யா தேவி! – கடிதங்கள்-9

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

யாதேவி கதை பிப்ரவரியி 1 லேயே வந்திருக்கிறது. நான் அந்திமழை வாசிப்பவன். ஆனால் கதையைக் கவனிக்கவில்லை. இவ்வளவுக்கும் அந்திமழையை வாசிப்பவன். அச்சில் கதைகள் கவனம் பெறாமலேயே போய்விடுகின்றன. இப்போது வாசித்தேன். அதன் இலகுவான உரையாடல்போக்கு என்ன இது ஜெயமோகன் கதைபோல இல்லையே என்று தோன்றியது.

 

நீங்கள் அளிக்கும் நுணுக்கமான விரிவான விவரணைகள் இல்லை. எல்லாவின் தோற்றத்தைக்கூட விரிவாகச் சொல்லவில்லை. ஸ்ரீதரனின் முகமே இல்லை. அவனுடைய பெயரைக்கொண்டு ஒரு மனிதனைக் கற்பனை செய்யவேண்டியதுதான். அந்த அறை, அந்த இடம் எதுவுமே சொல்லப்படவில்லை. உரையாடல்கள் வழியாக குறிப்புகளாக வரும் கதைதான். குணச்சித்திரமும் அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஓரிரு வரிகளாக. அவள் எதனால் போதை அடிமையானாள் என்பதில் இருக்கிறது அவளுடைய இயல்பு.

 

அவள் அப்படி ஒரு வாழ்க்கையை தெரிவுசெய்திருக்கலாம். ஆனால் அது அவள் இல்லை. உடைந்து உடைந்து பல ஆயிரமாக மாறி விட்டது அவளுடைய ஆளுமை. அவளால் தன்னைத்தானே தொகுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் யார்? அந்த ஆயிரமும் அவளா? அத்தனை பெரிதாக ஆகி பரவி நிற்க அவளால் முடியுமா? ஒரு பெண் எத்தனை இடங்களில் இருக்க முடியும்? அவன் அவளிடம் சொல்கிறான். நீ எங்கும் இருந்தாலும் உன் சாராம்சம் இருப்பது ஒரு புள்ளியில். அதை இப்படி நான் உருவகிக்கிறேன். நீயும் அப்படியே உருவகித்துக்கொள். நீ யாராக இருந்தாலும் எஸென்ஸில் நீ இதுதான். ஆகவே நீதான் இது. நீ தேவி என்று அவன் சொல்கிறான். அவள் அதை ஏற்கமுடியவில்லை. ஆனால் அதை அவள் திகைப்புடன் பார்க்கிறாள். அவளுடைய அந்தக் கண்டடைதல்தான் அந்தக்கதை. சுருக்கமான கூர்மையான அழகான கதை. நன்றி

 

அத்தனை பிரம்மாண்டமாக பரவியிருக்கும் அவள் உடலை, 17000 வடிவங்கள் கொண்டதை, அவன் இரண்டு கால்களாகச் சுருக்கிக்கொண்டான் இல்லையா? அந்தக் கவித்துவம்தானே இந்தக்கதை. இதை எழுதிக்கொண்டுவரும்போதுதான் கவனித்தேன்.

 

எம்.பாஸ்கர்

 

பெண்களின் உடல் தரிசிக்கப்படும் இடத்தில் இருந்து அது பறித்துச்செல்லப்படும் பொருளாக ஆன தருணமே அவர்கள் தங்கள் உடலை முழுதாய் உணர்ந்தனர். அதனை பாதுகக்க அதனை வளர்த்தெடுக்க அதனை காமத்தின் மொத்த பொருளாக ஆக்கிக்கொண்டனர். இதுவொரு பரிணாம வளர்ச்சியாகவே நடந்திருக்க வேண்டும்.

 

யா தேவி! : வாசிப்பனுபவம் – இவான் கார்த்திக்

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கம், தலித்தியம்
அடுத்த கட்டுரைஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு