அழகியல்களின் மோதல்- கடிதங்கள்

அழகியல்களின் மோதல்

அன்புள்ள திரு.ஜெயமோகன்,

 

 

விரிவான விளக்கத்துக்கு நன்றி.

 

 

குறிப்பாக கம்பனைக் சுட்டியது பல விஷயங்களைத் துலங்கச் செய்தது.

 

 

டால்ஸ்டாய் நிராகரிப்பது ஷேக்ஸ்பியரையா அக்காலகட்டத்தின் அழகியலையா, என்ற நோக்கில் அக்கட்டுரையை மீண்டும் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

 

 

தன் காலத்தவரைவிட ஷேக்ஸ்பியர் அத்தனை உயர்வில்லை, என்று கருதப்பட்டதாக சொல்லிச்செல்கிறார் டால்ஸ்டாய். யாரெல்லாம் அப்படி சொன்னார்கள், ஏன்? அதில் இவருக்கு உடன்பாடு உண்டா என்றெல்லாம் அந்த புள்ளியில் நின்று விரிக்கவிலை.ஷேக்ஸ்பியரின் சமகால நாடகாசிரியர்களைக் குறிப்பிட்டு, தன் குற்றச்சாட்டுகளை அவர்கள் தகர்க்கிறார்களா இல்லையா என்று அவர் ஆராயவில்லை. அப்படி அவர் செய்யாததன் மூலம், அவர் விமர்சனங்கள் அக்காலத்து அழகியல் மீதே வைக்கப்படுவதாக எண்ணலாம் தான்.

 

 

ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக செவ்வியல் அழகியலை அதன் ‘நம்பகத்தன்மையின்மை’க்காக நிராகரிக்கவில்லை. அவர் ஒரு ஹோமர் ஆராதகர் அல்லவா.

 

 

ஒருவேளை அதுபோன்ற, கடவுளர்கள் உலாவரும் அதீத கதையுலகில் அவ்வழகியல் எவ்விதத்திலும் அவருக்கு out of placeஆக இல்லை போலும்; மாறாக ஷேக்ஸ்பியரின் ‘உண்மை போன்மை தோற்றும்’ சமகால/சரித்திர கதையுலகில், நிகழ்த்துகலையான நாடகத்தில், அச்சித்தரிப்புகள் அவரைத் தொந்தரவு செய்கின்றன என்று புரிந்துகொள்கிறேன்.

 

அத்தகைய நோக்கின் எல்லைகளுடன் சற்று ஒத்துணரவும் முடிகிறது!

 

 

அன்புடன்,

 

பிரபு ராம்.

 

 

அன்புள்ள ஜெ

 

தால்ஸ்டாய்- ஷேக்ப்ஸ்பியர் ஒப்பீடும் , கற்பனாவாதத்தை யதார்த்தவாதம் நிராகரித்ததும் ஒரு நல்ல புரிதலுக்கு உள்ளாக்கிய கட்டுரை,

 

யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு அழகியலும் இன்னொன்றை மறுத்துத்தான் உருவாகிறது. எப்படி யதார்த்தவாதம் கற்பனாவாதத்தை மறுத்ததோ அப்படித்தான் யதார்த்தவாதத்தை பிறகு வந்த ஃபாண்டஸி எழுத்தாளர்கள் மறுத்தார்கள்

 

ஏன் அப்படி மறுக்கிறார்கள்? ஓர் அழகியலை இன்னொன்று மறுக்கவேண்டுமா என்ன? எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்  ஓர் அழகியலை முழுக்க இன்னொன்று மறுக்கவில்லை. அந்த அழகியல் வாழ்க்கையைச் சொல்வதாக நிலைகொள்ளும்போது சிக்கல் இல்லை. அது ஒரு ஸ்டைல் ஆக மாறும்போது அதை மறுக்கவேண்டியிருக்கிறது. அல்லது வாழ்க்கையைச் சொல்ல தடையாக நிற்கக்கூடிய ஒரு முன்னுதாரணமாக ஆகும்போது மறுக்கவேண்டியிருக்கிறது

 

அன்றாடத்தை அப்படியே எழுதி அதை யதார்த்தக்கலை என்று சொல்பவர்களைத்தான் ஃபாண்டஸி எழுத்தாளர்கள் மறுக்கிறார்கள். அல்லது வாழ்க்கையிலுள்ள ஃபாண்டஸி அம்சத்தைச் சொல்ல வரும்போது டால்ஸ்டாயின் முன்னுதாரணம் வந்து தடையாக ஆகும் என்றால் டால்ஸ்டாயை விமர்சனம் செய்து விலக்கி நிறுத்தவேண்டிய கட்டாயம் அமைந்துவிடுகிறது

 

பிரேம்குமார்

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைநிலம், பெண், குருதி