யா தேவி! – கடிதங்கள்-6

யா தேவி! [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

யாதேவி பல்வேறு கதைகளுடன் என்னை தொடர்புகொள்ளச் செய்தது. வாசிப்பில் இது முக்கியமான விஷயம். நிறையக் கதைகளுடன் தொட்டுத்தொட்டு மாலையாகத் தொடுத்துக்கொள்வது. உடனடியாக ஞாபகம் வரும் கதை, வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்னும் கதைத்தொகுதியில் கி.ராஜநாராயணன் எழுதியது. அதில் ஒரு விபச்சாரியைப்பற்றிச் சொல்லும்போது பசிக்குச் சாப்பாடு போடுபவள்போலத்தான் காமத்திற்கு இரைபோடுபவளும். அவளும் ஒரு பசியைத்தான் தணிக்கிறாள். அதுவும் பெரிய கொடைதான் என்று எழுதியிருப்பார்.

 

ஜி.நாகராஜன் ஒரு கதையில் ஒரு விபச்சாரியைப்பற்றிச் சொல்லும்போது அடுத்துவருபவன் அழகா குரூபியா நோயாளியா பிச்சைக்காரனா என்று தெரியாமல் அவனிடம் தன்னை அர்ப்பணிக்கிறாளே அந்த சிறுமி அவளிடம் ஒரு தெய்வீகத்தன்மை இருக்கத்தான் செய்கிறது என்கிறார். ஜானகிராமனின் கோபுரவிளக்கு கதை நேரடித்தொடர்பு இல்லாவிட்டாலும் நினைவுக்கு வருகிறது.

 

பொதுவாக விபச்சாரிகளை ‘ஐடியலைஸ்’ செய்யும் கதைகள் நிறையவே உள்ளன. நான் சொல்வது அவற்றை அல்ல. இந்தக்கதைகள் வேறு ஒன்றைக் கண்டடைகின்றன. ஒரு சராசரி குடும்பப்பெண் அடையமுடியாத குரூரமான அதீதமான அனுபவங்களை எல்லாம் அவள் அடைந்திருப்பாள். அவளுடைய உலகம் அதீதங்களின் உலகம். அதோடு அவளால் தன்னை ஒரு உடலாகத் தொகுத்துக்கொள்ளவே முடியாது. தன்னை அவள் பகிர்ந்து பகிர்ந்து இல்லாமலாக்கிவிட்டிருக்கிறாள். பெரும்பாலானவர்கள் அதனால் அழிந்து குடிகாரிகளாகி கேடிகளாகி கடைசியில் நோயாளிகள் ஆகி மறைவார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவர் மனம் கனிந்து ஸ்பிரிச்சுவலாக ஆகிவிடுவார்கள்.

 

நீங்கள்தான் எழுதினீர்களா என்று சந்தேகம். பி.ஆர்.ராஜம் அய்யர் ஆன்மிகச் சோதனைகளைச் செய்து தலை சூடாகி கிறுக்குபிடித்து அலையும் நிலையில் ஒரு வயதான தாசியை சந்திக்கிறார். அவள் அவருடைய தலைமேல் கைவைக்கிறாள். அவருடைய அலைகளெல்லாம் ஓய்ந்து மூளை அமைதியாகிறது.

 

இதை பல யோகியரும் எழுதியிருக்கிறார்கள். அப்படிச் சிதறிவிடுவது ஒரு சோதனை. அதை யோகமாக ஆக்கிக்கொண்டு சிலர் திரும்பிவிடுவார்கள். நீங்கள் எழுதிய காமரூபிணி கதையிலும் ஒரு எபிஸோட் வடசேரி சந்தையில் உள்ள ஒரு விபச்சாரிய் அம்மனாக ஆனதைப்பற்றியது.

 

இப்படி பலநினைவுகள். என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இந்தக்கதை இந்த எண்ணங்களை எல்லாம் எழுப்புகிறது. எல்லா அத்தனை பலவாக பெருகிவிட்டிருந்தமையால்தான் அவளால் தேவியாக தன்னை அவனுக்குக் காட்டமுடிகிறது என்று நினைக்கிறேன்

 

எஸ்.வேல்முருகன்

அன்புள்ள ஜெ

 

உங்கள் கதை யா தேவி வாசித்தேன். அந்தக்கதை பற்றி நிறையபேர் எழுதிவிட்டார்கள். ஆனால் ஒரு பெண்ணாக எனக்கு ஒன்று தோன்றியது. அதாவது என்னவென்றால் எல்லா பெண்களுக்குமே எல்லாவின் அந்த அனுபவம் சூச்சுமமாக கிடைத்திருக்கும் என்பதுதான். அதாவது பல உருவங்களாக ஆகி பல ஆண்களால் புணரப்படுதல். எல்லா பெண்களும் தங்க்ள் உடல்களை குறுக்கிக் கொள்வது இந்த உணர்வால்தான். நம்மைப் பார்ப்பவர்கள் நம்மை மானசீகமாக எடுக்கிறார்கள் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்

 

ஒருமுறை கொடியில் காயப்போட்டிருந்த உள்ளாடையை பக்கத்துவீட்டு பையன் எடுத்துக்கொண்டு போனதைக் கண்டேன். அவன் அதை வைத்து என்ன செய்கிறான் என்றும் கண்டேன். எனக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர நாலைந்து நாட்கள் ஆகியது. அவன்மேல் கோபம் வரவில்லை. சின்னப்பையன். ஆனால் அழுகையாகவே இருந்தது. ஏனென்றால் என் உடல் அப்படி பலருக்குரியதாக ஆகிவிட்டதைத்தான் நினைத்தேன். அந்த் உணர்வுதான் எல்லாவை குடிகாரியும் அடிமையும் ஆக்குகிறது. அதிலிருந்து அவளை வெளியே கொண்டுவரும்பொருட்டுத்தான் சிரிதரன் அவளிடம் பேசுகிறான் என்று தோன்றியது

 

எஸ்

 

முந்தைய கட்டுரைகுறளின் மதம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவைக்கம் ,காந்தி, அய்யன்காளி