அரசன் பாரதம் -சீனு

 

ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்

முழு மகாபாரதம் வரிசைப்படி படிக்க

‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

 

இனிய ஜெயம்

 

பேரரசன் அவர்களுக்கான பாராட்டு விழா. இதோ மற்றொரு விழாநாள். புதுவை நண்பர்கள் வசம் பேசும்போதே விழாவுக்கான மனநிலை துவங்கிவிட்டது. இதோ வந்து போச்சிங்க ஒண்ணாந்தேதி என்று அவருக்கான சம்பள நாள் போல குதூகலப்பட்டார் மணிமாறன். இரவு பேருந்து கடலூர் திரும்புகையில் வழி நெடுக அரசன் மகாபாரத மொழியாக்கம் குறித்தே சிந்தனை சென்றது.

 

அவரது மொழியாக்கத்தில் ஆதி பர்வம்.சபா பர்வம் இரண்டு மட்டுமே வாசித்திருக்கிறேன். [முழுமையும் வாசித்துவிட வேண்டும்] அவர் அளித்த பாரத வம்ச வரிசை, பாரதம் நிகழ்ந்த காலம், பாரதத்தில் ஆளுமைகள் வயது, அந்தக் கால பாரத நில எல்லைகள் சார்ந்த விளக்க அட்டைவனை  இப்போதும் என் கைபேசியில் உண்டு. அது எப்போதும் வெண் முரசின் வாசிப்புக்குத் துணை.

 

தளம் வழியாகவே அரசன் செய்துகொண்டிருந்த பெரும்பணியின் நிறைவு குறித்து அறிந்தேன். இது எத்தையதொரு பெரும்பணி  இன்றைய சூழலில் என்பது எத்தனை பேர் அந்தரங்கமாக உணர்ந்திருக்கக் கூடும்?  முன்பொரு சமயம் மகாசிவராத்திரி அன்று, நெல்லையப்பர் கோவிலில் கர்ணன் சிலைக்குக் கீழே அமர்ந்து, தம்பி வசம் வெய்யோன் கதையை சொல்லிக்கொண்டிருந்தேன்.

 

கதை முடித்து சூழல் உணர்கையில் கண்டேன்,என்னைச் சுற்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஒரு பதினைந்து பேர். பெரும்பாலானோர் கண்கள் கலங்கி இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை நோக்கி கேட்டேன். ”இப்போ இங்க இந்த நேரம் கர்ணனை பாக்கணும் போல இருக்கு இல்ல?” அவர் மூக்கை உறுஞ்சியபடி வெட்கத்துடன் தலையசைத்தார். நான் என் பின்னால் நின்றிருந்த இருட்கனியை காட்டினேன்.

 

ஒரு அம்மாள் ஹா எனும் மெல்லிய ஒலி எழ கைப்கூபினார். அவர்களில் பலர் இப்போதுதான் முதன் முறையாக அது கர்ணன் என அறிகின்றனர். என் தம்பிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஒரு எட்டாம் வகுப்பு சிறுவனை அழைத்து, சிலையை காட்டி யார் என்று கேட்டேன்.அவனுக்கு தெரியவில்லை. மொபைலை இயக்கி நான் காட்டிய ஓவியத்தை உடனே அடையாளம் கண்டு சொன்னான்.மோனாலிசா.

 

இதுதான் இன்றைய சூழல். சுதந்திரத்துக்குப் பிறகான கல்வி முறை வழியே,நாம் எதை இழந்து எதைப் பெற்றிருக்கிறோம் என்றால் இதுதான். உலகின் மேற்றிசை தேசங்கள் எதுவும் பொதுக் கல்வியில்  தங்கள் இளைய தலைமுறையை கலாச்சார வறுமை கொண்டவர்களாக வளர்ப்பது இல்லை. சோத்துக்கு செத்த பயலுக கூட்டத்துக்கு,சோத்துக்கு வழி காட்டிய கல்வி நல்கிய பெரியோர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்தான். அதே சமயம் மனிதர்கள் இரைப்பையால் மட்டுமே ஆனவர்கள் அல்லவே.

 

என் பால்யமும் இதே நிலைதான். பகுத்தறிவுப் பகலவன் வீசிய வெய்யிலில் காய்ந்த எலும்பற்ற உயிர்கள் குடும்பங்களில் ஒன்றுதான் எங்களது கூட்டுக் குடும்பமும்.  அதிர்ஷ்ட வசமாக என் அய்யம்மா [அப்பாவின் அம்மா] பாரதக் கதைகள் சொல்பவராக இருந்தார். அங்கிருந்து  பள்ளிக் கல்விக்கு வெளியே பைமாமா வரைந்து அளித்த வியாச பாரத அமர் சித்தரக் கதா வுக்கு வந்து சேர்ந்தேன்.

 

என் நினைவில் ஒரு எட்டாயிரம் ஓவியச் சட்டகம் வழியே எழுதப்பட்ட காமிக்ஸ் அது என நினைக்கிறன் . என்ன ஒரு அசுர சாதனை. அவற்றில் சில காமிக்ஸ்கள் இன்றும் என் கைவசம் உண்டு. இப்போது அது முழு வரிசையும் வாசிக்கக் கிடைக்கிறது. இந்தனை பெரிய அசுர சாதனை பொதுக் கல்விக்கு வெளியே,பை மாமா எனும் ஒரே ஒரு ஆளுமை நிகழ்த்த, என் ஆழுள்ள கலாச்சாரத்தை மீட்டுக் கொள்ளும் பால்யம் எனக்கு அமைந்தது.

 

பின்னர்  தொலைகாட்சியின் மகாபாரத தொடர்,ராஜாஜி,பாலகுமாரனின் மகாபாரத நாவல்கள், சோ, இந்திய மொழியாக்க நாவல்கள், தொடர்ந்து இதோ வெண் முரசு வரை,எனது கலாச்சார வேரினை கண்டடைய பின்நின்ற அனைவரது உழைப்பும் எந்நிலையிலும் மெய்ன் ஸ்ட்ரீம் கல்விக்கு வெளியில் நிகழ்ந்ததே. அப்படி என் காலத்தில் இந்த மெயின் ஸ்ட்ரீம் கு வெளியே நிகழ்ந்த [வெண் முரசு தவிர்த்த] மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று,பேரரசன் மொழியாக்கம் செய்த கங்குலியின் முழு வியாச பாரதம்.

 

பாரதி,புதுமைப்பித்தன், க ந சு,டி எஸ் சொக்கலிங்கம்,               சு கிருஷ்ணமூர்த்தி, சேனாபதி, துளசி ஜெயராமன் என அன்று துவங்கி, சுசிலா அம்மா, யுவன் சந்திரசேகர்,சுகுமாரன், யூமா வாசுகி என இன்று வரை நவீனத் தமிழ் இலக்கியத்தில் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு வலிமையான மொழிபெயர்ப்பாளர்கள்  வரிசை இங்கே உண்டு. பதிப்புச் சூழல் முதன் முதலாக அரும்பிய போது  மறுமலர்ச்சி சூழலில் நிகழ்ந்த மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு சார்ந்த அபாரமான வாழ்க்கைக் கதை இங்கே உண்டு. இன்னும் பின்னால் சென்றால் வட இந்தியாவில் துவங்கி,தென் இந்தியா தொட்டு, உலகம் முழுதும் அன்று தழுவிப் பரவிய பௌத்தம். அதன் தாக்கம் எத்தனையோ ஆயிரம் மொழிபெயர்ப்பாளர்களால் நிகழ்ந்த ஒன்று.

 

பாரத நிலத்தின் அந்த எண்ணிறந்த தகைமையாளர் வரிசையில் இதோ     அருள் செல்வப் பேரரசன் சென்று தனக்கான பீடத்தில் அமர்ந்திருக்கிறார். பொதுவாக இன்றைய மொழியாக்க முயற்சிகளில் எழும் முதல் எதிர்மறைக் குரல்,அதான் எல்லாருக்கும் இங்கிலீஷ் தெரிஞ்சுருக்கே, தனியா எதுக்கு இதை மொழியாக்கம் வேற செய்யணும். என்பது. பண்பாட்டில் இன்று வென்று நிற்கும் எந்த தேசமும் இப்படி ஒரு சொல்லை சொல்லுமா? உதாரணமாக சீனா தனது மொழிக்கு வெளியே சென்றே ஒரு சீனன் [அவன் எத்தனை மொழிகளில் விற்பன்னன் ஆயினும்] குறிப்பிட்ட அறிவுத் துறையை கலைத் துறையை  பெற வேண்டும் எனும் நிலையை அப்படியே விட்டு வைத்திருக்குமா என்ன?

 

வியாச பாரதம் போன்ற, இந்தியாவின் ஆழ் மனப் பொக்கிஷம், தொன்மப் புராணக் கலைக் களஞ்சியம் என வரும் போது, சொந்த மொழியிலான அதன் மொழியாக்கத்தேவை இன்னும் வேறு பல தளங்களை உள்ளடக்கியது. உதாரணமாக சென்றவாரம் திண்டிவனத்திலிருந்து ஒரு கூத்துக் கலைஞர் அழைத்திருந்தார். படிக்காதவர். கிட்ட தட்ட செத்து விட்ட அவரது கூத்து ஜமாவில், பாரத கூத்து சார்ந்த குறிப்பிட்ட ஒன்றினை இறுதிக் காலத்தில் அவரது மகனுக்கு கையளித்துவிட்டு செல்ல விரும்பி இருக்கிறார். அவர் மகன் எட்டாவது வரை படித்தவன். மொபைலில் மகாபாரதம் என்று தேடி, தளம் வந்து, தொடர்புக்கு பகுதி வழியே என்னை தொடர்பு கொண்டு, அப்பா வசம் தொலைபேசியை அளித்தார். அவருக்கு ஆதி பர்வத்தில் உள்ள வம்ச வரிசை தேவைப் பட்டது. நான் மகனை அழைத்து அரசன் செய்த மொழியாக்கத்தில் ஆதி பர்வத்தின் சுட்டி முதல் அனைத்தையும் அளித்தேன்.

 

இந்த அடிப்படையான விஷயம் நிகழ,அதுவும் ஒருவனது சொந்த மொழியில் நிகழ, பேரரசன் போன்ற ஒருவர் வர வேண்டியது இருக்கிறது. வெளியே உலகம் சம்பந்தமே இல்லாமல் எதோ செய்து கொண்டிருக்கிறது.அல்லது அந்த உலகத்துக்கே சம்பதம் இல்லாத ஒன்றை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம். சும்மா என் அண்ணனின் பேக் ஐடி வழியே முகநூலில் உலாவிப் பார்த்தேன். தீவிர இலக்கியத்துடன்,பண்பாட்டு விவாதங்களுடன் சம்பந்தம் கொண்டோர், சிலர் [பத்து பேருக்குள் இருக்கும்] பேரரசன் விழாவுக்கான அழைப்பிதழை பகிர்ந்திருந்தனர். மீதி ஆளுமைகள் சமீபத்தில் வந்த படத்தில் ஏன் லாஜிக்கே இல்லை எனும் மாபெரும் பண்பாட்டு விவாதத்தில் மண்டை மோதி செத்துக்கொண்டு இருந்தனர்.

 

சூழல் இதுதான். நாம் தான் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்து கட்டிப் பிடித்து பாராட்டிக்கொள்ள வேண்டும். வியாசர் சொல்லச் சொல்ல,விநாயகர் பாரதத்தை எழுதினார் என்பது புராணம். வியாசன் எனும் ஞானாசிரியரின் சொல்லை,பல ஆண்டுகளாக,ஒவ்வொரு சொல்லாக தொட்டுத் தொட்டு,எண்ணி எண்ணி பல்லாயிரம் பக்கம் கொண்டு  மொழியாக்கம் செய்திருக்கிறார் அருள் செல்வ பேரரசன். சொற்கிழத்தி வந்தமர்ந்த அவரது கரங்களுக்கு இந்த எளிய வாசகனின் அன்பு முத்தங்கள்.

 

கடலூர் சீனு

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-11
அடுத்த கட்டுரைஅய்யன்காளி, வைக்கம்