யா தேவி! – கடிதங்கள்-5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

யா தேவி, எளிய கதையைப்போல் இருக்கும், ஆனால் சத்தியத்தில் அப்படியல்லாத இக்கதை வாசித்து இரண்டு நாட்களாகியும் உள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நோயாளி பாலியல் படங்களில் நடித்த பெண், ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவரோ சக்தி உபாசகர்,  இருவருக்குள்ளான உரையாடலிலேயே கதை நகர்கின்றது.

 

பாலியல் தொழிலாளியான அவள் உடலில் நோயை உண்டாக்கிய ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு பிறகு, உழிச்சல் சிகிச்சையில், ஆன்மாவை மீட்டெடுக்கும் ஆண் ஒருவர், உடலைத்தொட்டு செய்யும் சிகிச்சைக்கு அவள் காட்டும் எதிர்வினையும், உரையாடல்களில் இருக்கும் ஆழமும், அந்த ஸ்ரீதரனின் பாத்திரமும் உடல் மனம் ஆன்மா இம்மூன்றிற்குமான சிகிச்சைமுறையான , ஆயுர்வேதத்தின் நுட்பங்களுமாக  கதை அபாரமாக இருந்தது.

 

அவள் வாழ்ந்த வாழ்வின் தாக்கமும் வேதனையும் அவளுக்கு வரும் கொடுங்கனவுகளிலிருந்து தெரியவருகின்றது. பாலுறவை தொழிலாக அதுவும் படங்களில் ”நடிக்கும்’ தொழிலாக செய்யும் துர்பாக்கியசாலி பெண்களைப்பற்றி இத்தனை ஆழமாக நினைத்துப்பார்த்ததே இல்லை.

 

பாலுறவு நோக்கமும்,  சிந்தனையுமே கூட இல்லாத ஒரு ஆணின், மருத்துவனின் மெல்லிய தொடுகையில் சிறுமியைப்போல  அவள் கிளுகிளுத்து சிரித்தது என்னவோ என்னை அப்படி வேதனைக்குள்ளாக்கியது   இது ஒரு கதை அவள் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்னும் உணர்வெல்லாம் மறந்து அந்த பெண் மீது பெரும் கனிவும் வாஞ்சையும் உண்டாகியது. 10 வயதில்,, முதல் ஆணை அறிவதற்கு முன்னிருந்த சிறுமியை அவளுக்குள்ளிருந்து மீட்டெடுத்த சிகிச்சை.

 

வாசித்ததில் தோன்றியதை உங்களுக்கு எழுதிவிட்டேன் என்றாலும்

 

ஆணின் உடல் ஒரு பொருட்டே அல்ல என்று சீறும் பெண்,

மண்ணை அறிந்திராத அவளின் பாதங்கள்,

அவளைப்போலவே ஆயிரமாயிரம் சொரூபங்கள்,

 

ஸ்ரீவித்யை வழிபாட்டில் இருக்கும், பிரபஞ்சத்தையே பெண்ணாக உருவகித்து, பராசக்தியாக நினைத்து, அவள்பாதங்களே போதும் என்னும் மருத்துவருமாக, கதையைக்குறித்த சிந்தனைகளால் பழைய புராணப்படங்களில் வருவதுபோல அடுத்தடுத்து  ஒவ்வொரு கதவாக திறந்துகொண்டேயிருக்கிறது உள்ளே!

 

”எத்தனைகோடி நட்சத்திரங்கள், எத்தனை பிரபஞ்சங்கள்

யார் அதை முழுக்க விளக்க முடியும்”?

 

அன்புடன்

லோகமாதேவி

அன்புள்ள ஜெ

 

யா தேவி விசித்திரமான உணர்வுநிலைகளை உருவாக்கியது. ஆண்கள் அக்கதையை எப்படிப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு அந்தக்கதை ஒரு பெரிய துணுக்குறலையும் பதற்றத்தையும் அளிக்கும். நாளும் ஆயிரக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் பெண் என்னும் படிமம் ஒரு பயங்கரமான கனவுபோல.

 

அது ஒரு ஒழுக்கப்பிரச்சினை இல்லை. நெறிதவறுதல் கெட்டுப்போதல் ஆகியவற்றைப் பற்றியும் இல்லை. அதை பெண்கள்தான் உணரமுடியும். ஆண்கள் அதை உணர்வார்களா என்று தெரியவில்லை. பெண்களைப்பொறுத்தவரை அந்தக்கதையில் இருப்பது அந்த அடையாளமில்லாத நிலை. மட்கிப்போவது போல. பெண்கள் பெரும்பாலானவர்கள் பாலியல் அத்துமீறலை கனாவில் காண்பவர்கள். அது ஒரு நிரந்தரமான பயம்.

 

அந்த பொம்மை எது? அவளுடைய உடலில் எது பிறரை காமம் கொள்ளச் செய்கிறதோ அதெல்லாம் பிரித்து எடுத்து அந்தப் பொம்மையாக ஆக்கிவிடுகிறார்கள். அதை நகல் செய்து விற்கிறார்கள். அவ்வாறு நகல்செய்ய முடியாத ஒன்று அவளிடம் மிச்சமிருக்கிறது. அதைத்தான் ஸ்ரீதரன் பார்க்கிறான். அவள் காலைத் தொட்டு அவன் அறிவது அதைத்தான்.

 

ஸ்ரீ

 

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி- கடிதங்கள்-3

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! – கடிதங்கள்

 

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி : இந்தியன் 2 பட உதவி இயக்குநர்கள்
அடுத்த கட்டுரைபாவம் மேரி