வரையறுத்து மீறிச்செல்லுதல்

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,

 

சலிப்பும், இயலாமையும் கொந்தளிப்பும் உந்தும் மனநிலையில் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

 

நேற்று திடீரென மனதில் தோன்றியது, “ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது நம்மை காத்து பரிபாலிக்கிறது நமக்கு நடந்தவையெல்லாம் நன்மைக்காகவே, ஒருவேளை இன்று அது புரியாமல் இருக்கலாம் ஆனால் காலம் அதை புரியவைக்கும் – என எண்ணும் போக்கு உண்மையல்லாமல் இருக்குமானால் என்ன செய்வது? என்னை வழிநடத்தும் கடவுள் – என்பது எத்தனை ஆணவம்..” என்று.

 

என் வரையில் அது சரிதான் என்று இன்றைய நிலையில் உணர்கிறேன் ஜெ. இதுவரை நான் கற்றுக்கொண்டவை மற்றும் புரிந்துகொண்டவை என சிலவற்றை சென்ற வாரம் எழுதினேன். அவை,

 

பொன்விதிகள் பனிரெண்டு:

 

 1. எல்லோரும் எந்நிலையிலும் சமமல்ல.
 2. வாழ்வு அனைவருக்கும் சமமானது.
 3. உழைப்பிற்கேற்ற உயர்வு மட்டுமே இங்கு விதி.
 4. உழைப்பு திருடப்படுவதும், உயர்வு மறுக்கப்படுவதும் பொதுவான உண்மைகள்.
 5. அன்பு, நட்பு, காதல் என்பவையெல்லாம் பிறரை உபயோகப்படுத்துவதற்காக மட்டுமே உபயோகப்படுத்தப்படுகின்றன.
 6. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை.
 7. எதிர்மறை கருத்துக்களுக்கே வலிமை மிகுதி.
 8. மனித மனம் தீமையை அடிப்படையாகக்கொண்டே செயல்படுகிறது.
 9. நேர்மை, நீதி, கடவுள் அனைத்தும் தேவைக்கேற்றபடி உபயோகப்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை.
 10. இன்னும் இங்கு விலங்கு வாழ்க்கைதான் உள்ளது.
 11. உடல் குழி பறிக்கும் நண்பன்,
 12. கற்பிக்கப்பட்டவையும், கற்றுக்கொண்டவையும் முற்றுண்மைகள் அல்ல, வெறும்  பார்வைகள் மட்டுமே.

 

இந்த விதிகளை மீண்டும் பார்த்தபோது உங்கள் எழுத்துக்களின் தாக்கம் என் மீது ஆதிக்கம் செலுத்தியிருப்பதை உணரமுடிந்தது. இன்னும் சொல்லப்போனால் எல்லாமே நீங்கள் சொன்னவைதான் ஆசானே. இவற்றில் எதிர்மறை உணர்வுகளோ அல்லது விரக்தியான பார்வையோ இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. இதன் அடுத்த பரிணாமம்தான் கடவுள் நம்மை வழிநடத்துகிறார்; யோசனை சொல்கிறார்; அல்லது எனக்கு அவர் அருள் இருக்கிறது; எத்தனை தோற்றாலும் அது அவர் நோக்கம், எனவே அழாதே…எழு, ஓடு,இறுதியில் வெல்வாய்…..என்பதுபோன்ற சுயவசியம் அல்லது சுய ஏமாற்று. 99.99% இந்த ஒரு அறிவுரையை மட்டுமே சொல்லிச்சொல்லி இத்தனைநாள் ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அயற்சியாக இருக்கிறது.

 

ஆனால் ஒன்றுமட்டும் புரியவில்லை ஆசானே. அறிவின்பாற்பட்டு சிந்திக்கும்போது பொட்டிலடித்தாற்போல தெரிகின்ற பல முடிவுகளை மனதைக்கொண்டு தள்ளிவைத்து அதற்கு நேரெதிராக முடிவெடுக்கும் முட்டாள்தனம் ஏன் என்னால் திரும்பத்திரும்ப செய்யப்பட்டது என்பது. தன்முனைப்பு என்பது ஆணவமாக மட்டுமின்றி கழிவிரக்கமாகவும், கையறு நிலையாகவும் வெளிப்பட்டு என்னால் நேர்மையாக, தூய்மையாக கற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்கிறேன்.

 

வெண்முரசில் சுதமர் இறுதியாக ‘மீண்டும் அஸ்தினபுரிக்கு’ என்று சொல்வதை  புரிந்துகொள்ள முடிகிறது. மகிழ்ச்சி என்று கருதுவதாலேயே அது ஒரு கருத்தாக மாறிவிடுகிறது என்று உணர்கிறேன். அதன்பின் அதுவும் ஒரு பார்வையே, முற்றுண்மை அல்ல, இல்லையா?!

 

வாழ்க்கை ஒரு நிகழ்தகவு என்று காண்கையில் இங்கு நிகழ்வனவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு பெரிய Maze க்குள் நுழைந்து வெளிவர முயற்சிப்பதுபோல இதை பார்க்கிறேன். ஆனால் என்ன – இது ஒரு முப்பரிணாம புதிர்ப்பாதை. எல்லாத்திசைகளிலும் நீளும் பாதை. ஒரே ஒரு விதி – வந்தவழியே திரும்பமுடியாது – காலம். என்னை மட்டும் என் தேர்வுகளை மட்டும் கணக்கில் கொள்ளும்போது இருக்கும் குறைவான வாய்ப்புகள், என்வாழ்வில் குறுக்கிடும் அல்லது உடன்வரும் பிற மனிதர்களையும் சேர்க்கும்போது கோடிகளில் சென்று முட்டும் வாய்ப்பு உள்ளது இல்லையா?!. கணித அடிப்படையில் அந்தத் தேர்வுகளையும் அதன் விடைகளையும் குறைந்தபட்சம் ஊகிக்கமுடியும் அல்லவா?!(ஜாதகம்?!!) அப்படி ஊகித்தாலும் இந்தமுடிவிலாப் புதிர்வெளி தன்னைத்தானே புரட்டிப்போட்டு, நம்மையும் புரட்டிப்போட்டு ஆட ஆட சலிக்காத ஒரு ஆட்டத்தை வழங்குமல்லவா! ஆடுவது மட்டுமே என்னால் செய்யக்கூடியது – சரிதானே?

 

பொதுவில் இந்த Maze ல் எந்த வாழ்விற்கும் பெரியதொரு அர்த்தமோ உபயோகமோ இல்லையல்லவா!! (எந்த அளவு புனைவு கலந்திருந்தாலும் அம்மையப்பம் கிறுக்கனாசாரி போன்ற வாழ்வை நினைக்கும்போது பேரச்சம் வருகிறது. அதேசமயம் லங்காதகனம் அனந்தன் ஆசான் போன்ற வாழ்க்கை ஒரு புதிய வெளிச்சத்தையும் தருகிறது.)

 

நீங்கள் ஒருமுறை சொல்லியிருந்தீர்கள் “இரக்கமற்ற பார்வை…ஆனால் கசப்பில்லாதது….” அதுபோன்ற பார்வை எனக்கும் அமையவேண்டும் என விரும்புகின்றேன். தன்னளவில் நிறைவு, நிறைவு தரும் வாழ்க்கை – சுதர்மம். இது மட்டுமே உண்மை என்று உணர்கிறேன் ஜெ.

 

சிந்திக்க கற்றுக்கொடுத்ததற்காகவும், சிந்தனைகளில் உடன்வருவதற்காகவும் நன்றிகள்.

அன்புடன்,

பிரபு செல்வநாயகம்

 

அன்புள்ள பிரபு

 

இலக்கியம் சிந்தனைகளை அளிப்பதில்லை. சிந்திப்பதைத்தான் அளிக்கிறது. நீங்கள் இப்படி உங்கள் வாழ்க்கை சார்ந்த சிலவற்றை வகுத்துக் கொள்கிறீர்கள். இதற்கு இன்றைய வாழ்வனுபவம் அடிப்படையாகிறது. இலக்கிய வாசிப்பு கருவியாகிறது. ஆனால் இந்த முடிவுகள், தெளிவுகள் எல்லாமே காலத்தால் பின்னகரும். பழங்கதையாகும். இன்னொரு அறியா இடத்தில் சென்று நின்று இதை திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்

 

எனில் இவற்றுக்கு என்ன பயன்? இச்சிந்தனைகள் வெறும் உள்ளத்துழாவல்கள் மட்டும்தானா? நாம் அனைவருமே வெவ்வேறு வாழ்க்கைச்சந்தர்ப்பங்களில் இப்படி யோசிக்கிறோம். யோசனைகளை தொகுத்துக்கொள்கிறோம். இவை மாயைகளா?

 

அல்ல, இந்தச் சட்டகம்தான் உண்மையான அறிவு. இப்படி விலகிநின்று நோக்க,  பகுக்க, தொகுக்க, மொழிவடிவாக்கிக் கொள்ள உங்களால் முடிகிறது அல்லவா? அதுதான் இலக்கிய வாசிப்பின் பயன். இப்படி தொகுத்து சொல்வடிவாக்கும்போதே நாம் புரிதல்களில் முன்னகர்கிறோம். இப்படி சொன்னதுமே சொல்லப்பட்டதைக் கடந்து விட்டிருக்கிறோம். திரும்பி நோக்கித்தான் இதை எழுதுகிறோம். மேலே செல்லவிருக்கிறோம்.

 

இலக்கியவாசிப்பு எதை அளிக்கும்? இலக்கியவாசிப்பு நிதானத்தை வாழ்க்கையில் வெற்றியை அளிக்குமா? இல்லை என்றே சொல்வேன். அது மேலும் பெரிய வாழ்க்கையை அளிக்கிறது. ஆகவே மேலும் அலைக்கழிதலையும் மேலும் சவால்களையுமே சந்திக்கிறோம். நிதானமான வெற்றிகரமான பலர் மிகக்குறைவான வாழ்க்கைப்புலம் கொண்டவர்கள். உள்ளங்கை வட்ட வாழ்க்கை. அதற்குள் அவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.

 

அந்த வெற்றி நுண்ணுணர்வாளர்களுக்கு உரியது அல்ல. அவர்கள் தங்கள் இயல்பான நுண்ணுணர்வாலேயே சிறிய வட்டத்திற்குள் நின்றிருக்க முடியாதவர்கள்.மேலும் பெரிய வாழ்க்கையைக் கோருபவர்கள். நுண்ணுணர்வுகொண்டவர்கள் மேலும் பெரியவாழ்க்கையை அடையாதுபோகும்போதுதான் உடைந்து குடிகாரர்களாக, மனநோயாளிகளாக ஆகிறார்கள். இலக்கியம் மேலும் பெரிய வாழ்க்கையை உருவாக்கி அளிக்கிறது. அதில் திளைப்பவர்களுக்கு அனுபவங்கள் பலமடங்கு. ஆகவே பரவசங்கள், திளைத்தல்கள், அருங்கணங்கள் , கண்டடைதல்கள் பலமடங்கு. அவன் ஆளுமையும் பலமடங்கு பெரியது.

 

நான் எப்போதும் சொல்வதுதான் , ஒருவாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவனே வாழ்வை பொருள்கொள்ளச் செய்பவன். மெய்யாக வென்றவன் அவன். ஆனால் அவனுக்கு அறைகூவல்கள் மிகுதி. ஆகவே சோர்வும் கொந்தளிப்பும் மிகுதி. அவன் தன்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனையினூடாக நிகழவேண்டும். உங்கள் குறிப்பை அப்படித்தான் பார்க்கிறேன்

 

ஜெ

முந்தைய கட்டுரைஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-15