யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

யா தேவி கதை உங்கள் மிகச்சிறந்த வடிவங்களில் ஒன்று. கூந்தல் என்று முன்பு ஒரு கதை எழுதியிருந்தீர்கள். சுருக்கமான கூர்மையான உரையாடல்கள் வழியாகவே நகர்ந்த அற்புதமான கதை. அதைப்போன்றது இது. உரையாடல்கள் பேச்சுமொழியில் இல்லாமலிருப்பதே ஒரு தத்துவார்த்த தன்மையையும் உருவகத்தன்மையையும் அளித்தது. உரையாடலில் போகிறபோக்கில் வரும் வரிகளின் வழியாக கதையை ஊகிக்கவேண்டியிருக்கிறது.

 

ஸ்ரீதரன் இருக்கும் நிலைதான் உண்மையில் கதை.ஸ்ரீவித்யா மூலம் தன்னை ஆண் என்று சொல்லப்படும் துருவநிலையிலிருந்து பெண்ணை நோக்கி நகர்த்திக்கொண்டவன் அவன். அவனுடைய தொடுகை பெண்ணுடையது என்று அவள் உணரும் இடம் மிக முக்கியமானது. அதுதான் அவளுக்குள் இருக்கும் சக்தியை பார்க்கச் செய்கிறது.

 

ஸ்ரீதரனை அவள் புரிந்துகொள்வது ஸ்ரீதரன் அவளைப் புரிந்துகொள்வது இரண்டுமே நுட்பமான இடங்கள். அந்த உரையாடல் அவ்வாறு மாறிமாறி நிகழ்கிறது. அவள் தன்னுடைய பொய்யான உருவங்கள் எதிலும் ஆர்வமற்றவனாக அவன் இருப்பதைப் பார்க்கிறாள். தன்னுடைய உண்மை உரு என அவள் நம்பும் அந்த நோயுற்ற உடலிலும் அவனுக்கு ஆர்வமில்லை. அதற்கு அப்பாலுள்ள அவளுடைய இன்னொரு பூர்ணரூபத்தை அவன் அறிந்துவிடுகிறான்

 

எஸ். ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

 

யா தேவி அழகான கதை. வெண்முரசில் இந்த சுலோகம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் வருகிறது என உணர்ந்தவர்கள் இந்தக்கதையை கூர்ந்து பல தளங்களில் வாசிக்கமுடியும். இந்தக்கதையில் உள்ள முக்கியமான அம்சம் தேவியின் பாதங்கள்தான். பராசக்தியை அறியமுடியுமா, எங்களுக்குப் பாதங்களே போதும் என்று ஸ்ரீதரன் சொல்கிறான். பாதங்களை மட்டுமே தொடுகிறான். ஆனால் அதன் வழியாக அவன் அவளை முழுமையாகவே அறிகிறான்

 

அந்த தொடுகையும் அதைத் தொடர்ந்து வரும் உரையாடல்களும் அழகானவை. அவளை இளமையானவளாக உணரச்செய்ததும் அவள் அவனுக்கு கனிகிறாள். சௌந்தர்ய லஹரி பற்றிய ஓர் உரையில் அண்ணாஜி தேவியை சாதகன் பேரழகியாக உணரச் செய்கிறான், காதலியை காதலன் தன் காதலால் அழகாக ஆக்குகிறான். அந்த அழகை அவன் அவளுக்கு அளிக்கிறான் என்றார். அதைத்தான் நினைத்துக்கொண்டேன்

 

காலால் அவனுக்கு அருள்கிறாள் மாயையால் உலகில் உள்ளவர்களை காமத்திலே கட்டிப்போட்டிருக்கும் தேவி. மிஸ்டிக் ஆன கதை. விரிவாக பேசினாலே மனசைவிட்டு போய்விடுமோ என்ற பயம் வருகிறது

 

சுவாமி

யா தேவி! – கடிதங்கள்

யாதேவி – கடிதங்கள்-2

யாதேவி கடிதங்கள் 3

முந்தைய கட்டுரைஅறிவுரைத்தல் பற்றி மீண்டும்
அடுத்த கட்டுரைஅழகியல்களின் மோதல்- கடிதங்கள்