யா தேவி! – கடிதங்கள்-7

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

மைக்கேலாஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் கடவுளின் கை ஆதமை தீண்டும் தருணம் உள்ளது. அது மனிதன் கடவுளைக் கண்டுகொள்வது மட்டும் அல்ல, கடவுள் தன்னை கடவுள் என்று கண்டுகொள்வதும்தானே? மனிதனின் பார்வையால்தானே கடவுள் அந்த வடிவத்தை எடுக்கிறார்? அவன் கை அப்படி இருப்பதனால்தானே கடவுளின் கையும் அப்படி இருக்கிறது?

 

யாதேவி ஓர் அற்புதமான கதை. அது பக்தனால் கடவுள் தன்னை கண்டடைவது என்று தோன்றியது. பேச்சில் வரும் உட்குறிப்புகள் வழியாக. அன்னையின் வயிற்றில் எரியும் அனலை காலைத் தொட்டு அறிகிறான். கால்கள் வழியாகவே அவளை விழிப்பு கொள்ளச் செய்கிறான். பெண்ணை கடவுளாக்கவில்லை. தன்னுள் இருந்து ஒரு கடவுளைக் கண்டடைகிறான். ஸ்ரீவித்யா உபாசனையின் ஒரு வடிவம். ஒரு மந்திரம் எப்படி ஒருவனை மீட்டுக்கொண்டுசெல்கிறது என்பது

 

எல்லாருக்கும் உரிய கதை அல்ல. தமிழில் திரும்பத் திரும்ப mundane images and emotions தான் எழுதப்படுகின்றன.காமம் இல்லாவிட்டால் அரசியல். இதைப்போன்ற கதைகள் அரிதானவை. இதிலுள்ள unique native  ஞானம் நம் இலக்கியத்தை நாமே கண்டடையும் ஒரு தருணம் என நினைக்கிறேன்

 

ஆர்.ராஜசேகர்

அன்புள்ள ஜெ வணக்கம்.

 

யா தேவி! சிறுகதை ஒரு கனமான கதை கரு. அதை  சிறு கதைகளத்தில், குறைவான உரையாடலில் அற்புதமாக கொண்டு சென்று அனைவர் மனதிலும் எளிமையாக  உட்கார வைத்துவிட்டீர்கள் ஜெ.

நுட்பமான கதை. தொலைதொடர்பு சாதனங்களின் அசுரவளர்ச்சியில் சமுகத்தின் மையத்தில் இருட்டில் கண்ணுக்கு தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கும் சீழ் ஓடையில் விழுந்து புழுவாக ஆகிவிடும் மனங்களின் துன்பத்தை துயரத்தை, கரையேற துடிக்கும் உயிர் துடிப்பை, ஓசையில்லா ஓசையில்  காட்டும் கதை.மேலோட்டமாகப் பார்த்தால் மனத்தை அறுத்துதெடுத்துவிடும் கதை. கவனிக்கும்போது, வாழ்க்கையில் இதுவும் உண்டு. எப்படி கரையேறுவாய் என்று காட்டும் கதை.

 

கண்களால் பார்க்கிறோம். கண்களால் பார்த்தாலும் கண்கள் வழியாக எண்ணங்களால் பார்க்கிறோம். புலன்கள்மீது ஏறி உட்காரும் எண்ணங்கள் என்னவோ அதுதான் வாழ்க்கையின் வண்ணமும், சுவையும்.

 

எல்லா ஆன்ஸெல் என்னும் பெண்மணி  ஆண்கள் அனைவரும் தனக்கு அடிமையாகவேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கிறாள். வெல்கிறாள். பொம்மையாகி இந்த உலக ஆண்களை வென்று கொண்டு இருக்கிறாள். இது எல்லாம் அவள் உடல் என்னும் படைக்கொண்டு வெல்வது. ஆனால் எண்ணம் என்னும் மனம் அவளை வென்று அவளை அதளபாதளத்தில் தள்ளுகிறது.

 

உடல்வேறு, மனம்வேறு என்று உலவும் மனிதர்கள் சென்று சேரும் இடம் இந்த அதளபாதளம். உடலை ஓம்பக்கூடியவைகள், மனதிற்கு சுவையாக இருப்பது இல்லை. அங்கிருந்துதான் உடலும் மனமும் பிரிந்து ஆட்டம்போட துவங்குகின்றன. ஒரு எல்லை வரை இரண்டும் ஒன்றை ஒன்று இழுத்து வெகுதொலைவு சென்று திரும்பிப்பார்க்கும்போது, இரண்டும் திரும்பிவரும் திசை தெரியாமல் தவிக்கின்றன. ஆனல் உடம்பிற்குள் இருந்து மனதை வருடிக்கொண்டே இருக்கும்  உயிரின் வாழவேண்டும் என்ற வேட்கை யாரையும் எந்த அதளபாதளத்தில் இருந்தும் கரையேற்றிக்கொண்டுவரும். இந்த கதையும்  அப்படி ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி வளர்ந்து பூத்து கனிகிறது.

 

ஆண்களை தொடுவதையே தன் வாழ்க்கையாக்கிக்கொண்ட பெண், தன் உடல்நலகுறையை போக்கிக்கொள்ளவந்த இடத்தில் தன்னை ஒரு ஆண்தொடக்கூடாது என்று வாதிடுவதுதான். மனம் இருமையில் மோதி உடையும் தருணம்.

 

இருமையின் எல்லைகளை தொடாமல் நடுவில் நிற்பவர்கள் பாதுகாப்பானவர்கள். ஆனால் ஆசிர்வதிக்கப்பட்டவகளா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இருமையின் எல்லையை தொடுபவர்களே மெய்மையை உணர்கின்றார்கள். அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை, அவர்களே எண்ணிப்பார்க்கமுடியாத அளவு கொடுமையானதுதான்.

 

எல்லா ஆன்ஸெல் ஆண்களை எல்லாம் வெறும் விறைத்த சதைநீட்யாக பார்ப்பது ஒரு எல்லை என்றால். தன்னால் காதலிக்கப்படும் ஒரு ஆணுடன் தன்னை பகிர்ந்துக்கொண்டால் தனது நோய் தீர்ந்துவிடும் என்று எண்ணுவது மறு எல்லை. இந்த இரு எல்லைகளுக்கு இடையில் நிற்கும் எல்லாவிற்கு ஆண் எல்லாம் தனக்குள் நுழையும் புழுக்களாக இருக்கிறார்கள் என்ற இருண்ட உலகம் தெரிகிறது. அவள்தான் அந்த இருண்ட உலகத்தை உருவாக்கியவள். அந்த இருண்ட உலகத்தில் ஒளியேற்றவரும் ஸ்ரீதரனையும் அவள் புழுவாகவே மாற்ற முயற்சி செய்கிறாள். அமிலத்தில் ஊற்றப்படும் நீரும் அமிலமாவதுபோல அவளை நெருங்கும் அத்தனை ஆணையும் அவள் புழுவாக்கிவிடவே நினைக்கிறாள். அதுவே அவளுக்கு நோயாகவும் ஆகி வதைக்கிறது.

 

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் “மழைபெய்து வெள்ளம் வரும்போது, குளம் குட்டை, வாய்கால், சாக்கடை என்று எதுவும் இல்லாமல் எங்கும் சமவெளியாய்,  அகண்டகாரமாய் இருக்கும் அதுபோலத்தான் இறையருள் இறங்கும்போது பெரியது சிறியது என்று பார்க்காமல் அனைத்திலும் நிறைந்து சச்சிதானந்த வெள்ளமாக இருக்கும்” என்கிறார்.

 

காய்ந்த பாலைவனம் அல்லது பெரும் புழுக்கள் நெளியும் சாக்கடை போன்ற எல்லா ஆன்ஸெல் வாழ்க்கையில் ஸ்ரீதரன் மழைபோல விழுந்து பெரும் வெள்ளமாய் நிறைகின்றான்.

 

ஸ்ரீதரன் அவளுக்குள் இருக்கும் குமரிமனநிலையை மாற்றி குழந்தையாக்கி காட்டுகின்றான். முழுமையாக சிறுக சிறுக பெண்மை என்பது பராசக்தியின் வடிவம் என்று காட்டி நிறைவடைய வைக்கிறான்.

 

எல்லா ஆன்ஸெல்  பெண்மையின் அனைத்து சக்திதுடிப்பையும்  அறிந்து இருந்தாலும் தான் பராசக்தியின் ஒரு துளி என்பது தெரியாமல் இருக்கிறாள். அது  அவளுக்கு ஸ்ரீதரனால் சொல்லாக செயலாக வழிபாடாக காட்டப்படுகிறது. அதனால் எல்லா ஆன்ஸெல் முதன் முதலாக ஒரு ஆணை பராசக்தியின் சேவகியாக காண்கிறாள்.

 

எல்லா ஆன்ஸெல் ஸ்ரீதரன் மூலம் ஆணின் மறுபாதியையும் கண்டுக்கொள்கிறாள். அது பெண்மை. தாய்மை. அங்கிருந்து தன்னில் ஊறிய காமத்திற்கு அப்பால் உள்ள அமுதநிலையையும் காண்கிறாள். ஸ்ரீதரன் எல்லா ஆன்ஸெல்லை பராசக்தியாக்கிப்போகின்றான்.

 

இந்த கதை ஒரு பக்தன் மூலம் ஒரு கல் தன்னை தெய்வம் என்று கண்டுகொள்கின்றது.

 

அருகம்புல் சாத்தப்படும்போது சந்தனம் மட்டும் அல்ல சாணியும் பிள்ளையார் ஆகும் என்ற பிரபஞ்சஉண்மை வாழ்க.

 

அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்.

 

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி – கடிதங்கள்-5

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி- கடிதங்கள்-3

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! – கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு
அடுத்த கட்டுரையானைடாக்டர் -கடிதம்