அத்தர் மணம்- ராம்குமாரின் அகதி- மயிலாடுதுறை பிரபு

ராம்குமார்

உருவாகி நிலைபெற்றிருக்கும் வடிவப் பிரக்ஞையும் எழுத்தாளனின் கட்டற்ற படைப்பூக்கமும் இணையும் புள்ளியில் ஒரு புதிய படைப்பொன்று சூழல் முன் தன்னை அறிவித்த வண்ணம் உள்நுழைகிறது. முன்னோடிகளின் சாதனைகள் ஆல் போல் தழைத்திருக்கும் வெளியில் ஒரு புதிய எழுத்தாளன் அருகென வேரூன்றத் தொடங்குகிறான். ரோஜாவின் தனித்துவமான அத்தர் மணத்துடன் தமிழ்ப் படைப்புலகுக்குள் காலடி வைக்கிறது ராம்குமாரின் ‘’அகதி’’ சிறுகதைத் தொகுப்பு.

ராம்குமார் அசோகமித்திரனை தனது ஆதர்சம் என்று சொல்கிறார். எனினும் அவரது அழகியல் அவரை தி.ஜானகிராமனின் கதைகளுக்கும் வண்ணதாசன் கதைகளுக்கும் அருகில் கொண்டு செல்கிறது. சமூகச் சூழலிற்கு கட்டுப்பட்ட – பெரிய கனவுகளோ அல்லது பெரும் விழைவுகளோ இல்லாத மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கி அவர்களை முகாந்திரமாய் அல்லது இலக்காய்க் கொண்டு கடவுளோ ஊழோ அதிகாரமோ நிகழ்த்தும் தற்செயலான அல்லது திட்டமிட்ட ஆடலை எழுதிப் பார்த்தவர் அசோகமித்திரன். அதன் மூலம் வாழ்க்கையை இயக்கும் இரக்கமற்ற பெருவிசைகளின் பேருருவையும் அப்பேருருவை எதிர்கொள்ளும் சாதாரண மனிதனின் கையறு நிலையையும் அபத்தத்தையும் தன் கலையாக முன்வைத்தவர் அசோகமித்திரன். மாற்றமில்லாத எளிய மானுட வாழ்க்கைக்குள் சிக்கியவர்கள் எனினும் அனாதி காலமாக மானுடனை இயக்கிய ஆதி இச்சைகளை அபூர்வமான ஒரு கணத்தில் இல்லாமல் ஆக்கி மனிதன் ஆகாயமென உயர்ந்து நிற்கும் மானுட விழுமியங்களின் கணத்தை தன் சிறுகதைகளில் எழுதிப் பார்த்தவர் தி. ஜானகிராமன். ராம்குமாரின் படைப்புலகம் இந்த இரு ஆசான்களின் உலகுக்கும் நெருக்கமாக இருக்கிறது.

ராம்குமார் கலைஞனுக்குரிய கூரிய பார்வையுடன் நிகழும் மானுட நாடகத்தைக் காண்கிறார். அந்நாடகத்தையே அவர் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். அவர் படைப்பில் சாமானியர்கள் இருக்கிறார்கள்- சாமானியத் தன்மையின் எல்லையைக் கண்டவர்கள் இருக்கிறார்கள்- சாமானிய எல்லைக்குள் பலியானவர்கள் இருக்கிறார்கள்-பலியாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்-இந்த எல்லைகள் ஏதுமின்றி இவற்றுக்கு அப்பால் எழுந்து மணம் பரப்பும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனின் முதல் தொகுதியாக ‘’அகதி’’ தமிழின் முக்கியமான வரவு என்பதில் ஐயமில்லை.

 

மயிலாடுதுறை பிரபு

முந்தைய கட்டுரைஅக்ஷயபாத்திரம் உணவு
அடுத்த கட்டுரைமேலாண்மை,வம்புகள்- கடிதங்கள்