மேலாண்மை, மேலோட்டமான வம்புகள்

 

அன்புள்ள ஜெ,

 

இது நான் டிவிட்டரில் கண்ட ஒரு. பதிவு

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்ததும் வயிறு எரிஞ்ச முதல் ஆள் யாராயிருக்கும்ன்னு நினைக்கீக ? #2008_நினைவுகள் [NalVazhuthi]

அதற்கு ஒரு கும்பல் உடனே ‘ஜெமோ’ ‘ஜெயமோகன்’ என்று பதில் சொல்ல உடனே ‘ஆ சரியான பதில்!” என்று மகிழ எல்லாம் சுபம்.

இந்த மொத்தக்கூட்டமே பெயரிலிகள் என்பது தனிச்சிறப்பு. எவருக்கும் வாசிப்புப் பழக்கம் இருப்பதற்கான தடையமே இல்லை.

இதை ஏன் பொருட்படுத்தவேண்டும் என்றால் இதை என்னிடம் சொன்னவர் இன்னொரு இளைய வாசகர். அவர் அப்படித்தான் இருக்கும் என்று நம்புபவர்

நான் சொன்னேன், தம்பி ஜெ தளத்தில் மேலாண்மைப் பொன்னுச்சாமி என்று அடித்து தேடினாலே அவர் என்ன சொன்னார் என்று வந்துவிடுமே என்று.ஆனால் அவனுக்கெல்லாம் அந்த அளவுக்கு பொறுமை இல்லை.

நான் அவனிடம் சொன்னேன். 2008ல் மேலாண்மைப் பொன்னுச்சாமி விருது பெற்றபோது தமிழ் நவீன இலக்கியத் தளத்தில் கடுமையான கண்டனம்தான் வந்தது. பலமுன்னோடிகள் இருக்க அவருக்கு விருது அளித்தது தவறு என்றே பேசப்பட்டது. ஆனால் நவீன இலக்கியத்தளத்தில் இருந்து மேலாண்மைக்கு வாழ்த்து சொன்ன விமர்சகர் ஜெயமோகன். சாகித்ய அக்காதமி விருது ஒன்றும் இலக்கியப் போட்டி அல்ல, முற்போக்கு இலக்கிய மரபு என ஒன்று உண்டு, அதன் முதன்மை முகமான மேலாண்மைக்கு விருதளித்தது சரிதான் என்று ஜெ சொன்னார் என்று நான் சொன்னேன்.

ஆனால் இந்த பெயரிலிகள் சலிக்காமல் இந்த வகையான திரிபுப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒருநாளில் எப்படியும் நாலைந்து புதுத் திரிப்புகள் வந்துவிடும். பத்தாண்டு கடந்துவிட்டால் எவரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அந்நம்பிக்கையில் சொல்கிறார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் சென்று எவர் இதையெல்லாம் விளக்கிச் சொல்ல முடியும்? மேலும் இப்படித் திரித்துச் சொல்பவர்கள் எல்லாருமெ வாசிப்புப் பழக்கமில்லாதவர்களுக்காகத்தான் இதைச் சொல்கிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது. பேசிய ஒவ்வொரு வரியும் திரிக்கப்பட்ட எழுத்தாளர் தமிழில் நீங்களாகவே இருப்பீர்கள், விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

 

எஸ்,செந்தில்குமார்

 

 

அன்புள்ள செந்தில்,

 

நீங்களே சொன்னீர்கள், வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களுக்காக இதெல்லாம் சொல்லப்படுகிறது என்று. ஒன்று சொல்லப்பட்டதும் அதன் மெய்யை தேடிக் கண்டடைபவர்கள் மிகச்சிலரே. அவர்கள்தான் இலக்கியவாசகர்கள். மற்ற கும்பல் என்ன எண்ணிக்கொண்டால் என்ன? அவர்கள் கட்சிகளுக்கு கொடிபிடிக்கத்தான் தேவை. அவர்களை ஏதாவது திரித்துச் சொல்லி , காழ்ப்பும் கசப்பும் ஊட்டி திரட்டிக்கொள்வதுதான் அவர்களின் நோக்கம். அதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை. நான் விளக்கம் கொடுப்பது அவர்களில் ஒருவேளை சிலர் வாசிக்கக்கூடும், இலக்கியத்திற்குள் வரக்கூடும் என்பதனால். அப்படி வந்த ஒரு நீண்ட வரிசையே நான் அறிய இங்குள்ளது.

எனக்கும் மேலாண்மைப் பொன்னுச்சாமிக்கும் இலக்கியநோக்கு சார்ந்து கடுமையான முரண்பாடுகள் இருந்தன. அவர் என்னைபற்றி கடுமையாக எழுதியிருக்கிறார் பின்னர் அவர் என் ரகசிய நண்பர் என்ற பேச்சு அவர் சூழலில் எழுந்தமையால் கடுமையைக் கூட்டிக்கொண்டார். ஆனால் என்றும் நட்புடனேயே இருந்தோம்

எனக்கு அவருடைய அழகியல் ஏற்புடையது அல்ல. அதை தொடர்ந்து முன்வைத்தேன். ஆனால் அவர் சார்ந்த மார்க்ஸிய அழகியல் இங்குள்ள ஒரு முக்கியமான தரப்பு. அதில் அவர் முதன்மை ஆளுமை. ஓர் இலக்கியப் பட்டியலில் அவரையோ அவ்வழகியலையோ நான் விட்டுவிட முடியாது.

சாகித்ய அக்காதமி ஒரு குறிப்பிட்ட அழகியலுக்கு அளிக்கப்படுவது அல்ல. எல்லா தரப்புக்கும் விருது அளிக்கப்படவேண்டும். அந்தத் தரப்பில் அவர் முக்கியமானவரா என்பதே கருத்தில்கொள்ளவேண்டியது. மேலாண்மை அவ்வகையில் முக்கியமானவர். ஆகவே அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். நேரிலும்  வாழ்த்தினேன்.

அது அன்று வழக்கமான வம்பு- வசைகளுக்கு ஆளாகியது. நான் என் இலக்கியப் பார்வையை கைவிட்டு அவரை வாழ்த்துகிறேன் என்றும் சமரசக்குரல் விடுக்கிறேன் என்றும் நேரில் பழக்கமிருப்பதனால் வாழ்த்துகிறேன் என்றும் சொன்னார்கள். அதற்கு அன்று விளக்கம் அளித்திருந்தேன். அந்த வாழ்த்துக்குறிப்பிலேயே என் அழகியல் நிலைபாட்டைச் சொல்லி எதன் அடிப்படையில் அவரை வாழ்த்துகிறேன் என விளக்கியிருந்தேன்.

உண்மையில் மேலாண்மைக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான். ஏனென்றால் அதற்கு முன் தி.க.சிவசங்கரன் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன். இத்தனைக்கும் திகசி எனக்கு தந்தையைப் போன்றவர். அணுக்கமானவர், என் மேல் அன்பு கொண்டவர்.  “‘நீ வாழ்த்துவேன்னு நினைக்கவே இல்லைய்யா. திகசியை அப்டி கிழிச்சிருந்தே” என்றார். “அவர் ஒண்ணுமே எழுதலைன்னுதான் சொல்றேன். நீங்க எழுதியிருக்கீங்க” என்று மேலாண்மையிடம் சொன்னேன்.

ஓர் அழகியல் நிலைபாடு கொள்வதும் அதனடிப்படையில் விமர்சனம் செய்வது ஒரு தளம். ஓர் இலக்கிய வரலாற்றில் ஒருவரை மதிப்பிடுவதும் ஒரு விருதின் பொருட்டு அவரை வாழ்த்துவதும் இன்னொரு தளம். நான் நம்பி ஏற்று முன்வைக்கும் அழகியலில் மேலாண்மை பொன்னுச்சாமி இடம்பெறமாட்டார். ஆனால் அதனால் அவருக்கு தமிழிலக்கியத்தில் இடமில்லை என்று பொருள் அல்ல. இலக்கிய வரலாற்றாசிரியனாக அவரை நான் பொருட்படுத்தியே ஆகவேண்டும்.

இதே நிலைபாடுதான் சு.வெங்கடேசனிடமும் எனக்கு உள்ளது. இன்று மார்க்ஸிய அழகியலின் முக்கியமான முகம் அவர். ஆகவேதான் அவருக்கு அளிக்கப்படும் விருதுகள் சரியானவையே என நினைக்கிறேன். ஆகவே வாழ்த்துகிறேன். அதன்பொருட்டு என்னை இன்றும் பலர் விமர்சனமும் நையாண்டியும் செய்கிறார்கள் என நான் அறிவேன் வெங்கடேசனே நான் வாழ்த்து தெரிவிக்கும்போது “என்னய்யா ஆச்சரியமா இருக்கு!” என்றுதான் சொல்வார்

அதற்காக முற்போக்கு அழகியலை ஏற்றுக்கொள்வதாக பொருள் இல்லை. அது கருத்துக்களை, அரசியல்நிலைபாட்டை முதன்மையாக முன்வைக்கும் அழகியல். ஆகவே ஆசிரியனை மீறிச்செல்லும் நகர்வுகளுக்கு இடமற்றது. ஆழுள வெளிப்பாடுகள் அற்றது. புறவய யதார்த்தத்தைக்கூட கருத்தியலுக்கு ஏற்ப திரிப்பது. ஆகவே மிகமிக எல்லைக்குட்பட்ட அழகியல் அது.

நீங்கள் சொன்னதுபோன்ற இந்த வகையான திரிப்புகள், அதற்குரிய பதில்கள் எல்லாம் ஒருவகையில் நல்லதே. என் தரப்பைச் சொல்லும்போதே முற்போக்கு அழகியலுக்கும் நுண்ணுணர்வு அழகியலுக்குமான வேறுபாட்டைப் பற்றி பேசமுடிகிறது. வெவ்வேறு வகையான திறப்புக்களை அது வாசகனுக்கு அளிக்கும். அவர்களே மேலும் சென்று கண்டடைய முடியும்.

இத்தனை வம்புகளுக்குப் பின்னரும் வாசகர்கள் என்னை நோக்கி வந்துகொண்டே இருப்பதற்கு இந்த விவாதம் காரணமாகிறது. சொல்லப்போனால் வம்புகள் ஒரு வடிகட்டிபோல. அவை அரைவேக்காட்டு வாசகர்கள், சூட்டிகையற்ற வாசகர்கள் என்னை நோக்கி வந்துவிடாமல் தடுக்கின்றன

மேலாண்மையிடம் 1986 முதலே நல்லுறவு இருந்தது. ஆனால் நெருக்கம் இல்லை. அவர் அன்று நான் இருந்த விவாதச்சூழலுக்குள் வருபவர் அல்ல. நட்பானவர் அவ்வளவுதான். அதுகூட அன்றிருந்த கொந்தளிப்பான ஜெயமோகனை பொறுத்துக்கொள்ளும் அவருடைய பண்பினால்தான். இன்று அவரை இப்படி ஒரு வம்பு வழியாகவேனும் நினைவுகூர்வது மகிழ்ச்சி அளிக்கிறது

 

 

ஜெ

 

அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி

மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது

இடங்கை இலக்கியம்

விருதுகள் மதிப்பீடுகள்

புரட்சி இலக்கியம்

முந்தைய கட்டுரைஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவெயில், நகைப்பு – கடிதம்