தன்னந்தனிப்பாதை -கடிதங்கள்

தன்னந்தனிப்பாதை

அன்புள்ள ஜெ,

மலையாள மனோரமா இதழில் நீங்கள் இனிமேல் கேரளத்தில் பேசப்போவதில்லை என்று சொன்னது செய்தியாக வெளிவந்திருந்தது. அதை வாசித்த பின்னர்தான் உங்கள் தளத்தில் தன்னந்தனிப்பாதையை வாசித்தேன். அந்நிகழ்வு வருத்தம் தருவதுதான். ஆனால் அடிக்கடி நடக்கிறது.

நீங்கள் என்னிடம் போனில் சொன்னதுபோல கேரளத்தில் மாலை ஆறுமணிக்குமேல் பெரும்பாலும் எல்லாருமே போதையில்தான் இருக்கிறார்கள். ஆகவே அங்கே இலக்கியக்கூட்டங்கள் எல்லாமே ஒரு மாதிரித்தான் இருக்கின்றன. பலகூட்டங்களில் தண்ணியடித்துவிட்டு வந்து கொழகொழவென்று பேசிக்கொண்டே இருப்பது மிகச்சாதாரணம்.

ஒட்டுமொத்தமாகவே ஒரு வீழ்ச்சி இன்று கேரளத்தில் உள்ளது. ஒருவகையில் உங்கள் முடிவு நல்லதுதான். ஆனால் வருத்தமாகவும் உள்ளது

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ

தன்னந்தனிப்பாதை கட்டுரையில் அந்த நிகழ்ச்சியை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். நானே கடைசிவரை அந்தக்கட்டுரை ஒரு எளிமையான பயணக்குறிப்பு என்றுதான் நினைத்தேன் நீங்களும் கல்பற்றா நாராயணனும் ஒருவருக்கொருவர் மட்டுமாகப் பேசிக்கொண்ட அந்நிகழ்ச்சி ஒரு அசாதாரணமான இலக்கிய சம்பவம். பிற்காலத்தில் நீங்களே ஆச்சரியமாக நினைத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்

இலக்கியம்பேச இரண்டுபேர் போதுமே என்ற எண்ணம்தான் எனக்கும் ஏற்பட்டது. பலசமயம் பலநூறுபேர் அமர்ந்து ஆர்ப்பரிக்கிற நிகழ்ச்சிகளைக் கண்டால் ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது

எஸ்.செந்தில்

***

முந்தைய கட்டுரைகதைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைஎவருடன் என்ன பகை?