அந்தி எழுகை

எந்த இடத்திலும் எந்த உளநிலையிலும் அந்தி அழகியது. பெரும்பாலானவர்கள் அந்தியை ஓர் அணைதலாக, மறைதலாக ஆகவே விடைபெறலாக, துயரமாக எண்ணிக்கொள்கிறார்கள். கவிதைகளில் எப்போதுமே அது அவ்வாறுதான் காட்டப்படுகிறது. எனக்கு அவ்வாறல்ல, ஏனென்றால் எனக்கு இரவு இனியது. இரவில்தான் இலக்கியம், இசை. பகல் என்பது வெளிறிப்போன, பற்றி எரியும் யதார்த்தங்களின் வெளி. இரவு குளிர்ந்த அழகிய கனவுப்பரப்பு. ஒவ்வொருநாளும் இரவை ஒருவகை இனிமையுடன் எதிர்கொள்கிறேன். ஆகவே அந்திகளை எப்போதுமே கொண்டாடுகிறேன்

நான் அந்திநடையை தவறவிடுவதில்லை. பெரும்பாலான பயணங்களில் அந்திகளில் வண்டியை நிறுத்திவிட்டு கதிர் அணைவதைப் பார்த்துக்கொண்டிருப்போம். அறியா ஊரில் சாலையோரத்தில் நின்று பார்க்கும் அந்தியின் மர்மம் பித்தேறச்செய்வது. அப்படி எத்தனை அந்திகள்! மத்தியப்பிரதேசத்தில் ஒருமுறை ஓர் அந்தியைப் பார்க்க ஒருவரின் தோட்டத்திற்குள் நுழைந்து வீட்டைச் சுற்றி மறுபக்கம் மலைச்சரிவுக்குச் சென்றோம். அவர் திகைத்தார். பின்னர் நாங்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்தவர்கள், அந்தியைப் பார்ப்பவர்கள் என தெரிந்ததும் நாற்காலிகளை போட்டு டீ ஏற்பாடு செய்து உபசரித்தார்

அப்படி எத்தனை மனிதர்கள்! வெவ்வேறு ஊர்களில் அந்திச் செம்மை படிந்த முகங்களுடன் தோன்றி பின் நினைவில் சென்று படிந்திருப்பவர்கள். பொதுவாக வரலாற்று இடங்களில் காலையிலும் மாலையிலும் இருந்தாகவேண்டும் என நான் விரும்புவேன். காலையில் அவை இறந்தகாலத்திலிருந்து மீண்டு எழுந்து வருகின்றன. மாலையில் அவை மெல்லமெல்ல மீண்டும் வரலாற்றுக்கே திரும்பிச் செல்கின்றன. இடிந்த கோட்டைகள், சிதைந்த ஆலயங்கள், இருள் வந்தமைந்துகொண்டே இருக்கும் ஒழிந்த பிரகாரங்கள். புறாச்சிறகடிப்புகள் காலைக்குரியவை. வௌவால்களின் ஓசைகள் அந்தியில் எழுபவை. அந்தியில் பார்க்கும் ஊர்களினூடாக நாம் சென்று மீளும் ஆழம் ஒன்று உண்டு

இமையமலை அடுக்குகளில் அந்திகள் ஓரு மாபெரும் சேர்ந்திசை என நிகழ்பவை. பனிமலைகளின் இதழ்களின் ஒரு கூர்முனை செந்நிறம் கொள்கிறது. மெல்ல மெல்ல இதழடுக்குள் சிவக்கின்றன. சிவந்த புகை போல. செவ்வொளியின் அடர்த்திமாறுபாடுகள் போல. அடர்ந்து செறிந்து இருண்டு மறைய வெண்ணிறநிழலுருக்கள் என மலைகள் சாம்பல்நிற வானின்கீழ் அமையும். வானிலிருந்து படிந்த வண்டல்போல. பிற இடங்களில் அந்தி பறவையோசைகளால் நிறைந்தது. இமையமலையின் அந்தி ஆழ்ந்த அமைதி கொண்டது. ஆகவே காலமில்லாமல் நிகழ்வது. எடைமிக்க ஒன்று மூழ்கி மூழ்கி மறைவதென.

இது கோடைகாலத் தொடக்கம். இம்முறை பிப்ரவரி முடிவதற்குள் வெயில் வெம்மைகொண்டுவிட்டிருக்கிறது. குமரிமாவட்டம்போல மழைமிகு மாவட்டங்களில்தான் புல் விரைவில் கருகும். ஏனென்றால் அது தொடர்மழையில் உருவானது. நீர் ஓய்ந்ததுமே வண்ணம் வெளிறத் தொடங்குவது. பொன்னிறமாகி அந்தியில் தழலென்றாகி நின்றிருக்கும். அதன்மேல் கதிரொளி அலையலையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

அத்தனை புல்மலர்களும் காய்ந்து விட்டன. அவை ஏற்கனவே தழல். மிக எளிதாகத் தழல் பற்றிக்கொள்ளும். சிலசமயம் இயல்பாக ஒன்றோடொன்று உரசிக்கொண்டுகூட தீ பற்றும். அவற்றை ஆண்டுக்காண்டு எரிப்பதும் விவசாயிகளின் வழக்கம். ஒருமுறை நான் நடந்து வருகையில் எரியும் புல்பரப்பிலிருந்து ஏராளமான சிறு நாகங்கள் என்னை நோக்கி ஓடிவந்தன. ஓரிரு இஞ்ச் நீளம் கொண்டவை. ஆனால் அவற்றிலும் சில பத்தி விரித்தன.

சாலைப்பணிக்காக செம்மண் அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள். ஒரு மாபெரும் வயல்போலவோ நடுநிலத்து செம்பாலை போலவோ தோன்றுகிறது. அதன் மறுநுனியில் சிவந்த சூரியன். மரங்களுக்குமேல் அசையாது நின்றிருக்கும் சூரியன் கனல்பரப்பின் மேல் தழல். பசுமையில் அத்தனை விரைவில் அந்தி எழுவதில்லை. சூரியன் பசுமைக்குமேல் ஒரு மலர் எனத்தெரிகிறது. மென்மையான தண்மையான மலர்.

பறவைகள் ஓசையிட்டு கலைந்து சுழன்று வானை நிறைத்திருக்கின்றன. எல்லா திசைகளை நோக்கியும் பறக்கின்றன. அப்பால் மலைகளிலிருந்து இப்பக்கம் நகரிலிருந்து வருகின்றன செல்கின்றன. கொக்குகள் மிகமிகப் பிந்தியே வானேறுகின்றன. அதுவரை வயலில், ஏரிச்சேற்றுப் பரப்பில் நீள்கால்களை தூக்கிவைத்து நடந்தும் கழுத்து வளைத்தும் தேடிக்கொண்டிருக்கின்றன. நீரின் வண்ணம் மாறுகிறது. இருள்கையில் அதன் தண்மை கூடிவருகிறதோ என்று தோன்றுகிறது.

நீரின் வண்ணம் மாறுவதைப்போல அந்தியின் நாடகம் பிறிதொன்றில்லை. நீர் வானையே உற்றுநோக்கியிருக்கும் ஒரு விழி. வானுக்கு ஏற்ப அது மாறிக்கொண்டிருக்கிறது. வானம் செம்மைகொள்கையில் நீரில் நீலம் அடர்கிறது. அந்தியில் குளிப்பவர்கள் பலர் உண்டு.  பகல் முழுக்க செய்த உழைப்பிலிருந்து அவர்களை விடுவிக்கிறது நீரின் தண்மை. இங்கே குளித்துச் செல்பவர்களே போதை கொண்டவர்கள் போலிருக்கிறார்கள்.

மிக அருகே நீர். ஆனாலும் நாணல்கள் பழுப்படைந்துவிட்டிருக்கின்றன. அவற்றின் வேர் நீரை எட்டுவதில்லை. அவற்றின் வாழ்க்கை அவ்வளவுதான். உயிரின் நுரை. பொங்கி எழுந்து பொலிந்து அணைபவை. வெண்புல்கொண்டைகள். அவை ஒவ்வொன்றும் விதைகள். புல் விதைபெருக்கி மறைகிறது. மார்ச், ஏப்ரல், மே என மூன்றுமாதத் தவம். ஆனால் குமரிமாவட்டத்தில் ஏப்ரலின் நடுவில் நாலைந்து பெருமழைகள் உண்டு

இருள்மூடியபின் கணியாகுளம் சாலை முற்றிலும் வேறொன்று. நான் இங்கே வந்தபோதிருந்த இடமல்ல. ஏராளமான கட்டிடங்கள். அவற்றில் விளக்குகள். அப்பால் சவேரியார் குன்றின்மேல் கூட குருசடியும் விளக்கும். வேளிமலை மட்டுமே இருண்டு எழுந்து தொடப்படாதது என நின்றிருக்கிறது. இருளே ஒளியென ஒழுகுவதுபோல பேச்சிப்பாறை வாய்க்கால். அதன் வழியாக நடந்தேன். வழக்கம்போல ஒளியுடன் ஒரு சிறு பாம்பு சாலையை குறுக்கே கடந்தது

இரவில் இங்கே எங்கும் குடிதான். அந்தியில் குடிப்பவர்கள் அந்தியை எவ்வகையிலாவது உணர்கிறார்களா? அந்தியின்மேல் அவர்கள் தடித்த கம்பிளிப்போர்வை போல இரவை இழுத்து போர்த்துக்கொள்கிறார்கள். உண்மையில் ஒவ்வொருவருக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் அளிக்கப்படும் தனிப்பொழுது அந்திதான். அதை இழப்பவர் தனக்கென நாளே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறார்

கோடை இரவுகளில் சற்றுநேரம் மொட்டைமாடியில் அமர்வதுண்டு. சாய்வு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு. சைதன்யாவும் அருண்மொழியும் உடனிருப்பார்கள். பெரும்பாலும் சைதன்யா. ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். நிலவு எழுவதை தென்னையோலைகளுக்கு அப்பால் ஒளிகொள்வதை நோக்கியபடி. கோடைகாலக் காற்றில் நீரின் சேற்றின் மென்மணம் இருக்கும். இளங்குளிர் இருக்கும். தென்னையோலைகள் நிலவை அளைந்து அளைந்து அவ்வடிவு கொண்டவை. நிலவொளியில் மின்னுபவை

தென்னையோலைகளின் சுடர்விடும் நுனிகளுக்கு அப்பால் ஒளிகொண்ட முகில்கள். விண்மீன் திரளுடன் நிலவு தோன்றிவிட்டது. ஒவ்வொன்றும் பித்துகொள்கின்றன. மிக மிக மெல்ல வந்து தன்னை எங்கும் நிறுவிக்கொள்கிறது இரவு.

முந்தைய கட்டுரைமெய்மையின் பதியில் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80