வில்லியம் மில்லர் விக்கி
நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கு உள்ள பங்கைப்பற்றிச் சொல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதன்மையான சிக்கல், நம்மவர்களின் ஒற்றைப்படுத்திப் பார்க்கும் பார்வைதான். ஆங்கில காலனியாதிக்கம் இந்தியாவை ஒட்டச்சுரண்டி இருள்பரவச் செய்து அதன் பல்லாயிரமாண்டு மாண்பை அழித்தது என்பது எத்தனை உண்மையோ அதற்கு நிகரான உண்மை இந்தியாவின் எளிய மக்களை விரும்பிய, அவர்களின் வாழ்வின் மேம்பாட்டுக்காக உழைத்த மாமனிதர்களில் பலர் ஆங்கிலேயர்கள் என்பது. இந்தியாவிற்கு நவீன சிந்தனைகளை, நவீன உலகின் விழுமியங்களை அவர்கள் கற்பித்தனர்.
இந்த இரட்டைநிலை ஐரோப்பாவிற்கும் உண்டு. உலகத்தின் ஜனநாயக, மனிதாம்பிமான, விடுதலைச் சிந்தனைகளில் ஐரோப்பாவின் பங்களிப்பு முதன்மையானது. ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த போர் –வணிக அமைப்பு உலகைச் சுரண்டி வறுமையாக்கவும், போர்களில் தள்ளி சீரழிக்கவும் செய்தது. இன்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு இருபாற்பட்டதே. இந்த இரட்டைநிலையை படித்தவர்களுக்கு புரியவைப்பதிலேயே கூட சிக்கல் உள்ளது. அவரவர் சார்புகளுக்கேற்பவே அதை அவர்கள் புரிந்து வகுத்துக்கொள்கிறார்கள்.
ஓர் ஐரோப்பியரின் பண்பாட்டு, மனிதாபிமான சேவையை அவர் சார்ந்திருந்த சமூகத்தின் சுரண்டல் ஒடுக்குமுறைப்போக்கின் பகுதி எனக்கண்டு சிறுமைப்படுத்துவதும் சரி, அல்லது தனித்தனியான ஐரோப்பியரின் பண்பாட்டு, மனிதாபிமானச் சேவைகளை கொண்டு ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆதிக்கமும் நல்லெண்ணமும் நல்விளைவும் கொண்டது என்று வகுக்கமுற்படுவதும் சரி ,அறிவின்மைகளே.
ஐரோப்பாவின் சுரண்டலையும் அழிவையும் புரிந்துகொள்ளும்போதே ஐரோப்பிய அறிவியக்கமும் தனிமனிதர்களும் அளித்த கொடையையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ளும் போக்கு நமக்குத்தேவை. அதை அரசியல்களத்தில் உருவாக்குவது கடினம், ஏனென்றால் அரசியல்களம் என்பது இருமுனைகளால் ஆனது. இலக்கியச்சூழலிலாவது அத்தகைய புரிதல் அமையவேண்டும்.
சென்னை கிறித்தவக் கல்லூரியின் நிறுவனரான டாக்டர் வில்லியம் மில்லர் அவர்களின் வரலாற்றை ஓ. கந்தசாமி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். 1908ல் எழுதப்பட்ட இந்நூலை பேரா யோ.ஞானசந்திர ஜான்சன் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார். சுருக்கமான வாழ்க்கைக்குறிப்பான இந்நூல் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கல்விப்பணியாளர், மதப்பணியாளர் ஒருவரின் வாழ்க்கையை, அவர் செயல்பட்ட சூழலை நமக்கு காட்டுவது.
ஓ.கந்தசாமி தனக்குப் பத்துவயதாக இருக்கையில் மில்லரை நேருக்குநேர் சந்திக்கிறார். சென்னை லிங்கிசெட்டி தெருவில் கெய்த்னஸ் ஹால் கட்டப்பட இடத்தில் ஒரு சாரட் வண்டியில் வரும் மில்லர் தன்னைப்போன்ற இந்திய மாணவன் ஒருவனின் வீட்டுக்கு வந்து அதன் சிறு வாயிலினூடாக தன் நெடிய உடலை மடித்து உள்ளே நுழைந்து நோய்விசாரித்து திரும்புவதை அவர் பார்க்கிறார். அன்று அது அரிதினும் அரிதான நிகழ்வு. அது அவர் உள்ளத்தில் ஆழப்பதிகிறது. முப்பதாண்டுகளுக்குப்பின் மில்லர் அவர்களைப் பற்றி ஒரு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்க அந்நிகழ்வு அவருக்கு தூண்டுதலாகிறது.
இந்தியாவில் பெரும் மானுடப்பணியாற்றிய பலரும் அயர்லாந்து அல்லது ஸ்காட்லாந்தினராக இருப்பதை பார்க்கலாம். மில்லர் ஸ்காட்லாந்த்தின் வடகோடியில் கெய்த்னஸ் [Caithness] மாகாணத்தில் த்ருஸோ [Thurso] என்னும் ஊரில் 1838 ஆம் ஆண்டு ஜனவரி பதிமூன்றாம் நாள் பிறந்தார். மகர சங்கராந்திக்கு ஒருநாள் முன் என அந்தப் பிறந்தநாளை ஓ.கந்தசாமி நினைவில் வைத்திருக்கிறார். அந்த ஆண்டு ராணி விக்டோரியா பதவி ஏற்றதற்கு அடுத்தநாள் என நினைவுகூர்கிறார். ஏனென்றால் ஆசிரியர் – குரு என்னும் நிலையில் மில்லரை வைத்திருந்த ஓ.கந்தசாமி போன்றவர்களுக்கு அவருடைய பிறந்தநாள் ஒரு பண்டிகை.
மில்லர் நார்வே கொடிவழியினர் என்றும் தன் குலம் பற்றிய பெருமிதம் அவருக்கு இருந்தது என்றும் ஓ.கந்தசாமி குறிப்பிடுகிறார். குறிப்பாக கடற்கொள்ளையராக இருந்து பிடிபட்டு ஓ.கந்தசாமி நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசரால் தலை துண்டிக்கப்பட்ட தன் முன்னோர் ஒருவரைப்பற்றி ஊக்கத்துடன் மில்லர் பேசுவார் என ஓ.கந்தசாமி நினைவுகூர்கிறார். நார்ஸ்மென் என்று சொல்லப்பட்டு நார்மன் எனச் சுருங்கிய தன் கொடிவழி பற்றிச் சொல்லும் மில்ல்லர் ”கெல்ட் இனத்தவர் கனவு காண்பர், சாக்ஸன்கள் தூங்குவர், நார்மன்கள் உழைப்பார்கள்’ என்று ஓர் உரையில் வேடிக்கையாகச் சொன்னதை குறிப்பிடுகிறார்
தன் மரபிலிருந்து சாகசத்தன்மையை பெற்றுக்கொண்டதாக மில்லர் சொல்வதுண்டு வில்லியம் மோரிஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் [. William Morris ]எழுதிய Sigurd The Volsung என்னும் கவிதை பிரிட்டிஷ் இலக்கியத்தில் ஓர் உச்சம் என்றும் , அது ஆங்கிலேய வீரயுகத்தின் பாடல் என்றும் மில்லர் கருதினார். தம்புசெட்டித் தெருவில் இருந்த எஸ்பிளனேட் முனையில் நிகழ்ந்த ஓர் இலக்கியக்கூட்டத்தில் மில்லர் அக்கவிதையை மிகுந்த உணர்ச்சிவேகத்துடன் சொன்னார் என கந்தசாமி நினைவுகூர்கிறார். வில்லியம் மோரிஸின் ஆளுமையே விந்தையானது. அவர் சாகசக்காரர், தொழில்முனைவர், ஆய்வாளர், கவிஞர். அந்த உயிர்த்துடிப்பு நார்ஸ் இனத்தவருக்கு அணியாக அமைவது என்று கருதிய மில்லர் அது தன்னுடைய இலட்சிய வாழ்க்கைச் சித்திரம் என்று எண்ணினார்.
சிறிய செய்திகள் வழியாக மில்லரின் ஆளுமையை மட்டுமல்ல மேற்கை கிழக்கு சந்திக்கும் தருணங்களையும் இந்நூலில் காணமுடிகிறது. மில்லர் மிகக்கடுமையாக உழைக்கும் பழக்கம் கொண்டவர். 1892ல் கடுமையான காய்ச்சலில் கூட துயிலாமல் தேர்வுத்தாள்களை திருத்திக்கொண்டிருந்தார். ஓய்வெடுக்காலாமே என்று சொல்லப்பட்டபோது ‘தன் வேலையை ஒருவன் முடிந்தவரைச் செய்தாகவேண்டும்’ என்கிறார். அந்த செயல்வெறி ஓ.கந்தசாமிக்கு வியப்பூட்டுகிறது. ஏனென்றால் அவருடைய நோக்கில் ஆசிரியர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, பெரிதாக எதைப்பற்றியும் கவலைகொள்ளாதவர்கள், உலகியல்செயல்களில் மிகையான ஈடுபாடு அற்றவர்கள், ஒருவகை துறவிகள்.
மில்லரை குருவாக எண்ணும் ஓ.கந்தசாமி அவருக்கு பணிவிடைகள் செய்ய விழைகிறார். ஆனால் மில்லர் அதை ஏற்பதில்லை. தன் வேலைகளை பிறர் செய்வதும், தனக்கு பிறர் உதவிசெய்வதும் அவருக்குப் பிடிப்பதில்லை. ஆனால் முதுமையில் அவர் உடல்நலம் இன்றி கண்ணயர்ந்திருக்கையில் ஓ.கந்தசாமி அவருக்கு விசிறியால் வீசிவிடுகிறார். கண்விழித்து அதைப் பார்க்கும் மில்லர் அதை ஒரு நண்பனின் பணிவிடையாக ஏற்றுக்கொள்கிரார். ஆனால் அது தனது நல்லூழ் என ஓ.கந்தசாமி எண்ணுகிறார்.
இந்நூல் மிகச்சுருக்கமாகச் சொல்லிச் செல்லும் செய்திகள் வழியாக அக்காலத்து கிறித்தவப் பரப்புநர்களின், சமூகசேவையாளர்களின் உளநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. மில்லர் இளமையிலேயே நகருக்கு மிக அயலான ஒரு பண்ணையில் வாழ்ந்தவர். அவர் பைபிள் வழியாக பெற்றுக்கொண்ட கனவு தாவீதின் வாழ்க்கை. பாலையின் வெறுநிலவிரிவில் ஆடுகளை மேய்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்கும் தாவீதின் சித்திரம் அவருள் பதிந்தது. அது ஓர் இலட்சியவாழ்க்கை என்றும் அது தொலைநிலத்தில் எங்கோ உள்ளது என்றும் அவர் எண்ணினார். இந்தியா என்னும் அறியாநாட்டில் சென்னையில் சேவையாற்ற அவர் கிளம்புவதற்கு அதுவே காரணம். அந்த கனவை பல உரைகளில் மில்லர் கூறியிருக்கிறார்
மில்லர் தன் இருபதாம் அகவையிலேயே சீர்திருத்த கிறித்தவச் சபையின் ஊழியராக ஆகிவிட்டிருந்தார். தன் சொந்த ஊரில் பல புகழ்பெற்ற சொற்பொழிவுகளை அவர் செய்தார். சென்னையில் ஜான் ஆண்டர்சன் தொடங்கிய கிறித்தவசேவை – கல்விப்பணியில் தொய்வு ஏற்பட்டபோது அவருக்கு டாக்டர் கேண்ட்லிஷ் என்பவர் இளைஞரான மில்லரை பரிந்துரைத்தார். அவ்வாறுதான் மில்லர் 1862ல் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 24 தான்.
சென்னையின் சீர்திருத்தக் கிறித்தவ சபை ஏற்கனவே ஒரு பள்ளியை நடத்தி வந்தது. மில்லர் அதை உயர்நிலைப் பள்ளியாகவும் பின்னர் கல்லூரியாகவும் ஆக்கினார். இவ்வாறுதான் 1865ல் சென்னை கிறித்தவக் கல்லூரி அவரால் உருவாக்கப்பட்டது. இந்நூல் அக்கல்லூரியை உருவாக்க மில்லர் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சியை விரிவாக பதிவுசெய்கிற்து இந்நூல். மில்லர் கனிவும் கண்டிப்பும் கொண்ட ஆசிரியர். சளைக்காமல் பாடம் கற்பிப்பவர். அவருக்கு கல்விப்பணியில் இருந்த ஈடுபாடு ஏசுவிடம் இருந்த ஈடுபாட்டுக்கு நிகர். அவருடைய மாணவர்கள் பலர் அவரை ஒர் ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு முனிவராகவே எண்ணுமளவுக்கு அவர் கற்பிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தனர்
மிகத்தீவிரமான மதப்பற்று கொண்டிருந்த மில்லர் கிறித்தவ அடிப்படைவாதியாகத் திகழவில்லை. பிற மதங்கள்மேல் வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. கிறித்தவ இறையியலை எடுத்துரைப்பது மட்டுமே தன் பணி என கருதியிருந்தார். ஆகவே அவருடைய மாணவர்களிலேயே பெரும்பாலானவர்கள் கிறித்தவரல்லாதவர்களே. சென்னை கிறித்தவக் கல்லூரியும் இன்றுவரை கல்விமுறைமைகளில் மதச்சார்பின்மை கொண்டதாகவே உள்ளது. மில்லர் மாணவர்களைக் கண்டிப்பதில் நம்பிக்கையற்றவர். ‘சூரியன் பூமியெங்கும் தாவரங்களை தன் புன்னகையாலேயே பேணி வளர்க்கிறது’ என்பது அவருடைய புகழ்பெற்ற வரி
இந்நூல் முழுக்க மில்லரின் ஆசிரியப் பண்பு குறித்த செய்திகள் நிறைந்துள்ளன. மாணவர்களின் வறுமையை அறிந்திருந்தாலும் ஒருபோதும் பொதுவாக வெளிப்படுத்த விடாதவர். ஆகவே உதவிகளை பிறர் அறியாமலேயே செய்கிறார். மாணவர்களிடம் எப்போதும் உரையாடுபவர். ஒவ்வொரு மாணவரின் பெயரையும் பெருமுயற்சி செய்து நினைவில் நிறுத்திக்கொள்பவர். தன் மாணவன் ஒருவன் தேர்வில் மோசடி செய்து சிக்கிக்கொண்டு கல்லூரிக்கு அவப்பெயர் உருவாக்கியபோது மனமுடைந்து கண்ணீர் விட்டவர். அவருடைய சித்திரம் இந்நூல் வளருந்தோறும் தெளிந்தபடியே வருகிறது.
மில்லரின் பணிகளை மதிப்பிடுவதில் அக்காலத்தைய சிக்கல்கள் பல இருந்தன. ஒருபக்கம் அவரால் கல்விபெற்றவர்கள் அவரை குருவின், தெய்வத்தின் இடத்தில் வைத்தார்கள். இன்னொருபக்கம் ,அன்று உருவாகி வந்த தேசிய இயக்கம் அவரை ஆக்ரமிப்பாளராக அடையாளம் கண்டது. இந்து சீர்திருத்த இயக்கமான தியோசஃபிக்கல் சொசைட்டி போன்றவை அவரை மதமாற்றியாக அடையாளப்படுத்தின. ஆகவே மில்லர் மாணவர்களால் எதிர்க்கப்பட்ட நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடைபெற்றன. குறிப்பாக அந்தண மாணவன் ஒருவன் மதமாற்றம் செய்யப்பட்டபோது அந்த எதிர்ப்பு உச்சம்பெற்றது. ஆனால் மில்லர் தன் எல்லையை உணர்ந்து அதற்குள் கவனமாக தன் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை வைத்துக்கொண்டார்\
இந்நூலின் ஆர்வத்துக்குரிய இன்னொரு கூறு அன்றிருந்த இறையியல் விவாதங்கள். சீர்திருத்த சபையினர் நடுவே மட்டுமல்ல, சீர்திருத்த சபையினருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் நடுவேகூட வேவ்வேறு கிறித்தவக் கருதுகோள்களைப்பற்றி விரிவான கருத்துமோதல்கள், கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற்றன.கிறித்தவ எளிமை என்னும் கருத்தில் நம்பிக்கை கொண்டிருந்த மில்லர் அதற்கு எதிரான அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் ஆடம்பர வாழ்க்கையை கண்டித்தார். பொருள் அல்லது பதவிக்கான வாக்குறுதி கொடுத்து மதமாற்றம் செய்வதை, மதமாற்றத்திற்குள்ளானவர்கள் அவற்றை எதிர்பார்ப்பதைக் கண்டித்த்தார். இவை ஒழுக்கவியல் பிரச்சினைகள். இவை தவிர பாவமீட்பு, பாவ ஒப்புதல் போன்றவை பற்றிய பல்வேறு இறையியல் விவாதங்களிலும் அவர் ஈடுபட்டார்
மில்லர் இந்தியாவில் அரசியல் பொறுப்புகளிலும் கல்விப்பொறுப்புகளிலும் இருந்தார். சென்னை மாகாணச் சட்டமேலவையில் பணியாற்றினார். கல்வி ஒருங்கிணைப்புக்குழுக்களில் பங்கெடுத்தார். கடுமையான உழைப்பே அவருடைய வாழ்க்கை. இறுதிக்காலத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்ட மில்லர் ஸ்காட்லாந்து திரும்பினார். ஆனால் அவருடைய உள்ளம் இந்தியாவிலேயெ இருந்தது. தன் முதுமையில் இந்தியா பற்றி இழிவான செய்தி ஒன்றை வெளியிட்ட ஸ்பெக்டேட்டர் இதழுக்கு கடுமையான மறுப்பை அவர் அளித்ததை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
1923 ஜூன் 19 ல் மில்லர் மறைந்தார் கடைசிக்காலக் கடிதங்கள் ஒன்றில் அவர் ஒரு கவிதையை மேற்கோள்காட்டி எழுதினார்
நம்மைப்போன்றதே அதன் வெளித்தோற்றம்
அதன் தலையோ உண்மையானது,
செல்வம் மிக்க ஆடைகள், பல ஆடம்பரங்கள்,
அதன் செயல் ஊக்கம் கொண்டிருந்தது.
பருத்த கைகள், எலும்புகள் ஒவ்வொன்றும் உறுதியானவை.
ஆனால் ஐயகோ அதன் உள்ளம் கல்லால் ஆனது.
ஆகவே அது உயிர்வாழமுடியவில்லை.
மில்லர் எழுதினார் “இக்கவிதையின் மையக்கருத்தை மனதில்கொண்டு வரலாற்றுப் பாடங்களை கற்று அறிந்து நாம் செயல்படவேண்டும் . இந்தியா போன்ற பெரிய மக்கள்கூட்டத்திற்கும் இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இந்தச் சமுதாயத்தில் வாழும் பலரின் உள்ளம் கல்லாகக் காணப்படுகின்றது. இத்தகைய கல்லுள்ளங்கள் மாறினால்தான் முன்னேற்றங்கள் ஏற்படும்”.அது அவர் தனது நாட்டுக்கும் கூட சொல்லிக்கொண்டதாக இருக்கலாம்.
மில்லரின் கனவு இன்று சென்னை கிறித்தவக் கல்லூரி என்னும் பேரமைப்பாக எழுந்து நின்றிருக்கிறது. கர்மயோகிகள் வந்துசென்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மாறாத விரிவு ஒன்றின் தொடர் அலைகள்போல
மில்லர் என்னும் மாமனிதர், மூலம் ஓ.கந்தசாமி. மொழியாக்கம் யோ.ஞானசந்திர ஜான்சன். வெளியீடு சென்னை கிறித்தவக் கல்லூரி\\\
கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்
இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்
கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்