திற்பரப்பு

திற்பரப்பு கவிதைச்சந்திப்புக்காக நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். 26 -2-2011 அன்று காலை நான் எழுந்து மின்னஞ்சல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கீழே சத்தம் கேட்டது. வந்து பார்த்தேன். ஆனந்த் உன்னத் என்ற புனைபெயர் கொண்ட சு மோகன் பெங்களூரில் இருந்து வந்திருந்தார். மொட்டைத்தலை. சிவப்பு உருவம். மென்பொறியாளர். வெள்ளியன்றே வருவதாகச் சொன்ன இன்னொருவர் பிரிட்டனில் வேலைபார்க்கும், விடுமுறைக்கு வந்திருக்கும் பிரபு. அவர் ஏதோ ஓட்டலிலேயே தங்கிவிட்டதாக பின்னர் தொலைபேசியில் சொன்னார்.

ஓட்டலில் காலையுணவை சாப்பிட்டுவிட்டு சென்று வேனுக்குச் சொன்னோம். ஆயிரத்து எழுநூறு ரூபாய் கேட்டார்கள். ஆனால் வேறுவழி இல்லை. பேரம்பேசி ஆயிரத்தி நாநூறு ரூபாய்க்குக் குறைத்தேன். அதன்பின் வீட்டுக்கு திரும்பிவந்தபோது பிரபு வந்தார். வீட்டில் கூடத்திலும் மேலே என் அறையிலும் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். இலக்கியம் பற்றி, பழைய குருகுல கல்விமுறை பற்றி, நித்ய சைதன்ய யதை பற்றி. ஐந்து மணிக்கு பிரபு அவரது உறவினர் வீடு இருக்கும் திருப்பதிச்சாரத்துக்குக் கிளம்பிச்சென்றார்

ஆறரை மணிக்கு ஈரோடு குழு விஜயராகவனின் குவாலிஸ் வண்டியில் வந்துசேர்ந்தது. கிருஷ்ணன், பாரதிபதிப்பகம் இளங்கோ, ரமேஷ்,சதீஷ்குமார், சேலத்தில் இருந்து சதீஷ், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர்வந்தனர். மதுரையில் அவர்கள் சதக்கத்துல்லாவை ஏற்றிக்கொள்வதாக இருந்தது. அவர் அப்போது சேர்ந்துகொள்ளமுடியவில்லை. கோயில்பட்டியில் கடலைமிட்டாய்களுடன் காத்துநின்ற கடலூர் சீனுவை ஏற்றிக்கொண்டார்கள். அவர்களுக்கு என் வீட்டருகே லாரன்ஸ் விடுதியில் அறை போட்டிருந்தேன்

இரவில் என் வீட்டு மொட்டைமாடியில் பத்துபேர் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிறிய இலக்கிய சந்திப்பு. கொஞ்சம் வேடிக்கையும் கொஞ்சம் தீவிரமுமாக. அதிகமும் என்னுடைய சமீபத்தைய சிறுகதை வரிசை பற்றிய விவாதங்கள். இரவில் என் வீட்டிலேயே அனைவருக்கும் சிற்றுண்டி சமைத்திருந்தாள் அருண்மொழி. இரவு பதினொரு மணிக்கு கிருஷ்ணனும் ஆனந்த் உன்னத்தும் என் வீட்டிலேயே படுத்துக்கொள்ல மற்றவர்கள் விடுதிக்கு நடந்து சென்றார்கள்.

இரவில் பன்னிரண்டரை மனிவரை பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக இந்தமாதிரி சந்ந்திப்புகளின்போது ஒரு கிளர்ச்சியடைந்த மனநிலை இயல்பாகவே கைகூடி விடுகிறது. சமானமான மனநிலை கொண்ட நண்பர்கள் உருவாக்கும் வேகம் இது. இலக்கியமென்பதை மீறி நட்பு மையம்கொள்ளும் சந்தர்ப்பம். ஆகவேதான் நட்பு என்ற பொதுஅம்சம் இல்லாமல் இந்த வகையான சந்திப்புகள் அமையக்கூடாது என்று நான் எப்போதும் உறுதிகொள்கிறேன்.

அரசாலோ அல்லது இதழகளாலோ ஏற்பாடுசெய்யப்படும் சந்திப்பு அல்லது கருத்தரங்குகளில் தவறவிடப்படுவதும் இதுவே. அங்கே பலதரப்புகள் ஒலிக்கவேண்டும் என்பதனாலும், அனைவருக்கும் அனுமதி தேவை என்பதனாலும் முடிந்தவரை நிறையபேரை பங்கெடுக்கச்செய்தாக வேண்டும் என்பதனாலும் பலவகையானவர்கள் வந்துவிடுகிறார்கள். பொதுவான அறிவுத்தரம் ரசனைத்தரம் இல்லாதவர்கள். நட்புபால் தொடர்புகொள்ளாதவர்கள். ஆகவே விவாதங்கள் சாத்தியமான உச்சம் நோக்கி மையம் கொள்வதில்லை. பலசமயம் சட்டென்று கோபமும் மனக்கசப்பும் வன்மமும் உருவாகி எல்லாருக்கும் சங்கடமாகிவிடுகிறது. ஆனால் அந்தவகையான சந்திப்புகளை தவிர்க்கவும் முடியாது. அனைவருக்குமான உரையாடல் என்பது இன்றியமையாத ஒன்றுதான்.

இந்தச்சந்திப்புகள் பற்றிபேசும் போது இவற்றில் உருவாகும் தனிப்பட்ட விவாதங்கள் மூலம் இலக்கிய ரசனையும் பொதுவான அறிவுத்தரமும் பெருமளவுக்கு மேம்படுவதை உணரமுடிகிறது, இலக்கியத்தின் நுட்பங்களை உணர மிகச்சிறந்த வழி இது, ஆனால் இது ஏன் தமிழ்நாட்டில் பரவலாக நிகழ்வதில்லை, இத்தகைய சிறிய சந்திப்புகளுக்குள் வந்துசேர சாத்தியமில்லாதவர்களுக்கு என்ன வழி இருக்கிறது என்று நண்பர்கள் கேட்டார்கள். அது உண்மைதான், இன்று இவ்வளவுதான் சாத்தியம் என்றேன்.

அதிகாலையில் சதக்கத்துல்லா பேருந்தில் வந்து அழைத்தார். நேராக அவரை லாரன்ஸ் விடுதிக்கே போகச்சொன்னோம். காலை ஆறரை மணிக்கு கல்பற்றா நாராயணன் வந்து சேர்ந்தார். அவரை வீட்டில் விட்டுவிட்டு நானும் கிருஷ்ணனும் ரயில்நிலையம் சென்றோம். அங்கே ஏற்கனவே யுவன் சந்திரசேகர், சிறில் அலெக்ஸ், தங்கவேல், ஸ்ரீனிவாசன், ராஜகோபாலன், சென்னை சதீஷ், மாரிமுத்து, கெ.பி.வினோத் ஆகியோர் கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்திருந்தார்கள். தனி ரயிலில் தேவதேவனும் வசந்தகுமாரும் செல்வ புவியரசனும் வந்தார்கள். அரங்கசாமி கோவை ரயிலில் வந்தார்.

அத்தனைபேரையும் ரயில்நிலயத்திலேயே திரட்டமுடிந்ததனால் வேலை எளிதாகியது. சுல்தான் ஏர்வாடியில் இருந்து அவரது காரில் வந்தார். வேனில் அனைவரையும் ஏற்றி நேராக திற்பரப்புக்கே போகச்சொன்னோம். நானும் கிருஷ்ணனும் சுல்தானின் காரில் முன்னால் சென்றோம். அக்‌ஷயா ஓட்டலுக்கு கோவை ராதாகிருஷ்ணன் நேரடியாக வந்துசேர்ந்தார். மொத்தம் இருபத்தெட்டு பேர்.

திற்பரப்பு அக்‌ஷயா ஓட்டல் வித்தியாசமானது. ஏதோ ஓர் உற்சாகத்தில் சுற்றுலா வளர்ச்சித்துறை அளித்த கடனில் திர்பரப்பு அருவிக்கு மறுபக்கம் தடுப்பணையை பார்த்தபடி அதைக் கட்டிவிட்டார்கள். ஆனால் பெரும்பாலும் காலியாகவே கிடக்கும். குடிக்கவரும் கும்பல் தங்கினால்தான் உண்டு. ஏனென்றால் பாதுகாப்பு கிடையாது. சுற்றி வெகுதூரத்துக்கு வேறு வீடுகள் விடுதிகள் கடைகள் ஏதுமில்லை. ஆறும் ரப்பர்தோட்டமும் மட்டும்தான். ஓரளவு வசதியான விடுதி 11 படுக்கையறைகளிலாக இருபத்த்தெட்டு படுக்கைகள். நல்ல காற்றோட்டமான சூழல். சுத்தமான தரை, கழிப்ப்பறை. இரண்டுநாட்களுக்கு மொத்த ஓட்டலையும் எடுத்துக்கொண்டோம். மொத்தமாக வாடகை 5000 ரூபாய்.

வந்ததுமே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு நேராக அருவிக்குச் சென்று குளித்தோம். திற்பரப்பு அருவி மலைமேல் இருந்து விழுவதில்லை. சமதரையில் ஓடி ஒரு பெரிய பாறைவெட்டில் அருவியாக விழுகிறது. அதை சிறிய தடுப்பு மூலம் பரவலாக ஆக்கி விழச்செய்திருப்பதனால் அருவியின் அகலம் மிக அதிகம் . நெரிசலே இல்லாமல் எல்லாரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் நிற்கலாம். மேமாதத்தில்கூட கொஞ்சமேனும் நீர் விழும். இப்போது நிறைய தண்ணீர் கொட்டியது.

அருவிக் குளியல் அளிக்கும் உற்சாகமே தனி. சிறுவர்கள் போல வாய்விட்டுக் கூவிச் சிரித்து ஆர்ப்பரித்து குளிப்பவர்கள் நம்முடைய மனநிலையையும் மாற்றிவிடுகிறார்கள். அந்த அருவி இல்லாமல் அத்தகைய நிரந்தர உற்சாக மனநிலை இருந்திருக்குமா என்பதே ஐயம்தான்.

பதினொரு மணிக்கு முதல் அமர்வு. பெரிய படுக்கை அறையிலேயே. தேவதேவனின் ஒரு கவிதையை நாலைந்துமுறை பலர் உரக்க வாசித்தபின் அதன்மீது தங்கள் வாசிப்புகளைப் பகிர்ந்துகொள்வதே அரங்கின் வழிமுறை. நான் கவிதையை மலையாளத்தில் கல்பற்றா நாராயணனுக்குச் சொல்லிவிட்டு அவரது எதிர்வினையை தமிழில் சொல்லவேண்டியிருந்தது. யுவன் சந்திரசேகர், கல்பற்றா நாராயணன், மோகனரங்கன், சிறில் அலெக்ஸ், ஆனந்த் உன்னத், சதீஷ் ஆகியோர் விரிவாக விவாதத்தில் பங்கெடுத்தார்கள்.

மதியம் இரண்டரைக்குத்தான் சாப்பிட்டோம். கெ.பி.வினோதின் மாமனார் அவரது வீட்டில் இருந்து சூடாக பிரதமன் கொண்டு வந்திருந்தார். தேங்காய்ப்பால் விட்டு செய்யப்படும் கேரளபாணி பாய்சம் இது. இதில் பல வகைகள் உண்டு. கூடவே பலாக்காய் வறுவலும்.

மதியம் சாப்பிட்டபின் கொஞ்சம்பேர் ஓய்வெடுத்தார்கள். மிஞ்சியவர்கள் அரட்டை. மதியம் நன்றாக மழை பெய்தது.நாலைந்து நாட்களாகவே அங்கே மழைபெய்துகொண்டிருந்தது. எப்போது பசுமை அடர்ந்த நிலம். ஈரமான பசுமை மனதை குளிரச்செய்யும் ஆற்றல் கொண்டது. மழையில் பாறைகள் குளிர்ந்து நீர் வழியும் ஓசை உரக்க ஒலித்து விடுதியைச் சூழ்ந்திருந்தது

மீண்டும் அருவிக்குச் சென்று இன்னொரு குளியல் போட்டோம். அருவியில் நீர் பெருகியிருந்தது. குளியலுக்குப் பின் அங்கே கடையில்ந் இன்று பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டுவிட்டு அருவியை ஒட்டி மேலே உள்ள திற்பரப்பு மகாதேவர் கோயிலுக்குச் சென்று பார்த்துவிட்டு அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டு கற்படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். முதல் குளியலில் இருந்த துள்ளலுக்குப் பதில் இப்போது ஆழமான மகிழ்ச்சியுடன் குளித்தோம். நெடுநாட்களாக அங்கிருப்பதுபோலவும், தினமும் குளித்துக்கொண்டிருப்பதுபோலவும் அருவி ஆகிவிட்ட விந்தையை நினைத்துக்கொண்டேன்.

திற்பரப்பு மகாதேவர் ஆலயம் குமர்மாவட்டத்தின் பெரிய சிவன் கோயில்களில் ஒன்று. கேரள பாணி கோயில். செம்பு கூரைபோட்ட உருளைக்கூம்பு வடிவமான கருவறை. சதுரக்கூம்பு வடிவ அர்த்த மண்டபம். சிவன் இங்கே கிராதமூர்த்தி [காட்டுமிராண்டி வடிவம்] கொண்டு எழுந்தருளியிருக்கிறார். உக்கிரமான சிவன் என ஐதீகம். கேரள பாணிகோயில்களுக்கு உள்ளே இருக்கும் விரிந்த வெற்றிடம்தான் அழகு.

இரவில் மொட்டைமாடியில் இரண்டாவது அமர்வு. அதன்பின்னர் உணவு. பத்தரை மணிக்கு மீண்டும் அருவிக்கு வந்தோம். மீண்டும் குளிக்க யுவன் ஆசைப்பட்டாலும் எவருமே துணைக்கு வரவில்லை. குளிரடிக்கிரது என்று சொல்லிவிட்டார்கள். இரவு பதினொன்றரைக்கே தூங்கிவிட்டார்கள். பலருக்கு விடுதியில் கீழ்த்தளத்தில் நான்கு படுக்கையறைகள் உள்ள விஷயம் தெரியவில்லை. ஆகவே இடமில்லை போலும் என தரையிலேயே படுத்துவிட்டார்கள். அவர்களை அறைகள் தோறும் சென்று தட்டி எழுப்பி படுக்கையறைகளுக்குக் கொண்டுசென்று படுக்கச்செய்து விட்டு நான் படுக்க பன்னிரண்டு மணி ஆகிவிட்டது

காலையில் ஆறுமணிக்கு எழுந்து ரப்பர்தோட்டங்கள் வழியாக ஒரு காலைநடை சென்றோம். விடுதியை அண்டி வாழும் நாய்க்கு ராமு என்று விஜயராகவன் பேரிட்டார். அதுவும் எங்களுடன் வந்தது. ஆற்றை ஒட்டியே செல்லும் கால்வாய் வழியாகச் சென்று ஆற்றில் இறங்கி பாறைகள் வழியாக மறுபக்கம் சென்று மீண்டும் ரப்பர்தோட்டங்களில் ஏறி அருவிக்கு வந்தோம். காலையில் அருவிநீர் அவ்வளவு குளிராக தோன்றாது. ஒருமணி நேரம் குளித்தோம்

மூன்றாவது அரங்கு பதினொரு மணிக்கு. தேவதேவனின் கவிதைகளின் வடிவமும் மொழியும் இப்போது பிடிகிடைத்துவிட்டமையால் கவிதைக்கு வெளியே அது நினைவூட்டும் வேறு கவிதைகள் கதைகள் நினைவுகள் என விவாதம் சென்றது. கெ.பி.வினோதின் மாமனார் தெரளியும் இலையப்பமும் கொண்டு வந்து தந்தார். இலையப்பம் கூழைப்பலாப்பழத்தை பச்சரிசியுடன் சேர்த்து வெல்லத்துடன் அரைத்து வாழையிலையில் பரப்பி நடுவே பாசிப்பயறு வெல்லம் சேர்த்த பூரணத்தை உள்ளே வைத்து ஆவியில் அவித்தெடுப்பது.

மதியம் உணவுடன் நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக முடிந்தது. மீண்டும் அருவிக்குச் சென்று விரிவான குளியல். ஐந்தரை மணிக்கு ரயிலில் செல்பவர்களுக்காக ஒரு டாட்டா சுமோ வண்டி ஏற்பாடு செய்திருந்தோம். யுவன் உடபட பத்துபேர் அதில் கிளம்பிச் சென்றார்கள். மீதிப்பேர் விஜயராகவன், சுல்தான் வண்டியில் வினோதின் மாமனார் வீடான இட்டகவேலிக்குச் சென்றோம். அங்கே டீ குடித்துவிட்டு நாகர்கோயிலில் என் வீட்டுக்கு வந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.

இரண்டுநாள் நிகழ்ச்சி என்பது கொஞ்சம் இறுக்கமானது. ஒருநாள் வருகை சார்ந்த சிக்கல். மறுநாள் கிளம்பும் சிக்கல். ஆகவேதான் மூன்றுநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது. அதில் நடுவே உள்ள முழுநாளும் மிக நிதானமாக நிறைவாக இருக்கும். இந்நிகழ்ச்சி முழு உத்வேகத்துடன் இருந்தாலும் போதவில்லை என்றும் தோன்றியது. ஒருநாள் விடுப்பு எடுக்க தயங்கும் அலுவலககெடுபிடியை அஞ்சுபவர்களின் நலத்துக்காக இந்த இருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வருவதிலும் போவதிலும் இரு இரவுகள் செலவிட்ட நிலையில் இருநாட்கள் போதாதை உணர்ந்தோம். இனி மூன்றுநாள் நிகழ்ச்சிதான்.

கிருஷ்ணன் சென்றுசேர்ந்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ‘சென்ற இருநாட்களும் அற்புதமான கவித்துவ வாழ்க்கை.கிட்டத்தட்ட என் முதல் ஊட்டி கவியரங்கு அனுபவத்துக்கு நிகர். நீங்கள் கலபற்றா யுவன் மூவரும் கவிதைபற்றி பேசியது என் நன் நல்லூழ்.பறப்பது போல் உணர்கிறேன். முதிரா இளமையின் காதல்போன்ற மனநிலை’

https://picasaweb.google.com/vishnupuram.vattam/DevadevanTitparapu#

முந்தைய கட்டுரைகோணங்கி ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதிராவிடவேதம்-இன்னொரு கடிதம்