யா தேவி! [சிறுகதை]
ஜெயமோகன் அவர்களுக்கு,
நாளுக்கு பல்லாயிரம் பேரால் புணரப்படும் ஆன்ஸெலின் உடலை ஒருவன் தொட்டால் அவளால் உணர முடியவில்லை என்பது சிறப்பான படிமம். அதைத் தொடவும் ஒருவனால் முடியும். அவன் உடலை பயன்படுத்தி உடலுக்கப்பால் உள்ள ஒன்றை தொட்டு பெண்மையோடு உரையாடுபவன். அதை சாத்தியமாக்கவே அவன் உடலை ஒதுக்கிய தவத்தில் இருக்கிறான். அறிதலுக்கு துய்த்தலிலிருந்து விலகி இருத்தல் தேவை. துய்ப்பவர்களால் அறியவே முடியாது. யா தேவி கதை மிக எளியது, ஆனால் சிக்கலான ஒரு பிரபஞ்சத்தின் அத்தனை நுண்மைகளுக்கும் தொடர்பு கொள்ளும் புள்ளிகளைக் கொண்டது, அவள் பாதம் போலவே.
சில நாட்கள் முன்பு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது நான் உதவி இயக்குனராக பணி புரியும் படத்தின் நடிகையை பற்றி பேச்சு வந்தது. இங்கு எல்லா நடிகைகளும் பிம்பங்களே, கொஞ்சேமேனும் அறிவார்ந்த ஒருவர் அந்த உயரத்தில் சில நொடிகளும் நிற்க முடியாது. ஆகவே அவர்களை அருகே காண்பது சலிப்பூட்டுவது என்றேன். பிம்பமாகவே கண்டால் கூட நாம் காணும் பிம்பத்துக்கும் நேரில் இருப்பவர்களுக்குமான இடைவெளி அதிகம்.
அந்த இடைவெளியை நடிகைகள் இரு வகைகளில் எதிர் கொள்வார்கள். நுண்ணுணர்வற்ற நடிகைகள் தங்கள் பிம்பங்களை பின் தொடர்ந்து அதைப் போலவே தங்களையும் ஆக்கிக் கொள்ள முயல்வார்கள். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்த பின்னரும் தன்னால் அவற்றை அனுபவிக்க முடியவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். கல் தெய்வத்தின் முன் படைக்கப்படும் எண்ணற்ற உணவு வகைகளைப் போல.
ஒரு கட்டத்தில் அந்த பிம்பம் தனக்குள் இருந்து உருவாக்கப்பட்டாலும் தன்னுடையதில்லை, மானுட விராட கனவிலிருந்து உருவாக்கப்பட்டது என உணரும் போது அவர்கள் அடையும் ஆளுமை வெறுமை கொடியது. மக்கள், இவ்ளோ சம்பாதிக்கிறார்கள் நிம்மதியாக இருந்தால் என்ன என்று யோசிப்பார்கள், அவர்களுக்கு இந்த அல்லல் புரியாது. தனி நடிகைகளாக இல்லாமல் காலகட்டத்தின், தலைமுறையின் முகங்களாக ஆகின்றவர்கள் அனைவருக்கும் இந்த சிக்கல்கள் உண்டு. மர்லின் மன்றோவிலிருந்து ஶ்ரீதேவி வரை. நேரில் காணும் போது நீங்கள் ஒரு மனிதராக எண்ணி அணுகும் ஒருவர் கதாநாயகி போல வசனம் பேசினால் உருவாகும் உணர்வு உருவாகும். அந்த மடத்தனம் கூருணர்வு கொண்ட ஒருவருக்கு விலக்கத்தை அளிப்பது.
அவர்கள் உணரும் நிறைவின்மையை அறியவே கூட கொஞ்சம் கூருணர்வு தேவை. இந்த நடிகைகள் அனேகமாக இளம் வயதிலேயே திரை உலகத்திற்குள் வந்து விட்டிருப்பதால் இளமையிலேயே பிளவாளுமைகளாகவும் ஆகியிருப்பார்கள். கலையோ வாசிப்போ இருந்திருக்காது. அந்த வெறுமையை நேர் மறையாக நிறைத்துக் கொள்ள நீண்ட பயிற்சி தேவை. அவர்கள் வாழ்க்கை சூழல் அதை அனுமதிக்காது. ஆகவே போதை, காமம் இரண்டையும் கொண்டு நிரப்ப முயல்வார்கள். எரி பொருளைக் கொண்டு தீயை அணைக்க முயல்வதைப் போல. அந்த நிறைவின்மை கொடியது. அவர்கள் உணரும் அதை அவர்களால் கடைசி வரை ‘அறிய’ முடியாது. ஆகவே மீட்புமில்லை. பனைமரம் போல எரிந்தடங்கலே அனேகருடைய வாழ்க்கையும். அதுவும் பிம்பமாகவே ஆகி மறையும், சில்க் ஸ்மிதா போல.
நிறைவின்மையை அறியும் அறிவு கொண்டவர் இரண்டாம் வகை நடிகைகளில் ஒருவர். நானறிந்த வரை இந்தியாவில் அப்படியானவர்கள் அனேகமாக இல்லை. மேற்கில் சிலர் உண்டு, அங்கு நட்சத்திரம்/நடிகை எல்லையும் குறைவென்பதால்.
அவர்களே இத்தகைய உளவியல்/ஆளுமை சிக்கல்களுக்குள் செல்கிறார்கள். மர்லின் மன்றோவுடைய வாழ்க்கை கர்ணனுடைய வாழ்க்கையை போன்றே காவிய கதைப் பொருள் என்று தோன்றும்.
“ஸ்ரீதரன்” ஸ்ரீயை தரித்தவன். உடலாக அல்ல, அழகாக. அவன் அவளை அழகாகக் கண்டு அந்த மந்திரத்தை உரைத்துக் கொண்டது அவளுக்கு கிடைக்கும் மீட்பு. தான் பிம்ப உடல் மட்டுமில்லை என அறியும் ஒரு தருணம். தன் புகை வடிவ இருப்பை வெளியிலிருந்து ஒருவன் உறுதி செய்யும் இடம். அவள் மீண்டு விடக் கூடும்.
மாத்யூ அர்னால்ட்
யா தேவி! [சிறுகதை]
அன்புள்ள ஜெ
யா தேவி முதலில் பிடிகிடைக்காமல் பிடிகிடைத்ததுமே துணுக்குறச் செய்யும் ஒரு கதை. உரையாடல் வழியாகவே இருவரின் ஆளுமைகளும் அவை சந்தித்துக்கொள்ளும் இடங்களும் வந்தமையால் கூர்ந்து கவனிக்காமல் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில் போர்ன் நடிகையை தேவி என்று புனிதப்படுத்தும் முயற்சி என்ற எண்ணம் வந்தது. அதன்பின் கதைமுடிந்து அதன் அர்த்தங்கள் மனதில் வளர ஆரம்பித்தபோதுதான் கதையே பிடிபடத் தொடங்கியது
பல வடிவங்கள் கொண்டு உலகை ஆள்பவள். மகாமாயை. உலகமே அவளுடைய மாயாரூபத்தில் காமம் கொள்கிறது. அவள் அப்பால் இருக்கிறாள். இந்த உலகமெங்கும் ஆற்றல் வடிவாக நிறைந்திருக்கிறாள். நானன்றி ஏதுமில்லை என்று சொல்கிறாள். ஒவ்வொரு சொல்லாக கதை விரிகிறது. ஒரு சொல் ஓர் இடத்தில். கொஞ்சம் தள்ளி இன்னொரு சொல். அப்படியேவிரிந்து செல்கிறது. இந்த உலகுடன் விளையாடுபவள் சக்திரூபம் அல்லாமல் என்ன?
ஒரு மூர்க்கமாகச் சொல்லிக்கொண்டேன். சக்தி இந்த உலகுடன் விளையாடுபவள். இங்கே இயற்கையின் அத்தனை அழகுகளாகவும் தோன்றி மனிதனை மீளாக்காமத்தில் மூழ்கடித்து வைத்திருப்பவள். ஆகவே தாசிகளுக்கெல்லாம் தாசி. மஹாஅஃபிஸாரிகை. அந்த எண்ணம் பதற்றம் அளிப்பதாக இருந்தது. ஆனால் நானும் ஸ்ரீவித்யா உபாசகனே. அந்த எண்ணம் அளிக்கும் துணுக்குறலைக் கடந்தால்தான் எனக்கும் சக்தி ரூபம் கண்ணில்படும்.
எஸ்.மகாதேவன்
யா தேவி! [சிறுகதை]