வேறுவழிப் பயணம்

அன்புள்ள ஜெ

நீங்கள் ஹென்றியை சந்தித் திருக்கிறீர்களா? ஒருவீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றியை! நான் சந்தித்த ஹென்றி ஒரு அமெரிக்கன் ஒரு கிழிந்த பனியனும் கைலியும் முதுகில் ஒரு பையுமாக வந்து நாகை நூலகத்தில் அமர்ந்திருந்தார்.நான்  அப்போது கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். வேலைக்காக ஸ்போக்கன் இங்க்லீஸ் பயின்றுகொண்டேன் . என்னிடம் உள்ள ஆங்கில அறிவை அவரிடம் பரிசோதித்துப் பார்க்க நினைத்தேன்.

ஹாய் ஐ அம் கதிரேசன்

வாட்டிஸ் யுவர் நேம்

தலையை இரண்டு முறை ஆட்டி பின்னர்…என் பெயர் ஜான்…ஜான் ஃப்ரீசன் என்றார்

வேர் ஆர் யூ ப்ரம்

நான் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறேன் என்றார்( இதை தமிழில் சொன்னார்)

இரண்டு நிமிடத்தில் ஜான் சாதரன ஒரு சுற்றுலா பயணி மட்டும் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.

அவரிடம் நான் அருகில் இருக்கும் சுற்றுலாத் தளங்களின்  பேரைச்சொன்னேன் அங்கே அவர் சென்றிருக்கிறார என்பதை கேட்டேன் ஆனால் அவர் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பின்னர் அவர் என்னிடம் தான் கீழ்வெண்மணியியை பார்க்க விரும்புவதாகச் சொன்னார்.  நானே அவ்விடத்தைப் பற்றி குறைவாகத்தான் தெரிந்திருந்தேன். எனக்கு தெரிந்ததை ஜானிடம் சொன்னேன் அவர் முகம் மலர்ந்தது. தான் பலபேரிடம் அவ்விடத்தைப் பற்றி கேட்டதாகவும் யாருக்கும் அவ்விடம் தெரியவில்லையென்றார்.

ஜான் எனக்கு புதிரானவராக தோன்ற ஆரம்பித்தார்நான் அப்போது தான் ஊர் சுற்ற தொடங்கியிருந்தேன். எனவே ஜான் போன்றவர்களின் மீதிருந்த ஈர்ப்பு ஒன்று அபூர்வமானதல்ல என்றிப்போது தோன்றுகிறது.  புத்தகங்கள் வாசிக்கக் கூடியவர் கட்டுரைகள் எழுதுவதாகச் சொன்னார். மெல்ல தொடர்ந்து ஜானை சந்திக்க ஆரம்பித்தேன். நூலகத்தில் கோயில் வளாகத்தில், விடுமுறைக்கால நீதிமன்ற வளாகத்தில், ரயில் நிலையம் என வெவ்வேறு இடங்களில் சந்தித்து பேசியிருக்கிறோம் பெரும்பாலும் காந்தி, கம்யூனிசம், அமெரிக்கா இந்திய வரலாறு என பேசிக்கொண்டிருப்போம்.

அவர் நேராக அமெரிகாவிலிருந்து சென்னை வந்திருக்கிறார். சென்னையின் பாலங்கள் பூங்காக்கள் இவரின்      வசிப்பிடமாகியிருக்கிறது.  அங்கு போலிஸ்காரரின் தொல்லையால் அவதிப்பட்டிருக்கிறார். பின்னர் நாகை வந்து ஆரம்ப நாட்களில் பாலம். ரயில் நிலையம், மைதானம் என இரவு பொழுதை கழிப்பார். அவர் வைத்திருந்த கொசு வலைக்குள் கொசு உள்ளெ வருவதை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்.

அம்மா உணவகத்தில் ஒரு முறை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மிச்சம் வைத்துச் சென்ற ஒருவரின் உணவை எடுத்து உண்டார். அங்கிருக்கும் அனைத்து த  ட்டுகளையும் எடுத்துக்கொண்டு போய் கழுவு  பாத்திரத்தில் போடுவார். ஜானின் ஒவ்வொரு நடவடிக்கையும் காந்தியை ஒத்திருந்தன. ஆனால் ஜான் காந்தியின் கொள்கை எல்லா இடங்களிலும் ஒத்து வராது என்பார். ஜானுக்கு கால் மடக்கி தரையில் உட்கார்ந்து சாப்பிட வராது. விரலை குவித்து சாப்பிட முடியாது. ஒரு குழந்தை உண்பதைப்போலவே அவர் ஒவ்வொருமுறையும் இந்திய உணவை உண்பார்.

ஜான் நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட்டா  துறவியா என்று கேட்டேன். அதற்கு அவர்  I am a Communist and I am a saint என்றார். எனக்கு அவர் சொன்னது என்னவென்று இன்றும் எனக்கு புரியவில்லை.

ஒருமுறை ரயில் நிலையத்தில் வைத்து பேசிக்கொண்டிருக்கும் போது என்னை போலிஸ் அழைத்து சென்று என்னிடம் ஜானைப் பற்றி விசாரித்தார்கள் நான் அவர் தமிழகத்தை சுற்றி பார்க்க வந்தவர் என்றும் நான் அவரிடம்  ஆங்கிலம் கற்றுக் கொள்வதாகவும் சொன்னேன். ஜானுக்கு போலிஸ்காரரை சுத்தமாக பிடிக்காது போலீஸ் அரசாங்கம் என்ற அமைப்பின் அடியாள் என்பது அவர் எண்ணம். ஒரு போலீஸ்காரர்  ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்தார் ஜான் மறுத்தார் எனவே அருகில் இருக்கும் என்னை காவல் நிலையம் அலைத்துச் சென்று என்னைப் பற்றி விசாரிதார்கள் என் தொலைபேசியை வாங்கி பரிசோதித்தார்கள். என்னை அழைத்துக் கொண்டு சென்றதால் ஜான் அவரே காவல் நிலையம் வந்து என்னை விடுமாறு      போலிஸ்காரரிடம்  சொன்னார். காவலர் ஜானிடம் அவருடைய பேர் விசா விவரங்கள் கேட்டார். அதற்கு ஜான் அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்று பதில் சொன்னார்.

நிலைமை பதற்றமாகிக் கொண்டிருக்க மெல்ல அவர் பெயர் ஜான் அமெரிக்கவில் இருந்து வந்திருக்கறார் என்றேன் ஜான் என்னை முறைத்துப் பார்த்தார் பின்னர் ஒரு சில கேள்விகள் கேட்டு ஜானை அவர்கள் விட்டுவிட்டார்கள் உண்மையில் ஜானுக்கு என்னைவிட நிறைய போலிஸ்ஸ்டேசன் அனுபவம் இருந்திருக்கிறது. அதனால்தான் அவர்களால் ஜானை ஒன்றும் செய்ய  முடியாது அவர் வெளிநாட்டுப் பயணி ஆனால் இந்த  களேபரத்தில் நான் தான் பயந்து போனேன்.

பின்னர் அருகில் இருக்கும் ஒரு கோயிலில் ஜான் நிலைகொள்ளத் துவங்கினார்.பால்  மொழியம்மன் கோயில். வேளாங்கண்ணி செல்லும் சாலையில் உள்ளது அடிக்கடி நான் அங்கு சென்று அவரை சந்திப்பேன். அங்கு  மூன்று நேரமும் இலவச உண்வு அளிக்கப்படுகிறது.   நிறைய ஊனமுற்றவர்கள், சாமியார்கள், பிச்சை க் கார ர் கள்,  சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு புறத்தில் உள்ள மண் தரையில் உரங்குவார்கள். ஜான் அங்கு அன்றாடம் கோயிலுக்கு தேவையான வேலைகளைச் செய்வார் பின்பு அவரது படிப்பு எழுத்து. நோம் சாம்ஸ்கி அவருக்கு பிடித்தமான எழுத்தாளர்.

ஒரு நீண்ட இடைவெளி க்கு பின் ஜானை சந்தித்தேன். அது ஒரு பனிக்கால மாதம். இரு பிளாஸ்டிக் பையில் அழுகிப்போன வாழைப்பழங்களை வைத்திருந்தார் மார்கெட்டில் யாரோ மாட்டிற்கு போட வைத்திருந்ததை மொத்தமாக வாங்கி வந்திருந்தார். எனக்கு இரண்டு பழங்கள் கொடுத்தார் அவற்றைப்ப்பார்க்கவே எனக்கு   கு மட்டல் எடுத்தது. யார் இந்த மனிதர் எதற்காக இங்கு வந்து இவ்வாறு இவர் கடினப்படவேண்டும். இவற்றின் மூலம் இவர் அடைவது என்ன? என்ற தர்க்க கேள்விகளே என்னை குடைந்திருந்தன. விரைவில் ஜான் அந்த கோயிலைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு பழக்கமானார். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரின் விருப்பத்தோழரானார்.

பெரும்பாலும் மீனவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதி அது. ஜானுக்கு அவர்கள் உணவளித்தார்கள், அவர்கள் வீட்டில் தங்க  வைத்தார்கள். அங்கிருந்த ஒரு ரயில்வே     கேட்டில் அந்தப் பகுதி இளைஞர்கள் கூடுவார்கள். ஜான் விரைவில் அவர்களில் ஒருவனானர். ஒரு நோட்டு புத்தகத்தில் தமிழ் உயிர், மெய் எழுத்து க்களை எழுதி வைத்திருப்பார். ஜானுக்கு தமிழகத்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் தான் தமிழ்நாட்டுக்கு விமான சீட்டு எடுத்து தந்திருக்கிறார். ஜான் அமெரிகாவின் இல்லினாய்ஸ் மாகணத்தை சேர்ந்தவர் என்று அவர் தந்தை சொன்னதாக நினைவு. பின்னர் எனக்கு தோன்றும் போது ஜானைப் பார்க்க செல்வேன். சில நேரங்களில் இருப்பார் சில நேரங்களில் வெளியில் சென்றிருப்பதாய் சொல்வார்கள்.

முன்போல அவரை தொடர்ச்சியாக சந்திக்க முடியவில்லை. நானும் ஜானை மறந்து விட்டேன்.    மீண்டும் ஒரு முறை ஹென்றியை  வாசிக்க நேர்ந்த போது ஜானைப் பார்க்கத்   தோன்றியது ஜானின் மின்னஞ்சலில் அவரை தொடர்பு கொண்டேன் பதில் இல்லை.

கோயிலுக்கு சென்று பார்த்த போது ஜான் அங்கு இல்லை. வெளியூர் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். ஜானுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு வெளிநாட்டு அழைப்பு ஜான்தான்  தான் இப்போது மலேசியாவில் இருப்பதாகவும். தன் தந்தை இந்தியா வந்திருப்பதாகவும். ஜானின் நண்பர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமெனச் சொன்னார். ஜானின் தந்தையைச் சென்று சந்தித்து பேசினேன். அவர் இந்தியாவுக்கு வருவது இதே முதல் முறை. அவரிடம் ஜானைப் பற்றி விசாரித்தேன். ஜான் வைத்திருந்த விசா ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது. அதற்கு பின் அவர் வெளிநாடு ஏதவ து சென்று புதுப்பித்துக் கொண்டு வரவேண்டும். ஜான் முதல் முறை நேபாளம் சென்று விசாவை புதுப்பித்துக் கொண்டு வந்தார். அதுவே ஆறு மாதம் முடிந்திருந்தது. அவரை எச்சரித்துத்தான் விசா கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ஒருமுறை ஹைதராபாத்தில் வைத்து விசாவை தொலைத்துவிட்டார். அங்குள்ள சில அதிகாரிகள் அவருக்கு மறுபடியும் விசா சரி செய்து கொடுத் திருக்கிறார்கள் . மீண்டும் ஒருமுறை மலேசிய சென்று இந்திய திரும்பிய போது அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டார்கள் ஆகவே ஜான்  அவருடைய தந் தையிடம்  தண் நண்பர்களை தன்னால் சந்திக்க. முடியாததால் நீங்கள் சென்று சந்தித்து வரவேண்டுமென கேட்டுள்ளார் அதன் காரணமாகவே ஜான் தந்தை இந்தியா வந்தார். ஒரு இந்திய தந்தை போல அவரும் அவர் மகனை நினைத்து வருத்தப்பட்டது  நினைவு வருகிறது.

ஜான் இல்லினாய்ஸில் ஒரு கல்லூரியில் படித்து விட்டு பின்னர்  பெர்க்லி பல்கலைக்கழக த்துக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு, நோம் சாம்ஸ்கி, கம்யூனிசம் எல்லம் அறிமுகமாகியிருக்கிறது. அங்கு படித்த இந்தியர் ஒருவர் தான் அவருக்கு சென்னை வரச் சொல்சொல்லியிருக்கிறார். ஜானின் தந்தை ஜான் தங்கி யிருந்த இடத்தைப் பார்த்து கண்ணீர் வடித்தார். ஜான் தந்தை என தெரிந்ததும் ஜானின் நண்பர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஜானின் தந்தை சிறுவர்களுக்கு இனிப்புகள் வாங்கிக்  கொடுத்தார் ஜான் தங்கி யிருந்த கோயிலுக்கு அரிசி மற்றும் சில பொருட்கள் வாங்கிக் கொடுத்தார். ஜான் மேல் இவர்கள் வைத்திருக்கும் பிரியத்தை பார்த்த இவர் ஜான் வாழ்வது தான் சரியான வாழ்வு போல் தோன்றுகிறது என்றார். ஜானின் அன்னை ஜானை நினைத்து வருத்தப் படுவதாகச் சொன்னார். அவ்வப்போது வாட்ச் அப்பில் குறுஞ்செய்தி அனுப்புவார். இந்த புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜான் தற்போது இந்தோனேசியாவில் இருப்பதாகவும் இங்கு போலவே அங்கும் அவருக்கு நண்பர்கள்    இருப்பதாகவும் சொன்னார்.

உங்களைப் போல ஜானையும் அடிக்கடி மனதில் நினை த்துக் கொள்வேன். எனக்கான வாழ்வியல் கடமைகள் இல்லையானால் நானும் ஜானாக த்தான் மாறவிரும்புகிறேன்.  இனியோரு முறை சந்தித்தால் நான் ஜானிடம் ஹென்றியைப் பற்றி பேசுவேன். ஜானை ஹென்றி என்றழைப்பேன். ஜானுக்கும் ஹென்றிக்கும் பெரிய ஒற்றுமை இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஜான் தான் ஹென்றி. உலக மனிதன் தன் எல்லைகளை கட்டுடைத்துக் கொண்டு தனியனாய் இவ்வுலகம் நோக்க புறப்பட்ட ஹென்றி எனும் ஜானை, கம்யுனிச துறவியை,   தழுவிக்  கொள்கிறேன்

கதிரேசன்

நாகை

***

அன்புள்ள கதிரேசன்,

இந்து மரபின் ஏதேனும் குருவழிகளில் பழக்கமிருந்தால் இப்படிப்பட்டவர்களை தொடர்ச்சியாகக் காணமுடியும். நானறிந்து பலர் உள்ளனர். நித்ய சைதன்ய யதியும் நடராஜகுருவும் இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதியின் மாணவர்களில் அனேகமாக அனைவருமே ஓரிரு ஆண்டுகளேனும் இவ்வண்ணம் வாழ்ந்தவர்களே.  இந்திய மரபைப் பொறுத்தவரை துறவு வாழ்கையின் ஒரு நிலை இது. இவ்வண்ணம் ஊட்டி குருநிலையிலிருந்து கிளம்பிச் சென்றவர்களில் திரும்ப வராதவர்கள் பலர் உண்டு. பலபத்தாண்டுகளுக்கு பின் திரும்பி வந்தவர்களும் உண்டு. விவேகானந்தரின் வரலாற்றிலேயே அவருடைய இத்தகைய வாழ்நிலையை பற்றி விரிவாகக் காணலாம்.  நித்ய சைதன்ய யதி உட்பட பெரும்பாலான துறவியரின் வாழ்க்கையில் இது ஒரு கட்டம்.

பற்றின்மைக்கானப் பயிற்சி இது. அதைவிட எதிர்காலம் பற்றிய பயத்திலிருந்து விடுதலை. தனிமை, நோய், சாவு என்னும் அச்சங்களை அறுப்பது. அறிதல் என்பது முழுமையாக அமையவேண்டும் என்றால் அது நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். நிபந்தனை என்பது நம் வாழ்க்கையின் ஆசைகளும் அச்சங்களுமே. அதை கடப்பது இந்நிலையில் பயிலப்படுகிறது பட்டினத்தார் பாடல் இந்நிலை யை இப்படிச் சொல்கிறது

சோறிடும் நாடு, துணிதரும் குப்பை தொண்டு அன்பரைக்கண்டு
ஏறிடும் கைகள் இறங்கிடும் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சம் என்னுள்ளமுமே.

ஊர் சோறுதரும். குப்பை துணியைத் தரும் என எண்ணி எதைப்பற்றியும் கவலைப்படாத வாழ்க்கை. இது இந்தியாவின் மெய்ஞான வழிகளில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. புத்தர் தன் சங்கத்து துறவியருக்கு வகுத்தளித்த வாழ்க்கை அது. மூன்று நெறிகள் கொண்டது.

அ. எந்த ஊரிலும் மூன்றுநாட்களுக்குமேல் தங்கக்கூடாது.

ஆ. எந்த ஊரிலும் ஊருக்குள் இரவு தங்கலாகாது, சுடுகாடுகள் போல மக்கள் கைவிட்ட இடங்களிலேயே தங்கவேண்டும்.

இ. இரந்து மட்டுமே உண்ணவேண்டும். நாளுக்கு ஒருமுறை.

சமணத்துறவிகளில் திகம்பரர்களுக்கு இதற்குமேலும் நான்கு நெறிகள் உண்டு.

ஈ. நீராடவோ உடற்தூய்மை செய்யவோ கூடாது.

உ. ஆடையின்றி இருக்கவேண்டும்.

ஊ வெறுந்ததரையில் துயிலவேண்டும்.

எ வெறுங்கைகளிலேயே உண்ணவேண்டும்.

ஏறத்தாழ இந்நெறிகள் வெவ்வேறு அளவில் இந்துத் துறவிகளுக்கு உரியவை. நாகா  அல்லது அகோரி துறவிகள் திகம்பரர்களுடைய அதே நெறிகளை பின்பற்றுபவர்கள். இந்தியாவில் திகம்பரர்களும் நாகாக்களும் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உள்ளனர்.

இது உலகமெங்கும் மெய்ஞான மரபில் உள்ள ஒரு வழக்கம். கிரேக்க தொல்மரபில் டயோஜெனிஸ் [Diogenes] அவ்வண்ணம் வாழ்ந்தார். கிறித்தவ தீர்க்கதரிசியான புனித யோவான் அவ்வண்ணம் வாழ்ந்தார்.  பல கிறித்தவ மெய்ஞானியரின் வாழ்க்கையும் நிகரானதே. இஸ்லாமிய மரபில் சூஃபி ஞானிகள் அத்தகையோர். ஜப்பானிய ஜென் குருக்கள் அத்தகைய நாடோடிகள். உலகமெங்கும் பௌத்தம் பிக்ஷுக்களுக்கான அநகாரிக வாழ்க்கையை இவ்வாறுதான் வரையறை செய்துள்ளது.

நான் என் பயணங்களில், தேடல்களில் சந்தித்த அத்தகையோர் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். வெள்ளைக்கார அகோரிகளை, நாகாக்களை, திகம்பரர்களை சாதாரணமாக நாம் வட இந்தியாவில் பார்க்கலாம். ஜானின் பிரச்சினை என்னவென்றால் அவர் காவியை அணியவில்லை. காவியுடன் அவர் காசியில் சுற்றித்திரிந்திருந்தால் போலீஸ்காரர்கள் விசாவே கேட்டிருக்கமாட்டார்கள்.

ஆனால் இந்த மனநிலை என்பது மதம்சார்ந்தது அல்ல, அறிதல் சார்ந்தது.  மதத்திற்கு வெளியில் இத்தகைய வாழ்க்கையைத் தெரிவுசெய்துகொண்டவர்களை உலகமெங்கும் பார்க்கிறேன். அவர்களை ஹிப்பிகள், வெறும் நாடோடிகள் என்றெல்லாம் வரையறை செய்கிறோம். உலகமெங்கும் நடந்தே செல்பவர்களைக் கண்டிருக்கிறேன். உடைமையே அற்று வாழ்பவர்களை கண்டிருக்கிறேன். போதையடிமைகள் போன்றவர்களை இதில் சேர்க்கவில்லை. நான் ஒரு குறுகியகாலம் அப்படி இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு அது இன்று யோசிக்கும்போது ஒரு மனநிலைப் பிறழ்வின் காலகட்டம் மட்டுமே என்றுதான் படுகிறது. அன்று அதற்கான முதிர்ச்சியும் தேடலும் என்னிடம் இருக்கவில்லை

இந்த வாழ்க்கையில் அவர்கள் எதை அடைகிறார்கள்? ஏன் இப்படி இருக்கிறார்கள்? இரண்டைக் குறிப்பாகச் சொல்லலாம். உலகியலில் ஈடுபடுவதற்கான உளநிலையே அவர்களிடம்  இருப்பதில்லை. அவர்கள் அதை பெரும்சுமையாகக் கருதுகிறார்கள். உலகியல்வெறுப்பு என்னும்போது வேலைசெய்யாமல் இருப்பதைச் சொல்லவில்லை. பணத்தை வைத்திருப்பது, கணக்கிட்டுச் செலவிடுவது ஆகியவையும் அவர்களுக்குச் சுமையே. ஒரு வீடுகூட அவர்களுக்குச் சுமைதான். எல்லாவகையான ஒழுங்கும் அமைப்பும் அவர்களுக்கு தளைதான். அவர்களின் உள்ளம் அவற்றுக்கு அப்பால் இருக்கிறது.

இரண்டாவதாக, அவர்கள் இந்த உலகியலுக்கு அளிக்கும் உள்ளம் என்பது மெய்யறிதலுக்கு எதிரானது என நினைக்கிறார்கள். இதை முற்றுதறினாலன்றி அறிதலே இயலாதென்று எண்ணுகிறார்கள். அதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது சமூக அடையாளம், குடும்பத்தின் பற்று. அவற்றைப் பற்றி அவர்கள் கவலைகொள்வதில்லை.

அது ஒரு அதீதநிலை. அவர்களுக்குரியதே துறவு. நீங்கள் அவ்வண்ணம் ஆகமுடியாது. ஏனென்றால் நீங்கள் அதை நோக்கி வியக்கிறீர்கள், ஒதுக்கம் கொள்கிறீர்கள். அந்த விலக்கம்தான் அதன் மேல் அத்தனை ஈர்ப்பை உருவாக்குகிறது.  கற்பனையில் நீங்கள் அவர்களாக கொஞ்சம் நடிக்கலாம். அது அளிக்கும் விடுதலையில் திளைக்கலாம். நானும் அப்படிப்பட்டவன்தான் என அந்தரங்கமாகச் சொல்லிக்கொள்ளலாம். கிளம்பிச் செல்லாதவரை நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல என நாம் முற்றறிவதில்லை. நான் கிளம்பிச்சென்று அப்படிப்பட்டவன் அல்ல நான் என உறுதிகொண்டு திரும்பிவந்துவிட்டேன்..நாமெல்லாம் வேறுவகையினர். நம் வழியே வேறு

ஜெ

***

முந்தைய கட்டுரைமகாபாரத கருத்தரங்கு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76