தனிமைக்கரை – கடிதங்கள்

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

தனிமையின் முடிவில்லாத கரையில்…

அன்புள்ள ஜெ,

தனிமையின் முடிவில்லாத கரையில் மீண்டுமொரு ‘மல்டிமீடியா’ கட்டுரை. புகைப்படங்கள், இலக்கியக்குறிப்புகள், பாடல், சினிமா எல்லாம் கலந்து ஒரு முழுமையான அனுபவம். எனக்கு பஷீர் எப்போதுமே முக்கியமான எழுத்தாளர். பஷீரிடம் எது முக்கியமாக இருக்கிறது? எளிமை என்று முதலில் சொல்லலாம். ஆழமான எளிமை என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது மிக எளிமையாகச் சொல்லப்படும் விஷயங்கள். ஆனால் எல்லாமே மேலும் மேலும் ஆழமானவை. உதாரணமாக இந்த சினிமாவிலேயே மதிலுகள் சினிமாவில் வரும் காட்சி வருகிறது. இருவருக்கும் நடுவே அந்த மதில் இருக்கிறது. அந்த சினிமா முழுக்க அந்த மதில் இருக்கிறது. சாவு- வாழ்க்கை என்ற மதி. காலத்தின் மதில்.

அந்தப்படத்தில் ஓர் இடத்தில் இளைஞனான பஷீர் இளங்கன்னியாக பேயாக இருக்கும் பார்கவியின் பழைய தோழிகளைப் பார்க்கச் செல்கிறார். எல்லாரும் கிழவிகளாக இருக்கிறார்கள். ஒரு தோழி அவரை மகனே என அழைக்கிறாள்.அது ஒரு துணுக்குறலை உருவாக்கியது. இந்த மதிலை உணரும்போதுதான் கதை முழுமையடைகிறது. அதுதான் பஷீரின் கலை. மிகமுக்கியமான கட்டுரை ஜெ. நன்றி

செல்வக்குமார்

***

அன்புள்ள ஜெ

நீங்கள் சொன்னதுபோல பயமே வராத இனிமையான பேய்ப்படம் பார்கவி நிலையம். பார்க்கவி கடலில் தோன்றும் காட்சிகூட அழகானதுதான். பஷீரை ஒரு சினிமாவில் பார்ப்பதுபோலவே உணரச் செய்கிறது. பஷீரின் தோழர்கள் சரியான ’அலவலாதிகளாக’ இருக்கிறார்கள். கதைகளிலும் அப்படித்தான். அது புன்னகைக்க வைத்தது

அழகான படம். குறிப்பாக அந்த கறுப்புவெள்ளை புகைப்படக்கலை. படத்தை ஒன்றிப்போய் பார்க்கவைத்தது அந்த கறுப்புவெள்ளையின் அழகுதான்

சிவக்குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–84
அடுத்த கட்டுரைஆனையில்லா, தேனீ- கடிதங்கள்