கவிதையில் அசடுவழிதல்

 

பாய் பெஸ்டி’களின்  கதை- மனுஷ்ய புத்திரன்

 

தமிழ்க் கவிதைகள் எப்படியோ என் கவனத்திற்கு வருகின்றன, நேரடியாக அவற்றின் பெருக்கை நான் படிக்க நேர்வதில்லை. ஆனால் விரிந்த தேடல் கொண்ட நண்பர்களால் நாளும் என் கவனத்திற்கு கவிதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிறந்த எதையும் நான் தவறவிடுவதில்லை

 

படிக்கப் படிக்க பொதுவாக உருவாகும் மனநிலை என்பது தமிழ்க் கவிதையின்  எல்லைச்சுருக்கம்தான். மிகக்குறுகிய ஓர் பேசுதளமே அதற்குள்ளது. காமம், இருத்தலின் அசௌகரியம் – அவ்வளவுதான். அதைப்பேசுவதற்காகக் கவிஞன் புனைந்துகொள்ளும் தன்னாளுமையும் மிகமிக குறுகலானது. அமைப்புக்கு வெளியே இருக்கும், விழுமியங்களில் நம்பிக்கையற்ற, தனிமையான, குடிகாரனான, ஆதரவு [குறிப்பாக பெண்களிடம்] தேடும் ஒருவன்.

 

தமிழ் நவீனக் கவிதையின் படிமவெளியும் மிகச்சிறியது. தன்னைச்சார்ந்த அன்றாடநிகழ்வுகளைப் படிமமாக ஆக்க முயல்கிறார்கள். ஆனால் படிமங்கள் அந்தரத்திலிருந்து உருவாகா. அவற்றின் வேர்வெளி என்பது ஆழ்படிமங்கள் [archetype ] இவர்களிடமிருக்கும் ஆழ்படிமங்கள் நம் மரபின் விரிவில் இருந்து எழுவன அல்ல. மேலைமரபை அறியும் வாசிப்பும் இல்லை. ஆகவே பெரும்பாலும் ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து வந்துசேரும் ஆழ்படிமங்களை தன்னிச்சையாக வைத்திருக்கிறார்கள். உதாரணம் சாத்தான் xகடவுள் என்னும் இருமை. அதையே சலிக்கச்சலிக்க சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

 

ஆகவே மிக அரிதாகவே இன்றைய தமிழ்க்கவிதையில் ஒரு மின்னல் நிகழ்கிறது. அதை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அச்சூழலில்தான் இன்றைய சமூக ஊடகக் கவிதை என்னும் சுழலில் அவ்வப்போது சிக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் கவிதைப் பெருக்கம் ஓர் எதிர்மறை அம்சம் என இன்று நான் நினைக்கவில்லை. அது ஒரு சமூக இயக்கம் என்றே கருதுகிறேன். போலச்செய்யும் கவிதைகள், கருத்துக்கவிதைகள் மற்றும் உணர்வுக்கவிதைகள் போன்றவை கவிதை என்னும் இயக்கத்தின் பெருக்கை கொண்டுசெல்பவை. அவை தேவை, அவற்றை இன்று நான் கடுமையாக எதிர்ப்பதில்லை. மாறாக அவ்வப்போது ரசிக்கிறேன்.

 

ஆனால் அடிக்கடி அசட்டுக்கவிதைகள் வந்து அறைந்து எரிச்சலை அளித்துவிடுகின்றன. அதன் ஒவ்வாமையைக் கடக்க கம்பனை எடுத்து அரைமணி நேரம் அகமொழியை கழுவிக்கொள்ளவேண்டும். சமீபகாலத்தில் வாசித்த அசட்டுத்தனங்களின் உச்சகட்டம் என்பது மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை. தமிழின் நூறாண்டு நவீனக் கவிதை வரலாற்றில் எழுதப்பட்ட ஆக அசட்டுத்தனமான கவிதை என இதை ஐயமின்றிச் சொல்வேன்.

 

கவனிக்கவும், கீழ்மை என்று சொல்லவரவில்லை. கவிதையில் மேன்மை கீழ்மை என்று இல்லை. கீழ்மைக்கு அதற்கான இடம் உண்டு, ஏனென்றால் கீழ்மையும் உச்சம்கொண்டால் அதுவும் கவிதையின் sublime தான் என்பது நவீன விமர்சன நிலைபாடு. எதிர்நிலை,  மீறல்நிலை , அதீதநிலை ஆகியவை கவிதையின் அழகுகளும்கூட. ஒழுக்கமின்மை மட்டுமல்ல அறமின்மையே கூட கவிதையின் பெருவெளிப்பாடாக ஆகும்.ரசிக்கும்படியான விடலைத்தனத்துக்குக்கூட கவிதையில் ஓர் இடம் உண்டு.ஆனால் அசட்டுத்தனம் கவிதைக்குரியது அல்ல. கவிதை என்பதே ஒரு கூர்நிலை ஏன்னும்போது இத்தகைய மொண்ணைத் தனத்தை அதனுடன் பொருத்திப் பார்க்கவே முடியாது.

 

இதன் அசட்டுத்தனம் என்ன? அடுத்த தலைமுறையின் வாழ்க்கைநோக்கு என்னவென்றே தெரியாமல் அதற்குள் நுழைவது. இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இரண்டு பிளஸ்டூ மாணவர்கள் பேசிக்கொண்டால் டீக்கடையில் நின்று நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது. ‘என்ன படிக்குதுகளோ போங்க’ என விமர்சனம் வைப்பது. இது ஓர் எல்லை என்றால்  ‘எனக்கெல்லாம் அப்டி என்ன வயசாச்சுன்னு நினைக்கிறீங்க?”என்று அவர்களுக்குள்ளேயே சென்று அமர்ந்துகொள்வது இன்னொரு எல்லை.

 

ஆண்பெண் உறவுகள் தலைமுறை தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, பணியிடச்சூழலின் மாறுபாடுகளின் விளைவு. வட்டாரக் கலாச்சார மாறுபாடுகளின் விளைவு. இன்றைய ஆண்பெண் உறவில் இருக்கும் இயல்பான நட்பு என்பது சென்ற தலைமுறையில் சாத்தியமில்லை. அது கேரளப் பணிச்சூழலில் கல்விச்சூழலில் சென்ற தலைமுறையிலேயே உருவான ஒன்று. குறிப்பாக இடதுசாரிச் சூழலில். மனுஷ்யபுத்திரன் தமிழ்க்கவிதையிலுள்ள, வழக்கமான கத்திக்கத்தித் தீர்க்கும் கழுதைக்காமப் பார்வையுடன் அதை  ‘கவிதை’ டெம்ப்ளேட்டில் அடுக்கி வைக்கிறார்.

 

ஐம்பதை அடுத்த வயதுகளில் இளங்கிழவர்கள் கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து, தலைச்சாயம் பூசி, கெட்டியான பௌடர்பூச்சுடன் சின்னப்பையன்களிடம் கெட்டவார்த்தை பேசி இளமையை நடிப்பதுபோல அருவருப்பூட்டும்  அசட்டுத்தனம் கொண்டது இக்கவிதை. மனுஷ்யபுத்திரன் தமிழின் நவீனக்கவிதையில் முதன்மையான பெயர்களில் ஒன்று. இந்த வீழ்ச்சி குமட்டலை ஏற்படுத்துகிறது. அவர் இக்கருத்தை எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியும், ஆனால் அவரிடம் நவீனக்கவிதைவிமர்சகனின் குரல் என இந்த மதிப்பீடு சென்று சேர்ந்தாக வேண்டியிருக்கிறது.

 

முந்தைய கட்டுரைபாரதி நினைவுக்குறிப்புகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75