தேவதேவனுக்கு ஓர் இணையதளம்
தேவதேவன் ஒரு முறை சொன்னார், கவிதை என்பது என்ன? கவிஞன் எழுதுவது. உண்மையில் ஒரு தரிசனம் அது. கவிதை எழுத என்ன செய்யவேண்டும்? கவிஞனாக வேண்டும். கவிதை என்பது மொழியில் இல்லை. வடிவில் இல்லை. எந்தவிதமான பயிற்சியிலும் இல்லை. அது கவிஞனின் ஆளுமையில் உள்ளது. அவனிடம் இயல்பாக வெளிப்படுகிறது
தாகூரின் கவிதைகளின் மிகச்சிறந்த வெளிப்பாடுகள் அவருடைய பயணக்கட்டுரைகளில் உள்ளன என்பார்கள். இயல்பாக வெளிப்படும் கவித்துவம் அது. பலசமயம் அது கவிஞனின் வாழ்க்கையின் ஒரு சிறுதருணம் சற்றே திரும்பிக்கொண்டு அவன் யார் என நமக்கு காட்டுவதாக அமையும். சிலசமயம் அவனுடைய வாழ்க்கைப்பார்வையை நமக்குக் காட்டும். சிலசமயம் அவனுடைய அழகான அசட்டுத்தனத்தை காட்டலாம். அவனுடைய உவகையை துயரை தனிமையை காட்டலாம். எப்படியோ அவன் தன் வரிகளில் நிக்ழந்துவிட்டான் என்றால் அது கவிதை
ஆகவேதான் கவிதையை வாசிக்க ஒரு கவிஞனை தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறார்கள். தொகுப்புகளாக வாசிக்கவேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகள். அதனூடாக அவனை நாம் அணுக்கமாக அறிகிறோம். அவனுடைய வரிகள் நமக்கு அவனை நோக்கி வழிகளை வரைகின்றன.தனிவரிகளாக பொருட்படுத்த தக்கதல்லாத வரிகள் அவனை அறிந்தவாசகனுக்கு சிறந்த கவிதைகளாகின்றன
மேலைநாட்டில் கவிஞனின் வாழ்க்கையை விரிவாக எழுதி, அவன் கவிதைகளைப் பற்றிப் பேசிப்பேசி எல்லா வாசகர்களுக்கும் அந்த அணுக்கத்தை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் , தமிழில் , அது மிக அரிது. இதன் விளைவாக கவிதை வாசிப்பில் மிக முக்கியமான ஓரு குறுகல் நிகழகிறது.
கவிதை வாசிப்புக்கு பொருட்சூழல் [context ] மிக முக்கியமானது. அந்தக் கவிதையை எந்த சூழலில் பொருத்தி நாம் பொருள்கொள்கிறறோம் என்பதுதான் அது. உண்மையில் நாம் கவிதையை அக்கவிஞன் ஒட்டுமொத்தமாக தன் கவியுலகுக்குள் உருவாக்கும் பொருட்சூழலில் வைத்து பொருள்கொள்ளவேண்டும். ஆனால் தொடர்வாசிப்பு இல்லாதபோது எல்லா கவிதைக்கும் பொதுவான ஒரு பொருட்சூழல் உருவாகிவிடுகிறது. எல்லா கவிதைகளையும் அங்கே கொண்டுவைத்து நாம் வாசிக்கிறோம். அது பெரும்பாலும் நுட்பமான தனித்தன்மை கொண்ட கவிஞர்களின் படைப்புகளுக்கு குறைப்பட்ட வாசிப்பை அளிப்பதாகவே முடிகிறது.
இந்த வாசிப்பை நான் ‘அறுத்தடிப்புக் கள’ வாசிப்பு என்று வகைப்படுத்துவேன். பொதுஇட வாசிப்பு. தமிழில் இதன் முதன்மையான பலி அபி. அடுத்து தேவதேவன். தமிழில் நமக்கு கவிதையை அர்த்தப்படுத்தும் பொதுவான பொருட்சூழல்கள் சில உண்டு. காமம், காதல், தனிமை, இருத்தலின் பொருளின்மை, அமைப்புக்கு எதிரான கலகம், அபத்த தரிசனம், எதிர்ப்பரசியல்— அவ்வளவுதான். நம் கவிதைகளில் பெரிதாக ரசிக்கப்படுபவை இந்த பொதுவான மைதானப் பொருட்சூழலில் வைத்து பொருள்கொள்ள வசதியானவை, அவற்றில் நிலைகொள்பவை என்பதைக் காணலாம்
தேவதேவனின் ஒரு கவிதை நம் கையில் கிடைத்தால் மேலே சொன்ன பொருட்சூழலில் ஒன்றை எடுத்து அதன்மேல் போட்டு அதை ‘புரிந்து’ கொள்கிறோம். ஓரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறோம் அது தேவதேவனை எப்போதைக்குமாக மறைத்துவிடுகிறது. எந்த சிறந்த கவிஞனும் தன் காலகட்டத்தின் பொதுவான பொருட்சூழலில் நிலைகொள்பவன் அல்ல, தனக்கான பொருட்சூழலை உருவாக்கிக் கொள்பவன்.
’தேவதேவன்னா வீட்டு மொட்டைமாடி, குருவி என்று எழுதிக்கொண்டிருப்பவர்’ என்று ஒருவர் மேடையில் பேசக்கேட்டிருக்கிறேன். அது ஒரு கொச்சையான வாசிப்புதான். ஆனால் பலசமயம் சமகாலக் கவிதை வாசிப்பு அதே நிலையில்தான் உள்ளது. ஒவ்வொரு கவிஞரையும் வாசிக்க அவருக்குண்டான பொருட்சூழலை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. இங்கே கவிதை வாசிப்பவர்களில் கவிதைவிமர்சனம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு என்பது இவ்வாறு பொருட்சூழல் உருவாக்குவதற்கான தடைகளில் ஒன்று. இன்னொன்று, கவிதையை அழகியலனுபவமாக அணுகும் வாசிப்பு இங்கே குறைவு, கவிஞர்களை நோக்கிச் செல்லும் விமர்சகர்கள் மிகக்குறைவு என்பது
தேவதேவனின் புதிய கவிதைத்தொகுதி ‘பக்கத்தில்தான் இருக்கிறது வீடு’ ஒரு கவிஞனின் குறிப்பேடு போன்றது என்று சொல்லலாம். தமிழில் கவிதையை பொருட்சூழலில் நிறுத்த உதவும் முக்கியமான தொடக்கம் அதன் தலைப்பு. இவற்றுக்கு தலைப்புக்கள் இல்லை. இது கவிஞனின் உதிரிவரிகளின் தொகுப்பு மட்டுமே. அவை கவிதையாவது தேவதேவனை நோக்கி அவை செல்வதனால்தான்
மழைத்தளக் கற்கள்
தூறலை விழவிழ குடிக்கின்றன
குடித்து முடித்ததும் நனைகின்றன
நனைந்து முடித்ததும்
உச்சப்பெருங்களியில்
தன் மேனியெல்லாம்
ஓடவிட்டு மகிழ்கின்றன
என்னும் கவிதை தேவதேவனின் இயல்பான குழந்தைத்தனம் நோக்கிச் செல்கிறது. அவர் மொட்டைமாடியில் நின்று எதிர்மாடியை பார்த்து, மழையை நோக்கி மகிழும் காட்சி. இயல்பாக அவருடைய கற்பனையில் இறுதியில் மாடிவீடு மேனியெங்கும் மழை ஒழுக நடனமிடத் தொடங்கிவிடுகிறது.
இந்தவரிகளுக்கு என்ன பொருள் என்ற வினாவுக்கு உடனடியாக இடமில்லை. இது ஒரு காட்சி, ஒரு பரவசம். ஆனால் தேவதேவனைப் போன்ற ஒருவரின் காட்சியனுபவமே அவரில் என்றுமிருக்கும் தரிசனத்தையும் உள்ளடக்கியதுதான். குடித்து நிறைந்து நனைந்து ஊறி அது வழியவிடும் அந்த மழைநீர் ஒர் அகநிறை அனுபவம். ஒரு வாசிப்புக்காக அதை இசைகேட்கும் அனுபவம் என்று எண்ணிப்பாருங்கள். அப்படியே வேறு எந்த அக அனுபவத்திற்கும் அதை நீட்டலாமென்றும் உணர்வீர்கள்.
ஆங்கே ஒரு மரத்தடியில்
காற்றாட வந்தமர்ந்து
உரையாடிக்கொண்டிருக்கும்
அந்த இரு நண்பர்களின் பேச்சில்
வெயிலில் இருந்து வரும் காற்றும்
நிழலில் இருந்து வரும் காற்றும்
என்னும் கவிதை இயல்பாக படிமமாக ஆகவும் முடியும். வெயிலில் இருந்து ஒரு காற்று, நிழலில் இருந்து ஒரு காற்று. அந்த வெயிலும் நிழலும் அவர்களின் உரையாடலில் நிகழ்கின்றன. ஒரு வாசகன் அதை ஒரு காதலிணையின் உரையாடலாக எண்ணிக்கொள்ளவும் கூடும். உண்மையிலேயே நிழலில் அமர்கையில் இரு காற்றுகளும் மாறி மாறித் தழுவும் அனுபவம் விந்தையானது. சட்டென்று காற்றின் திசையும் வெம்மையும் மாறும்போது நம் உளநிலையும் மாறுவதை கானலாம்
குவளையில் ஓர் எறும்பு
அவன் பருகி முடித்ததில் திளைத்தபடி
என்னும் வரிகளில் பருகிமுடித்தது என்னும் வரி மேலும் வளர்கையில் நாம் தேவதேவனைச் சென்றடைகிறோம். பருகியதில் திளைக்கிறதா அந்த ஈ, அல்லது பருகபடாமல் எஞ்சுவதில் திளைக்கிறதா? அது எது? அந்த திளைப்பை அடைய எதை நாம் பருகவேண்டும்?
கூடி வாழ்பவர்களல்லர்
கூடிக்கூடி வாழ்பவர்கள்
என்றவரி முற்றிலும் வேறுபட்டது. கூடிக்கூடி என்ற சொல்லாட்சி கூடல் என்று பொருள்கொள்ளலாம். பிரிந்து மீண்டும் கூடி என்று பொருள்கொள்ளலாம். ஆனால் கூடியிருக்கச் சாத்தியமற்றவர்கள், கூடிக்கூடித் தவிப்பவர்கள் என்ற உளச்சித்திரத்தை உருவாக்கிவிடுகிறது இவ்வரி. இவ்வாறு வாசிக்கத்தக்க உதிரிவரிகளின் தொகுதி தேவதேவனை அணுகி விலகி அறிந்துகொண்டே ஊசலாட ஏற்றது
எனக்கு உத்வேகமும் மகிழ்ச்சியும் அளித்த கவிதை ஞாயிற்றுகிழமை மணம். சின்ன வயசில் அஜிதன் பள்ளியிலிருந்து வந்து மூக்கை நீட்டியபடி பாய்ந்து நுழைந்து ‘சூட்கேஸ் மணம் அடிக்கே, வீட்டுக்கு யார் வந்திருக்கா?” என்று கேட்பான். அந்த மணத்தை என்னால் உணரமுடிந்ததில்லை. ஆனால் கற்பனைசெய்ய முடிகிறது. ஞாயிற்றுக்கிழமை மணத்தை உணரும் இந்தக் குழந்தையையும் அணுக்கமாக அறிகிறேன்
ஆளில்லாத வேளை
மாடிவெளியில்
அவன் தாள்களை
புரட்டிப்புரட்டி
காற்று வாசிக்கிறது
என அவன் நினைத்திருந்தான்
அடித்துச் சென்றது அது
அவன் பிடிக்த்துவைக்க மறந்திருந்த
ஒரு காகிதத்தை
கைக்குழந்தையுடன்
மழையைப் பார்த்தபடி
வாசலில் வந்து நிற்கிறாள் பவானி
தான் காதலித்து போராடி
கல்யாணம் பண்ணி
குழந்தைபெற்று நிற்பது
எல்லாமே சரிதான் என்றுணர்ந்தவள்போல
விண்ணில் ஒரு பறத்தல்
மரக்கிளையில் ஓர் அமர்தல்
மண்ணில் கால் ஊன்றியபடி
ஒரு சிற்றுண்டி
நீர் பருகல்
அப்புறம் கீச் கீச் என்று இசைத்தபடி
கூட்டினையும் கூட்டை நல்கிய
பூமியையும்கூட
ஓர் அறை எனவே உதைத்துத் தாவியபடி
விண்வெளியில் ஒரு பறத்தல்
தென்னை மரத்திலிருந்து விழுந்த ஒரு தேங்காயை
எடுத்து வந்து அறையின் ஒரு மூலையில் வைத்திருந்தான்
இன்று திடீரென்று
அது அவனைத் தாக்கியது
தன்னந்தனியாய்
ஒரு பேச்சின்றி
அசைவின்றி
அது அந்த மூலையில்
அமர்ந்திருந்த விதமும்
அமைதியும்
இரவு முழுக்க பெய்த மழையில்
மிதந்து மிதந்து
எங்கோ வந்து சேர்ந்திருக்கிறது வீடு
நம்மைச் சூழ்ந்திருக்கிறது
இப்போர்வைக்குள்
நாம் உண்டாக்கிக்கொண்ட வெப்பம்
வாழ்வேனோ
தின்று மலங்கழித்து
வாழ்வதே வாழ்வென்று?
வாழ்வேனோ
சுவையுணரா வேகமும்
தாகமும் வாழ்வென்று?
சந்தோஷமாயிருக்கிறது
ஞாயிற்றுக்கிழமை மணத்துடன்
மனிதர்களை எங்கு பார்க்கையிலும்
எதன் நிழலில் நின்றபடி
எதன் வெயிலைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்?
கோழையும் அல்ல
வீரம் பொருந்தியவையும் அல்ல
சாதுவும் அல்ல
ஆத்திரம் கொண்டவையும் அல்ல
கொலைக்கத்திகளையே அறிந்திராத
குழந்தைகளும் அல்ல
சமையலறைக் கத்திகள்
முழுநிலா
அது உதித்த நேரமும் தெரியாது
மறைந்த நேரமும் தெரியாது
இருந்த நேரமும் தெரியாது
இதோ
அது இல்லாத நேரமும் தெரியவில்லை.
பக்கத்தில்தான் இருக்கிறது வீடு, தேவதேவன் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
———————————————————————————————————————————————————————