வைக்கம், மன்னத்து பத்மநாபன்

 

மன்னத்து பத்மநாபன்

வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

 

அன்புள்ள ஜெ,

 

ஓர் ஐயம். நிர்மால்யா மொழியாக்கம் செய்த அய்யன்காளி நூலின் பின்னடைவில் தலித்துக்களுக்காக போரிட்ட முன்னோடித் தலைவர்களின் பட்டியலில் மன்னத்து பத்மநாபனின் பெயரும் உள்ளது.அவர் கேரளத்தின் உயர்சாதியினரான நாயர்களின் சாதிக்கூட்டமைப்பான என்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கியவர் [நாயர் சர்வீஸ் சொசைட்டி].

 

பின்னர் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் இணையப்பக்கத்தில் மன்னத்துப் பத்மநாபன் தீண்டாமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் ஆலயபிரவேசம் ஆகியவற்றை வலியுறுத்தி மிக நீண்ட நடைபயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அந்த மாபெரும் பயணமே வைக்கம் போராட்டம் வெற்றிகரமாக முடிய வழிவகுத்தது என்றும் பார்த்தேன்.

 

ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாயர் சாதிக்கூட்டமைப்பின் மனநிலை அன்று உண்மையில் அவ்வாறுதான் இருந்ததா என அறிய விரும்புகிறேன்

 

செந்தில்குமார்

 

அன்புள்ள செந்தில்,

 

நான் காந்தியும் வைக்கம்போராட்டமும் என்னும் கட்டுரையிலேயே இதை விரிவாக எழுதியிருக்கிறேன். மீண்டும் மூன்றுமுறை எழுதியிருக்கிறேன். வைக்கம் போராட்டத்தின் தொடக்கம் நாராயணகுருவின் மாணவரான டி.கே.மாதவனிடம். அதை வடிவமைத்து முன்னெடுத்தவர் காந்தி. நடத்தியது கேரளக் காங்கிரஸ் கட்சி – அதன் அன்றைய தலைவர்களான கே.பி.கேசவமேனன், கேளப்பன் போன்றவர்கள். அதன் வழியாக தலைவர்களாக உயர்ந்து வந்தவர்கள் ஏ.கே.கோபாலன் போன்றவர்கள்.

 

அதில் பங்கெடுத்தவர்களில் ஒருவர்தான் ஈவேரா. அவர் அதை தொடங்கி நடத்தி வெற்றிபெற்று உரிமைகளை  ’வாங்கிக்கொடுத்தார்’ என்பது இங்கே மீளமீளச் சொல்லப்படும் பொய். எந்த ஆதாரத்தையும் பொருட்படுத்தாத மூர்க்கமான வரலாற்றுத் திரிப்பு. அதற்கு அடிப்படையாக இருப்பது இப்போது ‘நாங்கள் போட்ட பிச்சை’ என்கிறார்களே அந்த சாதிய மனநிலை.

 

வைக்கம் போராட்டத்தை ஒரு பிரச்சார இயக்கமாகவே காந்தி வடிவமைத்தார். அது தொடங்கும்போது ஆலயநுழைவு மட்டுமே பிரச்சினையாக கருதப்பட்டது. நாராயணகுரு போன்றவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அப்போராட்டம் வலுப்பெற்று, நூற்றுக்கணக்கான கூட்டங்கள் பொதுநிகழ்வுகள் வழியாக அதன் உள்ளடக்கமான தீண்டாமை ஒழிப்பு, அடிப்படை மனித உரிமை கோரிக்கை ஆகியவை மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டன. எதிர்த்தவர்களிலேயே ஆதரவாளர்கள் உருவாகி வந்தனர். கேரளத்தின் முக்கியமான நாளிதழ்களில் இரண்டு வைக்கம் போராட்டத்தை ஒட்டி உருவாகி வந்தவை.

 

ஆரம்பத்தில் பழைமைவாத நோக்கு கொண்ட நாயர்கள் அய்யயன்காளி தொடங்கிய தாழ்த்தப்பட்டோர் கல்வி முதலிய கோரிக்கைகளுக்கு எதிராகவே இருந்தார்கள். ஆனால் அப்போதே அவர்களில் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களும் இருந்தனர். கேரளத்தின் முதல் ஜனநாயக நடவடிக்கை என்று சொல்லப்படுவது  1891ல் 10028 பேர் கையெழுத்திட்டு மகாராஜாவுக்கு அளித்த மாபெரும் கோரிக்கை மனுவாகிய மலையாளி மெமோரியல். அது உள்ளூர் உயர்சாதியினரின் நலம்நாடும் மைய நோக்கம் கொண்டது. ஆயினும் அதில் அனைத்து மக்களுக்கும் கல்வியுரிமைதேவை என்பதுபோன்ற கோரிக்கைகளை சேர்ப்பதில் அதற்குள் இருந்த முற்போக்கானவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். அவர்களை நம்பியே அய்யன்காளியின் இயக்கம் நடைபெற்றது.

 

வைக்கம் போராட்டம் உருவாக்கிய விழிப்புணர்வின் வெற்றிகரமான பகுதி என்பது மன்னத்து பத்மநாபன் வைக்கம் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்டதும் அதில் பங்கெடுத்ததும்தான். சங்கனாச்சேரி அருகே பெருந்ந என்னும் சிற்றூரில் 1878ல் பிறந்தவர் மன்னத்து பத்மநாபன். ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார் பின்னர் வழக்கறிஞரானார். 1914 ல் நாயர் சர்வீஸ் சொசைட்டியை தொடங்கினார். அப்போது அவருக்கு 36 வயது. ஆனால் அந்த இயக்கம் மிக விரைவிலேயே ஒரு வெகுஜன இயக்கமாக வளர்ந்தது. அதற்கான சமூகத்தேவை அன்று இருந்தது. நாயர் குடும்பங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி அழிந்துகொண்டிருந்த காலம் அது. என்.எஸ்.எஸ் முன்வைத்த சீர்திருத்தங்கள் அவர்கள் பொருளியல் மேம்பாடு அடைய உதவின.

 

உதாரணமாக திருமணம் தவிர்த்த சடங்குகளை பெரிய விழாவாகக் கொண்டாடுவதை முற்றாகத் தவிர்க்கவும், எவராக இருந்தாலும் திருமணத்தை குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக்குள் மட்டும் விருந்தினர்  பங்கெடுக்கும்படித்தான் நடத்தவேண்டும் என்றும் 2 சொன்னது மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நாயர் குடும்பங்களுக்கு இடையே வரலாற்றின் நீட்சியாக பல தலைமுறைகளாக நீடித்துவந்த குடிப்பகை என்னும் பழிக்குப்பழி மரபை தீர்த்துவைத்தார். ஆகவே அவர் கேரளத்தின் முக்கியமான மக்கள்தலைவராக அன்று விளங்கினார்.

 

வைக்கம் போராட்டம் வழியாக மன்னத்து பத்மநாபன் காந்தியால் ஈர்க்கப்பட்டார். காந்திய நோக்கை ஏற்று தேசியவாதியாக ஆனார். தனது குடும்ப கோயில்களை அனைவருக்குமாக திறந்தார். அதன் தொடர்ச்சியாகவே 1924 நவம்பர் 1 ஆம் தேதி ல் ஸவர்ண ஜாதா [உயர்சாதியினரின் ஊர்வலம்] என பின்னர் அழைக்கப்பட்ட மாபெரும் பிரச்சார நடைப்பயணத்தைத் தொடங்கினார். அது அன்று மலையாளி ஜாதா என்றே சொல்லப்பட்டது

 

வைக்கத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை அந்தப் பயணம் நீண்டது.நவம்பர் 11 அன்று அது திருவனந்தபுரத்தை அடைந்தது. இன்னொரு கிளை நாகர்கோயில் கோட்டாற்றில் இருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து திருவனந்தபுரம் வரை சென்றது தொடக்கத்திலேயே அதில் ஏராளமானவர்கள் பங்கெடுத்தனர். நாயர்கள், வேளாளர்கள் பிராமணர்கள். ஆனால் பெரும்பகுதியினர் என்.எஸ்.எஸ் கிளைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நாயர்களே. செல்லச்செல்ல பெருகி அது கேரள ரலாற்றின் முதல் மாபெரும் மக்கள் அணிவகுப்பாக ஆகியது.

 

அந்த நடைபயணம் நாயர்களின் உள்ளத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.  ஆனால் நாயர்களிலும் பிராமணர்களிலும் ஏராளமான பழைமைவாதிகளும் அன்று இருந்தனர் என்பதையும் மறுக்க முடியாது. வைக்கம் செல்வதற்கு முன்பு வற்கலா சென்று நாராயணகுருவை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றபின் மன்னத்து பத்மநாபன் வைக்கம் சென்று சேர்ந்தார். அதுவும் அன்று மிகப்பெரிய குறியீடு. அனைத்துச் சாதியினரும் ஆலயத்திற்குள் நிகராக நுழையவேண்டும் என்றும் அனைவருக்கும் இணையான ஜனநாயக உரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்றும் கோரினார். அக்கோரிக்கை அரசருக்கு முறைப்படி அளிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து நாராயணகுருவும் அவருடைய மாபெரும் மக்கள் இயக்கமான எஸ்.என்.டி.பியும் களத்தில் இறங்கியது. கிட்டத்தட்ட வைக்கம் போராட்டம் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டது. அரசரின் அறிவிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அதிகாரிகளின் எதிர்ப்பு எஞ்சியிருந்தது. காந்தியின் கோரிக்கைக்கு ஏற்ப காப்டன் பிட் அதிகாரிகளின் சார்பில் தன் ஏற்பை தெரிவிக்க போராட்டம் வென்றது. ஆலயப்பிரவேசம் அரசரால் அறிவிக்கப்பட்டது.

 

அதன்பின் குருவாயூர் உட்பட பிற ஆலயங்களில் ஆலயநுழைவுப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அனைத்து போராட்டங்களையும் மன்னத்து பத்மநாபன் ஆதரித்தார். அய்யன்காளியிடம் மிக அணுக்கமானவராக இருந்தார். தலித் கல்வியில் ஈடுபாடு காட்டிய மன்னத்து பத்மநாபன் என்.எஸ்.எஸ் தொடங்கிய எல்லா பள்ளிகளிலும் தலித் மாணவர்களுக்கு இடம் அளித்தார்.

 

மன்னத்து பத்மநாபன் கேரளத்தின் முக்கியமான அரசியல் தலைவர். காங்கிரஸ்காரராக திருவிதாங்கூரின் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் உறுதியான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர். 1956ல் ஈ.எம்.எஸ் அமைத்த முதல் கம்யூனிஸ்டு அமைச்சரவைக்கு எதிரான விமோசன சமரம் என்னும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து கேரள காங்கிரஸ் என்னும் கட்சியை பின்னாளில் உருவாக்கினார்.மன்னத்து பத்மநாபனின் முற்போக்கான அணுகுமுறை அடுத்த ஐம்பதாண்டுகளில் இந்திய ஜனநாயகத்தின் அதிகார அரசியல் பூசல்களில் காணாமலாயிற்று. அவர் வழக்கமான அரசியல்வாதியாக ஆனார்.

 

என்.எஸ்.எஸ் இயக்கம் இன்று ஒரு முற்போக்கான இயக்கம் அல்ல. அது வழக்கமான சாதிச்சங்கம்தான். ஏறத்தாழ 6000 கிளைகள் கொண்டது.ஐந்தாயிரம் மகளிர் குழுக்கள் நான்காயிரம் மாணவர் குழுக்கள் கொண்டது. ஏராளமான பள்ளிகள் கல்லூரிகளை நடத்துவது. குமரிமாவட்டத்தில் மட்டும் மூன்று கல்லூரிகள்.  பெரும் சொத்துக்கள் கொண்டது. இன்று அது காங்கிரஸ் கட்சிக்கு அணுக்கமான ஓர் வலதுசாரி அமைப்பு. என்.எஸ்.எஸ்ஸின் அடுத்த தலைவர் கிடங்கூர் கோபால கிருஷ்ணபிள்ளை காலகட்டத்திலேயே அது வலதுசாரி, சாதிச்சங்கமாக ஆகிவிட்டது.

 

வரலாறு எப்போதும் எளிமையான ஒற்றைச் சூத்திரங்களால் ஆனது அல்ல. ஒர் உயர்சாதிச் சங்கம் எப்படி சாதியொழிப்புக்கான இயக்கத்தை நடத்த முடியும் என்றால் அது நடந்திருக்கிறது, நடக்க முடியும் என்பதே பதில். வைக்கம் போராட்டம் அடைந்த வெற்றி அது. காந்தியின் வெற்றி. அப்படி பல ஆளுமைகளை வைக்கம் போராட்டம் உருவாக்கியது.

 

ஆனால் நாம் வைக்கம் என்பது ஈவேரா நடத்திய போராட்டம் என ஐம்பதாண்டுகளாக பிரச்சாரம் செய்து, நம்பி, ஆவேசமாக வாதிட்டு வருகிறோம். .எண்ணிப்பாருங்கள், 1925 ல் வைக்கம்போராட்டத்தின் பொருட்டு இத்தனை நீண்ட ஒரு மக்கள்பயணத்தை நடத்தியவரின் பங்களிப்பு பெரிதா, அல்லது தனியாக அங்கே சென்று சில மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டவரின் பங்களிப்பு பெரிதா?

வைக்கத்தில் உள்ள மன்னத்து பத்மநாபனின் சிலை

வைக்கம் போராட்டம் கேரளப் பண்பாட்டின் ஒரு பெரிய பண்பாட்டு மறுமலர்ச்சிக் காலகட்டம். அதன் படிநிலைகள் பல. அதன் வழிகாட்டி காந்தி. டி.கே.மாதவன், நாராயணகுரு, அய்யன் காளி, மன்னத்து பத்மநாபன் என அதன் நாயகர்கள் பலர். ஆகவேதான் அதில் சிலமாதங்கள் பங்கெடுத்த ஒருவரை மட்டும் அதன் நாயகனாக சொல்லாதீர்கள், அவர் தொடங்கி- நடத்தி -வென்ற போராட்டம் அது என்று சொல்லாதீர்கள், அங்கே தலைவர்கள் இல்லாததனால் ஈவேராவை அழைத்தார்கள் என புளுகாதீர்கள், அங்கே உரிமைகளை பெற்றுத்தந்தவர் ஈவேரா என திரிக்காதீர்கள் என்கிறேன்.

 

இன்னொரு பண்பாட்டின் மக்களியக்கத்தை அப்படிச் சிறுமைப்படுத்துவது மாபெரும் வரலாற்று இழிவு என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஓர் அப்பட்டமான உண்மையை சொல்லி நிறுவ இத்தனை அக்கப்போரா என்ற எண்ணம் சோர்வுறச் செய்கிறது. இதை தொடங்கியிராவிட்டால் இத்தனை ஆண்டுகள் இதைச் சொல்லிக்கொண்டே இருந்திருக்க மாட்டேன்

 

ஜெ

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

பெரியார்மதம்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

சந்திரசேகரரும் ஈவேராவும்

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

நம் நாயகர்களின் கதைகள்

வைக்கமும் ஈவேராவும்

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-10
அடுத்த கட்டுரைஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது