கதாபாத்திரப் பரிணாமம் ,விமர்சனம்

Vaanam Kottatum Movie Review

நண்பர் தனாவின் படம் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கப் பதற்றங்கள் ஓய்ந்து படத்தின் வெற்றியை ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் லாபம் வரும் ஒரு படம் என்பது கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது

 

ஓர் ஆர்வத்தில் இதற்கு வந்த விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்தேன். தமிழில் வருமளவுக்கு சினிமா விமர்சனங்கள் எந்த மொழியிலும் இல்லை என நினைக்கிறேன். ஒரு படத்திற்கு சாதாரணமாக ஐநூறு விமர்சனங்கள் வருகின்றன. மலையாளத்தில் நினைத்தே பார்க்கமுடியாது. ஹாலிவுட் படங்களுக்கு உலக அளவில்கூட ஐநூறு விமர்சனங்கள் வர வாய்ப்பில்லை. ஆனால் குறிப்பிடும்படியான விமர்சனங்கள் மிகக்குறைவு. எழுத்தாளர்கள் எழுதும் விமர்சனங்கள்தான் ஆகப் பரிதாபம்.

 

சந்தீப் சந்திரசேகரின் இந்த விமர்சனம் தான் இருப்பதிலேயே முக்கியமானது என நினைக்கிறேன். இந்த விமர்சனத்தையும் தமிழில் வந்த பிற விமர்சனங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விமர்சனம் என்பது பதிவுசெய்யப்படுவதனாலேயே விமர்சகனுக்கும் படைப்பாளிக்கும், விமர்சகனுக்கும் ரசிகனுக்கும் நடுவிலான ஓர் உரையாடலாக ஆகிவிடுகிறது. அந்தப்பொறுப்பு விமர்சகனுக்கு இருந்தாக வேண்டும். திண்ணைப்பேச்சு போல கருத்துக்களைச் சொல்லி வைப்பதல்ல விமர்சனம். கவன ஈர்ப்புக்காக அதிரடியாக பேசுவது, நையாண்டி செய்வது போன்றவை வம்புப்பேச்சுக்கள் அன்றி வேறல்ல.பெரும்பாலான விமர்சனங்கள் இவ்வகைப்பட்டவை

 

இன்னொரு பக்கம் கலைப்படத்திற்கான ரசனையின் உச்சத்தில் நின்றிருந்து பேசுவதுபோன்ற பாவனைகள். வீம்புகள் என்று அன்றி இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை, ஏனென்றால் இன்னும்கூட சினிமா என்னும் கலை பற்றிய உணர்வுடன் எந்த படைப்பைப் பற்றியும் இங்கே பெரிதாக எழுதப்படவில்லை. ஓர் இலக்கியப்படைப்பை அதன் கலைத்தன்மையை உணர்ந்து படிப்பவர்களே சிலர் மட்டுமே. இலக்கிய விமர்சனத்திற்கே வாசகர் அரிது. அவ்வியக்கம் இங்கே தொடங்கி நூறாண்டாகிறது. சிற்பம், கலை குறித்த ஆழமான கலைவிமர்சனங்கள் இங்கே மிகக்குறைவு. வரலாற்றாய்வுகள் ஓரளவு உள்ளன. கலை இலக்கிய ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், சமூக ஆய்வுகள் ஆகியவற்றுடன் எந்த உறவும் இல்லாமல், அவற்றில் ஏதேனும் படித்திருக்கும் தடையமே இல்லாமல் சினிமாவை ‘கலைவிமர்சனம்’ செய்கிறார்கள். அவை வெறுமே பெயர் உதிர்ப்புகள். பெரும்பாலும் எளிமையான ஹாலிவுட் படப்பெயர்கள். இதுவே இங்குள்ள கலைப்பட விமர்சகர் மரபு

 

இன்று தமிழ் சினிமாவின் பெரிய சிக்கலே இந்த விமர்சகர்கள் உருவாக்கும் கருத்துக்கருங்கல் சுமைதான். பிகிலை பிரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட ஐநூறு கட்டுரைகள் தமிழில் உண்டு. ஆனால் விசாரணை, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்,டு லெட்போன்ற படங்களைப் பற்றி பேச்சே இல்லை. வணிகசினிமாக்களைப் பற்றிக்கூட ஒரு சாதாரண ரசிகனின் நிலையைவிட ஒருபடி கீழே நின்று பேசும் விமர்சனங்களே இங்குள்ளன.

 

வானம் கொட்டட்டும் வழக்கமான குடும்ப – நல்லுணர்வு- மெல்லுணர்வுப் படம்தான். அது தன்னை ஒன்றும் உலகக்கலைப்படம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை ரசிக்கக்கூடிய மென்மையான உணர்வுகளால் கொண்டுசென்று நிலைகொள்கிறது. ஆகவே அது வெற்றிபெற்றது. அத்தகைய படங்களுக்கு எப்போதுமே ஓர் இடம் உண்டு. அவை ‘அதிரடியாக’ இருக்க முடியாது. அவற்றின் மெல்லுணர்வுகள் ஊகிக்கக்கூடியனவாகவே இருக்கமுடியும். ஏனென்றால் மானுட உணர்வுநிலைகள் ஒன்றே. அவற்றில் அதிர்ச்சிதரும் திருப்பங்க்ள் கிடையாது. அந்த வகைமையில் ஒரு தேர்ந்த படைப்பு சீரன கதையோட்டம், நம்பகமான சூழல்சித்தரிப்பு, கதைமாந்தரின் இயல்புத்தன்மை ஆகியவற்றையே முதன்மையானதாக முன்வைக்கும். வானம் கொட்டட்டும் அதில் தேர்ச்சியை காட்டிய படம்

 

ஆகவே இப்படத்திலுள்ள முதன்மையான கலையம்சம் என்பது கதாபாத்திரப் பரிணாமம்தான்.சொல்லப்போனால் இப்படத்தில் ஒரு விமர்சகன் சுட்டிக்காட்டவேண்டிய ஒரே மேலதிகக் கலைத்தன்மை என்பதே அதுதான். பழைய உணர்வுக்கொந்தளிப்பு படங்களுக்குப் பழகிப்போன ரசிகர்களுக்கு அதைச் சுட்டிக்காட்டி அவர்களின் ரசனையை சற்றே தீட்டவேண்டியது விமர்சகனின் பொறுப்பு.

 

அதன் கரு போஸுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு. அது வழக்கமான பாணியில் சொல்லப்படவில்லை. அதில் ஒரு நம்பகமான சமகாலத்தன்மைக்கு முயன்றிருக்கிறார் இயக்குநர். அதுவே இப்படத்தின் தனித்தன்மை. போஸ் சிறையிலிருக்கையில் இரு குழந்தைகளும் அதைப்பற்றி நினைக்கவே இல்லை. ஆனால் சிறிய அவமதிப்புகள் இருந்துகொண்டும் இருக்கின்றன. பையன் அடிதடிக்காரனாக ஆவதே அதனால்தான். அதேசமயம் நகரத்தில் அது ஒன்றும் பெரிய சிக்கலும் அல்ல . அக்குழந்தைகள்  தந்தையைப் பற்றி பேசும் ஒரு காட்சிகூட இல்லை – வெறுத்தோ விரும்பியோ. அவர்கள் தந்தையைச் சென்று பார்க்கவில்லை.

 

ஏனென்றால் இன்றைய வாழ்க்கையே இப்படித்தான். கிராமம் போல அதையே அவர்களின் அடையாளமாக எவரும் சுமத்தமாட்டார்கள்  ஆகவே அதைப் பொருட்படுத்தாமல் கடந்துசென்று தங்க்ள் சவால்களை அவர்கள் சந்திப்பதுதான் இப்படத்தின் கதையே– இது கிராமத்தில் அவர்கள் இருந்திருந்தால் நடந்திருக்காது என்றுதான் படம் சொல்லவருகிறது. மிக இயல்பான நம்பகமான வாழ்க்கை அவதானிப்பு இது/-

 

ஆகவே போஸ் சிறைமீண்டு வரும்போது அவருடைய மகனும் மகளும் அதிர்ச்சியோ பதற்றமோ அடைவதில்லை. குழப்பம்தான் அடைகிறார்கள். என்ன செய்வதென்று தெரிவதில்லை. அவர்கள் அவருடைய வரவை வெறுக்கவுமில்லை, விரும்பவுமில்லை, அதை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை, அவ்வளவுதான்.. அதை இயக்குநர் மிகத்துல்லியமாகக் காட்டுகிறார். அவர்களின் வாழ்க்கையின் இயல்பானநிலை சலனமடைகிறது. அவரிடம் எப்படி பழகுவது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். அவர்கள் குரலைத்தாழ்த்தி, கண்களை தாழ்த்தி தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறார்கள். ஓர் அசட்டுச் சிரிப்புகூட அவர்களிடம் உருவாகிறது. அந்த நிலையின்மை இருவரின் முகபாவனைகள் வழியாக தெளிவாக நிறுவப்படுகிறது. ஒவ்வொரு சின்ன நிகழ்விலும் அந்த தடுமாற்றம்தான் வெளிப்படுகிறது. மெய்யாக இன்றைய வாழ்க்கையில் இந்த தடுமாற்றம்தான் இருக்குமே ஒழிய உணர்ச்சிக்குவியல்கள் அல்ல. இதை நம்பகமாக காட்டியிருப்பதே இப்படத்தின் முதன்மையான கலைவெற்றி.

 

பையன் அப்பாவின் சட்டையில் பணம் வைக்கிறான். ஆனால் முகம்கொடுத்து பேசவில்லை. பிள்ளைகள் அவரை அன்னியராக பார்க்கிறார்கள். அவரிடம் நேருக்குநேர் பேசுவதே இல்லை. அப்பா என்ற சொல் மிக எடையானது. அன்றுவரை அதை அவர்கள் சொன்னதில்லை. ஆகவே புதிதாக அதை வாயால் சொல்ல அவர்களால் முடியவில்லை. முன்பின் தெரியாத ஒருவரை அப்படி அப்பா என அழைத்துவிட முடியாது. அதை படத்தில் வசனம் வழியாகச் சொல்லவில்லை- ஆனால் படம் அந்தத் தயக்கத்தை துல்லியமாக பல காட்சிகளில் காட்டுகிறது. அவருக்கு அது புண்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள்  அவருடைய வெள்ளந்தித்தனத்தை ஒவ்வாமையுடன் அணுகுகிறார்கள். ஆனால் வெறுக்கவில்லை, புரிந்துகொள்கிறார்கள். அவர் காணாமலாகும்போது பதைக்கிறார்கள். அவரை அவர்கள் பெரிதாகப் புண்படுத்தவில்லை – இயல்பான ஒரு உணர்ச்சியால் கடிந்துகொள்ள நேர்கிறது.

 

அவர்கள் மெல்லமெல்ல மாறுகிறார்கள்.– நாடகீயமாக அல்ல. அப்படி மாறுவது அவர்களுக்கே தெரியவில்லை. படத்தில் அந்த மாற்றம் அதன் ஒழுக்கில் வெளிப்படுகிறது. அவர்கள் தந்தையை பார்க்கும் பார்வையில் வரும் மாற்றம், சில சொற்கள், புன்னகைகள் வழியாக மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால் படம்பார்ப்பவர்களுக்குப் புரிகிறது, ஆகவேதான் படம் உணர்வுரீதியாக எடுபட்டிருக்கிறது. அப்பா என்ற சொல்லை அவர்கள் முதல்முறையாக இயல்பாகச் சொல்லும் இடங்கள்தான் இப்படத்தின் உச்சங்கள். அதை உணர்ச்சிக்கொந்தளிப்பாக படம் காட்டவில்லை. அவர்கள் அச்சொல்லை தயங்கித்தயங்கி முணுமுணுக்கிறார்கள். நாத்தவறிச் சொல்வதுபோல சொல்கிறார்கள். பெண் அச்சொல்லைச் சொன்னதுமே முகம்சிவக்கிறாள். பையன் பேச்சோடு பேச்சாகச் சொல்லிவிடுகிறான். ஆனால் அவர் உடனே அதை அடையாளம் கண்டு மகிழ்ந்து சொல்லிக்காட்டுகிறார்

 

இந்தப்படம் இதுவரையிலான தமிழ்ப்படங்களில் இருந்து சற்று முன்னகர்வது இங்குதான். இதுதான் கதாபாத்திரப் பரிணாமம். இப்படத்தின் கலைக்கூறு உண்மையில் இது மட்டுமே.ஆனால் நம் விமர்சனங்கள் அனைத்திலுமே இந்த நுட்பமான கதாபாத்திரப் பரிணாமம் எப்படி மதிப்பிடப்பட்டிருக்கிறது?

 

இவர்கள் விமர்சனங்களின் தொடக்கத்தில் ஒரு கதைச்சுருக்கம் அளிக்கிறார்கள். அதாவது இவர்கள் ஒரு கதையை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதன்பின் அந்தக்கதை ஏன் இந்தப்படத்தில் இல்லை என பேச ஆரம்பிக்கிறார்க்ள். போஸ் சிறைக்குச் செல்கிறார், மகனும் மகளும் அவரை வெறுக்கிறார்கள், பிறகு மனம்திருந்துகிறார்கள், இதுதான் கதை என இவர்களே ஒரு ஒற்றைவரிக் கதைச்சுருக்கம் அளிக்கிறார்கள். அதன் பின் மகனும் மகளும் தந்தையை வெறுப்பதற்கும் பின்னர் மனம்திரும்புவதற்கும் உரிய  ‘அழுத்தமான  காட்சிகள் இல்லை’  அவர்கள் ‘மனம் மாறுவதற்கான ‘அழுத்தமான காரணங்கள் நம்பும்படிச் சொல்லப்படவில்லை’ என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள்.  அதாவது இந்தப்படத்தில் புதிதாக நிகழ்ந்துள்ள அந்த மென்மையான, நம்பகமான கதாபாத்திரப்பரிணாமம் கதைசொல்ல தெரியாததன் விளைவாகவே விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

 

அதாவது போஸ் சிறைசென்றதை குழந்தைகள் உக்கிரமாக உணர்வதாக நேரடியான வன்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். ’கொலைகாரன் மகனே’ என பலர் சிறுவனை வசைபாடியிருக்கவேண்டும். அவன் அவர்மேல் வஞ்சத்துடன் “அப்பனா அவன்? வரட்டும் அந்த ஆள்’ என்று கேட்டிருக்கவேண்டும். அவர் திரும்பி வரும்போது ‘எங்க வந்தீங்க? யாரைக்கேட்டு வந்தீங்க?”பாணி வசனங்களுடன் உச்சகட்ட உணர்ச்சிக் காட்சிகள் இருந்திருக்கவேண்டும். அவர்கள்  ‘மனம்திருந்துவதற்கு’ அதேபோன்ற நாடகக் காட்சிகள், திருப்பங்கள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அது இல்லாததே இவர்களால் அழுத்தமின்மை என சொல்லப்படுகிறது. சராசரி பார்வையாளர்களால் உள்வாங்கப்படுவதுகூட இவர்களுக்கு சாத்தியமாவதில்லை.

 

அதேபோல இந்தப்படத்தில் போஸின் மகனும் மகளும் செய்யும் தொழில், அதன் வழியாக அவர்கள் அடையும் தன்னம்பிக்கை தொடர்ச்சியான பரிணாமமாக காட்டப்படுகிறது. வழக்கமாக தமிழ்ப்படங்களில் சவால்விட்டு சடுதியாக தொழிலில் வென்றுகாட்டுவதுபோல அல்ல. அத்தொழிலின் சிக்கல்கள், அதில் அவர்கள் அடையும் வெற்றி. அவர்கள் தந்தையிடமிருந்து கொண்ட விலக்கத்தை, அதன் தாழ்வை தொழிலில் ஈடுசெய்துகொள்கிறார்கள். அவருடைய மகன் இரண்டுகோடி ரூபாய்க்கு பேங்க் கேரண்டி அளிப்பதும் அவர் மகள் அரசு அதிகாரியை வென்றெடுப்பதுமெல்லாம் எப்படி அவர்கள் தன்னம்பிக்கையை அடைகிறார்கள் என்பதைக் காட்டுவன.

 

தமிழ் சினிமாவில் முதல்முறையாக நகரத்தின் சிறப்பை, அது அளிக்கும் விடுதலையை காட்டும் படம் இது. கிராமம் சாதிச்சண்டையால் குமுறிக்கொண்டிருக்கையில் நகரில் சாதி பெரிதாகப் பொருட்படுத்தப்படுவதில்லை என்று காட்டுகிறது. இவை எதையுமே சொல்லவில்லை, பின்னணியை காட்டுவதனூடாக உணர்த்துகிறது. அச்சூழலில் எல்லா மக்களும் இருக்கிறார்கள்.அந்தப்பிள்ளைகள் ஒருபோதும் இனி கிராமத்திற்குத் திரும்பப்போவதில்லை. தனாவின் முந்தைய படத்திலும் நகரம் விடுதலையாகவும் கிராமம் சாதிச்சழக்கு மிக்க நரகமாகவும்தான் காட்டப்படுகிறது. அந்தப்பிள்ளைகள் விடுமுறைக்காகக்கூட கிராமத்திற்கு வரவில்லை. அவர்களின் கொண்டாட்டமெல்லாம் நகரில் சுற்றுவதுதான். நகரம் அவர்களின் வெளி.இந்தக்கோணம் தமிழ் சினிமாவுக்கு மிகப்புதியது. இது ஏற்புக்குரியதோ இல்லையோ இந்த சினிமாவின் ஆசிரியர் முன்வைப்பது இதுதான்.

 

இத்தகைய இயல்பான சித்தரிப்புகளை கவனிப்பதற்குத்தான், சாதாரண ரசிகர்கள் தவறவிடும் இடங்களைச் சுட்டிக்காட்டத்தான் விமர்சகர்கள் தேவையாகிறார்கள். இப்படி ஒரு சிறிய கலைமுன்னகர்வு சினிமாவில் நிகழும்போது இங்குள்ள விமர்சனச்சூழல் அதற்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளது. முன்னரும் அப்படித்தான் இருந்திருக்கிறது. தமிழில் கலைக்கூறு கொண்ட படங்கள் என பின்னர் ஏற்கப்பட்டவை எப்படி வெளியான காலத்தில் விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றன என்று சென்று படித்துப்பார்க்கலாம். ஆச்சரியமாக இருக்கும்

 

ஆனால் மேலே சொன்ன ஆங்கில விமர்சனம் நடுநிலையானது. படத்தை ஓர் இடத்தில் வகுத்து நிறுத்துகிறது. nothing new என்கிறது ஆனால் engaging என்று அடையாளப்படுத்துகிறது. character arc என்னும் கலைச்சொல்லை அந்த விமர்சனத்தில் காண மகிழ்ச்சியாக இருந்தது. we see the gradual change in the strained relationship between Bose and his son and daughter. This felt slightly impressive since the change was not explicit like many other movies என அதை விளக்கவும் செய்கிறார். இப்படி ஒரு சரியான கலைச்சொல்லுடன், ஒரு படைப்பின் முக்கியமான சிறப்பம்சத்தை சுட்டிக்காட்டி ஒரு விமர்சனம் அமையும்போதுதான் அதனால் ஏதேனும் பயன். வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும். வம்புப்பேச்சு என்பதற்கும் வீம்புப்பேச்சு என்பதற்கும் அப்பால் மெய்யான கலைவிமர்சனம் நிகழும் தருணம் இதுதான்.

முந்தைய கட்டுரைபேய்ச்சி உரை -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74