திராவிட இயக்கம், தலித்தியம்

 

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் பேசும்போது தலித்துக்களின் மேம்பாடு என்பது பெரியாரும் கருணாநிதியும் போட்ட பிச்சை என்று பேசியிருந்தா. தொடர்ச்சியாக தலித் இயக்கங்களை திராவிட இயக்கம் அணுகும் முறையில் இருக்கும் இடைநிலைச் சாதி மேட்டிமைப் பார்வையை நீங்கள் சுட்டிக் காட்டிவருகிறீர்கள். அந்த பேச்சு அதை பொட்டில் அறைந்ததுபோல காட்டியது.

எஸ்.அறிவழகன்

அன்புள்ள அறிவழகன்,

ஆர்.எஸ்.பாரதியின் உரை ஓர் உள்ளரங்க உரை. அவர் சரியான நிலையிலும் இல்லை. ஆகவே அது ஒரு வெறுப்புரை அல்ல, இயல்பான திண்ணைப்பேச்சு. ஆனால் அதில்தான் அவர்களுடைய உண்மையான உளநிலை, நம்பிக்கை வெளியே வருகிறது. அந்த உரையின் இரு பகுதிகள் பிராமணர்களைப் பற்றிய உக்கிரமான வெறுப்பு. அது தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு. இன்னொன்று தலித்துக்களைப் பற்றிய இளக்காரம் அருவருப்பு. அது உயர்வுணர்ச்சியின் வெளிப்பாடு. அவ்வியக்கத்தின் சாராம்சமான உளநிலைகள் அவை

இப்போதும் ஒன்று சொல்கிறேன், திராவிட இயக்கம் ஓர் அறிவியக்கம், ஒரு சமூகசீர்திருத்த இயக்கம், தமிழ் பொருளியல் –சமூகவியல் வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றிய இயக்கம் என்பதே என் எண்ணம். அவ்வியக்கம் வரலாற்றின் ஒரு விளைவு. அதன் கொடைகளை நான் மறுக்கப்போவதில்லை.

பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன்.

அ. தங்களுக்கு முன்பே உருவாகி நிலைகொண்டிருந்த தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் பண்பாட்டுக் கொடைகளை விரிவான அளவில் மக்கள்மயமாக்கியது திராவிட இயகத்தின் முதல் பெரும் சாதனை

ஆ.நவீன ஜனநாயக- சமத்துவக் கருத்துக்களை ஒரு பரப்பிய இயக்கத்தின் எல்லைக்குள் நின்றபடி எளிமையான வடிவில் என்றாலும் அடித்தள மக்களிடம் கொண்டுசென்றது திராவிட இயக்கம். அவர்களுக்கு மொழியையும் தன்னம்பிக்கையையும் அளித்தது.

இ. இந்து மதத்தின், இந்திய சாதியினரின் மரபுசார்ந்த மூடப்பழக்கம், பழமைவாத நோக்கு ஆகியவற்றை எதிர்த்து எளிமையான அறிவியல்நோக்கை நிலைநாட்ட அதனால் முடிந்தது

ஈ. இடைநிலைச் சாதி மக்கள் ஒருங்கிணைந்து அரசதிகாரம் நோக்கி நகர்வதற்கான ஊர்தியாக அமைந்தது, அவர்களின் அதிகாரத்திற்கான பீடமாகத் திகழ்வது. இடைநிலைச் சாதியினரின் வளர்ச்சி ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சியாக ஆகியது

இவற்றைக் கருத்தில்கொள்ளும்போதே இன்றைய ஒரு நவீன சிந்தனை அதில் காணும் மூன்று கூறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது

அ. அதன் மூர்க்கமான அல்லது கொச்சையான மரபு எதிர்ப்புத்தன்மை இந்தியாவின் பெருமரபின் நுண்ணிய தளங்கள் பலவற்றை நிராகரிப்பது. இந்தியாவை வரலாறற்றதாகச் சித்தரிக்கும் ஐரோப்பிய நோக்கை கடன் வாங்குவது.

ஆ. அதன் எளிமையான நிரூபண அறிவியல் நோக்கு கவித்துவமான, ஆன்மிகமான, தொன்மம்சார்ந்த மெய்யறிதல்களுக்கு பெரும் தடையாக அமைவது

இ. அதன் மொட்டையான இந்துமத எதிர்ப்பு தொடக்கம் முதலே மாபெரும் இந்து பாரம்பரியத்தை, அதன் ஆன்மிக- தத்துவ மேன்மைகளை அழிக்க நினைக்கும் மதமாற்ற சக்திகலுக்கு துணைபோவது

ஈ. அதன் தொடக்கம் முதலே இருந்துவந்த பிராமணக் காழ்ப்பு நாஸி இனவெறிக்கு நிகரானது. உண்மையில் ஃபாஸிஸ நாஸிஸ கொள்கைகளையும் சொல்லாடல்களையும் அப்படியே கையகப்படுத்திக்கொண்டது. எந்த ஒரு மக்கள்குழுவையும் வெறுப்பால் அடையாளப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் முற்போக்கானது அல்ல

உ. அதன் உள்ளடக்கமாக மெல்லமெல்ல திரண்டு வந்துள்ள இடைநிலைச் சாதி மேலாதிக்க நோக்கு தலித் பண்பாட்டுக்குமேல் ஆதிக்கம் செலுத்துவது. அவர்களின் வரலாற்றை அழிப்பது, மறைப்பது திரிப்பது. அவர்களை தங்கள் கருணையால் வளர்ந்தவர்கள், தங்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டியவர்கள் என்ற கதையை உருவாக்குவது.

தலித்துக்கள் பற்றிய ஆர்.எஸ்.பாரதியின் கருத்துத்தான் ஈவேரா அவர்களிடமும் இருந்தது.

1950 ல் நான் சொன்னேன்,  இது மனுதர்ம சாஸ்த்திரத்தின் மறுபதிப்பு; ஆகவே,இதைக் கொளுத்த வேண்டும்’ என்று. இந்த சட்டம் எழுதியவர்களில் 4 பேர் பார்ப்பனர்கள் இன்னும் இருவரில் ஒருவர் அம்பேத்கர்,இன்னொருவர் சாயபு.

அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சி உள்ளவர்.அவர் என்னைக் கேட்டார் ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று.நிறைய விவரங்களை கொடுத்தேன் அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார் உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள்.

அது என்ன விலை என்றால் அவர் தன் மக்களுக்கு 100க்கு 10 இடம் கல்வியில் வசதி,உத்தியோக வசதி கேட்டார்.அவன் ’15 ஆக எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டான்.அவனுக்கு தெரியும் 25 இடம் கொடுத்தால் கூட அவர்களில் 3 அல்லது 4 பேர் கூட வரமாட்டார்கள் என்று.பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டார்.மற்றவர்கள் சங்கதியை பற்றி அவர் சிந்திக்கவில்லை.

இத்தகைய மோசடி சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.அந்த முயற்சியாக இந்தச் சட்டத்தைத் தீயிலிட்டுப் பொசுக்கப் போகிறோம்

ஈவேரா அவர்களின் சுவாமிமலைச் சொற்பொழிவு- விடுதலை 11.11.1957  

இந்த வகையான பேச்சுக்களை ஈவேரா அவர்களிடம் நிறைய காணலாம். பத்திபத்தியாக. உடனே அவர் எந்தச்சூழ்நிலையில் எந்த நோக்கில் பேசினார் என்று பார்க்கவேண்டும் என ஆரம்பிப்பார்கள். ஆனால் காந்தி இருபத்தெட்டு வயதில் சொன்ன வரியைக்கொண்டு காந்தியை வரையறை செய்யவும் செய்வார்கள்.

இந்த பேச்சில் உள்ள உணர்வுநிலையை கவனியுங்கள். அம்பேத்கர் அன்று ஒரு தேசியத் தலைவர் – உலகம் முழுக்க அறியப்பட்டவர். முறையான பெருங்கல்வி கொண்டவர். சட்டம்- தத்துவம்- சமூகவியல் சார்ந்து மிக ஆழமான ஆய்வுகள் செய்த பேரறிஞர். இந்தியாவின் தத்துவ- சமூகவியல் ஆய்வுகளின் முன்னோடிகளில் ஒருவர்.

அவருடன் ஒப்பிட ஈவேரா படிப்பே அற்றவர். எந்த துறையிலும் முறையாக எந்தக் கல்வியும் அவருக்கு இல்லை. தானே கற்றுக்கொள்ளும் முனைப்பும் இருந்ததில்லை. சமயம், தத்துவம், சமூகவியல் தளங்கலிள் அவருக்கு அடிப்படைப் புரிதல்களே இல்லை. அவர் பேசியதெல்லாமே பாமரத்தனமான பேச்சுக்கள்தான். அவருடைய ஆதரவாளர்களேகூட அவர் பாமரர்களின் சிந்தனையாளர் என்று சொல்லித்தான் அவருடைய தவறுகளை முரண்பாடுகளை நியாயப்படுத்துவார்கள்

தமிழகத்தின் மிகச்சிறிய வட்டத்துக்கு வெளியே அவருக்கு எந்த ஆதரவுப்புலமும் அன்று இருக்கவில்லை. ஒரு தேசத்தலைவரை நோக்கி ஒரு பஞ்சாயத்து தலைவர் பேசும் பேச்சு இது. கவனியுங்கள் இதிலுள்ள தோரணையை. மனசாட்சி உள்ளவர்கள் யோசிக்கட்டும். இந்தியாவின் மாபெரும் தேசத்தலைவர்களான காந்தியும் நேருவும் அம்பேத்கருடன் முரண்பட்டு விவாதித்துக்கொண்டே இருந்தவர்கள். பேரரறிஞர்களான ராம் மனோகர் லோகியாவும் ஈ.எம்.எஸும் அவருடைன் மாறுபட்டு பேசியவர்கள். எவரேனும் ஒரு சொல்லேனும் அம்பேத்கரின் மாபெரும் கல்வியை, நேர்மையை மறுத்து சொன்னதுண்டா? எந்த சந்தர்ப்பத்திலேனும் சற்றேனும் சிறுமைப்படுத்தியது உண்டா?

ஆனால் அம்பேத்கருக்கு ஒன்றும் தெரியாது, தான் சொல்லிக்கொடுத்தேன் என்கிறார் ஈவேரா. ஆனால் பார்ப்பனர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அம்பேத்கர் சோரம்போனார் என்கிறார். அவருடைய கல்வி,நேர்மை எதுவும் இவருக்கு ஒரு பொருட்டல்ல. இந்த சிறிய ஆளுமைக்கு அந்த மாபெரும் ஆளுமை ஏன் கண்ணுக்குப் படாமலேயே போய்விட்டது? இட ஒதுக்கீட்டின் பயன்கள் என்ன என்று நாம் இன்று அறிவோம், ஆனால் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீட்டால் பயனே இல்லை, அது வெறும் ஏமாற்று என்கிறார். அதாவது பிற்படுத்தப்பட்டோர் [நம்] ஒதுக்கீடுதான் பயனுள்ளது, அவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார். இந்த  தோரணை எப்படி வந்தது?

அந்த மேட்டிமைத்தனம்தான் ‘பிச்சைபோட்டோம்’ என்ற ஆர்.எஸ்.பாரதியின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அது எப்போதும் உள்ளே இருக்கும். அதை தனிப்பட்ட முறையில் உணராத ஒரு தலித் கூட இருக்கமாட்டார் – திருமாவளவன் உட்பட. அந்த மேட்டிமைத்தனம்தான் அயோத்திதாசரில் தொடங்கும் ஒட்டுமொத்த தலித் இயக்கத்தையே மறைத்து ஈவேராவிலிருந்து ஆனா ஆவன்னாவை தொடங்குகிறது.

இன்றைய நவீன அறிவியக்கவாதி திராவிட இயக்கம் உருவாக்கும் காழ்ப்புகள், எளிமைப்படுத்தல்கள், வரலாற்றுத்திரிப்புகளில் இருந்து வெளியேறியாக வேண்டும். தன் சாதிப்பற்றால் அதை பேணிநிற்பான் என்றால், வகைவகையான் சப்பைக்கட்டுகளே அவனுக்குப் போதும் என்றால் அவன் சிந்திக்கவே தொடங்கவில்லை. எளிய மதவெறியர்களுக்கும் அவனுக்கும் வேறுபாடில்லை.

ஜெ
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1
திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…
திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்
திராவிட இயக்க இலக்கியம் – ஒரு வினா
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்
கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3
கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2
கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]
முந்தைய கட்டுரைமறைசாட்சி தேவசகாயம் பிள்ளை
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-9