கால்டுவெல் குறித்து தமிழில் எப்போதுமே பேச்சு உள்ளது. இன்று அவர் வரலாற்றில் வகிக்கும் இடம் தமிழில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவருடைய முதன்மையான நூலாக கருதப்படுகிறது. திருநெல்வேலி சரித்திரம் குறிப்பிடத்தக்க இன்னொரு நூல். தமிழின் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்த தொடக்க கால நூல்களில் ஒன்று அது.
அதேசமயம் திருநெல்வேலிச் சாணார் வரலாறு [1849] என்றபேரில் அவர் நாடார் சாதியினரை பற்றி எழுதிய நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அந்நூல் நெடுங்காலமாக அச்சிலும் இல்லை.அதில் நாடார்களை கிட்டத்தட்ட ‘வரலாறு அற்றவர்களாக’ ’பண்படாக் குடிகளாக’ அவர் சித்தரித்திருக்கிறார். அவர்களின் குமுக நெறிகள், வழிபாட்டு முறைகள் எதுவுமே அவருக்குப் பிடிகிடைக்கவில்லை. அவை ஒருவகை காட்டுமிராண்டிப்பண்பாட்டின் கூறுகளாகவே அவருக்கு தெரிகின்றன. இத்தனைக்கும் அவர் வாழ்நாள் முழுக்க நாடார்கள் நடுவே பணியாற்றியவர்,
அந்நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. ஏனென்றால் அன்றிருந்த எந்த உண்மையையும், ஒவ்வொருவரும் அறிந்த எந்த பண்பாட்டுசூழலையும் அந்நூல் பிரதிபலிக்கவில்லை. அது கால்டுவெல்லின் மதிப்பீடு மட்டுமே. நாசரேத் ஞானமுத்து என்ற கிறித்தவர் கால்டுவெல் மேல் வழக்கு தொடர்ந்தார். ஜி.யூ.போப்பின் மாணவரும் கிறித்தவப் பேரறிஞருமான அருமைநாயகம் சட்டாம்பிள்ளை கால்டுவெல்லை எதிர்த்து பிரிந்து சென்று வேறு கிறித்தவ சபையையே உருவாக்கினார். இந்துநாடார்களிடையே கொதிப்பு உருவானது. ஆனால் கால்டுவெல் ‘இப்போது நாடார்கள் மேம்பட்டுவிட்டனர், காரணம் கிறித்தவர்களின் சேவை. இன்று அவர்கள் முந்தைய வரலாற்றை நினைத்து நாணி,அதை மறைக்க விரும்புகிறார்கள் .ஆகவே கோபம் கொள்கிறார்கள்’ என்றுதான் பதிலளித்தார். தன் பிழைகளை உணரவேயில்லை.
இந்த இரு எல்லைகள் நடுவே நின்றுதான் இன்றைய வாசகன் கால்டுவெல்லை மதிப்பிட முடியும். இது அன்றைய ஐரோப்பிய மதப்பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் சட்டகம். அவர்களின் நிகரற்ற தியாகம், தற்கொடைப் பண்பு, திட்டமிடல், அவர்கள் இந்தியச் சமூகத்திற்கு கல்வி ,பொருளியல் ,அடித்தள மக்களின் எழுச்சி ஆகிய தளங்களில் அளித்த பெருங்கொடை ஆகியவற்றை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர்கள் ஐரோப்பிய மீட்பர்களின் பாவனை கொண்டிருந்தனர், ஆகவே இந்தியப் பண்பாட்டை அறிந்துகொள்ளவே இல்லை என்பதும் ஓர் உண்மை.
யோ.ஞானசந்திர ஜான்சனின் அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் கால்டுவெல்லின் வாழ்க்கையை, அருட்பணியை, சேவையை விரிவான குறிப்புகளாக முன்வைக்கும் ஆய்வுநூல். அவ்வகையில் தமிழுக்கு மிக முக்கியமான ஒரு ஆக்கம். ஏற்கனவே ப.ச.ஏசுதாசனின் கால்டுவெல்லின் பன்முகப் பணிகள் , பி.கனகராஜ் மொழியாக்கம் செய்த கால்டுவெல்லின் நினைவலைகள் போன்ற ஓரிரு நூல்கள் கால்டுவெல் பற்றி வந்திருந்தாலும் கால்டுவெல்லின் முழுமையான விளக்கமான வரலாறு என இந்நூலையே சொல்லமுடியும். இந்நூலுடன் இணைத்து வாசிக்கவேண்டிய நூல் டேவிட் பாக்கியமுத்து எழுதிய ‘திருநெல்வேலிக்கு கிறிஸ்த்தவம் வந்தது [யாதுமாகி பதிப்பகம் நெல்லை]
ஞானசந்திர ஜான்சன் நூலை தொடங்கும்போதே இன்று கிறித்தவ நம்பிக்கையாக வேரூன்றிவிட்ட புனித தாமையரின் தமிழக வருகை என்ற தொன்மத்தை முன்வைக்கிறார். தாமையரின் தமிழக வருகை கத்தோலிக்கத் திருச்சபை உட்பட எந்த ஆய்வாளர்களாலும் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படாதது. அதற்கு எந்த தொல்சான்றுகளும் இல்லை. கிபி இரண்டாம் நூற்றாண்டில் சிரிய மொழியில் எழுதப்பட்ட தோமாவின் நடவடிக்கைகள் என்னும் தொல்நூல் [ஆக்டா தோமா] தோமையர் ஆப்கானிஸ்தானின் எல்லைவரை வந்து கொல்லப்பட்டு சிரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதைத்தான் குறிப்பிடுகிறது.
தமிழகத்திற்கு வந்தவர் கானாயி தோமா எனப்படும் சிரிய மதப்பரப்புக் குழுத் தலைவர். கொடுங்கல்லூரில் கரையிறங்கி குமரிமாவட்டம் திருவிதாங்கோடு வரை வந்து கிறித்தவ ஆலயங்களை அமைத்தவர் அவரே. புனித தாமஸ் மலை (பறங்கிமலை)யில் உள்ள சிரிய மொழிக் கல்வெட்டுகளும் இதற்குச் சான்று. இன்று அவை பொதுப்பார்வைக்கு இல்லை. மாறாக திருவிதாங்கூர் கல் ஆலயம் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று எந்த தொல்லியல் சான்றையும் நம்பாமல் சொல்ல ஜான்சன் துணிகிறார். கானாயி தோமாவின் வரலாறே குழப்பமானது. அவர் கிபி 345ல் இந்தியா வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவரைப்பற்றி கிடைத்த செப்பேடுகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
இந்த வரலாற்று உண்மைகள் மீளமீள ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டும்கூட நவீனக் கிறித்தவ கதையாடல் அதை பொருட்படுத்தாமல் தங்கள் நம்பிக்கையை தொன்மமாக ஆக்க தீவிரமாகவே ஈடுபட்டிருக்கிறது. மத நம்பிக்கைகளுடன் ஆய்வாளர்கள் உரையாடவே முடியாது.
தொடர்ந்து ஜான்சன் கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் அலக்ஸாண்டிரிய- மெசபடோமிய சிரிய கிறித்தவக் குழுக்கள் தென்னகக் கடற்கரையில் வந்து மதநிறுவுகை செய்தது முதல் தொடங்கி கிறித்தவம் இந்தியா வந்ததன் வரலாற்றை வெவ்வேறு ஆய்வாளர் குறிப்புகளில் இருந்து சுருக்கமாகச் சொல்கிறார். அவை பெரும்பாலும் உதிரிச் செய்திகளில் இருந்து ஊகிக்கக்கூடியவை என்றாலும் கிபி நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு முதல் சிரிய கிறித்தவ சபைகள், சிறு குழுக்களாக கேரளக் கடற்கரையில் இருந்தது ஏற்கத்தக்கதே
புனித சேவியர் 1542 ல் தென்தமிழகத்திற்கும் கோவாவிற்கும் வந்தபின்னரே உண்மையான கிறித்தவ மதப்பரவல் தொடங்கியது. கடலோர பரதவர்கள் போர்ச்சுக்கீசியர்களால் கிறித்தவர்களாக ஆக்கப்பட்டதும் வலுவான கிறித்தவச் சமூகம் இந்தியாவில் உருவானது. 1705ல் சீர்திருத்தச் சபை நற்செய்திக்குழு டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்தது. அதை தலைமைதாங்கியவர் பர்தலேமியா சீகன்பால்கு. அவர்கள் தரங்கம்பாடியில் தளம் அமைத்தனர்.
அதன்பின் ரிங்கல்தௌபே 1805ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் நெல்லை, குமரி மாவட்டங்களில் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் உருவாக அடித்தளம் அமைத்தார். இரேனியஸ் 1814ல் நெல்லைக்கு சீர்திருத்தச் சபை போதகராக வந்தார் இவர்களெல்லாம் வெவ்வேறு வகையில் தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவர்கள். இவர்களைத் தொடர்ந்துதான் 1838 ல் இராபர்ட் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தார் .
கால்டுவெல்லின் வாழ்க்கை ஒரு அபாரமான சாகசத்தன்மை கொண்டது. அன்றைய மதப்பரப்புநர்களின் ஈடிணையற்ற உளஆற்றல், விசுவாசம் ஆகியவற்றுக்கான சான்று. அவர் சென்னைக்கு மதப்பரப்புநராக வந்து சேர்ந்தபோது அவருக்கு வயது இருபத்துநான்குதான். சென்னையில் மூன்றாண்டுகள் தங்கி தமிழ் கற்றுக்கொண்டார். சென்னையில் இருந்து நடந்தே நெல்லை வந்து இளையான்குடியை கண்டடைந்தார். அது அவருடைய செயல்மையமாக அமைந்தது. அங்கே ஒரு கிறித்தவக் கிராமத்தை நிறுவினார்.
புழுதிபடிந்து வெடித்த கால்களுடன், அழுக்கான ஆடைகளுடன். தோளில் மூட்டையுடன், முகமெங்கும் வெப்பக்கட்டிகளுடன் அந்த செம்மண்பாலைக்கு வந்து சேர்ந்த கால்டுவெல்லின் தோற்றம் பிரமிப்பை அளிப்பது வரலாற்றில் அதுபோன்ற பெருநிகழ்வுகள் அரிதாகவே உருவாகின்றன.
ஜான்சன் கால்டுவெல்லின் பிறப்பு முதல் வரலாற்றை விரிவாகச் சொல்லிச் செல்கிறார். 1814ல் அயர்லாந்தில் கிளாடிஸ் என்னும் ஆற்றங்கரையில் அன்டிரிம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய ஊரின் இன்னொரு பெயர் ஷெப்பர்ட்யார்ட் – இடையான்குடி. ஓவியக்கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற கால்டுவெல் அருள்திரு அர்விக் என்பவரின் தூண்டுதலால் இறையியலில் ஈடுபாடு கொண்டவரானார்.
கிளாஸ்கோ பற்கலைக் கழகத்தில் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றார். சமயநூல்களின் ஒப்பியல், மொழி ஒப்பியல் ஆகியவற்றில் அப்போதே ஆர்வமிருந்தது. இலண்டன் மிஷனரி சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த கால்டுவெல் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு வந்தார்
ஜான்சன் கால்டுவெல் இந்தியா வந்தபோது இங்கிருந்த கிறித்தவச் சூழல், இங்கிருந்த இறைப்பணியாளர்கள் ஆகியோரை விரிவாக அறிமுகம் செய்கிறார். கால்டுவெல் வந்த காலகட்டத்தில் மதப்பரப்புகையில் ஒரு சோர்வுநிலை இருந்தது. அன்றைய ஆங்கில அரசு கிறித்தவ மதப்பரப்புகையில் நேரடி ஆர்வம் காட்டவில்லை – அது அரசியல் அமைதியின்மையை உருவாக்கும் என்னும் ஐயம் அவர்களுக்கு இருந்தது. கத்தோலிக்க திருச்சபை போர்ச்சுகீசிய தலைமையில் செயல்பட்டது. கிறித்தவ மிஷனரிகளுக்குள் பூசல்கள் இருந்தன. லண்டன் மிஷன் மிஷனரிக்குள்ளேயே பலவகை பூசல்கள் இருந்தன்
கால்டுவெல்லின் இயல்பில் ஓர் அடங்காமை, தன்னியல்பான செயல்பாடு இருந்தது. அவரால் இன்னொரு அமைப்புடன் இணைந்து, அதன் ஊழியராக செயல்பட முடியாது. அவருடைய தனித்தேடலே அவரை இடையான்குடி வரை கொண்டுவந்து சேர்த்தது. “இதுவரை நடந்து வந்த பாதைகளில் இதுவே கடினமான பாதையாகக் கானப்பட்டது. முறையான வழித்தடங்கள் இல்லாமையால் திசைமாறிப் போய்விட்டேன். இடையான்குடியைச் சென்றடையும்போது இரவாகிவிட்டது. கடவுளின் எண்ணப்படி நீண்டகால்ம் பணிசெய்யவேண்டிய இடம் இதுவாகும், எதிர்பார்த்த அளவு நான் சோர்வடையவில்லை” என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார்
இடையான்குடியில் 1798 முதல் கிறித்தவம் அறிமுகமாகியிருந்தது. 1806ன் கணக்குப்படி 321 பேர் இடையான்குடியில் ஞானமுழுக்கு பெற்றிருந்தனர். 1829 முதல் டென்மார் நாட்டைச் சேர்ந்த டேவிட் ரோஸன் திருநெல்வேலி மிஷனரி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக கிறித்தவர்கள் தங்கள் பழைய மதத்திற்கு திரும்பிச் சென்றனர். இடையான்குடி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கால்டுவெல் அதை மீட்டமைத்தார்
இக்காலகட்டத்தின் சித்திரத்தைப் பார்க்கையில் எளிய மக்கள் தொடர்ந்து மதம் மாறியிருக்கிறார்கள். அதற்கான காரணம் முதன்மையாக அன்றைய வரிவசூல் முறை. கிராம கர்ணம், மணியக்காரகள் தங்கள் விருப்பப்படி வரி வசூல் செய்தனர். சிறுபகுதியை அரசுக்கு அளித்தனர். இச்சுரண்டல், அதன் விளைவான தாக்குதலில் இருந்து தப்பவே பெரும்பாலும் மதம் மாறியிருக்கிறார்கள். கிறித்தவத்திற்கு மாறியவர்கள் வரிசெலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் என வழக்கு தொடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையும் ரேசன் முயற்சி எடுத்து அவர்களை விடுவித்ததையும் ஞானசந்திர ஜான்சன் விவரிக்கிறார்
கால்டுவெல் இடையான்குடியை மையமாக்கி முதன்மையாக கல்விப்பணியைத்தான் முன்னெடுத்தார். அனைத்து மதத்தினருக்கும் கல்வி அளிப்பது அவருடைய கொள்கையாக இருந்தது. அதைப்பற்றி அன்று சில எதிர்ப்புகள் இருந்தாலும் கால்டுவெல் அதில் உறுதியாகவே இருந்தார்.எளிய மக்களுக்கான உண்டு- உறைவிடப்பள்ளிகள், பெண்களுக்கான தனிப்பள்ளிகள் என பல கல்விநிறுவனங்களை அமைத்தார். இறையியல் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார்.
சாயர்புரம் பள்ளி அவரால் கல்லூரியாக ஆக்கப்பட்டது. பட்டப்படிப்பு வரை அதற்கு அனுமதி கிடைத்தது. கல்விப்பணிகளுக்கான நிதியுதவிக்காக தொடர்முயற்சியில் இருந்தார்.இறைப்பணியையும் கல்விப்பணியையும் ஒன்றின் இரு பக்கங்களாகவே கண்டார். தமிழகத்தின் கல்வி மறுமலர்ச்சியில் கால்டுவெல்லின் பங்களிப்பு என்ன என்று இந்நூல் சொல்கிறது.
கால்டுவெல் இடையான்குடியிலும் சுற்றுப்பகுதியிலும் உருவாக்கிய தேவாலயங்களின் படங்களுடன் அவை கட்டப்பட்ட செலவு முதலிய செய்திகளும் விரிவாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய அளவில் அன்னிய நிதி வந்ததாகத் தெரியவில்லை. உள்ளூரிலேயே பலவகையிலும் நிதி திரட்ட கால்டுவெல் முயன்றிருக்கிறார். அதற்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார்
கால்டுவெல் தனது 29 ஆவது அகவையில் 1844 ஆம் ஆண்டு நாகர்கோயில் இலண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் என்பவரின் மகள் எலிசா வை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சார்லஸ் கால்டுவெல், வில்லியம் ஆல்ஃப்ரட், அடிங்டன், ஆர்தர் லூயி, என்னும் நான்கு மகன்களும் இசபெல்லா, மார்த்தா லூயிசா, மேரி எமிலி ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர்.
இந்நூலில் கால்டுவெல் எதிர்கொண்ட எதிர்ப்புகளில் இரண்டு அன்றைய சூழலை காட்டுவன. பாக்கியநாதன் என்பவன் கால்டுவெல்லுடன் இருந்தவன் ஊழலால் அவனை பதவிநீக்கம் செய்கிறார். அவன் கத்தோலிக்கர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இடையான்குடி வீடுகளுக்கு தீவைக்கிறான். ஆனால் அவனை கத்தோலிக்கத் திருச்சபை ஆதரிக்கிறது. அதை மீறி அவனுக்கு கால்டுவெல் தண்டனை பெற்றுத்தருகிறார். இதில் நேரடியாகவே கத்தோலிக்க திருத்தந்தையர் கஸ்தோனியர் போன்றவர்கள் ஈடுபட்டார்கள் என்பது அன்றைய கத்தோலிக்கர்களுக்கும் சீர்திருத்தச் சபையினருக்குமான சீர் குலைந்த உறவை காட்டுவது
இன்னொரு எதிர்ப்பு அருமைநாயகம் சட்டாம்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது.சுதேசி கிறித்தவர்களில் அவர் பேரறிஞர். 18 மொழி அறிந்தவர். நாடார் சாதியினர். கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார்கள் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தபோது கடுமையான எதிர்மனநிலைக்குச் சென்றார். மிஷனரிகளையும் சீர்திருத்தச் சபையையும் எதிர்க்கலானார். கால்டுவெல்லின் நூலை மொழியாக்கம் செய்து வினியோகித்தார். இது நாடார்களிடையே கால்டுவெல் மேல் கடும் வெறுப்பு உருவாக வழிவகுத்தது
கால்டுவெலின் நூலுக்கு மறுப்பாக அருமைநாயகம் ஒரு நூலை எழுதினார். அதை பிரசுரிக்க நிதிவசூல் செய்தார். அதை குற்றம் என்று கண்ட சீர்திருத்தக் கிறித்தவசபை புகார் கொடுக்க அருமைநாயகம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் விடுதலை ஆனபிறகு நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தில் தனி கிறித்தவ சபை ஒன்றை நிறுவினார். ஏசுரட்சகர் சபை என்று இது அழைக்கப்பட்டது. இந்நிகழ்வு கால்டுவெல்லுக்கு நாடார்கள் மேலிருந்த கருத்தை மாற்றவில்லை. ஆனால் கால்டுவெல்லின் நூலை சீர்திருத்த கிறித்தவச் சபை பொதுவாக முன்வைக்காமல் ஆகியது
கால்டுவெல்லின் சமகாலத்தைய கிறித்தவப் பணியாளர்கள் பற்றிய விரிவான செய்திகளை ஞானசந்திர ஜான்சன் அளிக்கிறார். கால்டுவெல்லின் மகன்களும் மகள்களும் ஆற்றிய இறைப்பணிகளையும் விளக்குகிறார். அன்றைய மதப்பரப்புகையின் சித்திரத்தை இவை அளிக்கின்றன
கால்டுவெல் இந்துமத நூல்களை கிறித்தவநோக்கில் கற்றவர். இந்துமதமும் கிறித்தவமும் என்னும் நூலை அவர் எழுதினார். அதில் இந்துமதம் அறவியல் அற்றது, புராணநம்பிக்கைகள் மட்டுமே கொண்டது, நற்செயல்களைவிட தீயசெயல்களே மிகுந்தது, ஆகவே கற்றோரால் வெறுக்கப்படவேண்டியது என்கிறார். இந்துமதம் வரலாறு இல்லாதது, கிறித்தவம் வரலாறு கொண்டது என்கிறார். இந்து வேதங்களில் இருந்து ஒரு கல்லூரியில் பாடமாக வைக்கத்தக்க ஒரு பகுதியைக்கூட தேர்வுசெய்ய முடியாது என்கிறார் .இந்துக்கள் கிறித்தவத்தை ஏற்றாலன்றி அறமும் மீட்பும் அவர்களுக்கு அமைவதில்லை என்கிறார்
இந்துமதத்தில் உள்ள தனிநபர் ஒழுக்கம், தனிநபர் மீட்பு பற்றிய செய்திகள் எல்லாம் பிற்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து கிறிஸ்தவம் வழியாக வந்து சேர்ந்தவையாக இருக்கவேண்டும் என்று கால்டுவெல் அந்நூலில் சொல்கிறார். கிருஷ்ணனின் கதை ஏசுவின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்டது என்கிறார். இவை அன்றைய வழக்கமான கிறித்தவ போதகர்களின் எண்ணங்கள்தான். ஐரோப்பிய மேட்டிமைவாதமும் கிறித்தவ அடிப்படைவாதமும் ஒன்றாகக் கலந்த ஒன்று அது
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை அவருடைய இந்தியவியல் ஆய்வின் ஒரு பகுதியாகவே நிகழ்த்தினார். திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருதுகோள் அவருடையது. ஒப்பீட்டில் தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஆகியவை சம்ஸ்கிருதச் சொற்களஞ்சியம், சம்ஸ்கிருத இலக்கணம் ஆகியவற்றின் துணையின்றி தனித்தியங்கும் இயல்பு கொண்டவை, ஆகவே இவை முற்றிலும் வேறு மொழிக்குடும்பம் என்பது அவருடைய கருத்து. இந்தமொழிகளை அவர் திராவிட மொழிகள் என்றார். ’
திராவிட என்னும் சொல்லை சிற்பவியலில் இருந்து எடுத்துக்கொண்டார். திராவிடம் என்பது ஓரு தனி இனமாக கால்டுவெல் வரையறை செய்யவில்லை, ஆனால் அவர் அப்படி எண்ணினார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவரிடமிருந்தே திராவிடவியல் ஆய்வுகள் தொடங்குகின்றன.
ஆனால் ஒன்றை ஆழமாக சொல்லவேண்டும். அவர் திராவிடப் பண்பாட்டிலோ அதன் தொல்நூல்களிலோ எந்த மதிப்பும் கொண்டவர் அல்ல. அவர் தமிழ்வரலாற்றின் காலக்கணிப்பை கிறிஸ்துவுக்கு பின் மிகமிக பிற்காலத்தில் இருந்தே தொடங்குகிறார். திராவிடப் பண்பாடு வளர்ச்சியற்றது, அறவியல் அற்றது, ஆகவே மானுட மீட்புக்கு வழியற்றது என்பதே அவருடைய எண்ணம். கிறித்தவம் ஒன்றே அவற்றை அளிக்கமுடியும் என்றே அவர் நம்பினார். திராவிட நூல்களில் இருக்கும் எளிய அறவியல்கூட பிற்காலத்தைய கிறித்தவச் செல்வாக்கால் உருவானது என்றார். அவர் மதப்பரப்புநர் என்றவகையில் அவ்வாறே சிந்திக்க இயலும். இன்றும் கிறித்தவர்களின் நம்பிக்கை அதுவே.
கால்டுவெல் 1891ல் கொடைக்கானலில் மறைந்தார். அங்கே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தார். இந்நூல் கால்டுவெல்லின் அறிவுப்பங்களிப்பு, வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி விரிவான ஒரு விவரணையை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கால்டுவெல்லின் பங்களிப்பை பொதுவான வாசகர்கள் மூன்றுவகையில் மதிப்பிடலாம்.
அ தமிழகச்சூழலின் அன்றைய தேங்கிப்போன நிலவுடைமை அமைப்புக்குள் முன்னேறிய முதலாளித்துவ ஐரோப்பாவின் அறவியலை, கல்வியை, சமூக அமைப்பை கொண்டுவந்தவர் கால்டுவெல் என்று மதிப்பிடலாம். அதனூடாக இங்கிருந்த வாழ்க்கையில் ஒரு முற்போக்கான நகர்வை உருவாக்கியவர்.
ஆ. தமிழக வரலாற்றாய்வு பண்பாட்டாய்வு மொழியியல் ஆய்வு ஆகியவற்றில் ஐரோப்பிய- கிறித்தவ முறைமையை அறிமுகம் செய்த முன்னோடி. அதனூடாக நவீன உலகின் அறிவியக்கம் இங்கே வந்துசேர்ந்தது. பிற்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆய்வுகள் அனைத்துக்கும் கால்டுவெல்லே முன்னோடி
இ. தமிழகத்தின் சீர்திருத்தக் கிறித்தவப் போதகர்களில் முக்கியமான ஐவரில் ஒருவர் (சீகன்பாலு, ரிங்கல் தௌபே, இரேனியஸ்,மீட்)
கால்டுவெல்லுக்கு தமிழாய்வாளர் , சமூகப்பணியாளர், கல்விப்பணியாளர் என்னும் நிலைகளில் தமிழக வரலாற்றில் முதன்மை இடம் உண்டு. அதேசமயம் அவருடைய பார்வை தத்துவக்குறைபாடு கொண்டது, வெறும் நம்பிக்கைகள் சார்ந்தது, ஆகவே இந்து மதத்துடன் உரையாடும் ஆற்றல் அற்றது. அவர் அன்றைய கிறித்தவ பற்று, ஐரோப்பிய மேட்டிமை நோக்கு ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவர். ஆகவே அவருடைய கருத்துக்களில் அவை செல்வாக்கு செலுத்தின
நுட்பமான சிறு சித்தரிப்புக்கள் கொண்ட நூல் இது.இரவில் கையில் விளக்குடன், தடியுடன் இடையான்குடியைச் சுற்றிவந்து காவல்காக்கும் கால்டுவெல்லின்ஒளிமிக்க சித்திரமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு வருகிறது
அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் யோ.ஞானசந்திர ஜான்சன் மோரியோ ஊழியங்கள் வெளியீடு
====================================