அன்புள்ள ஜெ,
தற்செயலாக ஒரு படம் பார்த்தேன். ஒரு மலையாள இணைய தளத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரில்லர்களை வகைப்படுத்தியிருந்தனர். அதில் சிறந்த மெடிக்கல் திரில்லர் என்று இது சொல்லப்பட்டிருந்தது.. பகத் ஃபாஸில், முரளி கோபி, ஹனி ரோஸ் நடித்தபடம். இயக்கம், எடிட்டிங் .அருண்குமார் அர்விந்த்.
நான் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். எளிமையான மலையாளப்படம் அல்ல. மிகக்கூர்மையான எடிட்டிங். அபாரமான காட்சியமைப்புக்கள். ஒவ்வொரு காட்சிக்கும் விசித்திரமான காட்சியமைப்பு. ஆனால் எந்தக்காட்சியும் துருத்துக்கொண்டும் இல்லை. அதோடு மிகமிக மென்மையான, அதிராமலேயே திகில்கூட்டும் இசை. எல்லாமே நாம் தமிழில் பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டிய தரம். சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த மிகச்சிறந்த திரில்லர்களில் ஒன்று
திரில்லர்தான். ஆனால் பரபரப்பு இல்லை. படம் முழுக்க ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.உணர்ச்சிகள் எல்லாமே மிக மிக குறைவாகச் சொல்லப்பட்டிருந்தன. எல்லா காட்சிகளுமே சுருக்கமானவை. பார்வையாளனுக்கு ஊகிக்கவேண்டியவை ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் இருந்தன. யோசித்து யோசித்துத்தான் படம் பார்க்கவேண்டியிருந்தது.
ஏராளமான நுட்பங்கள். பெரும்பாலானவை உளவியல் நுட்பங்கள். இரட்டையர் என்றால் ஒருவரின் உள்ளம் ஒருவருக்குள் எப்படி உள்ளே செல்லமுடியும்? பேயா அல்லது சைக்காலஜிக்கல் பொஸஷனா? ஒவ்வொரு நுட்பமாக அவிழ அவிழ மனிதமனம்தான் எத்தனை ஆழமானது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இந்த அளவுக்கு ‘செல்ஃப்’ என்பதை உள்ளே புகுந்து நொறுக்கிய ஒரு இந்தியப்படத்தை நான் முன்பு பார்த்ததில்லை.
ஒட்டுமொத்தமாக மூளையைப்போட்டு முறுக்கிக்கொண்டே இருக்கும் அனுபவம். கடைசியில் சட்டென்று ஒரு உடைவு. கிளைமாக்ஸ். இந்திய சினிமாக்களில் மிகவும் அபூர்வமாகவே இப்படி ஒரு காட்சிவழி அனுபவம், ஒரு திரில்லர் அனுபவம் கிடைக்கிறது
நான் கடைசியாகத்தான் பார்த்தேன். கதை,திரைக்கதை,வசனம் ஜெயமோகன். நீங்களேதானா என்று இன்னொருமுறை பரிசோதனை செய்தேன். நீங்களேதான். ஆச்சரியமென்றால் ஆச்சரியம். ஆனால் இந்தப்படம் பற்றி எங்கேயாவது ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என்று பார்த்தேன் இல்லை. ஏன் என்றே புரியவில்லை.
இதுவரை இதுபோல ஒரு அபாரமான திரைக்கதையை தமிழில் நீங்கள் எழுதவில்லை. தமிழில் இப்படி ஒரு படத்தை நீங்கள் எழுதவேண்டும்.
டி.ஜெய்கணேஷ்
அன்புள்ள ஜெய்கணேஷ்
நான் பொதுவாக நான் எழுதும் படங்களைப் பற்றி எழுதுவதில்லை. அது என் தொழில், அவ்வளவுதான். எப்போதாவது எழுத நேர்ந்தால் சில காரணங்களுக்காகத்தான்.
ஒன்று, தார்மீகமாக சிலவற்றைச் சொல்லியாகவேண்டும். சர்க்கார் படவிவகாரம்போல. நான் அந்தத் திரைக்கதை விவாதத்தில் பங்கெடுத்து, அதை உருவாக்குவதில் பணியாற்றிவிட்டு அமைதியாக இருப்பது எவ்வகையிலும் அறம் அல்ல. என்ன சொல்வார்கள் என எனக்குத் தெரியும், தமிழ் சினிமாத்துறையின் பேரங்கள் சமரசங்கள் வம்புகள் எல்லாமே எனக்கு தெரிந்தவைதான். ஆனால் என் நேர்மையை என் வாசகர்கள் அறிவார்கள், அவர்களிடமன்றி வேறெவரிடமும் நான் என்னை நிரூபிக்கவேண்டியதில்லை என நினைத்தேன்.
இன்னொன்று, ஒரு சினிமாவை முன்வைத்துச் சில அடிப்படைகளைப் பேசமுடியும். அது பரவலாகக் கவனம்பெறும். 2.0 படத்தை முன்வைத்து அறிபுனைவு- அறிவியல் மிகைபுனைவு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை பேசமுடிந்தது. மிஷ்கின் படத்தை முன்வைத்து புனைவில் தகவல்களின் இடம் பற்றி. அல்லது வானம் கொட்டட்டும் படத்தை முன்வைத்து கதாபாத்திர வளர்ச்சிக்கோடு பற்றி.
சினிமா பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் சினிமாவேயா என்ற சலிப்பு. ஆகவே முற்றாக தவிர்க்கவே எண்ணுகிறேன். ஒன் பை டூ அப்படி தவிர்க்கப்பட்டதுதான். மேலும் அது மலையாளப்படம்.
அந்தப்படம் எடுக்கும்போதே ஒரு ‘கூல் திரில்லர்’ வகை படம் என உத்தேசிக்கப்பட்டது. ஒரு ‘மெடிக்கல்- சைக்காலஜிக்கல் திரில்லர்’ வகைமை என அமைக்கப்பட்டது. உளச்சிக்கலில் இருந்து உளச்சிக்கலை நோக்கிச் செல்லும் படம். தொடங்கும்போது அது ஒரு சிறியபடம், முரளி கோபி கதைநாயகன். ஆனால் கடைசியில் ஃபகத் ஃபாசில் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் படம் பெரிதாகியது.
படம்வெளியானபோது ஃபகத் வெற்றிநாயகன். ஆகவே படம் பரபரப்பான ஆக்ஷன்படமாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது.முன்னோட்டம் விளம்பரம் எல்லாம் அந்தக்கோணத்திலேயே செய்யப்பட்டன. அது திரையரங்கில் எதிரொலித்தது. படம் ஃபகத் பாசிலின் ஈர்ப்பால் வணிகரீதியாகத் தப்பித்துக்கொண்டது – ஆனால் அப்போது அது உரியமுறையில் பேசப்படவில்லை. விமர்சனக் கவனம் பெறவில்லை
ஆனால் தொலைக்காட்சியில் வெளியாகி, பின்னர் இணையம்வழி வெளியாகி அது முக்கியமான படம் என்று சொல்லப்பட்டது. பல பட்டியல்களில் அந்தப்படம் மலையாளத்தின் கூரிய திரில்லர், சவாலான திரைக்கதை என்றெல்லாம் சொல்லப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். சமீபகாலமாக அதிகமாகப் பேசுகிறார்கள்
அது ஒரு சிக்கலான படம். எல்லாருக்கும் பிடிக்காது. நீங்கள் சொல்வதுபோல மூளையைக் குடைந்துகொண்டே இருக்கும். தெளிவாகவே நகராது. ஒருசாராருக்கு தீவிரமாக உள்ளே இழுத்துக்கொண்டு நெடுங்காலம் நினைவில் நிற்கும் படமாகவும் இன்னொருசாராருக்கு உட்கார்ந்து பார்க்கவே முடியாத படமாகவும் இருக்கும். சாதாரண வணிக திரில்லர் படம் அல்ல. அதன் உள்ளடுக்குகள் சிக்கலானவை. அதோடு அது பொதுவாக பெண்களுக்குப் பிடிக்காது.
அதை மலையாளத்தில் சிறிய பட்ஜெட் படமாகவே எடுக்கமுடியும். தமிழில் எண்ணிப் பார்க்கவே முடியாது. நம்மூர் விமர்சகர்கள் தலைகால் புரியாமல் கிழித்து வீசிக் கூத்தாடிவிடுவார்கள். இங்கே அதற்கு சிலநூறுபேர்கூட ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். எனக்கு தமிழ் சினிமாப் பார்வையாளர்கள் பற்றிய நல்ல புரிதல் உண்டு.
மேலும் தமிழில் எவரும் என்னிடம் கதை கேட்பதில்லை. இயக்குநர்கள் நடிகர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் சொல்லி ஏற்கவைத்த ஒரு கருவை கதையாக விரித்து காட்சிகளாக அமைப்பதே என் பணி. அது ஒருவகை தொழில்நுட்ப வேலை அவ்வளவுதான்
ஜெ