துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…

ஒரு மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் மிக முக்கியமானவை, அவை அம்மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்களுக்கான விதைகள் அடங்கியவை. அந்தப்படைப்புகளின் நேரடிப் பாதிப்பினால், அல்லது பாதிப்பை அஞ்சி நேர் எதிராக விலகும் போக்கினால் அந்த மொழியின் அடுத்த காலகட்ட எழுத்துக்கள் உருவாகியிருக்கும். செல்வாக்கு குறித்த அச்சம் [Anxiety of  Influence ] என இதை ஹரால்ட் புளூம் குறிப்பிடுகிறார்

தமிழில் புதுமைப்பித்தனை முன்வைத்து இதை ஆராயலாம். புதுமைப்பித்தனின் ஆக்கங்களின் செல்வாக்கு வெவ்வேறு வகையில் தமிழில் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றவர்களில் புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது போன்ற கதைகளின் செல்வாக்கு உண்டு. அசோகமித்திரனில் செல்லம்மாள் கதையின் செல்வாக்கு. ஜானகிராமனில் கல்யாணி போன்ற கதைகளின் செல்வாக்கு. பிற்காலக் கதைகளில் புதுமைப்பித்தனை மறுக்கும் போக்கைக் காணலாம்

ஜப்பானிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் ரியனொசுகே அகுதாகவா [Ryūnosuke Akutagawa]. அங்கே நவீன இலக்கியம் உருவானபோது எழுதவந்தவர். அகுதாகவாவின் ஒரு கதையையேனும் வாசகர்கள் அறிந்திருப்பார்கள். குரஸோவாவின் புகழ்பெற்ற ராஷமோன் சினிமாவின் மூலக்கதை அகுதாகவாவால் எழுதப்பட்டதுதான்.

ஜப்பானிய நவீன இலக்கியத்தின் பொதுவான போக்குகள் அல்லது அடையாளங்களாக நாம் காணும் பல அம்சங்கள் அகுதாகவாவில் உண்டு. ஒன்று, சோர்வு நோக்கு. மிகக்குறைவான ஜப்பானிய நவீனக் கதைகள் தவிர பிற அனைத்துமே உலகை இருண்மையாக, எதிர்மறையாக நோக்கும் சோர்வுத்தன்மையை வெளிப்படுத்துபவை. வாழ்க்கையின் பொருளின்மை, அறியமுடியாமை, எதிர்பாராத தன்மை ஆகியவற்றை முன்வைப்பவை.

இந்தக் கூறுகள் நவீனத்துவ இலக்கிய அலையால் பின்னர் உலகமெங்கும் வலுப்பெற்றன. ஆனால் ஜப்பானிய இலக்கியத்தின் தொடக்கமே அதிலிருந்துதான். யசுநாரி கவபத்தா, யூகியோ மிஷிமா முதல் கோபோ ஆப் வரை பெரும்பாலானவர்களின் ஆக்கங்களில் சோர்வுதான் மைய உணர்வு. முதல் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்

அகுதாகவாவின் கதைகளில் அந்தச் சோர்வுத்தன்மை நிறைந்திருக்கிறது. கைவிடப்படுதல், தனிமை, உலக இயக்கத்துடன் ஒத்துப்போக முடியாதிருத்தல், அவநம்பிக்கை, கசப்பு என்னும் உணர்வுகள் மேலோங்கியவை அவருடைய கதைகள். அவை அவருடைய உளச்சிதைவையும் காட்டுகின்றன.

வாழ்வின் இறுதிக்காலத்தில் அகுதாகவா பல்வேறு உளநோய்களால் அவதிப்பட்டார். பலமுறை தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் வெர்னால் என்னும் அமிலத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். பிற்கால ஜப்பானிய இலக்கியத்தில் அவருடைய கதைகள் மட்டுமல்ல வாழ்க்கையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது அவர்களின் கறுப்புவெள்ளை புகைப்படக்கலை, சினிமாக்கள் அனைத்திலுமே கண்ணுக்குத்தெரியாத கத்தி உடனிருக்கிறது

ஒருவகையில் நட் ஹாம்ஸன், வைக்கம் முகம்மது பஷீர் போன்றவர்களின் கதைகளுடன் ஒப்பிடத்தக்க உலகம் அகுதாகவாவுடையது. தன்வரலாற்றுத் தன்மை மிக்கது. பிற்காலக் கதைகள் பலவும் நேரடியாகவே அவருடைய டைரியிலிருந்து எழுந்தவை.

வைக்கம் முகமது பஷீரில் அகுதாகவாவின் நேரடித் தாக்கம் உண்டு என்ற விமர்சனம் இருக்கிறது. பஷீரின் ‘விஸ்வவிக்யாதமாய மூக்கு’ [உலகப்புகழ்பெற்ற மூக்கு] அகுதாகவாவின் ஹானா [மூக்கு] என்ற கதையை ஒட்டியது என்ற விவாதம் எழுந்தது உண்டு. ஆனால் மையப்படிமம் வளரும் மூக்கு என்பதற்கு அப்பால் பொதுமை ஏதுமில்லை.

பஷீர் அகுதாகவாவைப் போலவே அலைச்சல், உளச்சிதைவு ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர். ஆனால் அந்த இருண்மையில் இருந்து தன் சிரிப்பினூடாக , சூஃபி மரபின் மெய்மையினூடாக கடந்து வெளியேறி வந்தார். அகுதாகவாவில் அது நிகழவில்லை

இரண்டாவது அம்சம் என எனக்குப் படுவது, பேய்கள் கொடூரமான சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றின் குறியீட்டுப் பதிவுகள் கொண்ட கதைகள். அகுதாகவாவின் கதைகள் ஜப்பானிய இயக்குநர்களான கோபயாஷி [Masaki Kobayashi] போன்றவர்களிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருப்பதைக் காணலாம்

இந்த அம்சமும் பஷீர் போன்றவர்களிடம் உண்டு. அவர்களுக்கும் பேய்களின் தொடர்பு உண்டு. அது அந்த மனநிலையின் இன்னொரு பகுதி என்றே சொல்லலாம். ‘நூற்றாண்டுகளின் ஆலயமணிகள் விழுந்துடைந்த முற்றங்களில்’ உலவுபவன் தான் என பஷீர் ஒரு கதையில் சொல்கிறார்.அவர்கள் உள்ளே உணரும் பேயைத்தான் வெளியேயும் காண்கிறார்கள். அவற்றிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். திரும்பி நின்று அவற்றில் ஒரு பேயை நோக்கிப் புன்னகை புரிந்தவர் பஷீர்

அகுதாகவாவின் இந்த இரண்டு அம்சங்களும் எப்படி ஜப்பானிய இலக்கியத்தை செலுத்தின என்பது ஆராயத்தக்கது. ஜப்பானிய மரபு இரண்டு பண்பாட்டுச்சரடுகளால் ஆனது. இரு அடையாளங்களால் அவற்றை வகுக்கலாம். ஒன்று, ஜென். இன்னொன்று சமுராய்.

ஜென் நம்பிக்கையை, சுதந்திரத்தை, எளிமையை, தன்னிறைவை முன்வைப்பது. ஜப்பானியக் கலைகள் அனைத்திலும் ஜென் ஊடுருவல் உண்டு. சமுராய் பண்பாடு நேர் மாறாக கொந்தளிப்பை, மாறாத நெறிகளை, ஆடம்பரத்தை, அடங்காத விழைவை முன்வைப்பது. சமுராய் பண்பாட்டின் ஒரு பகுதியாக தற்கொலை இருந்துகொண்டே இருக்கிறது. ஜென் அதற்கான மீட்பைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது

ஒரு பொதுப்பார்வையில் ஜப்பானிய நவீன இலக்கியம் ஜென் மெய்யியலில் இருந்து அகன்றுவிட்டது என்று படுகிறது. அது ஜென் மரபில் இருக்கும் அமைதியை, அடங்கலை துறந்து கொந்தளிப்பை மீறலை நாடியது. விளைவாக சமுராய் அம்சமே அதில் மேலோங்கியது. கலைக்கட்டுமானத்தின் நுட்பங்களில் ஒரு வகையான ஜென் அழகிய ஜப்பானிய இலக்கியத்தில் இருக்கலாம் – பெரும்பாலும் தரிசனங்களில் அச்செல்வாக்கு இல்லை

ஆகவே ஜப்பானிய நவீன இலக்கியம் கடந்தகாலத்தின் குருதியின் வேகத்தை நாடியது. கடந்த கால இருள்களில் அலைந்தது. அகுதாகவா, மிஷிமா என அனைவரிலும் இந்த அம்சம் உள்ளது. கூடவே நவீன காலகட்டத்தில் வெறுமையில் திகைத்து நின்றது. பெரும்போருக்குப் பின் சமுராய் உணரும் வெறுமையை குரஸோவா போன்றவர்கள் சித்தரித்திருக்கிறார்கள் – அந்த உளநிலையில் ஜப்பானிய நவீன இலக்கியம் நின்றிருந்தது. அவ்வப்போது வயிற்றை வெட்டிக்கொண்டு மடிந்தது

ஐரோப்பா அவர்களின் கோதிக் காலகட்ட வரலாற்றை கொடிய இருளின் காலகட்டமாக கருதியதுபோலவே ஜப்பானிய நவீன படைப்பாளிகளும் ஜப்பானின் பதினொன்று முதல் பதினான்காம் நூற்றாண்டுவரையிலான காலகட்டத்தையும் ஒரு கொடுங்கனவாக எண்ணுகிறார்கள். வன்முறையின், கொடுமையின் உச்சங்கள் நிகழ்ந்த காலகட்டம் அது அதனூடாக தெளிவடையும் மானுட எல்லைகளை அவர்கள் அங்கே வைத்து ஆராய்கிறார்கள்

கணேஷ்ராம் மொழியாக்கத்தில் அகுதாகவாவின் எழு கதைகள் சிறிய நூலாக நூல்வனம் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளன. புகழ்பெற்ற ராஷமோன் உட்பட பலகதைகள் இதில் உள்ளன. இந்நூலில் ’மூங்கில் காட்டினுள்ளில்..’ என்றபேரில் அக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஷமோன் என்றபேரில் இன்னொரு கதை உள்ளது

நட் ஹாம்சன், பஷீர் கதைகளுக்கு மிக அணுக்கமான சுழலும் சக்கரங்கள், கொடூரமான வரலாற்றுக் குறியீட்டுத்தன்மை கொண்ட ராஷமோன், தொன்மமாற்றுருக் கதையான சிலந்திவலை என அகுதாகவாவின் பல தரப்பட்ட புனைவுகளின் மாதிரிகளைக் காட்டும் கதைகள் இவை. ஜப்பானிய இலக்கியத்திற்குள் நுழைவதற்குரிய நல்ல வாசல். ஜப்பானிய இலக்கியத்தின் தொனிகளை, பேசுபொருட்களை, புனைவுச்சூழலை உணராமல் ஜப்பானிய சினிமாக்களை உண்மையாக ரசிக்க முடியாது.

அகுதாகவா தனிப்பட்ட முறையில் என்னை கவர்ந்தவர் அல்ல, அவர் எழுத்திலுள்ள எதிர்மறைத்தன்மை, அல்லது நோய்க்கூறு எனக்கு அந்த அகவையிலேயே ஒவ்வாமையை உருவாக்கியது. ஏனென்றால் நானும் அதேபோல நோய்நிலையில் இருந்தேன். அவருடைய எந்தக்கதையும் என் நினைவில் இயல்பாக எழுந்ததே இல்லை. இந்நூலை வாசிக்கும் வரை அவர் கதைகளை நான் படித்திருக்கிறேன் என்பதே நினைவில் எழவில்லை.

தமிழ் மொழியாக்கங்களில் சாதாரணமாக உள்ள  நெஞ்சை அடைக்கும் சொற்றொடர்ச்சிக்கல்கள் இல்லாத மொழியாக்கம். அகுதாகவாவின் மூலமொழி பஷீர் போல நேரடியான கதைசொல்லித்தன்மை கொண்டது. அந்த ஓட்டம் இந்த மொழியாக்கத்திலும் உள்ளது. மிகமிக அழகிய நூலாக்கம் – இவ்வாண்டில் நான் கண்ட மிக அழகிய நூல் இதுவே

சுழலும் சக்கரங்கள்

Author: ரியுனொசுகே அகுதாகவா
Translator: கே. கணேஷ்ராம்
Publisher: நூல் வனம்

நூல் வாங்க 

More than 50 Japanese authors have killed themselves since 1900

முந்தைய கட்டுரையா தேவி! – வாசிப்பு, விளக்கம்
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல் மார்ச் 2020