வைக்கம் ,காந்தி, அய்யன்காளி

வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

அன்புள்ள ஜெ,

வைக்கம் போராட்டம் சார்ந்து காந்தி எழுதிய கடிதங்களை தொகுத்து கிண்டிலில் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

காந்தியின் இந்த கடிதங்கள் இதுபற்றி  நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கின்றன.

வைக்கம் சத்தியாக்கிரகம் (Tamil Edition)

இதில்

“தீயா வகுப்பினரின் மத குருவான ஸ்ரீ நாராயண குரு, தற்போதைய வைக்கம் சத்தியாகிரக முறைகளை ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அடைப்பு வேலி போடப்பட்டுள்ள ராஷ்த்தாக்களின் வழியாகத் தொண்டர்கள் சென்று வேலிகளைத் தாண்டிவிடவேண்டும் என்றும், பின்னர் அவர்கள் கோவில்களுக்குள் பிரவேசித்து மற்றவர்களுடன் சாப்பிட உட்கார வேண்டுமென்றும் அவர் யோசனை கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி விவரங்களை நான் சுருக்கிக் கூறியிருக்கிறேன் என்றாலும் பெரிதும் அந்த குரு  கூறிய அதே வார்த்தைகளையே குறிப்பிட்டுள்ளேன்.”””

இப்படி நாராயண குரு ஏன் சொன்னார். அவருக்கு சத்தியாகிரகத்தின் மேல் நம்பிக்கை போய்விட்டிருந்ததா?.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

 

அன்புள்ள பழனிவேல் ராஜா,

வைக்கம் போராட்டம் பற்றிய நூல்கள் அனைத்திலும் உள்ள செய்தி, நானும் எழுதியது, தொடக்கத்தில் நாராயண குருவுக்கு வைக்கம் போராட்டத்தில் ஈடுபாடே இருக்கவில்லை என்பதுதான். உண்மையில் அப்போதுதான் காந்தி அவருடைய சத்யாக்ரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தார். ஆகவே அதை பெரும்பாலும் அன்றிருந்த எவருமே புரிந்துகொள்ளவில்லை. காந்தியின் மாணவர்களான நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் உட்பட

சத்யாக்கிரகம் இந்தியாவின் தொன்மையான சமணக் கலாச்சாரத்தில் இருந்து வந்தது. பல்வேறுவகையான சாத்வீகப் போராட்டங்கள் ஏற்கனவே இந்திய மரபில் இருந்துள்ளன. ஆனால் அன்றைய யுகத்தில் எவரும் உருவகம் செய்து பார்க்கவில்லை. அதன் தேவையும் இயல்கைகளும் அன்றையோர் கற்பனைக்குச் சிக்கவில்லை. நாராயணகுரு மட்டுமல்ல அன்றிருந்த பெரும்பாலான கேரள சமூகசீர்திருத்தவாதிகள் தொடக்கத்தில் அதை ஏற்கவில்லை

வைக்கம் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று டி.கே.மாதவன் நாராயணகுருவிடம்தான் வந்து சொல்கிறார். அவர் நாராயணகுருவின் முதன்மை மாணவர்களில் ஒருவர். அன்று நாராயணகுருவின் இயக்கம் வீச்சுடன் எழுந்து வந்துகொண்டிருந்தது. பெரும் சமூக- அரசியல் பணிகள் தொடங்கிவிட்டிருந்தன. அது தமிழகம், கர்நாடகம் உட்பட பிற தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திற்குமே முன்னோடியும் வழிகாட்டியும் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னரே பாரதி அதைப்பற்றி பரவசம் கொண்டு எழுதியிருப்பதைக் காணலாம்

ஆனால் நாராயண குரு வைக்கம் போராட்டம் தேவையற்றது என்று கருதினார். ஏனென்றால் எதிர்ப்பரசியலில் அவருக்கு நம்பிக்கை இல்லை, அவருடையது ஆக்க அரசிய.ல். ‘நம்மை ஒருவன் வரவேண்டாம் என்று சொன்னால் அங்கே ஏன் நாம் செல்லவேண்டும்?” என்று அவர் கேட்டார். நமக்கான ஆலயங்களை நாமே உருவாக்குவோம் என்றார்.

டி கே மாதவன்

ஆனால் டி.கே.மாதவன் அதை ஏற்கவில்லை. அவர் அன்னிபெஸண்டை அணுகி ஆதரவு கோருகிறார். அதன்பின்னரே காந்தியிடம் வருகிறார். காந்தியும் முதலில் அது பெரிய விஷயம் என நினைக்கவில்லை. ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக ஒருங்கிணைய வேண்டிய இந்தியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள வழிவகுக்கும் என ஐயம் கொள்கிறார். அதன்பின் வெள்ளையரின் தூண்டுதல் உண்டா என்றும் எண்ணுகிறார்.

காந்தியை மூன்றுமுறை சந்தித்து தன் தரப்பை நிறுவி ஏற்றுக்கொள்ள வைப்பதில் டி.கே.மாதவன் வெற்றியடைந்தார். விளைவாகவே காந்தி வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்தார். காந்தி வடிவமைத்ததே சத்யாக்ரகப் போராட்டம். அதன் நெறிகள் எல்லா சாதியினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும், வன்முறை கூடாது, போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து மனமாற்றத்தை உருவாக்கவேண்டும் என்னும் மூன்று அம்சங்கள் கொண்டவை.

காந்தியின் நிபந்தனைகளை டி.கே.மாதவன் ஏற்றுக்கொண்டார். அவ்வாறுதான் போராட்டம் ஏற்பாடாகியது. அப்போதும் நாராயணகுரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “கொஞ்சம்பேர் இப்படி அமர்ந்திருந்தால் ஆலயக்கதவு திறக்குமா?” என்றுதான் அவர் கேட்டார். “வேண்டாம் என்றால் வேண்டாம். வேண்டும் என்றால் சென்று பிடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று அவர் சொன்னார்.

சகோதரன் அய்யப்பன்

நாராயணகுருவுக்கு வன்முறையில் நம்பிக்கை இருந்ததா? அவர் வன்முறையை கையில் எடுக்கவில்லை. கல்வி, தொழில், தனிவழிபாட்டுமுறை, சமூக ஒருங்கிணைவு ஆகியவற்றை மட்டுமே மீட்புக்கான வழியாக முன்வைத்தார். ஆனால் அவர் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. தேவை என்றால் வன்முறையைக் கையிலெடுப்பதற்கு தயங்காதவர்தான். காந்தியின் வழிகளை அவர் ஏற்கவில்லை. தன் அமைப்பை வைக்கம் போராட்டத்தில் ஈடுபடுத்தவுமில்லை.

ஆனால் வைக்கம் போராட்டம் , நான் பலமுறை சொல்லியதைப்போல, எல்லா சத்யாக்ரக போராட்டங்களையும்போல ஒரு மாபெரும் பிரச்சார இயக்கம். அது தன் தரப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்றது. பலதரப்பினர் அதை நோக்கி வந்தனர். மாறுபட்ட அரசியல்கள் கொண்டவர்கள் அதில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நாராயணகுரு வைக்கம் போராட்டத்தை ஆதரித்தார். காந்தி அவரை நேரில் சந்தித்தது அதற்கு முதன்மைக் காரணம்

பெரும் இயக்கமான நாராயணகுருவின் அமைப்பு போராட்டக் களத்தில் வந்ததுதான் போராட்டம் வெற்றியுடன் முடிய முதன்மைக் காரணம். நாராயணகுருவின் அமைப்பு முழுக்கமுழுக்க அகிம்சை நம்பிக்கை கொண்டது அல்ல என்பதும், ஆகவே வன்முறை வெடிக்கலாம் என்னும் ஐயம் உருவானதும் போராட்டம் வெற்றிபெற ஒரு காரணம் என சில வரலாற்றாசிரியர்கள் சொன்னதுண்டு. ஆனால் நாராயண குரு – மன்னத்து பத்மநாப- அய்யன்காளி கூட்டு அமைந்ததுமே போராட்டம் வென்றுவிட்டது. கேரள இந்து சமூகத்தின் மூன்று மாபெரும் அமைப்புக்களின் கூட்டு அது.

ஜெ

அய்யன் காளி

அன்புள்ள ஜெ

இரண்டு நூல்களை ஒரேசமயம் வாசித்தேன். பழ அதியமான்எழுதிய வைக்கம் போராட்டம் நூலில் அய்யன்காளி வைக்கம் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று இருந்தது. நிர்மால்யா மொழியாக்கம் செய்த மகாத்மா அய்யன்காளி நூலில் அவர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று செய்தியுடன் அவர் ஈடுபடும் படமும் இருந்தது. எது உண்மை?

கே.அரவிந்தன்

ஏ கே கோபாலன்

அன்புள்ள அரவிந்தன்,

இதில் என்ன அப்படி ‘உண்மைகாணும் தேடல்?’. பழ அதியமான் எழுதிய நூல் ஆய்வுநூலே அல்ல. மூலநூல்கள், மலையாள நூல்கள் எதையுமே அவர் பார்க்கவில்லை. பெரும்பாலும் தமிழில் எழுதப்பட்ட, அவருடைய கட்சிச் சார்பான நூல்கள் மற்றும் குறிப்புகளைச் சார்ந்து எழுதிய தற்சார்பு நூல். தன் கட்சியினரின் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் கிடைக்கும் செய்திகளை தொகுத்து எழுதியது- வழக்கமான திராவிட இயக்க பிரச்சார நூல் மட்டுமே.. அது எந்தவகையிலும் ஆய்வாளர்களால் பொருட்படுத்தத் தக்கது அல்ல.

வைக்கம்வீரர் உள்ளிட்ட  ‘தொன்மங்கள்’ ஏன் கட்டமைக்கப் படுகின்றன என்று புரிந்துகொள்ளுங்கள். நாராயணகுரு, டி.கே.மாதவன் முதல் சகோதரன் அய்யப்பன், அய்யன்காளி முதலிய அடித்தளச் சாதியினரான, கீழ்நிலையில் இருந்து எழுந்து வந்து களத்தில் நின்ற உண்மையான போராட்டத் தலைவர்களை மறைக்கும் பொருட்டு, அங்கே ஈவேரா அவர்களை நிலைநாட்டும் பொருட்டு. தலித்துக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் எல்லா உரிமைகளும் உயர்சாதியினர் – இடைநிலைச் சாதியினர் ‘இட்ட பிச்சை’ என நிறுவும் பொருட்டு

யோசித்துப் பாருங்கள், இன்று நான் வைக்கம் போராட்டம் பற்றி இத்தனை எழுதி, இவ்வளவு வசைகளை பெற்றபின் இவர்கள் எழுதும் வைக்கம் வரலாற்றில் வேண்டாவெறுப்பாக  டி.கே,மாதவனின் பெயர் இடம்பெறுகிறது. இதற்குமுன், ஆம் நான் சொல்வதற்கு முன், டி.கே.மாதவன், அய்யன்காளி பற்றி இவர்கள் தமிழில் என்ன எழுதியிருக்கிறார்கள்? அவருடைய படமே நான்தான் மலையாளத்திலிருந்து தமிழில் கொண்டுவந்து பிரசுரித்தேன். இதே விதிதானே அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோருக்கும்?

அத்தனை வரலாற்று ஆதாரங்களையும் புறக்கணித்து, அத்தனை மாமனிதர்களையும் சிறியவர்களாக ஆக்கி ஒருவகை ‘மதவெறியோடு’ இவர்கள் எழுதும் பொய்வரலாற்றின் அடிப்படை இதுதான். வைக்கம்போராட்டத்தில் தலைமைதாங்க அங்கே ஆளில்லாமல் தன்னை அழைத்தார்கள் என்று ஈவேரா அவர்களே சொல்லியிருக்கிறார். அந்த மனநிலையின் தொடர்ச்சியே இன்று பழ.அதியமான் வரை நீள்கிறது. சாதிமேட்டிமைநோக்கு , வரலாற்றை ஆக்ரமிக்கும் இலக்கு என்பதற்கு அப்பால் இதில் எந்த உள்ளடக்கமும் இல்லை.

 

ஜெ

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

பெரியார்மதம்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

சந்திரசேகரரும் ஈவேராவும்

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

நம் நாயகர்களின் கதைகள்

வைக்கமும் ஈவேராவும்

நாராயண குரு எனும் இயக்கம் -1

நாராயண குரு எனும் இயக்கம்-2

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-6
அடுத்த கட்டுரைவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு