யா தேவி! – கடிதங்கள்-8

 

அன்புள்ள ஜெ,

‘யா தேவி!’ சிறுகதை வாசித்தேன். எல்லா ஆன்ஸெல் “நீ ஒரு பெண்” என்று சொல்லும்போது உடனடியாக நினைவுக்கு வந்தது காந்தியின் சோதனைகள் குறித்து மனு சொல்வதுதான்: “நான் என் தாயின் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன்”. உண்மையில் காந்தி பற்றிப் பெருமதிப்பு கொண்டவர்களால் கூட எளிதில் கடந்துசெல்லமுடியாத இடம் அவருடைய பாலியல் சோதனைகள். ஒழுக்கக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, காந்தி இவற்றின் வழியாக உண்மையில் எதைத்தான் அடைந்தார்? ஏதேனும் அடைந்தாரா, அல்லது இவை தோல்வியடைந்த சோதனைகளா?

அவர் அடைந்தது என்ன என்பதை இக்கதை வழியாக வாசிக்கமுடியும் என்று படுகிறது. ஸ்ரீ தன் ஸ்ரீவித்யை நோன்பு வழியாக அடைந்ததைத்தான் காந்தி தன் முரட்டுச் சோதனை முயற்சிகளின் வழியாக அறிந்தாரோ? அனைத்துயிர்களுக்குள்ளும் உறையும் அந்த ஆற்றலை காந்தி அறிந்திருப்பாரா? அன்னையின் வடிவில்தானா அல்லது வேறு வடிவிலா? நினைக்க நினைக்க விரிகிறது எண்ணம்.

காந்தி தன் ‘சத்திய சோதனை’ நூலை 1921ஆம் ஆண்டோடு நிறுத்திவிட்டார். ஒருவேளை அவர் தன் பிற்கால வாழ்க்கையை எழுதியிருந்தால் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கலாம். அல்லது அது மேலும் பல முடிச்சுகளுக்குத்தான் வழிவகுத்திருக்குமோ?

அன்புடன்,
த.திருமூலநாதன்.

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெ

யாதேவி நான் வாசித்த உங்கள் சிறுகதைகளில் எனக்கு மிகமிகப் பிடித்தது. அதை வாசிக்கையில் முதலில் தோன்றியது, இது பெண்ணை தெய்வமாகக் காட்டும் வழக்கமான கதையோ என்று. உடனே அப்படித் தோன்றக்காரணம் இந்த மனநிலை லாசரா தி.ஜானகிராமன் ஆகியோரிடம் இருந்தது.

 

அவர்கள் பெண்களை அம்பாளுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் இந்தக்கதை மனதிலேயே ஒரு சின்னத் தொந்தரவுபோல இருந்துகொண்டே இருந்தது. அதன்பின் மீண்டும் வாசித்தேன். ஸ்ரீதரன் அவளை கடவுளாக ஆக்க முயலவில்லை. அவனுக்கு அதில் எந்த லாபமும் இல்லை. அவனுடையது பரவசப்பார்வையல்ல. அவன் ஏன் அப்படிச் சொல்கிறான்? அப்படிப் பார்த்தால் எல்லா மனிதர்களுமே கடவுள்கள்தான். எல்லாருமே ஆத்மாதான். பிரம்மஸ்வரூபம்தான். அதைத்தான் அவளிடம் சொல்கிறான். அதை அப்படித்தான் அவன் பார்க்கிறான்.

 

அவள் தன்னைப் பற்றிய ஒரு வெறுப்பைக் கொண்டிருக்கிறாள். தன்னை அவள் மலினப்படுத்திவிட்டதாக நினைக்கவில்லை – அதாவது கதையில் அப்படி இல்லை. அவளிடம் பாவ உணர்ச்சியும் இல்லை. அப்படி இருந்தால் அவள் பாவமன்னிப்புக்குச் சென்றிருப்பாள். கிறித்தவ மதம் அவளுக்கு ஆறுதலை அளிக்கும். அவளுடைய பிரச்சினை அவளுடைய அடையாளம் அழிந்துவிட்டதுதான். நான் என்னும் போது அவள் எதை நினைக்கிறாள் என்பதுதான்.

 

வெவ்வேறு ஆண்களால் வெவ்வேறு வடிவிலே அடையப்படும்போது அவளுக்கு செல்ஃப் என்பதே இல்லை. ஆகவே அவள் சிதறிப்போய்விடுகிறாள். ஆகவேதான் அவள் போதைக்கு அடிமையாகிறாள். தன்னை செல்ஃப் இல்லாமல் ஆக்கிக்கொள்ள முயல்கிறாள். செல்ஃப் அவளுக்கு அவ்வளவு துன்பத்தை அளிக்கிறது. ஆகவேதான் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறாள். Being and nothingness  என்று சொல்வார்களே அந்த நிலை

 

அதற்குத்தான் ஸ்ரீதரன் சிகிச்சை அளிக்கிறான். அவள் காலை மட்டும் தொடுகிறான். அதுபோதும், முழுசாக எவர் பார்க்க முடியும் என்கிறான்.  அந்தக்காலைக்கொண்டே அவளுடைய செல்ஃபை அவளுக்கு காட்டுகிறான். கால் அவள் உடல் ஆகவும் மனசு ஆகவும் இருக்கிறது. அவளுக்கு நீ உடல், நீ ஆத்மா, நீ தேவி என்று சொல்கிறான். அந்த ஒவ்வொரு உரையாடலிலும் அவன் அவளுடைய செல்ஃபை தொட்டு மீட்டுவது அழகான கவிதை. அவன் முதலில் தொட்டு எழுப்புவது அவள் மனசைத்தான். அவளுடைய இளமையைத்தான்.

 

அவளிடம் அவன் நீ தேவி என்று சொல்கிறான். நீ சக்தி என்கிறான். அவளை தெய்வமாக்கவில்லை, அவளுக்குள் இருக்கும் ஆற்றலை சுட்டிக்காட்டிவிட்டுச் செல்கிறான். அவள் அதை கண்டுவிட்டாள். அதை முழுசாக ஏற்கவேண்டும்

 

ஒரு பெண்ணாக சில கதைகள்தான் மனசுக்குள் நெருக்கமாக வரும். பெண்ணை இப்படி இப்படி என்று டிஃபைன் செய்யும் கதைகளெல்லாம் சலிப்பைத்தான் தரும். பெண்ணை பெண்ணாகவே நினைக்காமல் ஒரு being ஆக மட்டுமே நினைக்கும் இந்தக் கதை மிக ஆழமான ஒரு உரையாடலை எனக்குள் நிகழ்த்தியது

 

எஸ்.சத்யா

 

யா தேவி- கடிதங்கள்-7

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி – கடிதங்கள்-5

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி- கடிதங்கள்-3

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! – கடிதங்கள்

முந்தைய கட்டுரைநுரைச் சிரிப்பு
அடுத்த கட்டுரைமறைசாட்சி தேவசகாயம் பிள்ளை