கவிதை, ஆளுமை, பாவனைகள்

கவிதையில் அசடுவழிதல்

 

அன்புள்ள ஜெ,

 

உங்கள் விமர்சனத்திற்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். நான் கவிதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்குப்புரிகிற வரையில் அந்த கவிதை ஏன் அசட்டுத்தனம் என நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? அது வழக்கமாக வாசிக்கும் கவிதை போலத்தானே இருக்கிறது?

 

எஸ்.சதீஷ்குமார்

 

அன்புள்ள சதீஷ்குமார்,

 

உங்கள் ஒருவரியிலேயே பதில் இருக்கிறது ‘வழக்கமாக வாசிக்கும்’ வரிகளைப் போல் இருந்தால் அது கவிதையா என்ன? கவிதைக்கு ஒரு ‘பிறிதொன்றிலாத தன்மை’ இருந்தாகவேண்டும். அதையே ‘படைப்பூக்கம்’ என்கிறோம்

 

இந்த வரிகளை மனுஷ்யபுத்திரன் ஒரு சாதாரணமான கருத்தாக வந்தடைந்திருக்கிறார். அந்த அபிப்பிராயத்தை அவர் வழக்கமாகக் கவிதை எழுதும் ஒரு ‘டெம்பிளேட்’ பாணியில் சுழற்றிச் சுழற்றி எழுதியிருக்கிறார். இப்படி ஒரு கருத்தை உடைத்து எழுதினால் அது கவிதை அல்ல.

 

இந்த சுழற்றிச் சுழற்றிச் சொல்லும் பாணி கவிதையில் பாப்லோ நெரூதா முதல் இருந்து வருவது.  உதாரணமாக ஒர் எளிமையான படிமம் – சும்மா நானே எழுதிக்காட்டுகிறேன். ‘இலை என்பது மரத்தின் நாக்கு. அது தன் துயரங்களை இலைகளால் கூவிச் சொல்கிறது’. இதை இந்தப்பாணியில் இப்படி எழுதுவார்கள்.

 

இலைகள் என்பவை

மரத்தின் பசுமை மட்டும் அல்ல

அதன் அசைவு மட்டும் அல்ல

அதன் ஒளி அல்ல

நிழல் அல்ல

அதன் துள்ளல் அல்ல

அமைதியும் அல்ல

அவை

மரத்தின் நாக்குகள்.

 

அலறிக்கொண்டிருக்கிறது

இந்த மரம்

 

இது ஒரு கூறுமுறை, அல்லது வடிவம். மனுஷ்யபுத்திரன் மாறாமல் கைக்கொள்ளும் வடிவம் இது. இதை பல விமர்சகர் குறைசொல்வதுண்டு. நான் அப்படிச் சொல்வதில்லை. கவிதை அல்லது புனைவின் வடிவம் எப்போதுமே தன்னளவில் பெருமையோ சிறுமையோ அற்றது. அந்த வடிவம் எதற்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியமானது.

 

மேலே சொன்ன வடிவத்தின் எல்லைகள், நிபந்தனைகள் சில உண்டு – முக்கியமாக நீளம். மேலேசொன்ன சொற்றொடர் அடுக்கை இரண்டு பக்கத்திற்கு நீட்டித்தால் வாசகனுக்கு சலிப்பே வரும் [ ஒரு வேடிக்கைக்காக நீட்டித்துப் பாருங்கள். இலை என்பது நரம்புகளின் வலை அல்ல, இலை என்பது பூச்சிகள் வாழும் இல்லம் அல்ல, இலை என்பது மழையில் அசையும் குடை அல்ல…..]

 

மலையாள நகைச்சுவை. ஒரு பாடகர் விரிவாகப் பாடினார். ‘மானல்ல, புள்ளி மானல்ல, கவரி மானல்ல, கஸ்தூரி மானல்ல, குட்டி மானல்ல’ கேட்டிருந்த ஒருவர் பொறுமையிழந்து ‘வேறு என்ன? சொல்லித்தொலை” என்றார். அந்த பொறுமையிழப்பு வாசகனுக்கு வராதபடி கவிதையின் உடலாக அமையும் அந்த அடுக்கே கவித்துவமும் செறிவும் கொண்டிருக்கவேண்டும்

 

உடனே எழும் இயல்பான வினா, அந்த முதல்படிமத்தை அப்படியே சுருக்கமாகச் சொன்னால்போதுமே ஏன் படிப்படியாக வளர்க்கவேண்டும் என்பது. மூன்று காரணங்களால் அப்படி வளர்க்கப்படுகிறது. ஒன்று, அந்தப்படிமம் மீதான உணர்ச்சிகள் தொடர்ச்சியாக வளர்த்து கொண்டுவரப்பட்டு அப்படிமத்தில் வந்து சேர்கின்றன. இரண்டு, அந்த அமைப்பு ஓர் இசைப்பாடலை நினைவுறுத்துவதனால் பாவியல்பு [lyrical quality] படைப்பில் உருவாகிறது. மூன்று, அந்த படிகள் ஒவ்வொன்றும் அப்படிமத்தை வெவ்வேறு திசையில் திறந்து கடைசியில் அதை அழுத்தம் மிக்கதாக ஆக்குகின்றன

 

மூன்றாவது கூறுதான் உண்மையில் முக்கியமானது. ஆகவே அந்த படிகள் வெறுமே ஞாபகம் வந்த அடுக்கில் அமையலாகாது.எனவேதான் இந்த வகைக் கவிதைகளில் அந்த வரியடுக்குகள் அதன் ஆசிரியரால் மிகமிக கவனமாக எண்ணி எண்ணி வைக்கப்படவேண்டும். தேவையற்றது தவிர்க்கப்படவேண்டும். ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் நடுவே ஒரு தொடர்ச்சியும் அதேசமயம் சொல்லப்படாத இடைவெளியும் இருக்கவேண்டும். அந்த இடைவெளியில் வாசகன் ஒரு தாவலை நிகழ்த்தவேண்டும். ஒவ்வொன்றும் தன்னளவில் ஒரு படிமத்தன்மையும் கொண்டிருக்கவேண்டும்.

 

இந்த வடிவத்தைக் கையாளும் கவிஞர்கள் இந்த அடுக்கு சுருக்கமாக இருக்கிறதா, இயந்திரத்தனமாக அடுக்கப்பட்டதாக தெரிகிறதா என்று பலநாட்கள் பலகோணங்களில் நுணுகி நுணுகி பார்ப்பார்கள். மனுஷ்யபுத்திரன் இன்றைய கவிதைகளில் மேடைப்பேச்சாளர்களைப்போல நீட்டி நீட்டி கொண்டுசெல்கிறார். ஞாபகம் வருவன அனைத்தையும் அடுக்கிக்கொண்டே செல்கிறார். அவை கவிதைகள் அல்ல.

 

அதேசமயம் விமர்சகன் ஒரு கவிஞன் அடையாது போன, தவற விட்ட கவிதைக்காக எரிச்சல் கொள்ளலாகாது. காத்திருக்கலாம். இன்றைய அவருடைய கவிதைகளைப் பற்றி என் எண்ணம் அது. ஏனென்றால் அவர் நல்ல கவிதைகளை எழுதியவர், எனக்கு அணுக்கமான கவிஞர்.

 

ஆனால் இக்கவிதையில் – இந்த வரியடுக்கில் என கறாராகச் சொல்லவேண்டும் – அவர் கவிதைக்காக முயலவே இல்லை. ஒரு வரி, ஒரு படிமம்கூட இதில் ஆர்வமூட்டுவதாக இல்லை. வாசகனின் நுண்ணுணர்வை நோக்கி ஒரு சொல்கூட எழுதப்படவில்லை. வாசகன் கற்பனை செய்துகொள்ள, தன் அனுபவத்தைக்கொண்டு மேலே செல்ல ,ஒன்றுமே இல்லை இதில். அதோடு இந்த அசட்டுத்தனத்தை தானே கொண்டாடி மகிழ்கிறார். ஆகவேதான் விமர்சனக்குறிப்பு எழுதவேண்டியிருக்கிறது.

 

இது கவிதை அல்ல, அசட்டுத்தனமான முயற்சி. ஆனால் அதை உச்சகட்ட அசட்டுத்தனமாக ஆக்குவது என்ன? அதிலுள்ள பழங்காலப் பார்வை. அடுத்த தலைமுறைமேல் ஈடுபாடோ, மதிப்போ, புரிதலோ இல்லாமல் அதை தெரிந்துகொண்டதாக பாவலா காட்டுதல்.

 

இன்றைய தலைமுறையில் பாலுணர்வுச் சாயலே இல்லாமல் ஆண்பெண் நட்புறவு நிகழ்கிறது. பெண்ணுக்கு அவளுடைய அறிவார்ந்த தளத்தில், தொழில் தளத்தில் மிகச்சிறந்த நட்புகள் உருவாகக்கூடும். அது காதல், திருமணம் ஆகியவற்றுடன் தொடர்பற்றது. இது சென்றகாலகட்டத்தில் இல்லை. அந்நண்பர்களில் ஒருவரை அவள் தன் சிறந்த தோழன் என்னும் பொருளில் பாய்பெஸ்டி என்கிறாள்

 

மனுஷ்யபுத்திரன் பாய்பெஸ்டி என்றால் வாய்ப்புகிடைக்காத காதலன், ஏமாற்றப்படும் ஆண் என்று புரிந்துகொள்கிறார். அதாவது எண்பதுகளின் டி.ராஜேந்தர் படத்தில் வருபவன். இதிலுள்ளது மிக மோசமான பெண்வெறுப்புப் பார்வை.[Misogyny] நீங்கள் ஒன்றை கவனிக்கலாம், ஓயாது பெண் பற்றி காமம் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் பெண்வெறுப்பு நோக்கு கொண்டவர்கள்.

 

இந்தக்கவிதையின் நேர்ப்பொருள் ஒன்றே. பெண் என்பவள் காமத்திற்குரியவள், அவள் அதை ஆணுக்கு மறுத்தால் அது ஏமாற்றுதல், ஆகவே தோழன் என்பவன் அவளால் ஏமாற்றப்படும் காதலன். அவள் ஒரு தின்பண்டத்தை வைத்துக்கொண்டு போக்கு காட்டுகிறாள் என்று சித்தரிக்கிறது இது. என்ன ஆச்சரியம் என்றால் இந்த அசட்டுக் கிழட்டுப் பார்வை ரொமாண்டிஸிசம் என்ற பேரில், இளமைத்துள்ளல் என்ற பாவனையில் இங்கே முன்வைக்கப்படுகிறது. அதை ஏற்று கொண்டாட மேலும் அரைக்கிழவர்கள். இளம்கவிஞர்களே நமக்கு இல்லாமலாகிவிட்டார்களா என்ன?

 

கொஞ்சம் யோசிக்கும் எந்தப் பெண்ணுக்கும் இது மிகப்பெரிய அருவருப்பை உருவாக்கும். இக்கவிதை பெண்களின் பொதுவெளிப் பழக்கங்களை சிறுமைசெய்கிறது. இத்தகைய மனநிலை பெருகினால் அது பெண்களின் அறிவுச்சுதந்திரம், பொதுவெளிச் சுதந்திரம் அனைத்துக்கும் தீங்கானது. அவள் தன் தோழன் என ஒருவரை எங்கும் அறிமுகமே செய்யமுடியாது.  உடனே அதற்கு ஒரு எதிர்மறை அர்த்தம் அமைந்துவிடுகிறது. இப்படி ஒர் அர்த்தத்தைக் கட்டமைப்பதனால் இது உலகப்பார்வையில் அசட்டுத்தனமான கவிதை

 

மனுஷ்யபுத்திரனை 1991 முதல் அறிவேன். அவருடைய கவிதைகளின் வாசகனாக, விமர்சகனாக. இன்னும் அப்படித்தான். என் குறிப்பை ஒட்டி அவரை அரசியல்ரீதியாக, தனிப்பட்ட முறையில் விமர்சித்து வந்த எக்கடிதத்தையும் நான் பொருட்படுத்தவில்லை. அவரைப் பற்றிய எந்த எதிர்மறைக் குறிப்பையும் அவர் நல்ல கவிஞர் என்னும் வரி சேர்க்காமல் நான் எழுதுவதும் இல்லை.

 

அவருடைய எதிர்வினை எப்படி இருக்கும் என நான் அறிவேன். அவர் ‘பாதிக்கப்பட்டவர்’ என்னும் ஒரு தோற்றத்தையே மாறாமல் பூணுகிறார்.  Victim playing  அவருடைய உளவியல் ஆட்டம். அது அவரை எப்போதும் வெற்றிபெறச் செய்கிறது. நிரந்தரமான தன்னிரக்கம் அவருக்கு மறைமுகமான ஆற்றலை அளிக்கிறது. அது அவரைச் சூழ்ந்திருப்பவர்களிடம் குற்றவுணர்ச்சியை உருவாக்குகிறது. அவர் அதை பயன்படுத்திக்கொள்வார். அதோடு அவரே அதை நம்பி அதை ஓர் அறைகூவலாக மாற்றி தனக்கே விடுத்துக்கொள்கிறார். அதன் வழியாக செயலூக்கம் கொள்கிறார். இப்படித்தான் அவர் மேலெழுந்து வந்திருக்கிறார். அது அவருடைய வழிமுறை- அவர் வென்றுவந்த பாதை.

 

அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை அவர் எப்படி சித்தரிக்கிறார் என்று பாருங்கள். நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள். அதில் அவருடைய உடல்சார் இயலாமையை ஒரு பேசுபொருளாக எடுத்துக்கொள்கிறேன். ஏன்? அதை பலமுறை விளக்கியிருக்கிறேன். அதை தெரிந்துகொள்ளாததுபோல் ஓர் அவதூறாக அதை மாற்றிக்கொள்ள முயல்கிறார்

 

ஒரு கவிஞன் தன் சுயத்தை தன் கவிதைக்குள் எப்படிச் சித்தரித்துக்கொள்கிறான் என்பது எப்போதுமே முக்கியமானது. தன்னை உடற்குறையால் ஒதுக்கப்பட்டவராகத்தான் மனுஷ்யபுத்திரன் அவரே அவருடைய பல கவிதைகளில் முன்வைக்கிறார். அவர் உருவாக்கிக்கொள்ளும் அந்த சுயம் எப்படி அவரை எல்லா ஒடுக்கப்பட்ட தரப்புகளுடனும் அடையாளப்படுத்திக்கொள்ளச் செய்கிறது, எப்படி விரிவான மனிதாபிமான அரசியலுணர்வு கொண்டவராக ஆக்குகிறது என நான் விவாதிக்கிறேன். முழுக்கமுழுக்க அவரைப் பற்றிய பாராட்டாக. எந்த எதிர்மறையம்சமும் இல்லாமல். இதைச் செய்வதற்குப் பெயர்தான் இலக்கிய விமர்சனம்.

 

அவர் நான் மாதவிக்குட்டி [கமலாதாஸ்]யின் தோற்றம் பற்றிச் சொன்னதை சுட்டிக் காட்டுகிறார். மாதவிக்குட்டி தன் புனைவுலகுக்குள் தன்னை முன்வைக்கும் விதம், தன் சுயத்தை உருவாக்கும் விதம் அது. தன்னை அழகற்றவள் என அவரே தன் நூல்களில் முன்வைக்கிறார். கரிய தடித்த உடல்கொண்டவள் தான் என்றும், பெரும்பாலும் மெலிந்த சிவந்த பெண்கள் கொண்ட உயர்குடிச் சூழலில் தான் அயன்மைப் படுத்தப்பட்டதையும், ஆகவே தன்னை கலகக்காரியாக அடங்காதவளாக ஆக்கிக்கொண்டதையும் அவர்தான் சொல்கிறார். அவருடைய நூல்களை வாசித்தவர் இதை அறியலாம். ஆகவே மாதவிக்குட்டியின் மீறல் – கலக இயல்பை ஆராயும்போது அவருடைய இந்த சுயம் அதில் என்ன பங்களிப்பை ஆற்றியிருக்கிறது என ஆராய்வது விமர்சகனின் பணி.

 

மனுஷ்யபுத்திரனின் குறைபாட்டையோ மாதவிக்குட்டியின் தோற்றத்தையோ  நான் ஆராய்ந்து என் விமர்சனத்திற்குள் கொண்டுவந்து சேர்க்கவில்லை. அது அவர்களே முன்வைக்கும் சுயம். விக்ரமாதித்தன் தன்னை குடிகாரன், நாடோடி என்றுதான் தன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதை ஏற்றுக்கொண்டே அவரை நாம் வாசிக்கமுடியும், விமர்சனம் செய்யமுடியும். உடனே அய்யய்யோ விக்ரமாதித்தனை குடிகாரன் என்று சொல்லிவிட்டார்கள் என ஒருவர் கிளம்பிவந்தால் அதற்கு என்னதான் சொல்லமுடியும்?

 

எழுத்தாளர் தன் புனைவுலகுக்குள் தானே முன்வைக்கும் சுயத்தை கருத்தில்கொண்டு அவருடைய உணர்வுகளையும் பார்வைகளையும் ஆராய்வது என் வழக்கம். மேலைநாடுகளில் அந்த எழுத்தாளரின் தனிவாழ்க்கையை விரிவாக ஆராய்ந்து அந்தரங்கங்கள் அனைத்தையும் வெளியே கொண்டுவந்து ஆராயும் வழக்கமே உள்ளது. அதை வாழ்க்கைவரலாற்றுத் திறனாய்வு [ Biographical Criticism] என்கிறார்கள்.தமிழ்ச்சூழலில் இன்றுவரை அது இல்லை, வருங்காலத்தில் எழலாம்.

 

மலையாள மொழியின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக மாதவிக்குட்டியை முன்னிலைப் படுத்தியவன் நான். என் முன்னுரையுடன் ,என் முயற்சியால்தான் தமிழில் அவருடைய முதல் தொகுப்பே வெளிவந்தது. அதற்கு எழுதிய முன்னுரையை மாதவிக்குட்டியே படித்திருக்கிறார், என்னிடம் பேசியுமிருக்கிறார். மனுஷ்யபுத்திரனை ஒரு கவிஞராக தொடர்ந்து முன்வைப்பவன் நான். நான் கவிதை குறித்து எழுதிய எக்கட்டுரையிலும் மனுஷ்யபுத்திரனைப் பற்றி சொல்லாமலிருந்ததில்லை.

 

மனுஷ்யபுத்திரன் செய்துகொண்டிருப்பது ஓர் எளிய உள்ளத்தின் தற்காப்புப் பாவனைகள் – அவரால் அதையே செய்யமுடியும். அதற்கப்பால் நான் சொன்ன விமர்சனக்கருத்து அவருக்கு உறைக்குமென்றால் நல்லது. இல்லையேலும் முன்பு எழுதிய கவிதைகளால் என் அன்புக்குரிய கவிஞர்தான் அவர்.

 

ஜெ

 

கடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு

மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் – ஒரு கேள்வி

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

மனுஷ்யபுத்திரன் ,இலக்கியம் அரசியல்

மனுஷ்யபுத்திரன்,புதுத்திறனாய்வு

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்

திராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைபடம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு