பகுதி எட்டு : அழியாக்கனல்-3
தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை. அஸ்தினபுரியின் அரண்மனைக் கோட்டை தெரிந்ததும் அவன் “அரண்மனையா!” என்றான். அருகே நடந்த ஒரு முதியவன் “ஆம், பெருங்கொடையாட்டு. பொன் பெறும் நாள்!” என்றான். தீக்ஷணன் அப்போதுதான் அதை உணர்ந்தான். “நூற்றெட்டு கொடை மையங்கள். நீங்கள் எவரென்று கூறி உரியவற்றில் இணையலாம்.” அவன் மறுமொழி சொல்லாமல் சென்றான். அவன் சென்ற நிரை பலவாகப் பிரிந்தது. அவன் தன்னியல்பாக ஏதேனும் ஒன்றில் இணைந்தான். பிரிந்து மீண்டும் வேறொன்றில் ஒழுகினான்.
சாலைகள் எங்கும் மக்கள். பெரும்பாலானவர்கள் களிவெறி கொண்டிருந்தனர். கைதட்டி பாடியபடி ஆடினர். பெண்கள்கூட நிலையழிந்திருந்தனர். கள்மொந்தைகள் பலர் கைகளில் இருந்தன. ஒருவன் தன் கையிலிருந்த வெள்ளிக்காசுகளை சுழற்றி வீசி கூச்சலிட்டான். “எடுத்துக்கொள்ளுங்கள்… இரவலரே, எடுத்துக்கொள்ளுங்கள்… இதோ! இதோ!” ஆனால் எவரும் குனிந்து அதை அள்ளவில்லை. ஏனென்றால் கூட்டம் முட்டி நெரித்துக்கொண்டிருந்தது. அவன் கண்கள் சிவந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் நெடும்பொழுதாக குடித்துக் கொண்டிருந்திருக்கவேண்டும்.
அங்கே ஓர் இசை நிறைந்திருப்பதை அதன் பின்னர்தான் தீக்ஷணன் உணர்ந்தான். எவரும் இசைக்கவில்லை, ஆனால் அக்கூட்டமே அவ்விசையில் பொருந்தியிருந்தது. அதற்கேற்ப அசைந்துகொண்டிருந்தது. அந்த இசை அதன் அசைவிலிருந்தே பிறந்தது. அந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெவ்வேறு மொழிகளில் தங்களுக்குள் பேசிக்கொண்ட, கூவி ஆர்ப்பரித்த, சிரித்துக் கொப்பளித்த ஓசை இணைந்து முழக்கமென்றாகி அந்த இசையாக அமைந்தது. அதனுடன் வெவ்வேறு இசைக்கலன்கள் சேர்ந்துகொண்டன. முழவுகள், பறைகள், கொம்புகள், குழல்கள், மணிகள். அந்நகரமே ஓர் இசைக்கலன் என்றாகி அந்த இசையை உருவாக்கிக்கொண்டது. தன் செவிகள் நிகழ்த்தும் மயக்கா அது என தீக்ஷணன் எண்ணினான். காதை மூடுவதுபோல் கண்களை பலவாறாக மூடித்திறந்தான். அது வான் என காற்று என மண் என அங்கே நின்றிருந்தது. அது நீர், இந்த மக்கள் அதில் மீன்கள்.
அந்த இசை அவன் உடலுக்குள்ளும் நிறைந்திருந்தது. அவன் நரம்புகள் அதை முழக்கின. அவன் வயிற்றில் அது கார்வைகொண்டது. பின்னர் அவன் உணர்ந்தான், வெவ்வேறு முரசுமாடங்களில் அமைந்த பெருமுரசுகளின் தாளமே அதை உருவாக்குகிறது என. அந்தச் சீரான பெருநடைத் தாளம் அனைத்து ஒலிகளையும் தொகுத்து ஒருங்கமைத்தது. பின்னர் அந்தத் தாளம் அங்கிருந்தோர் அனைவருள்ளும் சென்றது. அவர்களின் அசைவுகளை அது ஆண்டது. அவர்களின் ஓசைகளை அது வகுத்தது. அவர்கள் எழுப்புவதெல்லாம் இசையே என்றாக்கியது. இசை என்பது தாளம் அமைந்த ஓசை.
அவன் அதை தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். தாளம் என்பது ஒழுங்கைமைந்த ஓசை. ஒழுங்கு. அதை நாடுகிறது உள்ளம். இந்த ஒழுங்கின்மையின் பெருக்கு ஓர் ஒழுங்குக்குள் அமைந்திருக்கிறது. ஒழுங்கின்மையின் தாளம், அல்லது தாளத்தின் ஒழுங்கின்மை. இவர்கள் கட்டின்றி விடப்படவில்லை. அந்தத் தாளத்தால் இவர்கள் ஆளப்படுகிறார்கள். அதை எழுப்புபவர்கள் சற்றே விசைகூட்டினால் இவர்களை வெறிகொள்ளச் செய்யமுடியும். ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கச் செய்யமுடியும். மெல்லமெல்ல தளரவைத்து இவர்களை நாணறுந்த ஆட்டப்பாவைகள் என நிலம்படியச் செய்யமுடியும். ஆனால் அது இவர்களை தாங்கியிருக்கிறது. இவர்களை ஒன்றெனத் திரட்டுகிறது.
அரண்மனை கண்ணெதிரே சுடர்கொண்ட மலை என எழுந்து தெரிந்தது. அதன் விளிம்புகள் அனைத்திலும் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி பீதர்நாட்டு பளிங்குக் குமிழி இருந்தமையால் காற்றில் சுடர்கள் அசைவுகொள்ளவில்லை. சாளரங்கள் செம்பிழம்புகளெனத் தெரிந்தன. “அரண்மனையே பற்றி எரிவதுபோல!” என்று ஒரு முதியவன் சொன்னான். “இன்னும் சற்றுநேரத்தில் அங்கே கைப்பிடிச் சாம்பல் மட்டுமே எஞ்சும் என்பதுபோல.” துணுக்குற்று தீக்ஷணன் அவ்வாறு சொன்னவனை விழிகளால் தேடினான். அவன் முகம் தெரியவில்லை. இன்னொருவன் அவனை நோக்கி புன்னகைத்தான். அவர்களில் எவரும் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடும் என்பதுபோல.
அவன் சற்று அப்பால் சார்வாகரை பார்த்துவிட்டான். தன் யோகக்கோலுடன் அவர் தனித்துச் சென்றுகொண்டிருந்தார். ஆடையில்லாத மண்படிந்த உடல். நிமிர்ந்த தலையில் சடைக்கொண்டை. தோளில் புரண்ட சடைத்திரிகள். நாணேற்றிய வில் என நடை. அவரை காவலன் ஒருவன் தடுத்தான். அவர் ஏதோ சொன்னதும் அவன் தலைவணங்கினான். அவர் அப்பால் சென்று அங்கு நின்றிருந்த நீள்நிரை ஒன்றில் இணைந்தார். அவரை அந்த நிரை நெற்றை ஓடை என இழுத்துச் சென்றது. அவர் அதில் செல்வதை நோக்கி அவன் சித்தமற்று நின்றான். பின் துடிப்பு கொண்டு தன் நிரையிலிருந்து பிரிந்து அவரை நோக்கி சென்றான்.
தீக்ஷணன் சார்வாகரை அனுப்பிய அதே காவலனிடம் சென்று “நான் சார்வாக முனிவரின் மாணவன், அவருடன் வந்தேன். திரளால் விலக்கப்பட்டேன்” என்றான். “அவர் யார்?” என்று அவன் கேட்டான். “முனிவர், அவரை பார்த்தால் தெரியவில்லையா? சார்வாகர்” என்றான் தீக்ஷணன். “அவர் இங்குள்ள மங்கலங்கள் எதையும் பேணவில்லை. இன்று அரசரின் முன் மங்கல ஆடையின்றி எவரும் செல்லலாகாது என நெறி” என்றான் காவலன். “தவத்திற்சிறந்த மங்கலம் இல்லை. அறியமாட்டாயா நீ?” என்று அவன் சொன்னான். இன்னொரு முதிய காவலன் “ஆனால் சார்வாகர்கள் கொடை பெறுவதில்லையே?” என்றான். காவலர்தலைவன் “ஆம், அவர்கள் அதை வைத்து என்ன செய்வார்கள்?” என்றான். தீக்ஷணன் “அவர் கொடுக்கவும் செல்லலாம் அல்லவா?” என்றான். அவர்கள் திகைத்தனர். “ஆணையிடுக, நான் செல்லவேண்டும்!” என்றான் தீக்ஷணன். காவலர்தலைவன் குழப்பமாக நோக்கிய பின் “செல்க!” என்றான்.
தீக்ஷணன் நிரையில் சேர்ந்துகொண்டான். அது உந்தி உந்தி முன்னகர்ந்தது. எரித்துளி என சார்வாகர் தனித்துத் தெரிந்தார். அவரைச் சூழ ஒரு வெற்றிடம் உருவானது. அந்நிரைக்கு இணையாக அந்தணர் நிரை ஒன்று வந்துகொண்டிருந்தது. அவர்கள் அவரைக் கண்டு திடுக்கிட்டனர். ஒருவரை ஒருவர் அழைத்து அவரை சுட்டிக்காட்டினர். அத்தனை அணுக்கமாக அவர்கள் அவரை முன்பு கண்டிருக்கவில்லை என்று தெரிந்தது. அவர் தன் கையில் அந்த யோகக்கழி அன்றி எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தன்னை நோக்குவதை அவர் உணர்ந்ததாகவும் தெரியவில்லை.
அங்கிருந்த ஒவ்வொருவரின் உடலிலும் மெல்லிய ததும்பல் இருந்தது. அவர்களின் உடல்நீர் உள்ளே அந்தத் தாளத்தைப் பெற்று அதற்கேற்ப அலைகொண்டபடி இருந்தது. விரல்நுனிகளில், தோளசைவுகளில், கால்நிலைகளில் அந்தத் தாளத்தை பார்க்க முடிந்தது. அதிலிருந்து விலக அவன் எண்ணினான். ஆனால் நிலமே அந்தத் தாளத்தை எழுப்பிக்கொண்டிருந்தது. பெரும் மரக்கலம் ஒன்றில் என, கடலின் அலைவை அது அத்தனைபேரிலும் நிகழ்த்துவதுபோல. அவன் சார்வாகரை நோக்கினான். அவர் நிலைக்கோள் கொண்டிருந்தார். அந்தத் தாளத்தின் துளிகூட நிகழா உடலுடன் சென்றார்.
அந்தணர்களும் புலவர்களும் அடங்கிய நான்கு நிரைகளும் நகர்ந்துசென்று வெண்பட்டுப் பந்தலுக்குள் நுழைந்தன. அதன் மூங்கில்கள் தோறும் பீதர்நாட்டு பளிங்குக் குமிழ்கள் உள்ளிருக்கும் நெய்ச்சுடரால் ஒளிகொண்டிருந்தன. ஆயிரம் நிலவுகள் நிரை வகுத்தது போன்ற கண்ணை நிறைக்கும் தண்ணொளி. பரவிய ஒளி நிழல்களை கரைத்திருந்தமையால் அவர்கள் அங்கே விந்தையான சுடர்கள் என அசைந்தனர். நகரின் ஓசைகள் அகன்று சென்றன. மிக அப்பால் மங்கல இசை ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கே பெரிய அடுக்கு விளக்குகள் எரியும் ஒளி, ஒளிக்குள் மேலும் ஒளியென எழுந்து தெரிந்தது.
அந்தணர்கள் உரக்கப் பேசியபடி ஒருவரை ஒருவர் உந்தினர். முன்னால் சென்றவர்களை நோக்கி கூச்சலிட்டனர். சிலர் வசைபாடினர். பெரும்பாலானவர்கள் அயல்நிலத்து அந்தணர். உருவாகிவரும் குலங்களில் வேதச்சடங்கு ஒன்றை நம்பி அலைந்தவர்கள். ஆகவே வறுநிலையிலேயே வாழ்வை கழித்தவர்கள். அவர்களின் கண்களுக்கு நெடுந்தொலைவில் எங்கோ இருந்த கொடைப்பீடம் படவில்லை. ஆகவே பதற்றம் கொண்டனர். கொடை பெற்றுக்கொண்டவர்கள் மறு பாதையினூடாக வெளியே சென்றனர். “கொடுக்கிறார்களா? மெய்யாகவே இங்கேதானா?” என்று ஒருவர் கேட்டார். “இங்குதான்” என்று ஒருவர் மறுமொழி சொன்னார்.
கேட்டவர் நிறைவடையாமல் காலில் எம்பி நுனிவிரலில் நின்று “ஒன்றும் தெரியவில்லை. இது வேறு எதற்காகவாவது அமைந்த நிரையாக இருக்கலாம்…” என்றார். “இங்குதான், வேறெதற்கு இங்கே நிரைவகுக்கப்போகிறார்கள்?” என்றார் மறுமொழி சொன்னவர். அவர் பதற்றத்துடன் “ஒன்றும் தெரியவில்லை. ஒருவேளை வேறெங்காவது கொடுக்கப்பட நாம் இங்கே நின்று பொழுதை வீணடிக்கிறோம் போலும்” என்றார். அவரே அருகே நின்ற ஒருவரிடம் “உத்தமரே, இது அந்தணர்களுக்கு பெருங்கொடை அளிக்கப்படும் இடம் அல்லவா?” என்றார். “ஆம், இவ்விடம்தான்” என்றார் அவர்.
“இங்கே ஒன்றும் தெரியவில்லை” என்றார் கேட்டவர். “சற்று தொலைவு செல்லவேண்டும்.” இன்னொருவர் மெல்லிய உடலும் நீள்முகமும் கொண்டவர். குழிந்த கண்களுடன் ஒட்டிய கன்னங்களுடன் அன்னம்காணாதவர் போலிருந்தார். “என்ன நிகழ்கிறது அங்கே? கொடுக்கிறார்களா? இந்த நிரை முன்னகரவே இல்லையே?” அவர் ஒன்றும் சொல்லவில்லை. இன்னொருவர் முதியவர். எரிச்சலுடன் “நிரை சற்றுப் பெரியது… இங்கு நின்றால் எல்லை தெரியாது” என்றார். “என்ன கொடுக்கிறார்கள்?” என்றார் மெலிந்தவர். பருத்த உடல்கொண்ட ஒருவர் “என்னவானால் என்ன? கொடுப்பதை மறுக்கப்போவதில்லை, மேலும் கோரவும் தகுதியில்லை. பேசாமல் நில்லும்” என்றார்.
மெலிந்தவர் படபடப்புடன் “வாங்கியவர்கள் எங்கு செல்கிறார்கள்? அவர்களிடம் உசாவி அறியலாமென்றால் இங்கே அவர்கள் எவருமில்லை” என்றார். “அவர்கள் மறுவழியே வெளியே செல்கிறார்கள்.” முதலில் கேட்டவர் “அவர்கள் சுற்றுவழியாக மீண்டும் இங்கு வந்து நின்றிருக்க மாட்டார்களா என்ன?” என்றார். “அவ்வாறு எவரும் இங்கு செய்வதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையரையும் குலத்தொழிலையும் எண்ணி உறுதிகொண்ட பின்னரே பொருள் பெறுகிறார்கள்.” “நாம் வேதம் சொல்லவேண்டுமோ?” என்றார் மெலிந்தவர். எவரும் மறுமொழி சொல்லவில்லை.
அவர் அமைதியிழந்து வேட்கைகொண்ட கோழிபோல கீழ்த்தாடை பதைக்க சுற்றும் நோக்கி “இத்தனை பெருந்திரள்… இவர்களுக்கெல்லாம் கொடுத்தபின் நாம் செல்லும்போது இல்லை என்று சொல்லிவிடப்போகிறார்கள்” என்றார். மீண்டும் எட்டிப்பார்த்து “இத்தனைபேர் இருப்பதை கணக்கிட்டு பொருளை பங்கிடுகிறார்களா? கருவூலத்தில் உள்ளது என்று எண்ணி அள்ளிக்கொடுத்துவிட்டு இறுதியில் வந்தவர்களை விட்டுவிடப்போகிறார்கள்” என்றார். அவரை பிறர் எரிச்சலுடன் பார்த்தனர். அவர்களும் அந்தப் பதற்றத்தை உள்ளூர கொண்டிருந்தனர் எனத் தெரிந்தது.
“ஆனால் எவருக்கேனும் கொடுக்காமல் விட்டுவிட்டால் அது பழி. அஸ்வமேதம் நிறைவடையாது” என்றார் மெலிந்தவர். பருத்தவர் “இது அஸ்வமேதமல்ல, ராஜசூயம். மேலும் அனைவருக்கும் கொடுத்தாகவேண்டும் என நெறியேதுமில்லை. கருவூலம் ஒழியக் கொடுக்கவேண்டும் என்றுதான் நெறி” என்றார். மெலிந்தவர் சீற்றம் கொண்டார். “எவர் வகுத்த நெறி அது? கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்கவேண்டும்… சிலருக்குக் கொடுத்து சிலருக்கு இல்லை என்றால் அவர்கள் வயிறெரிந்து தீச்சொல் இடமாட்டார்களா என்ன?”
சிறிய விழிகள் கொண்ட பருத்து உயர்ந்த அந்தணர் ஏளனம் மின்னும் விழிகளுடன் “நீர் தீச்சொல்லிடுவீரா?” என்றார். “அதாவது நான் இங்கே காலையிலேயே வந்துவிட்டேன். என் தோழர்தான் மடைப்பள்ளிக்குச் சென்று உண்போம் என அழைத்துச் சென்றார். அங்கிருந்து எங்களை வேதம் ஓத அழைத்துச் சென்றுவிட்டார்கள். வருவதற்குள் பிந்திவிட்டது. வேதம் ஓதுவது பிழையா? அதன்பொருட்டு எங்களுக்கு பொன் மறுக்கப்படுமென்றால்…” அவர் கையை மேலே தூக்கினார். “தெய்வங்கள் மீண்டும் வஞ்சம் கொள்கின்றன என்றே பொருள். நடுக்கடலிலும் நாய் நக்கியே குடிக்கமுடியும் என்பார்கள்…”
அவருடைய தொண்டை இடறியது. “நான் என் கையால் இதுவரை பொன்னை தொட்டதில்லை. ஒருமுறைகூட… மெய்யாகவே பொன்னை தொட்டதில்லை. எனக்கு மனையாட்டி குடி என ஏதுமில்லை… வேதம் மட்டுமே வாய்ப்பொருள் என இதுவரை வாழ்ந்தேன்… மிக நம்பி இங்கே வந்தேன்.” அவர் அழத்தொடங்கினார். “நான் எங்கு சென்றாலும் துரத்திவருகிறது என் வறுமை. அது என் ஊழ். அதை நான் மீறமுடியாது. இப்பிறவி இவ்வண்ணமே ஒழியும்போலும்.” அவர் மேலாடையால் முகத்தை துடைத்துக்கொண்டார்.
ஒருவர் தீக்ஷணனிடம் “அவர் யார்?” என்று சார்வாகரை சுட்டிக் காட்டி கேட்டார். “அறியேன்” என்று அவன் சொன்னான். “அவருக்கு மாணவனாக உள்ளே வந்தீர் அல்லவா?” என்றார் அவர். “அல்ல, நான் தனியாகத்தான் வந்தேன்” என்று தீக்ஷணன் சொன்னான். “அவர் ஒரு முனிவர்” என்றான் ஓர் இளைஞன். “அவன் எப்படி இந்த நிரையில் வந்தான்? அவனிடம் மட்கிய ஊனின் கெடுமணம் அல்லவா எழுகிறது?” என்றார் ஒரு முதியவர். “அவர்கள் அவ்வாறுதான்… புறநிலங்களில் தங்குபவர்கள்” என்றான் இளைஞன். “அவர்களின் நெறிகளென்ன என்று நாம் அறியோம். பாரதவர்ஷத்தில் துறவுக்கும் தவத்திற்கும் எல்லையில்லா வழிகள் உண்டு என்பார்கள்.”
“அதற்காக ஆடையில்லாதவனை எப்படி அகத்தே ஒப்பினார்கள்?” என்றார் முதியவர். “இது மாமங்கல நிகழ்வு. மங்கலங்களில் முதன்மையானது ராஜசூயம்.” இளைஞன் “ஆனால் அவர் புறநெறி சார்ந்த முனிவர். கடுநோன்பு கொண்டவர். அஸ்தினபுரியில் இன்று அனைவருக்கும் நுழைவொப்புதல் உண்டு. அனைத்து நிலை முனிவர்களுக்கும் இந்நிரையில் இடமுண்டு” என்றான். முதியவர் “அவன் இரவலன்… உளநிலை மயங்கியவன். அன்றி களிமகன்” என்றார். “சார்வாகர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள்” என்று இளைஞன் சொன்னான். “சார்வாகர்களா? யார் அவர்கள்?” என்றார் முதியவர். “நானும் இங்கு வந்துதான் கேட்டேன். அவ்வண்ணம் ஒரு சாரார் இருக்கிறார்கள். வேதமறுப்பாளர்கள், வேள்விமறுப்பாளர்கள், அரசுமறுப்பாளர்கள், குலமறுப்பாளர்கள்.”
கிழவர் திகைப்புடன் சூழ நோக்கிய பின் நம்பிக்கையின்றி “அவ்வண்ணம் ஒரு தரப்பா? அசுரர்களா?” என்றார். “வேதங்களில் அவர்களும் உண்டு என்கிறார்கள். அவர்களின் முதலாசிரியர் பிருஹஸ்பதி முனிவர். அவர்களின் நெறிவந்த பலர் உண்டு என்கின்றனர் புலவர்” என்றான் இளையவன். “அவர்களின் கொள்கை என்ன?” என்றார் முதியவர். “அவர்கள் நான்கு விழுப்பொருட்களை மறுக்கிறார்கள். இன்பம் ஒன்றே விழுப்பொருள் என்கிறார்கள்” என்றான் இளையவன். அவர் வெறுப்புடன் உரக்க நகைத்து “அவன் கூறும் இன்பம் என்பது காட்டுப்பன்றிகளுடன் சேற்றில் உழல்வதுபோலும்” என்றார். “வேதவெறுப்பும் ஒரு மெய்யறிவுத்தரப்பு என்று எப்போது ஆயிற்று இங்கே? எனில் இனி வேள்வியை அழிக்கும் அரக்கர்களின் தரப்பும் இங்கு வந்து அவையமர்ந்திருக்குமா என்ன?”
நிரையின் முன்பக்கம் ஓசைகள் எழுந்தன. பல அந்தணர்கள் சார்வாகரை நோக்கி கூச்சல் எழுப்பினர். சிலர் திரும்பி நோக்கி காவலரை அழைத்தனர். காவலர்களும் சார்வாகரை நோக்கி திகைத்தனர். ஆனால் அவரை வெளியேற்ற முடியாது என்றும் உணர்ந்தனர். அங்கிருந்து ஒருவர் முன்னகர்ந்தே வெளியேற முடியும். ஆகவே “வாயை மூடுங்கள்… அந்தணர்கள் அமைதியாகுக! அவர் முனிவர். அரசரின் விருந்தினர்” என்று காவலர்தலைவன் கூவினான். “மறுத்துரை செய்வது அரசப்பழி… அதற்கு இங்கு தண்டனை உண்டு.” அவன் பலமுறை அவ்வாறு கூவியபோது அந்தணர்கள் அடங்கினர். சினத்துடன் ஒருவரிடம் ஒருவர் உறுமலாகவும் முனகலாகவும் பேசிக்கொண்டனர். அந்த ஓசைகள் இணைந்து ஒற்றை முனகல் என அங்கே நிறைந்திருந்தன.
சார்வாகர் விழிகளில் இருந்து மறைந்துவிட்டிருந்தார். தீக்ஷணன் தவிப்புடன் நோக்க திரளுக்கு அப்பால் ஒளி பெரிதாகத் தெரிந்தது. அங்கே தொங்கிய வெண்பட்டுத் திரைகளெல்லாம் தழல்கள் என காற்றில் நின்றாடின. ஒரு சிறு மேடேறி திரும்பி அங்கே சென்றுகொண்டிருந்தது நிரை. தீக்ஷணன் ஒருகணம் எண்ணினான், உடனே குனிந்து பிறர் கால்களினூடாக ஊடுருவிச் சென்றான். “ஏய், யாரது? எங்கே செல்கிறாய்?” என்றெல்லாம் கூச்சல்கள் கேட்டன. அவன் எழுந்தபோது அவனுக்கு முன்னால் சார்வாகர் நின்றிருந்தார். அவன் இருவரை விலக்கி அவருக்குப் பின்னால் சென்று நின்றான். அவர் அவ்வண்ணம் அவன் அருகே வந்ததை உணரவில்லை. நிமிர்ந்த தலையுடன் தனக்கு முன்னால் நின்றிருந்த இரு இளமுனிவர்களைக் கடந்து அரசமேடையை நோக்கி சென்றார்.
வெண்பட்டுத் திரைச்சீலைகள் சூழ வெண்பட்டாலான கூரைக்குவையுடன் அமைக்கப்பட்டிருந்தது அரசமேடையின் பந்தல். பொன் என மின்னிய பித்தளை விளிம்புகள் கொண்ட எடைமிக்க பீடங்களை அடுக்கி அதை சற்றே மேலெழுப்பியிருந்தனர். அதன்மேல் யுதிஷ்டிரன் அருமணிகளும் பொற்செதுக்குகளும் கொண்ட பீதர்நாட்டு பளிங்குக்குமிழ் விளக்குகளின் செவ்வொளியில் அனல் என மின்னிய அரியணையில் அமர்ந்திருந்தார். அதில் அருமணிகள் விழிகள் என நோக்கு கொண்டிருந்தன. அவருக்கு இருபக்கமும் பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் நின்றிருந்தனர். அவர்களுக்கு வலப்பக்கம் யுயுத்ஸு பதற்றத்துடன் நின்று பின்பக்கம் நோக்கி ஆணைகளை இட்டான். முன்பக்கம் நோக்கி கைகளை வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தினான்.
யுதிஷ்டிரன் மெல்லிய பொற்கம்பிகளால் முடையப்பட்டு அருமணிகள் பதிக்கப்பட்ட மணிமுடியை அணிந்திருந்தார். அதுதான் ஹஸ்தியின் மணிமுடி என தீக்ஷணன் எண்ணிக்கொண்டான். அருமணிகள் பதித்த நகைகள் அவர் உடலெங்கும் மின்னிக்கொண்டிருந்தன. அவரை அவன் சிலமுறை சாலைகளில் தேரில்செல்பவராகக் கண்டதுண்டு. ஒவ்வொருமுறையும் துணுக்குறலையே அடைவான். அனைத்திலிருந்தும் உளம்விலகிய, எரிச்சல்கொண்ட, முதியவர் என்று தோன்றும். அரசர் என்றல்ல குடித்தலைவர் என்றுகூட அவரை எண்ணிக்கொள்ள முடியாது. அப்போது அவர் பேரரசர் எனத் தோன்றினார். அவரை அவ்வண்ணம் காட்டுவது அந்த அருமணிகளும் நகைகளுமா? எனில் அரசர் என்பது அவைதானா?
யுதிஷ்டிரனின் பின்னால் அமர்ந்து சூதர்கள் மங்கல இசையும் வாழ்த்தொலியும் எழுப்பினர். நிரையாகச் சென்றவர்கள் மங்கல இசை எழுந்ததும் சென்று அவர் முன் நின்றனர். அவர்களுக்கு மும்முறை கைநிறைய அள்ளி பொன்னும் வெள்ளியும் அளித்து கைகூப்பினார். அவர்கள் அதை தோல்கிழியிலோ பட்டுச்சால்வையிலோ பெற்றுக்கொண்டு அவரை வாழ்த்தி நல்லுரை கூறினர். உடனே பின்னின்று சூதர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அதைக் கேட்டதும் பரிசில்பெற்றவர் புறம் காட்டாமல் பின்னடி வைத்து விலகி அப்பால் இறங்கிச் செல்லவேண்டும். அவர்கள் கீழிறங்க இரு வீரர்கள் உதவினர். அவர்கள் அவ்வண்ணமே பட்டுத்திரைக்குள் மறைந்து இயல்பாக நடந்து அகல வழி அமைக்கப்பட்டிருந்தது. அப்பால் வேறொரு மண்டபத்தில் பேரரசி திரௌபதி பெண்களுக்கு கொடை வழங்கிக்கொண்டிருந்தாள் என தீக்ஷணன் அறிந்தான். அங்கு இங்கிருப்பதைவிட பலமடங்கு பெரிய நிரை இருந்துகொண்டிருக்கும்.
பரிசில்பெற்ற அந்தணர் ஒருவர் மேலும் பல சொல்ல விழைந்தார். அவர் வாழ்த்தியதும் இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்து செவிமூடின. அவர் உரக்க உரக்க சொல்ல முயல அமைச்சர்கள் இருவர் அவர் கைபற்றி மெல்ல விலக்கினர். அவர் கண்ணீரும் பதைப்புமாக ஏதோ சொன்னபடியே பின்னடி வைத்து பட்டுத்திரைக்குள் மூழ்கி மறைந்தார். வந்தவர்களிடமிருந்து தீய தெய்வங்கள் யுதிஷ்டிரனை அணுகாமலிருக்கும் பொருட்டு அந்த மண்டபத்தின் கூரைகளில் பல்வேறு செப்புத் தகடுகளும் மூலிகைவேர்களும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. அங்கே ஒரு மூலையில் மூலிகையிட்ட நீர்க்கலம் கொதித்தது. இன்னொரு மூலையில் குந்திரிக்கம் புகைந்தது. அக்காட்சியை செவ்வொளி பரவிய மென்புகையும் ஆவியும் மறைத்து விண்ணிலென திகழச்செய்தன.
யுதிஷ்டிரன் முகம் மலர்ந்திருந்தார். அந்தச் செயலின் முடிவில்லாத சுழற்சி அவருள் ஊழ்கநிலையை உருவாக்கியிருந்தது எனத் தோன்றியது. கனவிலென அவர் அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவ்வண்ணம் பற்பல ஆண்டுகள் அவரால் அள்ளிக்கொடுத்தபடியே இருக்கமுடியும் எனத் தோன்றியது. அருகணைந்தபோதுதான் தீக்ஷணன் அப்பால் நீண்ட தெய்வபீடம் அமைக்கப்பட்டு அங்கே ஹஸ்தி முதலிய முன்னோரின் நினைவாக செம்பட்டு சுற்றப்பட்ட பொற்குடங்களும் உடைவாள்களும் மாலையிடப்பட்டு பூசெய்கை இயற்றப்பட்டு கொலுவைக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.
இசையொலி எழ ஏவலன் கையசைத்து சார்வாகரை மேலே வரச்சொன்னான். அவரைக் கண்டதும் பீமனின் முகத்தில் ஒரு மெய்ப்பாடு எழுந்தது. அது என்னவென்று எண்ணக்கூடவில்லை. தீக்ஷணன் எல்லைகடந்து அவர் அருகே செல்லமுயன்றான். ஆனால் வீரன் அவனை கைநீட்டித் தடுத்தான். யுதிஷ்டிரன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. அவர் சார்வாகரை அறியவே இல்லை. வழக்கமான புன்னகையுடன் வணங்கி கைநிறைய பொருளை அள்ளி நீட்ட சார்வாகர் தன் வெறுங்கையை நீட்டினார். யுதிஷ்டிரன் ஒருகணம் திகைத்தபின் அந்தக் கையில் பொருளை வைத்தார். அர்ஜுனன் முன்னகர்ந்து ஏதோ சொல்ல முயல சகதேவன் அவன் கையை தொட்டான். சார்வாகர் அந்தப் பொருளை மூக்கருகே கொண்டுசென்று முகர்ந்துவிட்டு தரையிலிட்டார்.
யுதிஷ்டிரன் திகைப்புடன் “என்ன?” என்றார். கீழே நோக்கி “ஏன் கீழே போட்டீர், உத்தமரே?” என்றார். “அவற்றில் குருதி நாறுகிறது” என்றார் சார்வாகர். பீமன் முன்னகர்ந்து கைநீட்ட அவனை விலக்கிவிட்டு யுதிஷ்டிரன் மாறாப் புன்னகையுடன் “வேறு பொருள் தருகிறேன், கொள்க!” என்றார். சார்வாகர் கைநீட்ட இன்னொரு கலத்திலிருந்து பொன்னை அள்ளி அவர் கைகளில் இட்டார். அவர் அதையும் முகர்ந்து நோக்கி முகம் சுளித்து கீழே போட்டார். யுதிஷ்டிரன் முகத்தில் மிகச் சிறிய சுளிப்பு ஒன்று தோன்றியது. பீமன் “யார் இவர்? எவர் இவரை உள்ளேவிட்டது?” என்றான். சகதேவன் “மூத்தவரே” என்றான். யுதிஷ்டிரன் புன்னகை மீண்டு “பிறிதொன்று பெற்றுக்கொள்க, முனிவரே!” என இன்னொரு குவையிலிருந்து அள்ளினார்.
“யுதிஷ்டிரா, குருதி நாறாத பொன் உன் கருவூலத்தில் உண்டா?” என்றார் சார்வாகர். யுதிஷ்டிரனின் கைகள் நடுங்கின. அவர் முகம் துடிப்பதை தீக்ஷணன் கண்டான். அவர் கையிலிருந்து பொன்னும் வெள்ளியும் கீழே சிதறின. ஒரு கால் செயலிழந்தவர்போல அவர் சரிந்து விழப்போக யுயுத்ஸு அவரை பிடித்துக்கொண்டான். பீமன் உரத்த குரலில் “யார் இவர்? பாரதவர்ஷத்தின் பேரரசரிடம் இப்படிப் பேச ஒப்புதலளித்தவர் எவர்? இத்தருணத்தின் மங்கலத்தை அழிக்க இவரை ஏவியவர் எவர்?” என்று கூவினான். அர்ஜுனன் சீற்றத்துடன் முன்னால் வந்து “கொண்டுசெல்லுங்கள் இவரை!” என்று ஆணையிட்டான். யுயுத்ஸு சற்று தடுமாறிவிட்டான். அவன் என்ன செய்வதென்று அறியாமல் அப்பால் நின்றிருந்த சுரேசரை நோக்க அவர் அவனை நோக்கி வந்தார்.
ஆனால் அக்கணத்தில் தனக்குப் பின்னால் செறிந்திருந்த அந்தணர் நிரையில் ஓர் உடைவு உருவாவதை தீக்ஷணன் கேட்டான். சீற்றம்மிக்க ஓலங்களுடன் அந்தணர் பெருகி எழுந்து வந்து சார்வாகரை பிடித்துக்கொண்டனர். அவரை அள்ளித் தூக்கிக்கொண்டு சென்றனர். அவரை ஒரு மாபெரும் யானையின் துதிக்கை சுழற்றி எடுத்து கொண்டுசெல்வதுபோலத் தோன்றியது. ஓலங்களும் அலறல்களுமாக அதுவரை அங்கே நிறைந்திருந்த இசை சிதறி அழிந்தது. தீக்ஷணன் கைநீட்டிக் கூச்சலிட்டபடி அந்தத் திரளில் பாய்ந்து சார்வாகரை நோக்கி செல்ல முயன்றான். ஆனால் அதன் விளிம்பு விலகு சுழல் என அவனை தூக்கித் தூக்கி அப்பால் வீசியது. அவன் வெறியுடன் அலறியபடி எழுந்து பாய்ந்து மீண்டும் எங்கோ சென்று விழுந்தான். “நெய்! நெய்!” என எவரோ கூவினார்கள். அச்சொல் தீக்ஷணன் எண்ணத்தை வந்து தொடுவதற்கு முன்னரே உடல் உறையச் செய்தது.
விளக்குகளுக்கு ஊற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய நெய்க்குட்டுவம் காற்றில் சருகென எழுந்தது. கைகளின் அலைகளினூடாக மிதந்துசென்றது. அவன் நெய்யின் குமட்டும் வாடையை உணர்ந்தான். தீ பற்றிக்கொள்ளும் ஓசை. ஒரு பெருநாகம் இரையைக் கவ்வும் ஒலி அவ்வண்ணம்தான் இருக்கும்போலும். மிக மெல்லிய ஒலி. ஆனால் அனைவருக்கும் அது கேட்டது. கூச்சலிட்டபடி அவர்கள் சிதறி நாற்புறமும் விலகினார்கள். உடலெங்கும் அனலெரிய சார்வாகர் கற்தரையில் கைகளை விரித்தபடி சுழன்றார். அவரிடமிருந்து ஓசையேதும் எழவில்லை. ஒரு தொன்மையான தெய்வச்சடங்குபோல அவர் சுழன்று சுழன்று எரிகொண்டார்.
தீ தன் தழல்கிழிசல்களை உதறிக்கொண்டு காற்றில் எழுந்து புகை விசிறியது. சார்வாகரின் உடலில் சுற்றப்பட்டிருந்த நெய்யில் நனைந்து ஊறிய மரவுரியிலிருந்து நீலநிறமாக கனல் கிளம்பிக்கொண்டிருந்தது. அந்தணர் பலர் கண்களையும் செவிகளையும் மூடிக்கொண்டு வெறிகொண்டு கதறினர். சிலர் கால் தளர்ந்து கற்தரையில் விழுந்தனர். அவர்கள்மேல் கால்தடுக்கி பிறர் விழுந்தனர். கையூன்றி எழுந்த தீக்ஷணன் கால் தளர்ந்து பின்னால் விழுந்தபோது பிற உடல்கள் அவனை தாங்கிக்கொண்டன. அவன் புரண்டு எழுந்து நோக்கியபோது அந்தணர் சிலர் வெறிக்கூச்சலிட்டு கைவீசி நடனமிடுவதை கண்டான். சிலர் அப்பாலிருந்து மேலும் நெய்க்கலங்களைக் கொண்டு வந்து எரிந்துகொண்டிருந்த சார்வாகரின் மேல் ஊற்றினார்கள். களிவெறிகொண்ட முகங்கள். பித்தெழுந்த விழிகளும் வலிப்புகொண்டது போன்ற சிரிப்புகளுமாக அவை அந்த அனலில் அலையடித்தன.
யுயுத்ஸுவும் படைவீரர்களும் நீண்ட கழிகளை வீசியபடி அந்தத் திரளைப் பிளந்து அருகணைந்தனர். படைவீரர்கள் அந்தணர்களை விலங்குகளை என மூங்கில்கழிகளால் அறைந்து விலக்கினர். வெறிகொண்டு ஆடிக்கொண்டிருந்தவர்கள் அந்த அடிகளை வாங்கிக்கொண்டு தலையிலும் முகத்திலும் குருதி வழிய கூத்தாடினர். விழுந்தவர்கள் எழுந்து ஓடினர். அடித்து அடித்து விலக்கி வீரர்கள் சார்வாகரை அணுகியபோது அவர் கரிய கற்தரையில் உடல் உருகிப் படிந்திருக்க நீலச்சுடர்கள் வெடித்து வெடித்து எழ அசைவில்லாது எரிந்துகொண்டிருந்தார். சூழ வழிந்து பரவியிருந்த நெய் எரிந்தபடி அனலென வழிந்தது. யுயுத்ஸு ஓடிவந்து குனிந்து சார்வாகரை நோக்கினான். பின்னர் திரும்பி கைகாட்ட அவனுடைய செய்தியை ஏதோ கொம்பு ஒலிபெயர்த்தது.
வெறியாட்டமிட்ட அந்தணர்கள் ஒவ்வொருவராக இருண்ட வானிலிருந்து அவர்களை கட்டித்தூக்கியிருந்த சரடுகள் அறுந்து அறுந்து கைவிட நிலத்தில் விழுந்தனர். சிலர் கைகளை ஊன்றி வானை நோக்கி விம்மி விம்மி சிரித்தனர். சிலர் கேவி அழுதனர். சிலர் மண்ணில் முகம்படிய படுத்தனர். எஞ்சியோர் எழுந்து விலகி ஓட அரண்மனை முற்றம் நீர் விலகிய குளத்தின் அடிப்பரப்பு என தெரிந்தது. மட்கிய மரங்கள், பாறைகள் என மானுடர். கொம்போசை எழுந்தது. புரவிகளின் குளம்படிகள் அணுகி வந்தன.
தீக்ஷணன் கையூன்றி எழுந்து நின்றான். உடல் தளர இருமுறை தள்ளாடி விழுந்தான். மீண்டும் எழுந்து நின்றான். குதிரைகளின் உடல்கள் காட்சியை மறைத்தன. எங்கோ பெருமுரசம் ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் கால்களை விரித்து நின்று சார்வாகரை பார்த்தான். அவர் உடல் உருவழிந்துவிட்டிருந்தது. தசை உருகி எரிந்துகொண்டிருந்த செந்தழலுக்குள் மண்டையோடு தெரிந்து மறைந்தது. அவனுக்கு ஒருகணத்தில் குமட்டலெழுந்து வாய் நிறைந்தது. உடல் உலுக்க குனிந்து வாயுமிழ்ந்தான். மீண்டும் மீண்டும் வாயுமிழ்ந்து நிமிர்ந்தபோது அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.
தள்ளாடும் காலடிகளுடன் அவன் நடந்தான். அவன் அகம் சிலைத்திருந்தது. மக்கள் வெவ்வேறு சிறு குழுக்களாக திரண்டுவிட்டிருந்தனர். புரவிவீரர்கள் அவர்களை மீண்டும் நிரைகளாக ஆக்கும்பொருட்டு ஆணைகளை கூவிக்கொண்டிருந்தனர். தீக்ஷணன் தன் காலடியில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்தான். நாகம் என கால் சொல்ல அகம் துணுக்குற்றது. குனிந்து நோக்கியபோது அது சார்வாகரின் யோகதண்டு எனத் தெரிந்தது. அவன் அதை தன் கையில் எடுத்துக்கொண்டான்.