வேறுவழிப் பயணம்- கடிதங்கள்

 

வேறுவழிப் பயணம்

அன்புள்ள ஜெ,

வேறுவழிப்பயணம் என்னை உலுக்கிய ஒரு கட்டுரை ஒரு சாதாரண மனிதாபிமானக் கதையாக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஏழைகளுக்கு உதவுபவர், சேவைசெய்பவர். அது தப்பு என்றோ சிறிய விஷயம் என்றோ சொல்லவில்லை. அது சிறந்த விஷயம்தான். ஆனால் அதில் தத்துவப்பிரச்சினை ஏதுமில்லை. அதிலுள்ளது ஈகோ, குற்றவுணர்ச்சி ஆகியவற்றுடன் கலந்த அறவுணர்ச்சியும் இரக்கமும்.

ஆனால் இந்தக் கட்டுரையில் வரும் ஜான் ஃபீசன் ஒரு பெரிய சிக்கலை உருவாக்குகிறார். மனிதர்கள் எதை வாழ்க்கையின் இன்பம் என்றும் வெற்றி என்றும் நினைக்கிறார்கள் என்ற கேள்வி. நாம் ஒன்றை நினைப்போம், அதை மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்று இல்லை. உலகம் முழுக்க இன்பமும் வெற்றியும் ஒன்று அல்ல. ஆனால் நம்மைப்போல நினைக்காதவர்கள் நமக்குப் பைத்தியக்காரர்களாக தெரிகிறார்கள்.

இவர்கள் எதை அடைகிறார்கள் என்று நாம் கேட்கிறோம். அதாவது நாம் அடைபவற்றை இவர்கள் அடைகிறார்களா? இவர்கள் பெரிய சாமியார்களாக ஆகி புகழும் பணமும் பெற்றால் நாம் கொண்டாடுவோம். அல்லது எழுத்தாளர்கள் ஆகவேண்டும். அல்லது சேவை செய்யவேண்டும்.  ஒன்றுமே ஆகாமல் இப்படியே இருந்தால் பைத்தியம் என்போம். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதாதா என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை . ஏனென்றால் வாழ்க்கையைப்பற்றி நாம் வைத்திருக்கும் தியரியே அடிவாங்குகிறது

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ,

வேறுவழிப்பயணம் ஒரு நல்ல கட்டுரை. அதில் கதிரேசன் சுருக்கமாக ஆழமாக ஒரு நல்ல சித்திரத்தை அளித்திருக்கிறார். ஜானின் குணச்சித்திரத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார். இதேபோன்ற ஒரு வெள்ளையரை எனக்குத் தெரியும். தன்னை முருகன் அடிமை என்று சொல்லிக்கொள்வார். பழனியில் நெடுங்காலம் தெருவிலேயே வாழ்ந்தார். எவரும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அதன்பின் காணாமல் போனார். காசிக்குப் போய்விட்டார் என்றார்கள். தெரியவில்லை. இந்நேரம் செத்துக்கூட போயிருக்கலாம்

இவர்கள் வாழ்க்கையில் எதை தேடுகிறர்க்ள், எதைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி

சங்கர்ராம்

அன்புள்ள ஜெ

வெண்முரசில் சார்வாகனின் தோற்றமும் வாழ்க்கையும் காட்டப்பட்டபோது வந்த கட்டுரை வேறுவழிப்பயணம். இன்றைய சார்வாகன் என்று ஜானைச் சொல்லமுடியும். அந்த வாழ்க்கையில் இருக்கும் ஈர்ப்பு எப்படி தீஷணனை கொண்டுசெல்கிறது என்பது காட்டப்படுகிறது கடைசி அத்தியாயங்களில். சார்வாகனை புரிந்துகொள்ள முடியவில்லை பிறரால். தீஷணனின் அம்மாவின் கண்ணீர்தானெ ஜானின் அப்பாவின் கண்ணீரும்

செந்தில்குமார்

முந்தைய கட்டுரைஅறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாகப்பிரகாஷின் கதைகள் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்