யா தேவி! – கடிதங்கள்-11

 

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

யாதேவி கதையைப் பற்றி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கதைகளுக்கு இது ஒரு சிறப்பு. எல்லா கோணங்களும் படிக்கப்பட்டுவிடும். கவனிக்காமல் போகாது. ஆனால் என்ன சிக்கல் என்றால் இத்தனை பேசப்பட்டபின் சிலசமயம் கதையில் ஒன்றும் காண்பதற்கே இல்லையோ என்று தோன்றும்

 

ஆனால் உங்கள் கதைகளை கொஞ்சநாள் கழித்து படிக்கும்போது அதுவரை பேசப்படாத ஒன்றை நான் புதிதாகக் கண்டடைகிறேன். இந்த அனுபவம் எனக்கு பல கதைகளில் வந்திருக்கிறது. யா தேவி கதையை நான் வந்த அந்த நாளிலேயே வாசித்துவிட்டேன். ஆனால் இப்போது வாசிக்கும்போது அதிலுள்ள வசீகரமான ஒரு மர்மம் எனக்கு பட்டது. ஒரு நல்ல படிமம்

 

அவள் போர்ன் நடிகை. அவள் உடலே சுரணை இல்லாதது. அதை அவளே சொல்கிறாள். யார் என்னை என்ன செய்தாலும் எனக்கு ஒன்றுமில்லை என்கிறாள். அவளுக்குக் காமமே இல்லை. ஒரு நல்ல காமம் இருந்தால் மீண்டுவிடலாம் என்கிறாள். ஆனால் அவன் அவளை மீட்டுவிடுகிறான். காலைத் தொட்டே அவளைச் சின்னப்பெண் ஆக ஆக்குகிறான்.

 

அவன் நினைத்தால் அவளை வெறும் காலில் தொட்டே காமக்கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடியும். ஆனால் செய்யவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு நரம்புகளை அறிந்தவர்களுக்கு நரம்புகளின் சிறிய துடிப்பும் இன்பமும் ஒரு பொருட்டே கிடையாது. அவர்கள் அதைக் கடந்துவிட்டிருப்பார்கள்.

 

சத்யமூர்த்தி

சென்னை

அன்புள்ள ஆசிரியர்க்கு,

ஒரு இளம் வாசகனாக நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் , தங்களின் தளத்தில் வரும் கதை மற்றும் கவிதை தொடர்பான கடிதங்கள் , விவாதங்கள் வழியாக கிடைத்த நம்பிக்கையாலும் , என் வாசிப்பை பரிசோதனை செய்யும் முயற்சியாகவும் யா தேவி! கதையை பற்றி எழுதுகிறேன்.

எல்லாவிற்கு வரும் கொடுங்கனவுகள் வழியாகவே அவளுக்கு ஆண்களின் மேலிருக்கும் வெறுப்பை புரிந்து கொள்ள முடிகிறது. அவள் கனவுகளில் வரும் புழுக்கள் என்பவை அவள் உடலுக்குள் நுழைய துடிக்கும் ஆணின் விரைத்த தசை துண்டுகளே. பதினாறு வருடங்களாக ஆண்களால்  புணரப்பட்ட அவளுக்கு ஒரு ஆண் மருத்துவத்திற்க்காக தன்னை தொடுவதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்ரீ தன்  உள்ளத்தை அறிந்திருக்கிறான் என்பதாலையே உழிச்சலுக்கு ஒப்புக்கொள்கிறாள்.

 

அவளுக்கு இருக்கும் வெறுப்பினால் ஸ்ரீயை சீண்டி பார்க்கிறாள். ஸ்ரீயின் கண்களை பார்த்த பின்புதான் தன் மனநிலையை, விருப்பத்தை பகிர்ந்துகொள்கிறாள். இவ்வளவு துயர்களுக்கு பின்பும் எல்லாவிற்கு ஒரு ஆண் தேவைப்படுகிறான். காதலோடு தன்னுடன் உடலுறவு கொள்ளும் ஆணிற்காக அவள் ஏங்குகிறாள். அந்த ஆணின் உடல் வழியாக தன் உடலில் நுழையும் புழுக்களை அவளால் உதறிவிட்டு மீண்டுவிட முடியுமென நம்புகிறாள். இந்த இடத்தில் அம்பையன்னை சொன்னதையே மாற்றி சொல்லிப்பார்த்தேன் “பெண்ணுக்கு ஆண்தான் துணை அது பிரம்மன் வகுத்த விதி”. ஆனால் ஸ்ரீயின் வழியாக அவளுக்கு கிடைக்கும் மீட்பென்பது பிறிதொரு ஆணின் துணையில்லாமலே அன்னையென தன் பீடத்தில் எழுந்தமரச்செய்வது.

 

இந்த கதையை படிக்கும்போதே சமீபத்தில் பார்த்த ஒரு நேர்க்காணலின் மூலம் ஒரு பாலியல் நடிகையோடு தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. தன்னை ஒருபோதும் அறிந்திராதா ஒருவனை காதலனாக பெறுகிறாள் அந்த நடிகை. ஆனால் அவனுடைய காதலன் அவளை எப்படி ஏற்றுக்கொண்டான்? அவளை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு எந்தச்சிக்கலும் இல்லையா?  அப்படி சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒன்றை நாம் நம் மரபின் வழியாகத்தான் அணுகவேண்டுமா? போன்ற கேள்விகளும் தோன்றுகிறது.

 

 

நன்றியும் அன்புடனும்,

இரா.மணிகண்டன்

துபாய் (இராமநாதபுரம்)

 

யா தேவி- கடிதங்கள்-10

யா தேவி- கடிதங்கள்-9

யாதேவி -கடிதங்கள்-8

யா தேவி- கடிதங்கள்-7

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி – கடிதங்கள்-5

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி- கடிதங்கள்-3

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! – கடிதங்கள்1

 

முந்தைய கட்டுரைவெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு
அடுத்த கட்டுரைஅரசன் பாரதம் -சீனு