பகுதி ஏழு : பெருசங்கம் – 6
சார்வாகர் உரக்க நகைக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அவர் எதையோ நோக்கி நகைக்கிறார் என்று அங்கிருந்தோர் எண்ணினார்கள். அவர் நோக்கு எங்கும் பதியாமை கண்டு குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அணுகினார்கள். சுதமன் அவருடைய நகைப்பை கண்டார். தன்னை நோக்கி அவர் நகைப்பதாகத் தோன்றியது. அங்கிருந்தோரில் அரசவைத்தோற்றம் கொண்டவர் அவர் மட்டிலுமே. சுதமன் சுற்றிலும் நோக்கிவிட்டு தன் மேலாடையை எடுத்துச் சுழற்றி தலைப்பாகைபோல் அணிந்துகொண்டார். முப்புரிநூல் தெரிய அதை தோளினூடாகக் கழற்றி இடையில் சுற்றிக்கொண்டார்.
ஓசையில்லா நடையுடன் சென்று கூட்டத்தின் பின்னணியில் நின்றார். தன்னருகே விழிகள் பதற நின்றுகொண்டிருந்த அந்தண இளைஞனை பார்த்தார். அவன் உடலே வெம்மைகொண்டிருப்பதாகத் தோன்றியது. அவருடைய நோக்கைக் கண்டு அவன் அஞ்சியதுபோல விழிவிலக்கினான். அங்கிருந்து செல்லப்போவதுபோல் ஓர் அசைவு அவன் உடலில் ஏற்பட்டது. சுதமன் அவனை ஆறுதல்படுத்துவதுபோல புன்னகைத்தார். அவன் மேலும் அஞ்சி பின்னடைந்தான். இருவரின் தோளினூடாக சுதமன் எட்டிப்பார்த்தார். சார்வாகர் உரக்க பேசிக்கொண்டிருந்தார். எப்போது பேசத்தொடங்கினார்?
அவரால் முதலில் அவருடைய மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை. அது கீழ்நிலையோர் பேசும் மொழி. அதன் ஒலி மேலும் இழுபட்டு ஒரு நகைப்பு அத்தனை சொற்களிலும் கலந்திருப்பதுபோலத் தெரிந்தது. “நாற்குலங்களே, எண்பெருங்குடிகளே, எளியோரே, கேளுங்கள். இது மெய்யான சொல். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் உங்களிடம் விற்கப்படும் பொருள் என நினைவுகூருங்கள். நீங்கள் பெறுவனவற்றுக்கு ஏழுமடங்கு விலை அளிக்கிறீர்கள். காணா விலை, அறியா விலை. குருதியுண்ணும் அட்டையென ஒட்டியிருக்கின்றன அச்சொற்கள் உங்கள் நெஞ்சில். உங்களுக்குள் புகுந்த தீய தெய்வங்கள் என ஆட்டிவைக்கின்றன உங்களை.”
“இதோ இத்தெருவில் நின்றிருக்கிறேன். தன்னந்தனியன். அடைய ஏதுமில்லாதோன். ஆகவே காக்கவும் பொறுப்பில்லாதோன். இந்த மண்ணில் இருந்து ஒரு பொடிப் புழுதியைக்கூட எடுத்துச் செல்லாதவன். அறிக, நான் கொள்வதொன்றுமில்லை இப்புவியில்! எனவே கோருவதும் ஏதுமில்லை. நான் அளிக்க வந்தவன். என் சொற்களை செவி கொள்க! அவை உங்கள் சித்தத்தில் வளர்க! அவை உங்கள் வழியென்று உணர்ந்தால் கொள்க, அல்லவென்றால் தள்ளுக! நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.” தன் இடையிலிருந்த பெருச்சாளித்தோல் கோவணத்தை தொட்டுக்காட்டி “இங்கிருந்து என் உடலில் ஒட்டியிருப்பதென்றால் இது ஒன்றே. இதுவும் என்றுமுள ஒட்டு அல்ல” என்று கூறி அதையும் உருவி அப்பால் வீசிவிட்டு ஆடையற்ற உடலுடன் நின்றார். மண்ணும் சாம்பலும் மூடிய நெடிய கரிய உடல். திரிதிரியாக தோளில் படர்ந்திருந்த சடைக்கற்றைகள். “இது கொடை. கொடைபெற்று விதைக்கும் நெல் நூறுமேனி பெருகும் என்று அறிந்தவர்களே எழுக! கொள்க, இரு கை நீட்டி இச்செல்வத்தைப் பெறுக!”
சுதமன் அந்தக் கூட்டத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரின் விழிகளும் ஒவ்வொரு உணர்வைக் காட்டின. பெரும்பாலானவற்றில் பதற்றமும் ஐயமும் தத்தளிப்பதுபோலத் தோன்றியது. அவர்கள் தங்கள் உடலை அங்கே நிறுத்தி, அதை ஒரு மறைவென்று ஆக்கி, அதற்குப் பின்னால் ஒளிந்திருப்பதுபோல. அவர்களின் விழிகள் இரு சிறு துளைகள். அப்பாலிருந்து அவர்கள் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது ஒரு கிளர்ச்சியூட்டும் நிகழ்வு. அதை எப்படி பிறரிடம் சொல்லிக்கொள்வது என கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். அதை உடனுக்குடன் அகத்தே சொல்லென சமைத்துக்கொள்ளவும்கூடும். பிறருக்கில்லாத ஓர் நிகழ்வு தனக்கு நிகழ்ந்துள்ளது. அந்நிகழ்வை சென்று தொடுமளவுக்கு தான் துணிச்சல் கொண்டவனாக இருந்திருக்கிறேன்.
சார்வாகர் எவரையுமே நோக்கியதாகத் தெரியவில்லை, எவரிடமும் என அவர் பேசவுமில்லை. அவர் அங்கில்லாத ஒருவரை நோக்கி பேசுவது போலிருந்தது. அல்லது அங்குள்ள மானுடர் அனைவரையும் ஒன்றெனத் திரட்டிய பேருருவம் ஒன்றுடன் பேசிக்கொண்டிருப்பதுபோல. “எளியோரே, உழைத்து உண்போரே, வரிசெலுத்தி அரசுகளை அமைப்போரே, அவர்களுக்கு கோட்டையும் அரண்மனையும் கட்டுவோரே, அவர்களுக்கு அணிகளும் ஆடைகளும் செய்வோரே, அவர்களுக்கு ஏவல் செய்வோரே, அவர்பொருட்டு களம்படக் காத்திருப்போரே, அவர்களைப் பாடி புகழ்சேர்ப்போரே, அவர்களுக்கு வேதச்சொல் சமைத்தளித்து வீதம் பெறுவோரே, கேளுங்கள். இதோ உங்களுக்கான சொல். வருக, இதோ உங்களுக்கான மாற்றில்லா மெய்!”
அவருக்கு அச்சொற்களைச் சொல்வதில் ஒரு பயிற்சி இருந்தது. ஒவ்வொரு சொல்லிலும் சவுக்கின் சொடுக்கு எழுந்தது. முச்சந்திகள் தோறும் கூவிக்கூவி நாவுக்குப் பழகிய சொற்கள் அவை. ஆகவே ஒன்றுகூட குறி தவறவில்லை. அவர் சூழ்ந்திருப்போரின் விழிகள் மாறிவிட்டிருப்பதை கண்டார். “அதோ ஒலிக்கிறது உங்கள் பேரரசனின் வேள்விமுரசம். அது உங்களுக்கு கூறுகிறது அவன் மும்முடி சூடுவான் என்று. அவன் அனுப்பிய நான்கு திசைப்புரவிகள் நானிலம் வென்று மீண்டன என்று. அவன் குடி பெருமைகொண்டது என்று. அவன் பெயர் என்றும் வாழும் என்று. அவன் கொடிவழி இங்கே என்றுமிருக்கும் என்று. மானுடச்சருகுகளே, புல்விதைகளே, அதனால் உங்களுக்கு என்ன? நான் கேட்கிறேன், அதனால் உங்களுக்கு என்ன? நீங்களே உசாவுக, அதனால் உங்களுக்கு என்ன?”
“அவன் படைகள் கொண்டுவந்த பெருஞ்செல்வத்தை கைநீட்டிப் பெறுகையில் கேட்டுக்கொள்ளுங்கள், எங்கிருந்து வந்தது அது என்று. உங்களைப்போன்ற தொலைநிலத்து மாந்தர்ப்பெருந்திரள் வயல்களில் பயிரிட்டு, வெறுநிலங்களில் ஆபுரந்து, கடல்களில் அலையாடி ஈட்டியது அது. அதை ஒருவன் வரியெனப் பெற்றான். பிறிதொருவன் கப்பம் எனக் கொண்டான். இங்கே ஒருவன் அறம் என அளிக்கிறான். நாளை ஒருவன் வேள்விக்கொடை எனப் பெறுவான். நாணில்லையா உங்களுக்கு? உடன்பிறந்தானைக் கொன்று அவன் ஊனை உண்டு வாழும் கீழ்மை அல்லவா இது? பிள்ளைக்கறி தின்னும் பெருமுதலையின் வாழ்வல்லவா இது?”
“இரத்தல் இழிது. இரவலரே, திருடனிடம் இரத்தல் இழிதினும் இழிது. நாணுக, உங்கள் கைகள் இரக்கும் பொருட்டு எழும் என்றால்! மண்வெட்டி பிடித்த கைகள், ஆநிலைக் கோலேந்திய கைகள், மழுவும் உளியும் ஏந்திய கைகள், தறியோட்டும் கைகள் ஏற்க விரியும் எனில் குலமகள் தன் இடைப்பிளவை கடைவிற்க விரிப்பதற்கு நிகர் அது. உங்கள் குடித்தெய்வங்கள் அமைதியிழக்கும். உங்கள் குடிமூத்தோர் நினைவுள் எழுந்து வந்து பழிப்பர். உங்களுள் தோன்றி உங்கள் ஆழம் நாணுறும். உங்கள் குருதியில் முளைக்கும் மைந்தர் உங்கள் நினைவுக்கென கீழ்மைகொள்வர். பசியினால் சாகக்கிடப்பினும் அழுகிய பொருள் உண்ணார் அறிவுடையார். இதோ சுவைநாடி மலம் உண்ண எழுந்திருக்கிறீர்கள், மானுடரே. சிறுமை கொள்க உங்களுக்காக! காறி உமிழ்க உங்கள் நிழல்கள் மேல்!”
சுதமனின் உடல் நடுக்கு கொள்ளத் தொடங்கியது. சார்வாகர் எப்போதுமே தடையற்றுப் பேசுபவர்கள் என அவர் அறிந்திருந்தார். ஆனால் அவ்வண்ணம் ஒருவர் அஸ்தினபுரியின் தெருவில் நின்று பேசமுடியும் என அவர் எண்ணியிருக்கவே இல்லை. அங்கிருந்தோர் அனைவருமே அவ்வண்ணமே உணர்கிறார்கள் என அனைவரின் உடல்களிலும் எழுந்த தவிப்பு காட்டியது. அவர்கள் அங்கிருந்து அகன்றுசென்றுவிட விழைந்தார்கள். ஆனால் அச்சொற்கள் அவர்களை கட்டிவைத்தன. அங்கிருந்து உடனே அகல்பவன் அச்சொற்களுக்கு தன்னை இலக்காக்கிக்கொள்கிறான். அதை அங்கே வெளிக்காட்டுகிறான். அங்கே அச்சொற்களை எதிர்கொள்ள உகந்த ஒரே வழி அது எவரிடமோ சொல்லப்படுவதென்ற நடிப்புடன் அங்கே நின்றிருப்பது மட்டுமே.
“உணவை மெல்கிறீர்கள். உண்பனவற்றை செரிக்கிறீர்கள். உங்கள் குருதியும் தசையுமென ஆக்கிக்கொள்கிறீர்கள். எஞ்சியதை கழிக்கிறீர்கள். ஒவ்வாதனவற்றை உமிழ்கிறீர்கள். மானுடரே, சொற்களை மட்டும் விழுங்குவதென்ன? அவற்றை உள்ளே கல்லென இரும்பெனச் சுமந்தலைவதென்ன?” என்று சார்வாகர் கூவினார். “யானையை ஆள்கிறான் சிறுமானுடன். ஏன் என்று அறிவீர்களா? அவன் அதை எதனால் கட்டி வைத்திருக்கிறான்? அந்த எடைமிக்க இரும்புச் சங்கிலியாலா? அந்தக் குத்துக்கம்பாலும் துரட்டியாலுமா? அவன் அளிக்கும் சிற்றுணவாலா? அவ்வப்போது செவிபற்றி துதிக்கை தடவி அளிக்கும் எளிய அன்பினாலா? சொற்களால்! சொற்களால்! சொற்களால்!” இரு கைகளையும் மேலே தூக்கி சார்வாகர் சுழன்றார். “உணர்க, சொற்களால்! அறிக, சொற்களால்! தெளிக, சொற்களால்! வெறும் சொற்களால்!”
அன்றொரு யானையிடம் சொல்லாடினேன். அதனிடம் கேட்டேன், உன் அளவிறந்த ஆற்றல் எப்படி இச்சிறு மானுடனுக்கு அடிமையென்றானது என்று. உன்னில் திகழும் கருங்காடு எப்படி இந்நகர் கோட்டையில் அடுக்கப்பட்ட பாறைகளைப்போல் மாறியது என்று. அதன் சிறுவிழிகளில் துயரைக் கண்டேன். அவை கலங்கி வழிய செவி பின்னடைய அது உடல் தணித்தது. அறியேன், நான் உயிர்வாழ வேறு வழியில்லை. எனக்கு இங்குதான் உணவும் துயிலிடமும் காப்பும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்றால் நான் அப்பெருவெளியில் திசையிழந்து அலமறுவேன். அக்காற்றில் கரைந்தழிவேன் என்றது. அதன் விழிகளை நோக்கி நகைத்து அதனிடம் சொன்னேன் “கரிய பேருருவே, காட்டின் விதையே, முகில்வடிவே, உன்னை கட்டியிட்டிருப்பது சொல் என அறிவாயா? பருவடிவம் கொண்டெழும் பெருவிசைகளை கட்டும் அருவமென்றமைந்த அதன் வல்லமையை அறிவாயா?”
அதனிடம் நான் சொன்னேன் “அது ஒலிகளின் தொகை. ஒவ்வொரு ஒலித்துளிக்கும் பொருள் என சிலவற்றை ஏற்றி அதை சொல்லென்றாக்குகிறார்கள். அச்சொற்களுக்கெல்லாம் பொருள் அளிக்கும் காணாப் பெருவெளி என நின்றிருப்பதே மொழி என்றறிக! மதகரியே, மொழியால் கட்டுண்டவன் நீ.” அது செவி முன்மடித்து, நீர்விழிகள் மின்ன என்னை நோக்கியது. நான் அதனிடம் சொன்னேன் “நீ சிறுகுழவியாக இவர்களிடம் வந்தாய். இவர்கள் உன்னிடம் சில சொற்களை சொன்னார்கள். தழை என்றனர். தளை என்றனர். கவளம் என்றனர். கந்து என்றனர். நீர் என்றனர். நில் என்றனர். குனி என்றனர். கொட்டில் என்றனர்.”
அதனிடம் நான் “ஒவ்வொரு சொல்லுடனும் பிறிதொன்றை சேர்த்தனர். ஆணைக்கு அடிபணிதலே அன்னம் என்று உன் நெஞ்சில் பதியச் செய்தனர். பணிக என்று அவர்கள் ஆணையிடுகையில் நீ உன் பேருடல் குறுக்கி நிலம்படிகிறாய். உன் உள்ளத்தில் இனிய தழைகளின் மணம் எழுகிறது. கல்லை தூக்குக என அவர்கள் கூவுகையில் இனிய குளிர்நீர் என பொருள்கொண்டு நீ துதிக்கை நீட்டி சுமை எடுக்கிறாய். என்னை மேலேற்றுக என்று அவர்கள் சொல்கையில் நீ அன்னக் கவளம் என பொருள்கொள்கிறாய். அவர்கள் உன் மத்தகத்தின் மேல் அமர்ந்து காதுகளை காலால் உதைத்துச் செல் என கூவுகிறார்கள். ஆம், இனிய கரும்பு என நீ காலெடுத்து வைக்கிறாய்” என்றேன். “அமைக என்கிறார்கள். நீ அதை வலி என்று புரிந்துகொள்கிறாய். நில் என்கிறார்கள் நீ அதை கால்நகத்தில் துரட்டியின் கூர் என எடுத்துக்கொள்கிறாய்.”
யானை திகைத்தது. “ஆம், இச்சொற்களுக்கெல்லாம் நான் அளிக்கும் பொருள் வேறு. அவர்கள் அவற்றைக்கொண்டு என்னை பிறிதொன்றை செய்யவைக்கிறார்கள்.” நான் அதன் காதுமடலை பற்றிக்கொண்டேன். “ஒன்று செய்க, அவ்வொலிகளில் இருந்து உன் அகம் அதற்கு அளிக்கும் பொருளை விலக்கிக் கொள்க! அதற்கு அவர்கள் அளிக்கும் பொருளையே கொள்க! குனி என்றால் உன் எழுமத்தகம் தாழ்த்துவதேதான். பணி என்றால் உன் கால்களை மண்பட மடிப்பதேதான். தூக்கு என்றால் துதிக்கையில் எடை சுமப்பதேதான். வேறொன்றில்லை.” யானை என்னிடம் “ஆம், வேறொன்றில்லை” என்றது. “அவ்வாறே, மொழியின் பொருள் செயல் மட்டுமே” என்றேன். “ஆம் ஆம் ஆம்” என்றது அந்த வேழம்.
அன்று மாலை மெலிந்த சிற்றுடல்கொண்ட பாகன் அதனருகே வந்தான். யானையிடம் துரட்டியை நீட்டி “பணிக!” என்றான். அது அசைவிலாது செவிமடித்து நின்றது. “பணிக!” என அவன் ஆணையிட்டான். “எடு காலை!” அது சொல்கொள்ளவில்லை. அவன் துரட்டியால் அதன் நகத்தை கிழித்தான். அது அவனை பின்காலால் மெல்ல தட்டியது. அவன் எலும்பு முறிந்து அக்கணமே உயிரிழந்தான். தன் கால்தளையை உடைத்தது யானை. துதிக்கை தூக்கி பிளிறியது. அக்கணமே தொலைவில் நீலநிற அலைகள் எனத் தெரிந்த தன் தொல்மலைகளை கண்டுகொண்டது. பின்னர் அதை எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
எளியோரே, துயருறுவோரே, கட்டுண்டவரே, கேளுங்கள். சொல்லுக்கு அது எழுப்பும் செயல் மட்டுமே தற்பொருள் என்று கொள்ளுங்கள். சொல்லுக்கு அது விளைவிக்கும் பயன் மட்டுமே பிற்பொருள் என்று கொள்ளுங்கள். கடமை என்பது துயரளிக்கும் என்றால் அச்சொல்லின் பொருள் துயரமே. கடமை என்பது சாவில் நிற்கும் என்றால் அச்சொல் குறிப்பது சாவை மட்டுமே. பற்று என்பது தளைப்படுத்தும் என்றால் அது அவ்வாறே. மலராத மெய்யறிவு கொண்டவர்களே, அரசு என்பது அச்சுறுத்துகிறது என்றால் அது அச்சமன்றி வேறல்ல. அரசன் என்பவன் வரிகொள்வான் என்றால் அவன் ஏந்திய கை அன்றி பிறிதல்ல. காவல் என்பது படைக்கலம். நெறி என்பது தண்டனை. அவை என்பது மேல்கீழ் அடுக்கு. குலம் என்பது எல்லை. குடி என்பது சிற்றெல்லை.
உங்கள் உள்ளம் அளிக்கும் பொருளென்பது உங்களுக்குள் முலைப்பாலுடன் புகட்டப்பட்டது. நஞ்சு உங்கள் மூதன்னை அருந்திய சுனையில் கலக்கப்பட்டிருந்தது. அவள் குருதிவழியாக கொடிவழிகளில் ஊறி உங்களுக்கு வந்தது. உங்கள் மைந்தருக்கு அதை அளிக்காதீர். உங்கள் நெஞ்சு கூறும் பொருளை நோக்கி அகன்றுசெல்க கீழ்மையே என்று ஆணையிடுங்கள். துலாவின் மறுதட்டில் எது வைக்கப்படுகிறதோ அதுவே உங்களுக்கு மெய்யாக அளிக்கப்படுகிறதென்று உணர்க! அன்னம் கொடுத்து வெற்றுச் சொல் பெறுகிறீர்கள். அரும்பொன் கொடுத்து பொருளிலாக் கனவை பெறுகிறீர்கள். கொடுப்பதற்கு நிகர் எனக்கு வேண்டும் என்று கேளுங்கள். அதுவே விடுதலையின் முதற்சொல்.
நான்கு சொற்கள், நான்கு திசைகளென உங்களைச் சூழ்ந்துள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு. எங்கு திரும்பினாலும் அதில் முட்டிக்கொள்கிறீர்கள். அவை உங்களுக்குக் காவலென உணர்கிறீர்கள், எல்லை என அறிவதில்லை. இதோ இந்தக் கோட்டை என. இது வெண்மையாக்கப்பட்டுள்ளது, இல்லாமலாக்கப்படவில்லை. நான்கு சொற்கள், மானுடரே, நான்கு சொற்கள். நான்கு சொற்களால் தளைக்கப்பட்டிருக்கிறீர்கள். நான்கு சொற்களால் வகுக்கப்பட்டிருக்கிறீர்கள். நான்கு சொற்களுக்குள் உங்கள் அகச்சொற்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அலைகள் எழுந்து எழுந்து அறைவதெல்லாம் அவற்றின் மேலேயே. கொந்தளித்துக் கொப்பளிப்பதெல்லாம் அதற்குள்ளேயே.
நான்கு சொற்கள், அறம் பொருள் இன்பம் வீடு. இளமையில் நா பழகியதும் அளிக்கப்படுகிறது அறம். அன்பில் குழைத்து அன்னத்துடன் கலந்து ஊட்டப்படுகிறது. செய் என்று, செய்யாதே என்று, சரி என்று, தவறு என்று, நன்மை என்று, தீமை என்று, உளது என்று இலது என்று, அன்று என்று ஆம் என்று. நீங்கள் மண்ணில் நிறுத்தப்படவில்லை. அறத்தில் நிறுத்தப்படுகிறீர்கள். நீரிலாடவில்லை, அறத்திலாடுகிறீர்கள். அன்னமென உண்டு, மூச்சென உயிர்த்து, ஒளியெனக் கண்டு, மணமென முகர்ந்து நீங்கள் களித்தது அறத்தையே. அறம் எனும் சொல். மானுடரே, தெய்வமெனத் திரட்டி உங்கள் முன் நிறுத்தப்பட்டிருப்பது அறமென்னும் சொல்லே.
பின்னர் கால் வளர்ந்து கை வளர்ந்து நீங்கள் வெளியே இறங்கினீர்கள். பொருள் என உங்களிடம் கூறினார்கள். உழைக்க, சுமைதூக்க, ஏவல்செய்ய, போரிட உங்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் அது. பொருளென்னும் சொல் உங்களை ஆட்டுவித்தது. அறமும் பொருளும் முரண்படக் கண்டு திகைத்தீர்கள். பின்னர் அறமனைத்தும் பொருளென்று உருமாறக் கண்டீர்கள். பொருளே அறமென்றமைந்தவர் வெல்வதை அறிந்தீர்கள். பொருளில் அமர்ந்தீர்கள். பொருளுக்கென விழிநீரும் வியர்வையும் சிந்தினீர்கள், குருதிகொடுத்தீர்கள். அப்பொருளுக்குப் பொருள் என்ன என்று கேட்டீர்கள். அதற்கு இன்பம் என்று மறுமொழி பெற்றீர்கள். அவ்வின்பம் எப்போதும் துளித்துளியாகவே கிடைப்பது ஏன் என வினவினீர்கள். மேலும் இன்பம் என விழைவுகொண்டீர்கள். அதன்பொருட்டு மேலும் பொருள் மேலும் பொருள் என தூண்டப்பட்டீர்கள். மேலும் உழைப்பு மேலும் அடிபணிதல் மேலும் அலைச்சல் என சிக்கிக்கொண்டீர்கள். மேலும் வியர்வை மேலும் விழிநீர் மேன்மேலும் குருதி.
விந்தையான முரண்பாடு, உலகோரே! மிகமிக நுட்பமான பொறி அல்லவா இது? மேலே சிவந்திருக்கிறது இன்கனி. நீங்கள் சிக்கிக்கொண்டிருப்பதோ சேறு. துள்ளி எழுந்தோறும் அமிழ்கிறீர்கள். மேலும் விழைவுகொண்டு எழுகிறீர்கள். இன்பவிழைவே துன்பமென விளையும் இந்தச் சூழ்ச்சியை என்றேனும் எண்ணியிருக்கிறீர்களா? மூழ்கி மூழ்கி இனி எழவியலாதென்றமைகையில் உங்களுக்கு சொல்லப்படுகிறது வீடுபேறு. விடுக, விழைவதனைத்தையும் விட்டு அகல்க, அதுவே பேரின்பம் என்று. இன்பமென வந்தவையெல்லாம் துன்பத்தின் நடிப்புருக்களே என்று. இன்பத்தைத் துறத்தலே இன்பத்தை அடையும் வழி என்று. நன்று, விட்டவர் அடைந்த இன்பம் ஏது என்றால் விடுதலின் இன்பம் என்கிறார்கள். நன்று நன்று. துறந்தோர் அடையும் பேறு என்னவென்றால் துறவுப்பெருமை என்கிறார்கள். நன்று நன்று மிக நன்று!
விட்டவர் அடைவதெல்லாம் வேறெங்கோ என்பவர் உண்டு. மண்ணை துறந்தால் விண்ணை அடையலாம். அங்கிருப்பதோ இம்மண்ணில் அவர்கள் துறந்தவை அனைத்தும் என்கிறார்கள். துறப்பது அடைவதற்காகவே. அடைவதெல்லாம் துறப்பதற்காகவே என்று அதற்கு பொருள் சொல்கிறார்கள். இங்கிருப்பவை எல்லாம் நீங்கள் அமைத்தவை. இந்தக் கோட்டை, இந்த அங்காடி, இந்த அரண்மனை, இந்தப் பெருமுரசங்கள், ஓங்கிப்பறக்கும் இக்கொடி. ஆனால் இவை அளிக்கும் இன்பங்களை நீங்கள் விழையலாகாது எனப்படுகிறது. அவற்றை நீங்கள் இங்கே விரும்பித்துறந்தால் வேறெங்கோ வேறெவ்வகையிலோ பெறலாம். எளியோரே, இந்த சொற்பசப்புக்கு, இந்தச் சூழ்ச்சிக்கு எப்படி உடன்பட்டோம்? எப்படி உளம் அளித்தோம்?
அறிக, உங்களுக்கு அறம் என பொருள்படும் சொல் வேறு எவருக்கோ இன்பம் என்று பொருள்படுகிறது! உங்களுக்குப் பொருள் என்று நின்றிருக்கும் சொல் உங்கள்மேல் நின்றிருக்கும் சிலருக்கு இன்பம் என்று பொருள் அளிக்கிறது. நீங்கள் இன்பம் என எண்ணுவது அவர்களுக்கு உரிமை என்று பொருள்படுகிறது. நீங்கள் வீடுபேறு என நினைப்பது அவர்களுக்கு வேடிக்கை என்று பொருள்படுகிறது. எண்ணுக மூடரே, எழுந்து நின்று இதோ உரைக்கிறேன். மலையேறி நின்று தொலைவு கண்டவனின் சொல் இது. விடுபட்டபின் திரும்பி சிறையை நோக்கி சொல்லப்படுவது இது. நான்கு மெய்ப்பொருட்களும் பொய். இன்பம் ஒன்றே மெய். இன்பம் அன்றி ஈட்டுவன பிறிதில்லை.
“சார்வாகா, மூடா, சதுர்வித புருஷார்த்தமும் பொய் என்கிறாயா?” என்று ஓர் அந்தணன் கூவினான். அவன் கையில் தர்ப்பை இருந்தது. அவன் தன்னை அங்கே காட்டாமல் திரளில் மறைந்து நின்றிருந்தான். அவனை மீறி முன்னெழுந்துவிட்டிருந்தான். “பொய் மட்டுமல்ல அறிவிலி, ஏமாற்றும் கூட. கன்னம் வைத்து இல்லம் நுழையும் கள்வனின் கையிலிருந்து எழும் துயில்மயக்குப் பொடி அது.” அந்தணன் உடைந்த குரலில் பதறும் கைகளை வீசியபடி முன்னெழுந்தான். “பெரும்பழிகொண்டவனே, கீழ்மகனே” என்று கூவினான். “வேதம் பொய்யா? வேதம் பொய்யென்றா சொல்கிறாய்?” சார்வாகர் உரக்க நகைத்து “அது அக்கள்வனின் கையிலிருக்கும் கடப்பாரை” என்றார்.
“கீழ்மகனே!” என்று கூவியபடி அந்தணன் முன்னால் பாய அவனை அவன் தோழர் இருவர் பற்றி இழுத்துச் சென்றனர். “வாருங்கள் சுரஜரே, இவன் யார்? இரந்துண்டு வாழும் இழிமகன். இவனிடமா சொல்லெடுப்பது?” என்றான் ஒருவன். “அந்தணனே, நீ மட்டும் என்ன உழுதுண்டு வாழ்கிறாயா?” அவன் சீற்றத்துடன் “வேதம் பழித்த வீணனே, உன் நாவை அறுப்பேன். ஈயமுருக்கி ஊற்றுவேன்!” என்று கூவினான். அவனை சுரஜன் பிடித்துக்கொண்டான். “சதமுகரே, என்ன இது? சேற்றுப்பன்றியுடன் மற்போரிடவா செல்கிறீர்கள்? வருக, நமக்கு நம் இடம் உள்ளது” என்றான். “செல்க, உங்களிடம் சொல்ல என்னிடம் சொல் இல்லை. நான் களஞ்சியத்தாரிடமும் காவலரிடமும் பேசுகிறேன், கள்வரிடம் அல்ல” என்றார் சார்வாகர். சுரஜன் “உன்னை கொல்வோம். உன் குருதி காண்போம்!” என்று கைநீட்டி கூவினான். “கொல், வந்து கொல். என்னை கொன்றால் நீயும் என்னைப்போல் ஆகிவிடுகிறாய்” என்றார்.
அவர்கள் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டு விலகிச் சென்றார்கள். சுதமன் அவர்கள் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். ஒருவரின் கால் இடற இன்னொருவர் தூக்கிக்கொண்டார். அவர்கள் ஏன் வந்துநின்று இதை கேட்டார்கள்? சார்வாகர் அவர்களை நோக்கி சிரித்து “இது உங்களுக்காகவும்தான் அந்தணர்களே, தொழிலென்று எரியோம்புதலைக் கொண்டிருக்கும் எளியோர் நீங்கள்” என்றார். அவர்கள் அவர் குரல் கேட்காதபடி விரைந்து ஓடினார்கள். கூடியிருந்தவர்கள் சிரித்தனர். ஒரு சிலர் அவர்களை அச்சுறுத்தும்பொருட்டு ஓசைகளை எழுப்பினர். களிமகன் ஒருவன் கையில் மொந்தையுடன் அவர்களைத் தொடர்ந்து ஓடினான். காலடி கேட்டு அவர்கள் மேலும் விசைகொண்டு ஓடினர்.
சார்வாகர் தொடர்ந்தார். கேளுங்கள் மானுடரே, நான்கு விழுப்பொருட்கள் என்பது பொய். மானுடனுக்கு விழுப்பொருள் ஒன்றே. அது இன்பம். உண்ணுங்கள், குடியுங்கள், உற்றாருடன் மகிழ்ந்திருங்கள். அதுவே இன்பம். காதலில் ஆடுங்கள், கலைகளில் திளையுங்கள், கணந்தோறும் கற்றுக்கொள்ளுங்கள், அதுவே பேரின்பம். அவ்வின்பத்தை பிறருக்குத் துன்பமில்லாமல் அடைவதற்குரிய நெறிகள் மட்டுமே அறம். அவ்வின்பத்தை அடைவதற்குரியது மட்டுமே பொருள். வந்த வாழ்வில் விழைந்ததை அடைந்து நிறைவுகொள்ளலே வீடுபேறு. ஆகவே இன்புறுங்கள். குற்றவுணர்வின்றி இன்பத்தில் திளையுங்கள்.
மகிழ்ந்திருங்கள். மானுடன் மகிழ்வதையே இங்குள்ள அனைத்தும் விரும்புகின்றன என்று உணருங்கள். இல்லையேல் நீரில் தண்மையும், காற்றில் நறுமணமும், கனிகளில் இனிமையும், அன்னத்தில் சுவையும் அமைந்திருக்காது. விண்ணிலிருந்து ஒளி மண்மேல் பொழிந்திருக்காது. வண்ணங்களும் வடிவங்களுமென இப்புடவி பெருகி நம்மை சூழ்ந்திருக்காது. அறத்தின்பொருட்டு இன்பத்தை இழந்தோர் அறத்தையும் இழந்தவரே. பொருளின் பொருட்டு இன்பத்தை இழந்தோர் பொருளை வீணடித்தோரே. வீடுபேற்றின் பொருட்டு இன்பத்தை இழந்தோர் வெறுமையை விலைகொடுத்து பெற்றுக்கொண்டவரே. அறிக, ஐயமின்றி அறிக, அறிந்து தெளிக, எச்சமின்றி தெளிக, எண்ணித் தலைசூடுக, இன்பம் ஒன்றே விழுப்பொருள்! மானுடருக்கு இப்புவியில் அளிக்கப்பட்டுள்ள ஆணை இனிதிருத்தல் மட்டுமே!
அவர் தன் யோகக்கோலைத் தூக்கி “நிலைநிறுத்தப்பட்டது இவ்வுண்மை. நின்று பொலிக இவ்வுண்மை! நீடு வாழ்க இவ்வுண்மை! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். பின்னர் எவரையும் நோக்காமல் அங்கிருந்து திரும்பி நடந்தார். அங்கிருந்தோர் ஒவ்வொருவரும் அவர்களை ஒன்றாகக் கட்டியிருந்த சரடு மறைய தனித்தனியாக ஆனார்கள். ஒருசிலர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். சிலர் பொருளின்றி சிரித்தனர். சிலர் தலைதாழ்த்தி எடைமிக்க காலடிகளுடன் நடந்தனர். சுதமன் அந்த இளைஞனை நோக்கினார். அவன் வெறிபடிந்த கண்களுடன், உலர்ந்த உதடுகளுடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். சுதமன் தன் மேலாடையை அவிழ்த்து தோளில் இட்டபடி தேர் நோக்கி சென்றார்.