வெண்முரசு- கல்பொருசிறுநுரை

வெண்முரசு நாவல்நிரையின் அடுத்த நாவல் ‘கல்பொருசிறுநுரை’. சங்கப்பாடலில் எனக்கு பிடித்த சொல்லாட்சி. கல்லில் பொருதி மறையும் சிறு நுரை. ஒரு பெருஞ்சிரிப்பு போல எழுந்து பொலிந்து அக்கணமே மறைந்து பின்வாங்கி இல்லையென்றாகி நிகழவே இல்லையோ என்று மறையும் அலை. ஆனால் அலைகள் மீளமீள நிகழ்வனவும்கூட அவற்றுக்குப்பின்னால் என்றுமுள்ள கடல் உள்ளது. அலை கடலின் என்னும் அழியாமொழியின் ஒரு சொல் மட்டுமே.

‘காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியுநர் கொல்லோ அனை மதுகையர்கொல்
யாம் எம் காதலர்க் காணேம் ஆயின்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல் பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே’

கல்பொருசிறுநுரையார் என்று கவிஞருக்குப் பெயரிட்டிருக்கிறது மரபு. கல்பொருசிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லாதாதல் என்னும் சொல்லைச் சொல்லி சொல்லித்தான் அந்நாவலை நான் என்னுள் இருந்து மீட்டி எடுக்கவேண்டும்.

இந்நாவல் யாதவகுலத்தின் உட்போரை, துவாரகையின் அழிவை, கிருஷ்ணனின் மறைவை சித்தரிப்பது. இதை மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன் சற்று நீண்ட இடைவேளைதான். மேலும் சில எழுதவேண்டியிருக்கிறது இப்போது

முந்தைய கட்டுரைமருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-13