கல்லூரிகளில் இலக்கியம்

 

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு ,

 

ஆன்மிகம், கோவில் திருவிழா , சினிமாமுதல் ஷோ , மாணவர் கல்வி உதவி என்றால் மக்கள் பணம் அளிக்க (கொடை அளிக்க) முன்வருகிறார்கள்.ஆனால் இலக்கியப் பணிகளுக்கு என்றால் பணம் நன்கொடை கொடுக்க பொதுமக்கள் தயங்குகிறார்கள்.

இதற்குக்காரணம் இலக்கியத்தை அந்தளவு இலக்கிய செயற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் கொண்டு செல்லவில்லை, என்ற ஐபிசி டிவி (ibc tv) நெறியாளரின் கருத்து.மிகவும் சரியான கருத்து

 

சாரு நிவேதிதா இதைச் சொல்ல முயன்றார், முயற்சிக்கிறார், ஆனால் அவர் அழகியல் வார்த்தைகள் இல்லாமல் , சொல்லி வந்ததால் அது பகடியாக, ஒரு முக்கியத்துவம் அளிக்காது வாசிக்கப் பட்டது.

 

நெறியாளரும், அனோஜனும் சொல்வது போல, இலக்கிய வாசிப்பை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் . அவ்வாறு எடுத்துச் சென்றால், இலக்கிய நிகழ்வுகளுக்கும் பொதுமக்கள் பொருளுதவி அளிக்க ஆரம்பிப்பார்கள்,

 

விஷ்ணுபுர வாசகர் வட்டம், வாசகர்சாலை நண்பர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான் . சமகாலத்தில் இலக்கிய வாசகர்கள் உருவாக வாய்ப்புள்ள இடங்கள் – பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், விஸ்காம் கல்லூரிகள் , உதவி இயக்குனர் குழுமங்கள், தனியார் அரசு அலுவலகங்கள்.

 

“எனவே . நூல் விவாதக் கூட்டங்கள் நூலகங்களில் நடத்துவதோடு அல்லாமல், கூடுதலாக இம்மாதிரி கல்லூரிகளிலும் நூல் விவாத/ படைப்பு விவாத/ அறிமுக கூட்டங்கள் நடத்த வேண்டும்

 

இப்போது நடக்கும் இலக்கிய விவாத / உரையாடல் கூட்டங்கள் இலக்கியம் குறித்த தகவல்கள் அறிந்த 40-60 நண்பர்களுக்குஇடையே மட்டும் நடக்கின்றன.ஆனால் இவர்களைத் தாண்டி இலக்கியத்தை இன்னும் அதிக நபர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது .

 

ஆடிட்டர்கள் இடையே முன்பு நடக்கும் உரையாடல் கூட்டங்கள் இவ்வாறுதான் இருக்கும், அவர்கள் 30 நபர்களுக்குள்ளேயே விவாதம் உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஆனால் பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்ற தேவை ஏற்பட்ட தும் பொதுமக்களையும் மாணவர்களையும் அழைத்து பல பொது ஹோட்டல்களில், கல்லூரிகளில் உரையாடல் கூட்டங்கள் இப்போது நடைபெற ஆரம்பித்து விட்டன.

 

இந்த ஏப்ரலில் , ஊட்டி / கோவை அருகில் ஒரு கல்லூரியிலும் வாசக வட்ட நண்பர்கள் ஒரு இலக்கிய நிகழ்வை நடத்த வேண்டும் (ஒரு மணி நேரமாவது) .வெறுமனே படைப்பாளியை 55 நிமிடங்கள் உரை நிகழ்த்தச் செய்யாமல், மாணவர்களை அதிகம் பேச வைத்து 55 நிமிடங்கள் கலந்துரையாடல் நிகழ்த்த வேண்டும். எவை எல்லாம் வாசிக்கப் படவேண்டும் என்று அவர்களை பழக்கப் படுத்த வேண்டும்

 

 

ராம்ஜி யாகூ

அன்புள்ள ராம்ஜி

 

பொதுவாக இதெல்லாம் ஓர் ஆர்வத்தில் உற்சாகத்தில் சொல்லப்படுவன. நடைமுறையில் விளைவுகள் பெரிதாக இல்லை. எழுத்தாளர்களைப் பொறுத்தவரை நேரவிரயம் என்றே சொல்வேன். அதிலும் ஆக்கபூர்வமாக எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு. அன்றி, இதை ஒரு தொழிலாக, பணம் பெற்றுக்கொண்டு செய்வதென்றால் தாழ்வில்லை- பணமாவது மிஞ்சும்.

 

எல்லா காலத்திலுமே கல்லூரிகளில் இலக்கிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த விழாக்களில் கண்ணதாசன் காலம் முதல் இன்றுவரை எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். எத்தனை வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? அப்படியெல்லாம் எவரும் உடனே வாசிப்பதில்லை. மீண்டும் ஒருமுறை அக்கல்லூரிக்குச் சென்றால் நாம் முன்பு அங்கு வந்திருக்கிறோம் என்ற நினைவேகூட மாணவர்களிடம் எஞ்சியிருப்பதில்லை என்பதைக் காணலாம். உண்மையில் கல்லூரி விழாக்கள் வீண். பொறியியல் கல்லூரி விழாக்கள் முற்றிலும் வீண். அம்மாணவர்களுக்கு மொழிவழியே எதையும் கற்றுக்கொள்ளும் பயிற்சியே இருப்பதில்லை.தாங்கள் உயர்கல்வி பெறும் அறிவுஜீவிகள் என்ற பாவனையும் உண்டு. ஒப்புநோக்க பள்ளிகள் மேல்.சிற்றூர் பள்ளிகளில் சில செவிகளேனும் சொல்கொள்ளும்.

 

ஏனென்றால் வாசிப்புக்கு எதிரான நோக்கு இங்கே குடும்பங்களில் இருந்து, கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு மாணவருக்கும் புகட்டப்பட்டிருக்கிறது. அது தேவையற்றது என்னும் எண்ணம். அதைப்பற்றிய கேலி. மேடைப்பேச்சை ஒருவகை கேளிக்கையாகவே காண்கிறார்கள். கொஞ்சம் உழைப்பைச் செலுத்திக் கற்கவேண்டியவற்றைக்கூட அவர்கள்புறக்கணித்துவிடுகிறார்கள். கொத்து மொக்கை சப்பை என பல சொற்கள் அவர்களிடம் உள்ளன. இன்று ஏதேனும் ஒரு துறையில் அறிவார்ந்த ஏதேனும் தேடல் கொண்ட மாணவர்கள் மிக அரிது. ஆடம்பரம் [அதாவது கெத்து] மட்டுமே அவர்களின் ஆர்வம். அதற்குரிய பாதையே கல்வி. அவ்வளவுதான்

 

நான் வெவ்வேறு ஊர்களில் கல்லூரிகளில் இலக்கிய அறிமுக உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஆனால் அடுத்து அந்த ஊரில் நிகழும் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒரு வாசகராவது அக்கல்லூரிகளில் இருந்து வந்ததாக வரலாறே இல்லை. கோவையில் பல கல்லூரிகளில் இலக்கியமன்றங்கள் நிகழ்கின்றன. விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவையின் எந்தக்கல்லூரியில் இருந்தும் எந்த மாணவனும் எப்போதும் கலந்துகொண்டதில்லை – வேறெந்த கூட்டத்திலும் கலந்துகொண்டதில்லை. அவர்களின் உலகமே வேறு. அது ஒருவகை கல்லூரிக் கொண்டாட்டம், அவ்வளவுதான்

 

ஆகவே கல்லூரி மற்றும் கல்விநிறுவனங்களின் கூட்டங்கள், பேச்சுக்கள், விழாக்கள் எல்லாம் வெறும் பாவனைகள். அவற்றில் பொழுதை விரயம்செய்யலாகாது என்பது என் முடிவு. மேலும் கல்லூரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் மாணவர்களின் மொண்ணைத்தனத்தை, அதேசமயம் தாங்கள் அறிவாளிகள், பெரியபடிப்பு படிப்பவர்கள் என்னும் அசட்டு பாவனைகளைக் கண்டால் எரிச்சல் ஏற்பட்டு  நம் நம்பிக்கையும் குறையும். நாம் அந்த ஒவ்வாமைகளில் இருந்து மீள பலநாட்களாகும்.

 

தேவை என்றால் ஒன்று செய்யலாம். ஆர்வமுள்ள இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமான இலக்கிய முகாம்களை நடத்தலாம். கேரளத்தில் மலையாள மனோரமா, மாத்ருபூமி இதழ்கள் இவற்றை நடத்துகின்றன. சிபிர்கள் என்று சொல்கிறார்கள். ஒருநாளோ இரண்டுநாளோ முழுமையாக மூன்று அல்லது நான்கு அமர்வுகளாக இந்த முகாம்கள் நிகழும். இலக்கியவாதிகள் வந்து எப்படி இலக்கியத்தை வாசிப்பது, எதை வாசிப்பது, இலக்கிய ரசனையின் அடிப்படைகள் என்னென்ன என்பதைக் கற்பிப்பார்கள். மாணவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் சொல்வார்கள்.

 

இதற்கு அக்கல்விநிலையங்கள் ஒத்துழைக்க வேண்டும்.சற்றே ஆர்வம் கொண்ட மாணவர்களை மட்டும் தெரிவுசெய்யவேண்டும். கேரளத்தில் அதிகபட்சம் நூறுபேர் கூடுகிறார்கள். இவற்றில் சிறப்பாக பங்காற்றிய இளையோருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆர்வம் கொண்டவர்களை மட்டும் திரட்டுவதில் அந்தக் கல்லூரிகள், பள்ளிகள் சற்று ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அதைச் செய்யமுடியாது. போட்டிகள் வைத்து தெரிவுசெய்யும் ஒருமுறை கேரளத்தில் உண்டு. ஆனால் இங்கே அது நடக்குமா என்று தெரியவில்லை.

 

ஒருமுறை சென்னையில் காந்தி பற்றிய ஓர் உரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். அவ்வமைப்பு காந்தி பற்றி ஒரு சொற்பொழிவுப்போட்டி வைத்து வென்றவர்களுக்குப் பரிசு வழங்கியது. அப்பேச்சுக்கள் மேடையில் நிகழ்த்தப்பட்டன. அபத்தமான செயற்கையான அறிவில்லத சொற்குப்பைகளை மாணவர்கள் உமிழ்ந்தனர். அப்படி பழக்கப்பட்டிருக்கிறார்கள். முதல்நிலை தெரிவையே நாம் நடத்தினாலொழிய மெய்யான திறனுள்ளவர்களை தெரிவு செய்யமுடியாது. ஆசிரியர்கள் தெரிவுசெய்தால் குப்பைகளையே கொண்டுவந்து தருவார்கள்.

 

கேரளத்தின் இந்த கூடுகைகளில் எழுத்தின் அடிப்படைகளும் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் எழுதும் படைப்புகள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதிலிருந்து நல்ல வாசகர்கள், எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள்.

 

இதை தமிழகத்தில் செய்யலாம். கல்விநிலையங்கள் செய்யவேண்டும். அல்லது வேறு அமைப்புக்கள் செய்யவேண்டும். ஆனால் நிபந்தனை ஒன்று உண்டு. இந்த அமர்வின் எல்லைகள் வகுக்கப்படவேண்டும். இலக்கியம் மட்டுமே பேசப்படவேண்டும். இலக்கியவாசிப்பின் ரசனையின் அடிப்படைகள் மட்டும். உள்ளடக்கம் அந்தந்த வாசகன் அவன் வாழ்விலிருந்து கண்டடையட விடப்படவேண்டும்

 

உள்ளடக்கத்தை பேசுகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து சமகால அரசியல் பேசப்படத் தொடங்கினால் அதன்பின் அரசியல் மட்டுமே பேசப்படும். இலக்கியம் பின்னகரும். அரசியலின் காழ்ப்புகள் கேலிகள் கூச்சல்கள் மட்டுமே அங்கே நிகழும். காலப்போக்கில் பிளவுகள் பூசல்கள் உருவாகும். இலக்கியம் அறிந்த, இலக்கியம் பேசும் எழுத்தாளர்களே இதை நடத்தவேண்டும்

 

ஆனால் அதற்குரிய அமைப்புக்களும் இங்கில்லை. இனிமேல் உருவானால்தான் உண்டு. மற்றபடி விஷ்ணுபுரம் அமைப்புக்கு அப்படிப்பட்ட திட்டங்கள் ஏதுமில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு உண்மையிலேயே ரசனையும் இலக்கிய ஈடுபாடும் கொண்ட இளையோர் தங்களை ஓரிடத்தில் தொகுத்துக்கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்திக்கொள்வதற்கான ஓர் ஒருங்கிணைவு மட்டுமே.

 

ஜெ

முந்தைய கட்டுரைகணக்கு
அடுத்த கட்டுரைவல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்