத்தனை சிக்கல்களுடனும் மனுஷ்யபுத்திரன் எனக்கு அணுக்கமான கவிஞர்.

 

நான் அவரை ‘வன்மத்துடன்’ தாக்கினேன், வசைபாடினேன் என்றெல்லாம் எழுதுகிறார். இப்படி ஒன்றை ஊடகங்களில் சொல்லிக்கொண்டிருந்தால் காலப்போக்கில் மேலோட்டமாக வாசிப்பவர்கள் அதை ஒரு ‘இயல்பான உண்மை’ என ஏற்றுக்கொண்டு மேலே பேசுவதைக் கவனித்திருக்கிறேன். ஆகவேதான் இவ்விளக்கம்

 

நான் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனங்கள் எழுதிவருகிறேன். இவை ரசனை விமர்சனங்கள். ரசனை விமர்சனம் எதுவாக இருப்பினும் அதில் அவ்வப்போது முழுமையான நிராகரிப்பு இருந்தே தீரும். ஏனென்றால் ரசனை என்பதே ஏற்பு, நிராகரிப்பு இரண்டும்தான். ஏற்புக்க்குத்தான் விரிவான விளக்கங்கள், ஆய்வுகள் தேவையாகின்றன. கோட்பாட்டு விமர்சனங்களில்தான் ஆய்வமைதி தேவையாகிறது. [ஆனால் தமிழில் மிகமோசமான தரைமொழியில் வசைகளை எழுதுபவர்கள் கோட்பாட்டாளர்கள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களே]

 

ரசனைவிமர்சனம் சார்ந்த நிராகரிப்புக்கள் கூர்மையாகவே இருக்கும். அவை புண்படுத்தவும்கூடும். ஆனால் அவை ஒருபோதும் தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல. புதுமைப்பித்தன் முதல் பிரமிள், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் வரை அவ்வாறு கூர்மையான நிராகரிப்பை எழுதியவர்களின் நீண்ட நிரை இங்கே உண்டு. சிலசமயம் அவற்றில் ஒரு படிமம், அல்லது சொல்லாட்சி மேலதிகக் கூர்மைகொள்ளக்கூடும்.[உதாரணம்: 31 வயதான எந்த இந்தியக்குடிமகனும் இந்திய ஜனாதிபதி ஆகக்கூடும் என்பதுபோலத்தான் அப்துல்ரகுமான் நல்ல கவிதை எழுதும் வாய்ப்பும் – வெங்கட் சாமிநாதன்.]

 

படைப்புகளை நான் கறாராக நிராகரிப்பது எந்த அடிப்படையில்? ஓர் ஆக்கம் கலையம்சம் இல்லாதது, அதற்கான வாய்ப்பே அற்றது என்றால் அதைப்பற்றி ஒன்றுமே சொல்வதில்லை – அன்றும் இன்றும். என் தேர்வு வரிசைகளில் அவற்றை முற்றாகவே தவிர்த்துவிடுவேன். ஒரு படைப்பு நான் ஏற்காத அழகியல்கொண்டது, ஆனால் ஏதோ ஒருவகையில் தமிழுக்கு முக்கியமானது என்றால் இலக்கியம்சார்ந்த வரலாற்றுக் குறிப்புக்களில் அதற்கு தவறாமல் இடம் அளிப்பேன்

 

ஒரு படைப்பு பொய்யானது, போலியான உளநிலையில் எழுந்தது, அது செயற்கையாக மிகைப்படுத்தப்படுகிறது, இலக்கியமல்லாத காரணங்களால் முன்வைக்கப்படுகிறது என்றால் மட்டுமே மிகக்கடுமையாக எதிர்வினையாற்றுகிறேன். அப்போது கூரிய சொல்லாட்சியைப் பயன்படுத்தநேரும். அது அந்த வாசிப்பு அளித்த ஒவ்வாமையின் விளைவு. மேலும் அந்த விமர்சனக்கருத்து தைக்கவேண்டும், நிலைகொள்ளவேண்டும், விவாதிக்கப்படவேண்டும் என்னும் முனைப்பும் அந்த விமர்சனத்தில் உண்டு. ஆனால் இத்தகைய தருணங்களில் அந்த எதிர்க்கருத்து ஏன் என்பதை விரிவாக விளக்கி எழுதியும் இருப்பேன்.

 

அக்கவிதைகள் செயற்கையான சில ஏற்பாடுகளின் அடிப்படையில், அல்லது பரபரப்பின் அடிப்படையில் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் என்றால், சூழலில் அவை முதன்மையானவை என காட்டப்படும் என்றால் அவ்வாறல்ல என்று நிராகரித்து அதை நிலைநாட்டவேண்டியிருக்கிறது. வைரமுத்து மீதான மறுப்பு அவ்வகைப்பட்டதே. இன்று மனுஷ்யபுத்திரன் எழுதும் கவிதைகள் வைரமுத்து, தபூசங்கர் ஆகியோரை பின்பற்றுபவை. அவருடைய சிறந்த வாசகன் என்றவகையில் அவற்றை நான் நிராகரித்தேயாகவேண்டும். ஏனென்றால் அவர் நல்ல கவிதைகள் எழுதியபோதெல்லாம் அவரை தூக்கிப்பிடித்து சலிக்காது முன்னிறுத்தியிருக்கிறேன். நாளை இதேபோல தேவதேவன் செயல்படுவார் என்றாலும் என் எதிர்வினை இதுவே

 

இவை எவையும் தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல. கணிசமான படைப்பாளிகளின் தனிப்பட்ட உலகங்கள் எனக்குத் தெரியும். என்னிடம் பலவற்றை  பகிர்ந்துகொண்டவர்கள் உண்டு. எவற்றையும் எங்கும் எழுதியதில்லை. எழுத்தாளனின் வாழ்க்கையை நான் ஒரே அடிப்படையிலேயே கருத்தில்கொண்டிருக்கிறேன். அதை அவன் எப்படி தன் புனைவில் முன்வைக்கிறான் என்பதனூடாக அவன் புனைவின் பின்புலமாக அவன் ஆக்கங்களைப் பொருள்கொள்ளும் பொருட்சூழலாக  [context] அன்றி விமர்சனத்திற்கு அதை நான் பயன்படுத்துவதில்லை

 

என் மீதான வசைகள் ஒவ்வொருநாளும் வந்து குவிகின்றன. எத்தனை வசைக்கட்டுரைகள் என ஒருவர் ஊடகத்தை புரட்டிப் பார்த்தால் காணலாம். மிகப்பெரும்பாலும் எதிர்வினையே ஆற்றுவதில்லை. ஒருவர் இலக்கியரீதியாக பொருட்படுத்தத் தக்கவர்,  நேர்மையான கருத்தைச் சொல்கிறார் என்றால் மட்டுமே அவருடைய எதிர்வினையைப் பொருட்படுத்துவேன். விளக்கங்கள் அளிப்பேன். அவர் நேர்மையான கருத்துத் தரப்பாக செயல்படவில்லை, தனிப்பட்ட கசப்புகள் காழ்ப்புகளுடன் செயல்படுகிறார் என்று தெரிந்த அக்கணமே அவர் என் உலகில் இல்லாமலாகிவிடுவார்.

 

பெரும்பாலும் வசைக்கட்டுரைகளை எனக்கு எவரேனும் அனுப்புவார்கள். அதை வாசிக்கவே மாட்டேன் – அவற்றை எதிர்கொள்ள மிகச்சிறந்த வழி அதுவே.ஆகவேதான் இத்தனை வசைக்கட்டுரைகளையும் கடந்து உற்சாகமான தனிவாழ்க்கையைக் கொண்டிருக்கிறேன்.

 

எவரையாவது நான் தனிப்பட்ட முறையில் தாக்கியிருக்கிறேன் என நான் எண்ணவில்லை- அதற்கன வாய்ப்புகள் வரும்போதெல்லாம்கூட என் வழி அமைதியே. சாரு நிவேதிதா என்னைப்பற்றி என்னென்ன எழுதியிருக்கிறார் என்று சிலருக்கு நினைவிருக்கலாம். நான் என் மகனை அடித்து சித்திரவதை செய்கிறேன், அவன் மனவளர்ச்சி இல்லாத சிறுவன் என்றுகூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்! மனுஷ்யபுத்திரன் நேரடியான வசைச்சொற்களை எழுதியிருக்கிறார். இந்த பாய்பெஸ்டி கவிதைவிவகாரத்தில்கூட நான் எழுதியது அது ஓர் அசட்டுக்கவிதை என்று மட்டுமே. ஏன் என்றும் சொல்கிறேன். அவர் என்னை மனநோயாளி என்றெல்லாம் வசைபாடினார். அவருடைய தலைவி அவ்வண்ணம் சொன்னபோதுகூட நான் எதிர்வினை ஆற்றவில்லை.

 

ஆனால் இவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சிலவற்றால் இவர்கள் மேல் ஒட்டுமொத்தச் சூழலில் இருந்தும் வசைகளும் ஏளனங்களும் குவிந்த தருணங்களில் எப்போதும் நான் எதிர்வினையாற்றியதில்லை. உதாரணமாக சாரு நிவேதிதாவை தமிழச்சி என்பவர் ஒரு  ‘ஈர உரையாடல்’ சார்ந்து குற்றம்சாட்டியபோது, நித்யானந்தா விவகாரத்தின்போது. இதுவரை சாரு நிவேதிதா பற்றி ஒரு சொல் நான் வசையாக, தாக்குதலாக எழுதினேன் என்று அவர் ஆதாரபூர்வமாகச் சொல்லமுடியுமா என்ன? மனுஷ்யபுத்திரன் பற்றி, அல்லது வேறு எந்த எழுத்தாளரைப் பற்றியேனும்?

 

இனிமேலும் அப்படித்தான் என் நிலைபாடு. நான் தாக்கப்பட்டபோது மகிழ்ந்து கொண்டாடி பதிவிட்ட இரு எழுத்தாளர்கள் சென்ற மாதங்களில் தனிப்பட்ட உதவிகள் கோரி எழுதினார்கள். அவ்வுதவிகளை செய்தேன். அவர்கள் எழுதியதைப்பற்றி ஒரு சொல் பேசவில்லை. நான் கடந்தவன் என்று சொல்லவில்லை, கடந்துசெல்  என எனக்கு நானே ஆணையிட்டுக்கொள்கிறேன் – அவ்வளவுதான். நான் நிதானமான உணர்வுகள் கொண்டவன் அல்ல, கொந்தளிப்பானவன். ஆகவே இது எனக்குப் பெரிய நோன்புபோல..

 

நான் தாக்கப்பட்ட அன்று எத்தனை எழுத்தாளர்கள் அதை மௌனத்தால் வரவேற்றார்கள், செயற்கையான ‘நடுநிலை’ பதிவிட்டார்கள் , செய்தி ஆராய்ச்சிகளில் இறங்கினார்கள் என்று இன்று சென்று பாருங்கள். நாளை அவர்களுக்கு ஒரு சிக்கல் என்றாலும் அவர்களுடனேயே நான் நிலைகொள்வேன். அது அவர்களுக்கும் தெரியும். நம்பி என்னிடம் வரவும் செய்வார்கள்.அவர்களின் ஆக்கங்களை இலக்கியநோக்கில் மட்டுமே வாசிப்பேன்.

 

அதை எனக்கான நெறியாக கொள்கிறேன். அவ்வாறு என்னை அவர்களை விட மிகமேலே நிறுத்திக்கொள்கிறேன். ஏனென்றால் அங்கிருந்தபடித்தான் நான் விஷ்ணுபுரமோ கொற்றவையோ வெண்முரசோ எழுதமுடியும். சமீபத்தில் மலேசிய எழுத்தாளர் நவீன் ஒரு சோர்வுடன் பேசியபோதும் இதையே அவருக்குச் சொன்னேன்.

 

மனுஷ்யபுத்திரனிடமிருந்து நான் விலகியமைக்குக் காரணம் அவருக்கே தெரியும், விரிவாக அதை எழுதியிருக்கிறேன். அவ்வாறு விலகியபின் ஓரிரு மாதங்களிலேயே அவருடைய பதிப்பகத்தின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்தும் கொண்டேன்.அவருடன் நெருக்கமாக இருந்த , அவருடைய இதழின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த, எஸ்.ராமகிருஷ்ணன் விலகிச் சென்றபின் அவருக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தபோது அவரைப்பற்றி ஒரு சிறு குறிப்புகூட உயிர்மையில் வெளிவந்ததில்லை என்பதை நினைவுகூரவேண்டும். நான் வெளிவந்தபின் என்னைப்பற்றி உயிர்மை எழுதியது என்ன என்பதை நினைவுகூரவேண்டும்.

 

நான் அவருடைய கவிதை பற்றி ஒரு விமர்சனம் எழுதினேன். அது என் தளத்தில் உள்ளது ‘கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்’ அதில் நான் என்ன எழுதினேன் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம்.மனுஷ்யபுத்திரன் அவருடைய கவிதைகளில் அவரே உருவாக்கும் தன்னடையாளம் [அதாவது உடற்குறை கொண்ட ஆளுமை]  அவருடைய அரசியல் –சமூகவியல் நோக்கை எப்படி நேர்நிலையாக வடிவமைக்கிறது என்று ஆராய்கிறேன். அது அவரை புண்படுத்தியது – ஏன் என்றும் என்னால் சொல்ல முடியும். அது அவருடைய ரகசியப் பகுதியை தொடுவது.  அவர் உருவாக்கும் தன்னிரக்கம் என்னும் படைக்கலத்தை செயலிழக்கச் செய்வது. ஆனால் கவிதை வழியாக நாம்செல்வதே கவிஞனின் ரகசியங்களை நோக்கித்தான்.

 

அவர் அதை எவரிடமெல்லாம் எப்படியெல்லாம் பகிர்ந்துகொண்டார் என நான் அறிந்தேன் – என்னிடம் பகிர்ந்துகொள்ளவுமில்லை. அதற்குச் சாரு நிவேதிதா மேடையில் மிகையாக எதிர்வினையாற்றினார். நான் மனுஷ்யபுத்திரனிடம் சொன்னது ஒன்றே. அந்தக்கட்டுரை நுட்பமான ஒன்றைச் சொல்கிறது. கவிதை விவாதத்திற்குள் வருபவர்களுக்கே அது பிடிகிடைக்கும். அதை இப்படி மேடைவம்பாக ஆக்குவது பொருத்தமல்ல. எளிமையான அரசியல்சரிகளால் அதை புரிந்துகொள்ள முடியாது. சொல்லிச் சொல்லி தெளியவைக்கவேண்டியது அது.

 

அவர் அந்த மேடையில் இருந்தமையாலேயே, அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்தமையாலேயே, அவர் அதன் வெளியீட்டாளர் என்பதனாலேயே அவர் அதை ஏற்கிறார் என்றாகும். வெளியீட்டாளர் என்பவர் தன் நூலை நேர்மறையாக முன்வைக்கவேண்டிய பொறுப்பு கொண்டவர். அதை திரிப்பதை அவரே ஏற்பார் என்றால் அது அறமல்ல. நான் விலகிக்கொள்கிறேன். எந்த வன்மமும் அதில் இல்லை. அவர் என்னுடைய நூல்களை மேலும் பல ஆண்டுக்காலம் விற்றார்.

 

மனுஷ்யபுத்திரனின் கவிதைமேல் என் விமர்சனம் என்ன என்று நான் சொன்னதை இந்த தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். அதில் எங்கே வன்மம் இருக்கிறது? அது கூரிய விமர்சனம், அதை அவர் எனது மனநோய் என்கிறார். மேலும் என்னென்ன வசைகளை, இளக்காரங்களை, அவதூறுகளை கொட்டியிருக்கிறார் என்பதை உடனே சென்றுகூட எவரும் வாசிக்கலாம். அது அவருக்கு  அவர் என் மேல் கக்கும் வன்மம் என்றோ வசை என்றோ தெரியவில்லை. ஏனென்றால் அவர் தன்னை ‘பாதிக்கப்பட்டவர்’ என நிலைநிறுத்திக்கொள்கிறார்.

 

மனுஷ்யபுத்திரனின் பிரச்சினை இங்குதான் இருக்கிறது. அவர் சூழ இருப்பவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது முழுமையான பணிவை,  அதற்காக கையாள்வது அவர்களின் குற்றவுணர்வை, அவர் அவர்களுக்கு திரும்ப அளிப்பது உச்சகட்ட எதிர்மறை உணர்வுகளை. பெரும்பாலான எழுத்தாளர்கள் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.அவர் சோர்வு- எதிர்மறை உணர்வு ஆகியவை கொண்ட மனநிலையிலேயே பெரும்பாலும் இருப்பவர். குற்றவுணர்வில் திளைக்க விழைபவர்கள், சுயநலநோக்கு கொண்டவர்கள், கட்சிக்காரர்கள் மட்டுமே அவருடன் கொஞ்சகாலமேனும் நீடிக்க முடியும்.

 

இதையும்கூட அவர்மேல் கசப்புடன் சொல்லவில்லை – கவிஞர்கள் பலசமயம் அப்படித்தான். அவர் உருவாக்கும் ஒற்றைவரிகள் இன்று அவரைச் சூழ்ந்திருக்கும் இலக்கியவாசிப்பே இல்லாத கட்சிக்காரர்களின் மேற்கோள்களாக உடனடியாக ஆகிவிடுகின்றன. அவர்கள் இதையும் படிக்கப்போவதில்லை. அந்த மேற்கோள்களை வாசித்துவிட்டு என்னிடம் கேட்கும் சிலர் இருப்பார்கள், அவர்களுக்காக

 

ஜெ

 

முந்தைய கட்டுரைபாவம் மேரி
அடுத்த கட்டுரைஇளங்கனிவும் முதிர்கனிவும்