மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)

2012இல் ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்ட கவிஞர் சாம்ராஜ் 2016இல் ‘பட்டாளத்து வீடு’, 2019இல் ‘ஜார் ஒழிக!’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். கவிதையிலிருந்து சிறுகதை நோக்கி அவரை நகர்த்தியது எது என்று யோசித்துப் பார்த்தால் தனக்கு கிடைத்த அளப்பரிய வாழ்வனுபவங்களின் வழி சேகரமான நினைவுகளின் பாரத்தைப் புனைவின் வழியாக இறக்கி வைத்துவிட வேண்டுமென்ற அவரது துடிப்பும் அதற்கு கவிதை பொருத்தமான வடிவமாக இருக்க முடியாது என்ற அவரது சரியான அவதானிப்பும்தான் காரணமாக இருக்குமென்று நினைக்கிறேன். கவிதையில் சிறுகதைத் தன்மை இருந்தால் அது ஒரு படி கீழிறங்கி விடுகிறது. ஆகவே எதை கவிதையாக்க வேண்டும், எதை சிறுகதையாக மாற்ற வேண்டும் என்பதில் சாம்ராஜ் தெளிவாக இருந்திருக்கிறார்.

“வாழ்வைப் புனைவாக மாற்றும் போது ஆசுவாசம் கிட்டுகிறது. மாளாத துயரங்களைக் கடக்க முடிகிறது. சமயங்களில் அதைப் பார்த்துச் சிரிக்கக்கூட முடிகிறது” என்று தனது முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் மொத்தமாக உள்ள இருபது சிறுகதைகளின் வழியாக அவர் வாழ்வைப் புனைவாக மாற்றி இருந்தாலும் ஒவ்வொரு கதையிலிருந்தும் நிஜமான வாழ்க்கை ஒன்று எழுந்து வருகிறது. இந்த உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் அளிப்பவர்கள் அவரது கதைமாந்தரகள். சாம்ராஜின் கதைகளில் அலையும் மனிதர்கள் அனைவரும் நம் வாழ்வில் சந்தித்த யாரோ ஒருவரை நினைவுப்படுத்துவதன் வழியாக ‘இது புனைவல்ல. உண்மை’ என்பதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கவித்துவத்தையும் நாவல்தன்மையையும் தன்னகத்தே கொண்ட சிறுகதைகள் நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத்துவத்தை அடைகின்றன. அந்த வகையில் ‘குள்ளன் பினு’ ஒரு குறிப்பிடத்தகுந்த கதை எனச் சொல்லலாம். கோட்டயத்தில் மர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பினுவின் குடும்பமும் புதிதாக மரக்கடை தொடங்கும் தரகன் பவுல் குடும்பமும் இரு குடும்பங்களுக்கான பகைமையும் ஒரு நாவலுக்கான களத்தை வாசகர் கண் முன் விரிக்கின்றன. கவிஞர் இசையின் கவிதையில் ‘நூறு காதல்களில் ஒரு காதல் ரொம்பவும் குள்ளமானது. அது தன் கையை உயர்த்திக்காட்ட வேண்டியிருக்கிறது’ என ஒரு வரி உண்டு. தனது அக்கா மகளைக் கேலி செய்யும் நாலு இளைஞர்களின் மீது கையை உயர்த்துவதன் மூலம் தன்னை ஏளனமாகப் பார்த்த சமூகத்தில் உயரமானவனாக வலம் வருகிறான் குள்ளன் பினு. சாதாரண கதையாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கும் இக்கதை ‘தூரத்தே சூரியன் மறைந்து கொண்டிருக்க, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டென்று பின்வாங்கினான் பினு’ என்ற இறுதி வரியில் உள்ள கவித்துவத்தால் வேறொரு தளத்தை அடைகிறது. தான் அடைந்த உயரம் நிஜம் அல்ல நிழல் என்பதை உணர்ந்து அதிர்ந்து போலி மயக்கத்திலிருந்து மீண்டு யதார்த்தத்தை அவன் உணரும் கணத்தில் அக்கதை சிறந்த கதையாக மாறுகிறது.

இவரது பெரும்பாலான கதைகள் இடதுசாரி இயக்கத்தைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் பேசுகின்றன. இலட்சியவாதங்களும் தனக்கென புரட்சிகரமான கருத்தாக்கங்களைக் கொண்ட இயக்கங்களும் நவீன உலகில் தோல்வியுற்ற  அவலத்தைச் சொல்ல ஒரே வழி பகடி என்பதை அறிந்து அதை அனாயசமாக தனது கதைகளில் செய்திருக்கிறார் சாம்ராஜ். ‘மருள்’ கதையில் அருளின் கோமாளி சேஷ்டைகள் அனைத்தும் நமக்குச் சிரிப்பை வரவழைத்தாலும் முதலாளித்துவத்தின் மணிக்கட்டில் சிவப்பு ஷாலை அவன் கட்டும் தருணத்தில் தொழிலாளர்களின் மருளைப் போக்கி அருள் பாலிக்க வந்தவனாக மாறிப்போகிறான்.

சிறுவியாபாரிகளுக்குப் புதிய வரிகளை விதிக்கும் அரசை எதிர்த்து நிகழ்த்தப்படும் இடதுசாரி இயக்கத்தின் எதிர்ப்பு போராட்டம் ஒன்று சிறுவியாபாரிகளுக்கு எதிராகவே திரும்புவதை அங்கதக் குரலில் சொல்லும் ‘தொழில்–புரட்சி’ கதை அ.முத்துலிங்கம் அவர்களின் ‘பதினொரு பேய்கள்’ கதையை நினைவூட்டியது. இருபது விடுதலைப் போராளிகளைச் சிறையிலிருந்து விடுவிடுக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு மக்கள் விடுதலைப் படை செய்யும் ஆள் கடத்தல் இறுதியில் இருபதாக இருந்த  போராளிகளின் எண்ணிக்கையை சிறையில் இருபத்திரண்டாக உயர்த்துவதைப் பகடியோடு சொல்லும் கதை அது. அ.முத்துலிங்கத்தின் கதையில் தோட்டா இல்லாத துப்பாக்கிகளைக் கொண்டு ஆட்களைக் கடத்தும் அபத்தமும் சாம்ராஜின் கதையில்  ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில் ஒதுக்குப்புறமாய் இருக்கும் மத்திய அலுவலகத்தின் வாகனத்தை எரிக்க முயலும் அபத்தமும் நம்மை சிரிக்க வைத்தாலும் மக்களுக்காகப் போராடும் இயக்கங்கள் தங்களது இருப்பை, எதிர்ப்பை வெளிக்காட்ட முனைகையில் அடையும் தோல்வியின் வலி அபத்தத்தின் வழியாக இக்கதைகளில் பதிவாகி இருக்கின்றன.

இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன.

இவரது கதைகளில் வரும் பெண்கள், கவிஞர் பெருந்தேவி எழுதிய ‘இருப்பின் நிகழ்தகவு’ கவிதையை நினைவுப்படுத்துகிறார்கள்.

‘சிறிய அகல்

அதனிலும் சிறிய அதன் சுடர்

பெருங்காற்று

இன்னும் பெரிய அதன் இரைச்சல்

என்ன நடந்திருக்கலாம்

என்பதற்கும்

என்ன நடந்திருக்கவேண்டும்

என்பதற்கும் இடையே

அல்லோலகல்லோலப்படுகிறது’

அலையாத, அழகான சுடர் போன்று வாழ வேண்டிய இப்பெண்கள் வாழ்வெனும் இரைச்சலோடு கூடிய பெருங்காற்றால் அலைக்கழிக்கப்படும்போது ‘ஏன் அப்படி நடந்தது? இப்படியல்லவா நடந்திருக்கவேண்டும்’ என்று அவர்கள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது. ‘சன்னதம்’ கதையில் லட்சுமியக்காவிற்கு யாராவது கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டும். ‘மரியபுஷ்பம்’ இல்லம் கதையில் புஷ்பம் தேடிய ஃபைல் அவளுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ‘செவ்வாக்கியம்’ கதையில் செவ்வாக்கியத்திற்குப் பிரயோஜனப்பட வேண்டியது சரியாக பிரயோஜனப்பட்டிருக்க  வேண்டும். ‘மூவிலேண்ட்’ கதையில் மல்லிகா ஆறுமுகத்தோடு சென்னைக்குச் சென்றிருக்க வேண்டும். ‘பார்வதிக்குட்டி’ கதையில் ரோசி சேச்சி பார்வதியைப் பணத்தை வாங்க விட்டிருக்க வேண்டும். ‘பொன்வண்டு’ கதையில் கோமதியை பாண்டிச்சாமி எங்காவது கூட்டிக்கொண்டு போயிருக்க வேண்டும். இப்படியான ‘வேண்டும்’கள் துரதிர்ஷ்டவசமாக நடக்காமல் போனதால் புனைவு வெளிக்குள் சிக்கி கொண்ட இப்பெண்கள் உண்மையில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்.

பேசுபொருள் சார்ந்து இந்தக் கட்டுரையின் தலைப்பு அமைந்திருந்தாலும் சாம்ராஜின் கதைகளை ‘நிலமும் காட்சியும்’ என்ற தலைப்பின் கீழும் ஒரு வாசகன் அணுகமுடியும். மனிதர்களுக்கு இணையாக மதுரையும் மலையாள தேசமும் இவரது கதைகளில் வலம் வருகின்றன. பங்களாக்கள் நிறைந்த சொக்கிகுளம் பகுதி, தத்தநேரி சுடுகாடு, வர்ணாசிரமம் தெரியும் தல்லாகுளத்தின் தெருக்களென மதுரையை அதன் இயல்பு கெடாமல் மிக நேர்த்தியாக வாசகர்களுக்கு கடத்துகிறார். Story of Plot, Story of Character, Story of Impression என வகைப்படுத்தப்படும் சிறுகதைகளில் Story of Impression வகையைச் சேர்ந்த ‘அனந்தசயனபுரி’ இவரது மிகச் சிறந்த சிறுகதை. ரயில் பயணத்தில் தொடங்கி ரயில் பயணத்திலேயே முடியும் இக்கதை திருவனந்தபுரம் என்ற நிலப்பரப்பை மிக சிறப்பாக காட்சிப்படுத்துவதன் வழியாக கதைநாயகனின் துயரத்தை வாசகன் தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

‘சிறுகதை என்பது சொல்வது அல்ல. காட்டுவது அல்லது உணர்த்துவது’ என்பதற்கு ‘அனந்தசயனபுரி’ ஒரு சிறந்த உதாரணம். மற்றொரு உதாரணம் ‘13’ என்ற சிறுகதை.  இக்கதையில் வரும் பிரான்ஸிஸ்கோவின் உண்மையான முகத்தை வாசித்தபோது சுஜாதா அவர்களின் ‘முரண்’ சிறுகதையில் ஒரு பள்ளியில் வாகன ஓட்டியாக இருக்கும் குமாரசாமி என்ற கதாபாத்திரம் கண் முன் நிழலாடியது. குமாரசாமி, பிரான்ஸிஸ்கோ இருவரும் செய்நேர்த்தியையும் சுத்தத்தையும் பிரதானமாக கருதுபவர்கள். யாருக்கும் தொல்லை தராமல் தனிமையில் வாழ்பவர்கள். கதையின் முடிவில் பள்ளி பேருந்தில் இருக்கும் அனைத்து மாணவிகளையும் இறக்கி விட்டுவிட்டு ஒரே ஒரு மாணவியோடு புதிய பாதையில், இருட்டில் அதிக வேகத்தோடு வாகனத்தை ஓட்டிச் செல்லும் குமாரசாமியும் தன் வீட்டிற்கு அருகிலிருந்த பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுமிகளைப் பார்த்தவுடன் சைக்கிளின் ஹேண்டில் பாரை அழுத்தமாய்ப் பற்றும் பிரான்ஸிஸ்கோவும் பேரதிர்ச்சியையும் பெரும் அச்ச உணர்வையையும் வாசகருக்குத் தருகிறார்கள். புறத்தில் ஒருவனாக இருப்பவன் அகத்தில் முற்றிலும் வேறு ஒருவனாக இருக்கும் கொடூரத்தைக் காட்சிகளின் வழியாக தரும் கலையில் சாம்ராஜ் தேர்ந்த ஒருவர் என்பதை இக்கதை வெளிக்காட்டுகிறது.

இருபது சிறுகதைகளில் ‘பட்டாளத்து வீடு’ என்ற சிறுகதை சற்று வித்தியாசமான ஆனால் எனக்கு விருப்பமான கதையாக இருக்கிறது. இது போன்ற கதை ஏன் எழுதப்பட வேண்டும், இதற்கான தேவை என்ன போன்ற கேள்விகள் நவீன இலக்கியச் சூழலில் கேட்கப்படலாம். ஆனால் தமிழ் சிறுகதை பரப்பில் இதுவரை அதிக அளவில் கண்டிராத இது போன்ற கதாபாத்திரங்களுக்கு ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கின்றது. ச.தமிழ்ச்செல்வனின் ‘கருப்பசாமியின்’ ஐயா சிறுகதையில் வரும் இசக்கிமுத்து, சுஜாதாவின் ‘குதிரை’ சிறுகதையில் வரும் கிச்சாமி போல ‘பட்டாளத்து வீடு’ கதையில் வரும் செந்திலும் எனக்கு நெருக்கமான கதாபாத்திரமாக இருக்கிறது. சுபாஷ் சந்திர போஸைத் தெரியாமல் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று தர்க்கபூர்வமாக கேள்வி எழுப்பி இக்கதையை நிராகரிக்கலாம். ஆனால் அப்படியான ஒருவன் இருக்கிறான் என்பதுதான் எனக்கு அக்கதை தரும் பேரனுபவமாக இருக்கிறது. வரலாறு, தத்துவம், இலக்கியம், அறிவியல் என மிக பரந்த அறிவுப்பரப்பில் ஒருசாரார் இயங்கிக் கொண்டும் அதனால் சண்டையிட்டுக் கொண்டுமிருக்க இதற்கு முற்றிலும் நேர்மாறாக செந்தில் போன்ற மனிதர்கள் உணவு, உறக்கம், உழைப்பு, குடும்பமென சராசரி லௌகீக வாழ்க்கையில் அறியாமையோடு வாழ்வது வரம் அல்லது விடுதலை என்றே தோன்றுகிறது. அதனாலேயே செந்தில் கதாபாத்திரம் எனது வாசக மனதில் சாகாவரம் பெறுகிறது.

ஒவ்வொரு கதையும் எடுத்துக்கொண்ட பேசுபொருளைப் பொறுத்து வடிவத்திலும், மொழியிலும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. இரண்டு தொகுப்புகளின் வழியாக தான் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை சாம்ராஜ் நிருபித்திருக்கிறார். “வாழ்வைப் புனைவாக அணுகும்போது புனைவாகவே வாழ்வு ஆகிவிடும் அபாயங்களும் இருக்கின்றன.  அப்படியான அபாயங்கள் நிகழா வண்ணம் இல்லாத கடவுள் என்னைக் காக்கட்டும்” என்று குறிப்பிடும் சாம்ராஜிற்கு அப்படியான அபாயங்கள் அடிக்கடி நிகழாவிட்டாலும் அவ்வப்போது நிகழ்ந்து சிறுகதைகள் எழுத இருக்கும் கடவுள் துணை புரியட்டும்.

அழகுநிலா

சிங்கப்பூர்

நூல்களை வாங்

பட்டாளத்துவீடு சாம்ராஜ்     

ஜார் ஒழிக சாம்ராஜ் 

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-13
அடுத்த கட்டுரைஇறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்