யா தேவி! [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
யாதேவி, மற்றும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களை வாசித்தேன். எல்லா கோணங்களிலும் வாசித்துவிட்டார்கள். ஆனாலும் வாசிப்பதற்கு கொஞ்சம் மிச்சமிருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் உங்கள் கதைகளின் சிறப்பு என்பது
எனக்கு ஒன்று தோன்றியது. வழக்கமாக நான் வாசிக்கும் தமிழ் கதைகள் இரண்டு வகையானவை. பெரும்பாலான கதைகள் மரபை மீறுகிறோம் என்று ஒரு சவால்தன்மையுடன் எதிராக எழுதப்பட்டிருக்கும். ஒழுக்கம், செண்டிமெண்ட்ஸ் எல்லாவற்றையும் ரிவர்ஸ் செய்திருப்பார்கள். இன்னொரு வகை கதை மரபான பார்வையில் வழக்கமாக சொல்லப்படும் ஒழுக்கம், செண்டிமெண்ட் இரண்டும் கொண்டதாக இருக்கும்
இதனால் என்ன ஆகிறது என்றால் வழக்கமாக வாசிப்பவர்கள் ஒரு கதையை வாசித்ததுமே அது மரபை ஏற்கிறதா மறுக்கிறதா என்று வகைப்படுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள். இது புரட்சிகரமான கதை, இது வழக்கமான கதை என்று சொல்வார்கள். உங்கள் கதைகள் இரண்டும் அல்ல. அவை புரட்சிகரமான ஒன்றைச் சொல்வதில்லை. மரபான மனங்களுக்கு உரியவையும் இல்லை. இரண்டையும் கடந்து ஒரு வேறு நிலையில் அவை உள்ளன
யாதேவி அப்படிப்பட்ட கதை. மரபான பார்வையில் பெண்ணை தெய்வமாக நினைப்பது, பிரம்மசரிய நெறியை போற்றுவது என்று இந்தக்கதை எழுதப்பட்டிருக்கும். மீறல் என்றால் அந்த போர்ன் ஸ்டார்தான் உண்மையான பெண் என்று சொல்லப்பட்டிருக்கும். சிலர் இரு கோணங்களிலும் இந்தக்கதையை வாசிக்கிறார்கள். இரண்டுமே இந்தக்கதை இல்லை
இந்தக்கதை பெண்ணின் பிழைகள், பாவம், பிரம்மசரிய விரதம் எதைப்பற்றியும் சொல்லவில்லை. இது ஒரு இமேஜைத்தான் முன்வைக்கிறது. தெய்வம் தன் அனேகாயிரம் ரூபங்கள் வழியாக இந்தப்ப்பூமியை ஆள்வதுபோல என்று சொல்கிறது. அதில் அந்த போர்ன் ஸ்டாரை கொண்டுவந்து வைக்கிறது. அது மீறல். ஆனால் எதிர்ப்பு அல்ல. அது கட்டில்லாத சுதந்திரத்துடன் கற்பனைசெய்வது மட்டும்தான்
அந்தப் பெண் தன் வடிவங்களால் பரவியிருப்பவள். தேவி அதேபோல உலகை ஆள்கிறாள். ஆகவே அவளும் தேவிதான். அல்லது தேவியை புரிந்துகொள்ள அவள் ஓர் உதாரணம்தான். அதைத்தான் ஸ்ரீதரன் புரிந்துகொள்கிறான். கால்கள் வழியாக.
உண்மையில் ஆன்மீகமான விஷயங்கள் இந்த கடந்த நிலையில்தான் இருக்கும் என நினைக்கிறேன். அதைநோக்கி கதைவழியாக வாசகர்களைக் கொண்டுசெல்கிறீர்கள். ஏற்கனவே கொஞ்சமாவது அந்த நிலையை உணர்ந்தவர்களுக்கான கதை இது. நாங்கள் இதை எங்கள் சந்திப்பில் பேசிக்கொண்டோம். பலபேர் இந்திக்காரர்கள். தியானம் பழகுபவர்கள். நான் இந்தக்கதையைச் சுருக்கமாகச் சொன்னேன். எல்லாருக்குமே கதை உடனே புரிந்தது. ஆச்சரியமாக இருந்தது
ஸ்ரீதர்
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் தளத்தில் வெளியாண “யா தேவி” சிறுகதை படித்தேன். பல்வேறு உட்குறிப்புகள் உள்ள சிறந்த கதை.
இரண்டு மரபுகளின் ஆதார முரண்பாடும் அவ்விடைவெளியில் நிகழும் பரிமாற்றமும் இக்கதையில் நேர்த்தியாக திரண்டு வந்துள்ளன.
எல்லா ஆன்ஸெல் தன்னை வெறும் உடலாக மட்டுமே உணர்கிறாள். அல்லது அப்படி உணர வைக்கப்படுகிறாள். அவ்வுடலும் ஆக்கிரமிக்கப்படுகிறது. மாற்றியமைக்கப்படுகிறது. முக்கியமாக அது அவளற்றதாக இருக்கிறது. எனவே தன்னை உடலிலிருந்து பிரித்தெடுக்க முற்படுகிறாள். உடலை மூர்க்கமாக பழி வாங்குகிறாள்.
எல்லா ஐரோப்பாவை சேர்ந்தவள். அங்கு மாம்சமும் ஆவியும் இரண்டு தனி அலகுகளாகவே இருக்கின்றன. பரலோகத்திற்குரியது ஆவி. மாம்சமோ மண்ணில் பிறந்து மண்ணுக்கே திரும்புவது. எல்லா புனிதர்களும் உடலையே முதலில் ஒடுக்குகிறார்கள். ஏனெனில் உடலை அறிந்துகொண்டதே மனிதர்களின் முதல் பாவம். எல்லாவோ பதினெட்டாயிரம் உடல்களோடு இருக்கிறாள். அவளுடைய ஆத்துமா அத்தனை உடல்களின் பாரத்தாலும் மூடப்பட்டுள்ளது.
ஆதி பாவத்தின் சுமையிலிருந்தே ஸ்ரீதரன் அவளை மீட்டு கொணர்கிறான். அவளது நோய்மைக்கான தீர்வும் அதுவே.
கடவுளின் தோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட ஏவாளின்மேல் ஒழியாத சாபமொன்று உள்ளது. பாவத்தின் வினையாய் அன்னையானவளின் கருப்பை ஒருபோதும் வேதனையின்றி திறப்பதில்லை. ஏவாளின் அந்த துயரையே எல்லா ஆன்ஸெல் பகிர்ந்துகொள்கிறாள். நேர்மாறாய் , ஸ்ரீதரன் இன்னொரு அன்னையின் கதையை முன்வைக்கிறான். படைத்து காத்து அழிக்கும் தெய்வங்களை ஈன்ற அன்னையான பராசக்தி. அவள் கருப்பை திறந்து பிரபஞ்சம் பிறந்தது. இனிய ஆடலை நிகழ்த்தும் அன்னை அவள். எல்லா அதை அறிந்து அமைதியடைகிறாள். “யா தேவி”.
உங்களுடைய “காமரூபிணி” சிறுகதை உடனடியாக நினைவில் எழுகிறது. ஆச்சர்யம்தான். எல்லாவினைப் போல் எந்த கசப்பும் சேராமல் மிக எளிமையாக வள்ளியம்மை அன்னையாக மாறிவிடுகிறாள்.
அன்புடன்,
விதூஷகன் ப்ரியன்